Chef மகா பிரமாதமான திரைப்படம் என்பதெல்லாம் இல்லை. ஆனால் புன்னகைக்க வைக்கக் கூடிய திரைப்படம்.
மகா சிம்பிளான கதை. சமையல் கலைஞன் கார்ல் ஒரு உணவகத்தின் தலைமை சமையல்காரன். விவாகரத்தானவன், ஆனால் முன்னாள் மனைவியுடன் நல்ல நட்பு இருக்கிறது. சமையலும் பத்து வயது மகனும் அவன் வாழ்வை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
ஒரு நாள் இரவு பிரபல உணவு/உணவக விமர்சகன் ராம்சே வருவதாக இருக்கிறது. கார்ல் தனித்துவமான உணவைத் தயாரிக்க விரும்புகிறான், ஆனால் ஹோட்டல் முதலாளி தடையுத்தரவு போடுகிறான். வழக்கமான உணவுகளைத்தான் தயாரிக்க வேண்டும் என்கிறான். புதிய ருசியைத் தேடி வந்த ராம்சே கார்லையும் உணவகத்தையும் தன் விமர்சனத்தில் கிழிகிழி என்று கிழித்துவிடுகிறான். கோபத்தில் ட்விட்டரில் கார்ல் ராம்சேவைத் திட்ட, ராம்சே பதிலுக்குத் திட்ட, கைகலப்பு வரை போய் டிவிட்டரில் கார்லுக்கு எதிர்மறை விளம்பரம் (notoriety) கிடைத்துவிடுகிறது. கார்லுக்கு வேலை போய்விடுகிறது.
கார்ல் இந்தப் பெரிய உணவகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காரில் பொருத்திய கையேந்திபவன் ஒன்றை ஆரம்பிக்கிறான். சில காரணங்களால் அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக்கரை வரை அந்த கையேந்திபவனை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். கார்லின் மகன் அதை சமூகத் தளங்களில் பிரபலமாக்குகிறான். கையேந்திபவன் ஹிட்டாகிவிட ராம்சேவே கார்லுடன் இணைந்து புதிய உணவகம் ஒன்றைத் தொடங்குகிறான்.
ஒன்றுமில்லாத கருவை நல்ல திரைக்கதையாக மாற்றி இருக்கிறார்கள். கார்லாக நடிக்கும் ஜான் ஃபாவ்ரோ கலக்குகிறார். ஆனால் scene-stealer என்றால் கார்லின் மகனாக நடிக்கும் எம்ஜே ஆன்டனிதான். இயக்கமும் ஃபாவ்ரோதான்.
பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்