2016-இல் படிக்கப் போகும் புத்தகங்கள்

பட்டியல் சின்னதாக இருந்தால் போதும், ஆனால் இந்த வருஷமாவது முடித்துவிட வேண்டும்.

  1. War and Peace
  2. Crime and Punishment
  3. Bridge on Drina
  4. Woman in the Dunes
  5. கொற்றவை
  6. காவல் கோட்டம்
  7. அஞ்ஞாடி
  8. புயலிலே ஒரு தோணி
  9. கடலுக்கு அப்பால்
  10. ஆரோக்ய நிகேதன்

உங்கள் பட்டியல் என்ன? எந்தப் புதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்கள்? ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் புத்தகங்கள் உண்டா? (என் பட்டியல் முழுவதுமே அப்படி தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் புத்தகங்கள்தான்.) இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

சுஜாதாவின் திரைப்பட அனுபவம் – காயத்ரி

குமுதத்தில்சுஜாதாவின் கதை” என்ற தொடரிலிருந்து:

gayatri_filmசுஜாதாவின் நாவல்களில் முதலில் படமாகியது காயத்ரி. பஞ்சு அருணாசலம்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார்.

தினமணி கதிரில் ‘காயத்ரி’ தொடராய் வரும்போதே அதை திரைப்படமா எடுக்கணும்னு நினைச்சேன். தொடர் முடிஞ்சதும் சுஜாதாவை பாம்குரோவ் ஓட்டல் ரூம்ல சந்திச்சேன். ரொம்ப எளிமையா பழகுனார். பெரிய எழுத்தாளர்களுக்கு இருக்கும் பந்தா எதுவும் இல்ல. எல்லாத்தையும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டார். அப்போ அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. அவரோட ஆர்வம் என்னை ரொம்ப கவர்ந்தது

என்று தான் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

படம் வெளில வந்த பிறகு அந்தப் படத்தில் அவருக்கு அத்தனை திருப்தியில்லை. சினிமா திரைக்கதைக்காக சிலவற்றை மாற்றியிருந்தோம். அதைச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். கதையாய் எழுதுவது வேறு. அதை சினிமாவுக்காக மாற்றுவது வேறு என்பதை உணர்ந்து கொண்டார்

என்கிறார் பஞ்சு அருணாசலம்.

சுஜாதாவும் ‘காயத்ரி’ கதைக்கு சினிமாவில் நடந்த சேதாரங்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த முதல் பட அனுபவத்திலேயே சினிமாவின் சூட்சுமங்கள் அவருக்கு பிடிபட்டுவிட்டது.

எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் ‘ப்ரியா‘ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னை தயார்படுத்தியது

என்று குமுதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சுஜாதா.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காயத்ரி நாவல் பற்றி
காயத்ரி திரைப்பட விமர்சனம்
காயத்ரி பற்றி உப்பிலி ஸ்ரீனிவாசின் தொகுப்பு

சுஜாதாவின் சில பல புத்தகங்கள்

sujathaசுஜாதாவின் பெரிய பலம் அனாவசிய வார்த்தைகள், உபதேசங்கள், புலம்பல் இல்லாமல் எழுதுவது, கச்சிதமாக எழுதுவது, நல்ல நடை, பாத்திரங்களின் நம்பகத்தன்மை. பல குறுநாவல்களில் இது தெரிகிறது. ஆனால் பல குறுநாவல்களில் அன்றைய “யூத்துக்காக” எழுதி இருப்பது, deadline அழுத்தம் எல்லாமும் தெரிகிறது. சிறு வயதில் என் மீது சுஜாதாவுக்கு இருந்த தாக்கத்தால் நான் இன்னும் இந்தக் குறுநாவல்களைப் படிக்கலாம், ஆனால் இவற்றில் வெகு சிலவே படிக்க வேண்டியவை. ஆனால் அனேகமாக எதுவுமே போரடிக்காது.

இவற்றில் நான் பரிந்துரைப்பது 6961 (சூழலில் பொருந்தாத மனைவி பாத்திரத்துக்காக), ஆதலினால் காதல் செய்வீர் (தமிழாசிரியை பாத்திரத்துக்காக), ஜேகே, நில் கவனி தாக்கு மற்றும் பதினாலு நாட்கள் (விறுவிறுப்புக்காக), ரோஜா (எழுபதுகளின் வேலை நிறுத்த சூழலின் தத்ரூப சித்தரிப்புக்காக), மூன்று நாள் சொர்க்கம் மற்றும் தேடாதே (கச்சிதமான வடிவத்துக்காக). பரிந்துரைப்பது என்றால் படித்தே ஆக வேண்டும் என்பதில்லை. ஏதோ ஒரு விஷயமாவது என்னைக் கவர்ந்தது, அவ்வளவுதான்.

