திரைப்படப் பரிந்துரை – Still Alice

still_aliceStill Alice திரைப்படத்துக்காக ஜூலியன் மூர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது (2015-இல்) பெற்றிருக்கிறார். அதனால்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அலெக் பால்ட்வின், கிர்ஸ்டன் ஸ்டீவர்ட் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

கல்லூரி பேராசிரியர் டாக்டர் அலிஸ் ஹௌலண்டுக்கு 50 வயது. பாடம் எடுக்கும்போது ஒரு வார்த்தை மறந்துவிடுகிறது. ஒரு நாள் ஜாகிங் போகும்போது வழி மறந்துவிடுகிறது. டாக்டரிடம் போனால் அல்செய்மர் வியாதி ஆரம்பித்திருக்கிறது என்கிறார்.

திரைப்படம் முழுவதும் அதுதான். அலிஸுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே மறந்து கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் காலம் முழுவதும் வேலை செய்த கல்லூரியைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை விட மோசம், வீட்டில் கழிப்பறை எங்கே என்பது மறந்துபோய் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள். அப்படி அவளுடைய அடையாளமே அழிந்து கொண்டிருந்தாலும் அவள் ‘still Alice’-தான்.

படத்தின் சிறப்பான காட்சிகள் என்று இரண்டைச் சொல்வேன். ஒன்று, அலிஸ் அல்செய்மர் வியாதியைப் பற்றி பேசும் காட்சி. விவரிக்கப் போவதில்லை, பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்னொன்று, எதிர்காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டால் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று ஒரு வீடியோவை பதிவு செய்து கொள்கிறாள். பிற்காலத்தில் அந்த வீடியோ கைக்கு கிடைத்தாலும் அவளால் முடிவதில்லை. மனதைத் தொட்ட காட்சி.

திரைப்படம் லிசா ஜெனோவா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதாம். படித்துப் பார்க்க வேண்டும்.

நினைவுகள் போய்விட்டால் ‘நான்’ என்பது யார்? நம் அடையாளம்தான் என்ன? ஆனால் மனித வாழ்வு என்பது எத்தனை கஷ்டம் வந்தாலும் பெரும் பொக்கிஷம்தான். அப்படி யோசிக்க வைத்ததுதான், உணர வைத்ததுதான் இந்தத் திரைப்படத்தின் வெற்றி. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்