நான் படித்தவற்றுக்கான ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள் கீழே.

பரிந்துரைப்பவை:

மூன்று நாள் சொர்க்கம்: ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் இதைத்தான் சொல்வேன். ஓடிப் போகும் ஜோடி; ஆண் தன் இரு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு ஓடிப் போகிறான். காதல் மாறுகிறது. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.

6961: பணக்கார மனைவி கார் ட்ரைவரிடம் சினேகிதம் காட்டுவது ட்ரைவரின் கொலையில் முடிகிறது. மனைவி தன் சூழலில் பொருந்தாதது நன்றாக வந்திருக்கும்.

ஆதலினால் காதல் செய்வீர் அவர் மிகவும் பாப்புலராக இருந்த காலத்தில் எழுதப்பட்டது. சிம்பிளாக முடிச்சு போட்டு சிம்பிளாக அவிழ்த்திருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவை உணர்ச்சி அபாரம். அந்த தமிழாசிரியை பாத்திரம் பிரமாதம். நினைவிருக்கப் போவது அந்தப் பாத்திரம்தான்.

ஜேகே: அவரது ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று. அன்றைய யூத்துக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார், ஆனால் சில இடங்கள் இன்று செயற்கையாகத் தெரிகின்றன. இறுதியில் நல்ல ட்விஸ்ட்.

நில் கவனி தாக்கு: சுஜாதாவின் ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று. அப்போதெல்லாம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்தான் சுஜாதாவின் ஆதர்சமாக இருந்திருக்க வேண்டும். விறுவிறுவென்று போகும் கதை. அந்தக் காலகட்டத்தின் யூத்துக்கு அப்பீல் ஆக வேண்டும் என்று முனைந்திருக்கிறார். கடைசி ட்விஸ்ட் இந்தக் கதையை நினைவு கொள்ள வைக்கிறது.

பதினாலு நாட்கள்: பங்களாதேஷ் விடுதலைப் போரை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு சிம்பிள் கதை. அன்றைக்கு பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். ஒரு பைலட் பாகிஸ்தானி விமானங்களுடன் சண்டை போடும்போது சுடப்பட்டு பாகிஸ்தானிய ராணுவத்திடம் பிடிபடுகிறான். அங்கே ஒரு வெறி பிடித்த காப்டனிடம் சித்திரவதைப்படுகிறான். முன்னேறி வரும் இந்தியர் ராணுவம் அவனை மீட்கிறது. இன்றைக்கும் படிக்கலாம்.

ரோஜா: தொழிற்சங்கம், கயமைத்தனம் உள்ள தலைவன், அவன் கற்பழித்துக் கொல்லும் பெண், மோப்பம் பிடிக்கும் இன்ஸ்பெக்டர்; வேலை நிறுத்தத்தில் இன்ஸ்பெக்டர், தலைவன் இருவரும் இறப்பதோடு முடிகிறது.

தேடாதே: கச்சிதமான திரில்லர்; ஒரு புகைப்படக்காரனும், ஒரு தொழிலதிபரின் சின்ன வீடும் மணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்கள். தொழிலதிபருக்கு ஈகோ பிரச்சினை, சின்ன வீட்டை கொலை செய்துவிடுகிறார். துப்பறிவதுதான் கதை.

மற்றவை:

அப்சரா: கொஞ்சம் மனநிலை சரியில்லாத சீரியல் கில்லர்.

ஆஸ்டின் இல்லம்: பணக்கார கூட்டுக் குடும்பம். செல்லப் பேரனுக்கு muscular dystrophy. பிழைக்க வழி இல்லை. மிஞ்சிப் போனால் நாலைந்து வருஷம்தான். இதில் குடும்பத் தகராறு, பணம் வந்த விதம் என்றெல்லாம் பேசுகிறார்கள். சுஜாதாவுக்கு muscular dystrophy பற்றி சொல்ல வேண்டும் என்று ஆசை, அதனால் ஒரு சின்ன குறுநாவல் எழுதி இருக்கிறார். அவ்வளவுதான்.

இளமையில் கொல்: இன்ஸ்பெக்டர், அண்ணன், அண்ணி தரும் அழுத்தத்தால் ஒருவன் தன் நண்பனுக்கெதிராக பொய் சாட்சி சொல்கிறான். ஆனால் கேசில் நண்பன் விடுதலை அடைந்துவிடுகிறான். இவனை பழி வாங்க அலைகிறான். இவன் ஒரு கொலைக் கேசில் மாட்டிக் கொள்ள நண்பனுக்கு அடித்தது சான்ஸ்! அவன் பொய் சாட்சி சொல்ல முன் வருகிறான். ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட் கொடுத்து சுஜாதா தன் திறமையை காட்டுகிறார்.

இன்னும் ஒரு பெண் மனம்: இன்னொரு பெண் மேல் ஆசைப்படும் 45 வயது தொழிலதிபர். மனைவியைக் கொல்லப் போடும் திட்டம் ஓ. ஹென்றி ட்விஸ்ட்டாக தன் மேலேயே வந்து விடிகிறது.

இப்படி ஒரு மாறுதல்: வயதான எம்.டி. செகரடரியைப் பார்த்து ஜொள்ளு. செகரட்டரி எப்படி சமாளிக்கிறாள்? வேஸ்ட்.

ஜோதி: இதுவும் அவரது ஆரம்ப கால முயற்சி. குற்றவாளி யாரென்று தெரிந்தும் கைது செய்ய முடியாத சூழ்நிலை. சுஜாதாவே ஒரு பாத்திரமாக வருவது சுவாரசியம்!

கை: கையை படம் படமாக வரையும் ஓவியனுக்கு கை போய்விடுகிறது. சுமாராக இருக்கிறது.

மனைவி கிடைத்தாள்: அழகி சாதாரணமான வாலிபனை விரும்பி மணக்கிறாள். நண்பன் ரூட் விடும் கதை.

ஓரிரவில் ஒரு ரயிலில்: ஒரு பெரிய சாமியாருக்கு கொலை மிரட்டல். வேஸ்ட்.

ஒரு சிக்கலில்லாத காதல் கதை: கொஞ்சம் அழகு குறைவான டாக்டர் தன் தொழிலில் நிறைவு காண்கிறாள்.

சிவந்த கைகள், கலைந்த பொய்கள்: போலி எம்.பி.ஏ. சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்து கிடுகிடுவென்று மேலே போகும் ஒரு இளைஞனின் மோசடி தெரிந்துவிடுகிறது. ஏமாற்று வேலை பற்றி தெரிந்த பெரியவரை இளைஞன் “சிவந்த கைகள்” குறுநாவலில் கொன்றுவிடுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது “கலைந்த பொய்கள்” குறுநாவலில்.

தப்பித்தால் தப்பில்லை: சாது கணவன், சோரம் போகும் மனைவி. கணவனுக்கு விஷயம் தெரிகிறது. அவளை கொலை செய்ய கச்சிதமாகத் திட்டமிடுகிறான். பிறகு? இதிலும் ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட்.

விக்ரம்: மசாலா சினிமா கதையில் சுஜாதாவும் ஒன்றும் கிழிப்பதற்கில்லை. இண்டியானா ஜோன்ஸ் படத்திலிருந்து ஒரு காட்சி அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கிறது. சின்ன சின்ன நகாசு வேலை செய்திருக்கிறார், அவ்வளவுதான்.

விளிம்பு: ஸ்கிட்சோபிரனியா என்ற முடிச்சு எழுதப்பட்ட காலத்தில் புதுமையாக இருந்திருக்கும்.

விருப்பமில்லாத திருப்பங்கள்: மெதுமெதுவாக குற்ற உலகில் இழுக்கப்படும் ஒருவன். சுமார்.

விடிவதற்குள் வா: புது கிருஸ்துவர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் நடுவில் டென்ஷன் இருக்கும் ஒரு கிராமம். துபாயிலிருந்து திரும்பி வரும் கணவன். மனைவியைக் காணவில்லை. பாதிரியார் மேல் சந்தேகம் என்று சின்னப் பொறி பெரிய கலவரமாக வெடிக்கிறது. கணவனே தடுக்க முயன்றாலும் நடக்கவில்லை. மனைவி உயிரோடுதான் இருக்கிறாள் என்று முடிக்கிறார். சுமார்.

விழுந்த நட்சத்திரம்: சினிமா உலக நண்பன் ஏமாற்றுகிறான்.

இவற்றைத் தவிர வேறு இரண்டு புத்தகங்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன். தனியாகப் பதிவு எழுதும் அளவுக்கு அவை வொர்த் இல்லை.

வேணியின் காதலன்: நடைபாதை உணவுக்கடை வைத்திருக்கும் குடும்பம். குடிகார அப்பன். டீனேஜ் மகள் வேணிதான் நடத்துகிறாள். அவளை சைட்டடிக்கும் சிலர். காதலன், ஒருதலைக் காதலன், திருமணம் செய்துகொள்ள முன்வரும் காதலன் காணாமல் போவது என்று போகிறது.

தூண்டில் கதைகள், மீண்டும் தூண்டில் கதைகள்: தொண்ணூறுகளின் மத்தியில் சுஜாதா வாரப்பத்திரிகையில் சிறுகதை வடிவம் மறைகிறதே என்று கவலைப்பட்டிருக்கிறார். குமுதத்தில் வாரப் பத்திரிகை சிறுகதை ஸ்டைலில் சில சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ஒரு கணேஷ்-வசந்த் சிறுகதை கூட உண்டு. ஆனால் எதுவுமே அவரது திறமையைக் காட்டவில்லை என்பதுதான் சோகம்.

கடவுள் இருக்கிறாரா அறிவியல் கணிதக் கோட்பாடுகளுக்கு சிறந்த அறிமுகப் புத்தகம். இன்றும் படிக்கலாம். என்ன ஆச்சரியம் தற்செயலைப் பற்றி பேசுகிறது, தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் ‘ஒரே ஒரு துரோகம்’

sujathaவாரப் பத்திரிகை தொடர்கதைதான். சாவியில் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்ததாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை இலக்கியம்தான். மைனர் க்ளாசிக் என்றே சொல்லலாம். ஏன் பிரபலமாக இல்லை என்று தெரியவில்லை.

சாதாரண கரு. ஊரை ஏமாற்றும் கணவன். அவனை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் மனைவிக்கு அவன் சுயரூபம் மெதுமெதுவாகத் தெரிகிறது. எப்படி எதிர்கொள்கிறாள்?

திருப்பித் தரும் எண்ணம் அறவே இல்லாமல் கடன் வாங்கி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வாய்ச்சவடால் சம்பத்; காலேஜில் பேராசிரியையாக இருக்கும், முதிர்கன்னியாகிக் கொண்டிருக்கும் ராஜி; (கதை எழுதப்பட்ட காலத்தில் 26-27 வயதே முதிர்கன்னிதான்) சம்பத் வேலைக்குப் போகும் மனைவி இருந்தால் பணப் பிரச்சினை இருக்காது என்று பொய் மேல் பொய் சொல்லி ராஜியை மணம் செய்து கொள்கிறான். இன்னொரு காரணம் பழைய காதலி சுந்தரி ராஜி வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பது. திருமணத்துக்குப் பிறகு சுந்தரியை மயக்கி தொடுப்பாக வைத்துக் கொள்ளத் திட்டம். பொய் மேல் பொய் தொடர்ந்து நடக்கிறது. ராஜிக்கு சந்தேகம் வந்து, உறுதியும் ஆனவுடன்?

இலக்கியம் ஆக்குவது பாத்திரப் படைப்புதான். சம்பத்தும் ராஜியும் நிஜமானவர்கள். பக்கத்துக்குப் பக்கம் அவர்கள் பாத்திரங்களை செதுக்கி இருக்கிறார். ஒரே சம்பவத்தை பல சமயம் இருவர் பார்வையிலும் விவரிப்பது இன்னொரு சிறப்பான உத்தி. ஏமாற்றுபவன் கண்ணோட்டத்திலிருந்தும் ஏமாறுபவள் கண்ணோட்டத்திலிருந்தும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்.

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் என்று ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை உண்டு. இதே கருதான். ஏமாற்றுக்கார கணவன், ஏமாறும் மனைவி, எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதை. ஜெயகாந்தனின் மதுரமும் சுஜாதாவின் ராஜியும் இருவருமே இலக்கிய நாயகிகள்தான், ஆனால் எத்தனை வித்தியாசம்?

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் “பெண் எந்திரம்”

sujathaசாகச நாவல் என்று பார்த்தால் சுமார்தான், ஆனால் தொடர்கதையாக வந்தபோது நிச்சயமாக வாசகிகளைக் கவர்ந்திருக்கும்.

சிம்பிளான முடிச்சுதான். பன்ச் கார்ட் (பழைய கால கம்ப்யூட்டர்) ஆபரேடர் வித்யா, அவளை உண்மையாக விரும்பும் ப்ரோக்ராமர் கனகசபை, பணக்கார உயர் அதிகாரி கிருஷ்ணகுமார் என்று ஒரு முக்கோணம். வித்யாவின் சம்பளத்தை நம்பித்தான் அவள் குடும்பம் இருக்கிறது. அதனால் வித்யாவின் கல்யாணத்தில் அப்பாவுக்கு விருப்பமில்லை. வித்யாவுக்காக கனகசபை எதையும் விட்டுக் கொடுப்பான் என்று புரிந்து கொள்ளும்போது கனகசபையை வித்யாவின் குடும்பம் குன்சாக ஏற்றுக் கொள்கிறது. இந்த சமயத்தில் வித்யா தான் வாங்கும் சம்பளத்துக்கு மேல் வேலை செய்து கம்பெனியில் மோசடி நடப்பதைக் கண்டுபிடிக்கிறாள். கிருஷ்ணகுமாரிடம் சொல்கிறாள். கனகசபைதான் தில்லுமுல்லு செய்தான் என்று அவனுக்கு வேலை போகிறது. கிருஷ்ணகுமார் வித்யாவை மணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார். வித்யாவின் குடும்பத்தை பணத்தால் அடிக்கிறார். பிறகு வழக்கமான சுலபமாக யூகிக்க முடியும் திருப்பங்களுடன் கதை முடிகிறது.

இந்தக் கதையை மீண்டும் படிக்கும்போது எனக்கு தோன்றிய முதல் எண்ணம் இதுதான் – எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சிவசங்கரியும் லக்ஷ்மியும் அனுராதா ரமணனும் இன்னும் சில பல பெண் எழுத்தாளர்களும் வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினைகளை கருவாக வைத்து நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார்கள். அப்போதே என்னால் படிக்க முடியவில்லை, இப்போது யாராலும் முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் இந்த மனிதர் சாகசக் கதைக்கு நடுவே அதே பிரச்சினைகளைப் பற்றி நாலு வரி எழுதுவது இத்தனை உண்மையாக இருக்கிறது. பாலகுமாரனைப் போல பெரிய சத்தம் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. மனிதருக்கு நிறைய திறமை உண்டு, குமுதம் விகடனில் தொடர்கதை எழுதப்போய் தன் தரத்தை குறைத்துக் கொண்டுவிட்டார்…

இரண்டாவது எண்ணம் இதுதான் – அரைக்கிழமான நானே பஞ்ச் கார்ட் கம்ப்யூட்டர்களைப் பார்த்ததில்லை, பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பஞ்ச் கார்ட்களைத்தான் பார்த்திருக்கிறேன். இவர் பஞ்ச் கார்டுகளைப் பற்றி எழுதுவது இன்றைக்கு யாருக்குப் புரியும்?

சுஜாதா ரசிகர்களுக்காக மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் ‘பூக்குட்டி’

Feel-good story.

sujathaபணக்கார வீட்டு ஐந்து வயதுக் குழந்தை விம்முவுக்கு சேரியில் குப்பை பொறுக்கும் பெண் வேலாயியோடும் அவள் நாய் பூக்குட்டியோடும் நட்பு ஏற்படுகிறது. அப்பா அம்மா வழக்கம் போல பிரித்துவிட, விம்முவுக்கு வேலாயியின் நினைவில் ஜுரம் எல்லாம் வருகிறது. டாக்டர் இது ஏக்கம்தான், வேலாயியை அவள் கண்ணில் காட்டுங்கள் என்கிறார். வேலாயியின் குடும்பம் எங்கேயோ போய்விடுகிறது. அப்பா அம்மா போலீஸ் நண்பர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் விம்மு விடுவதாக இல்லை, ஒரு நாள் இரவு அவர்களைத் தேடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறாள். எப்படியோ விம்முவைக் கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டிவந்து அவளுக்கு அறிவுரை எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் வேலாயிக்கும் அதே நிலைதான், அவளைக் கூட்டிக் கொண்டு அவள் அப்பா விம்முவைப் பார்க்க வருகிறார். தோழிகள் சந்தித்து சுபம்!

கதை முழுவதும் விம்முவின் கண்ணோட்டத்திலிருந்துதான் சொல்லப்படுகிறது. அதிலிருந்து விலகுவதே இல்லை. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். விமரிசனம் என்றால் ஒன்றுதான். இது குழந்தைகளுக்கான நாவல் என்று சொல்லப்பட்டாலும் இது பெரியவர்களுக்கான நாவல்தான். குழந்தையின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

பெரிதாக எழுதவே இஷ்டமில்லை. இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும், ஆராயவே கூடாது. படித்துக் கொள்ளுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் “தீண்டும் இன்பம்”

sujathaசுஜாதாவுக்கு நிறைய ஆசை. பதின்ம வயதில் கர்ப்பம் ஆகும் பெண்கள், சிறு குழந்தைகளை மேலை நாடுகளில் தத்துக் கொடுப்பதில் உள்ள தகிடுதத்தங்கள், எய்ட்ஸ் நோயாளிகளின் சோகங்கள், எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் எல்லாவற்றையும் பற்றி எழுத ஆசைப்பட்டிருக்கிறார். அத்தனையையும் ஒரு சிறு நாவலில் கலந்துகட்டி அடித்துவிட்டார்.

theendum_inbamகல்லூரியில் படிக்கும் பதினேழு வயதுப் பெண் பாட்டுப் போட்டியில் வெல்கிறாள். அதைக் கொண்டாட நடத்தும் பார்ட்டியில் தற்செயலாக உடலுறவு. கர்ப்பம். காலேஜ் ரௌடி ரகுவுக்கு இந்தக் கர்ப்பம் பற்றி விஷயம் தெரிந்து உறவு கொண்டவனை அடிக்க அவன் இறந்தே போகிறான். கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்கிறாள். ஒரு “தொண்டு அமைப்பு” அவளை குழந்தை பெற்றுக்கொண்டு தத்துக் கொடுக்கும்படி மனதை மாற்றுகிறது. ஆனால் குழந்தையைப் பார்த்த பிறகு பாசம் ஏற்பட்டு அதை தத்துக் கொடுக்க மறுக்கிறாள். சில நாட்களில் குழந்தை வளர்ப்பதில் உள்ள சிரமங்களைப் புரிந்து கொண்ட பிறகு அவள் மனம் மாறி தத்துக் கொடுக்க ஒத்துக் கொள்கிறாள். நடுவில் ரகுவுக்கு எய்ட்ஸ் என்று தெரிய வருகிறது. குழந்தையப் பார்த்துக் கொள்ள சிரமப்படும்போது அவளுக்கு உதவி செய்ய முன்வருபவன் ரகு மட்டுமே. எய்ட்ஸ் என்று பழைய நண்பர்கள் அவனைத் தவிர்க்கும்போது இவள் மட்டும் அவனைப் புரிந்து கொள்கிறாள்.

சுஜாதா இந்த நாவலை சிறப்பாக கொண்டு வந்திருக்கலாம். நல்ல பாத்திரப் படைப்புகள். பல நல்ல காட்சிகள். (உறவு கொள்ளும் காட்சி, காதல் இல்லை என்று ஒரு நண்பன் விலகுவது…) சிறப்பான நாடகமாக எழுதி இருக்கலாம். ஆனால் தொடர்கதை என்ற format அவரை அமுக்கிவிடுகிறது. பல விஷயங்களைப் போட்டு குழப்பிவிடுகிறார். வடிவகச்சிதம் அமையவில்லை. தொடர்கதை format திறமை உள்ளவர்களையே கவிழ்த்துவிடக் கூடியது என்பதற்கு நல்ல உதாரணம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் கதை: “பேசும் பொம்மைகள்”

sujathaபேசும் பொம்மைகள் நாவலில் என்னவோ குறைகிறது.

கணேஷ்-வசந்த் சாகசங்கள் உண்டு. அறிவியல் புனைகதைக்குத் தேவையான சுவாரசியமான premise உண்டு. இருந்தாலும் ஏதோ குறைகிறது.

தொடர்கதை format-இன் குறைகள்தான் காரணம் என்று நினைக்கிறேன் (குங்குமம் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது). பத்திரிகை ஆசிரியர் சொல்லும்போது கதையை முடித்தாக வேண்டும் என்பது பிரச்சினைதான். ஆனால் வாரப் பத்திரிகைகள் இல்லை என்றால் சுஜாதா ஏது?

ganesh-vasanthஏறக்குறைய cliche ஆகிவிட்ட கருதான். மனிதர்களின் நினைவுகளை வேறு உருவத்துக்கு மாற்ற ஆராய்ச்சி நடக்கிறது. மனிதர்களையே அவர்கள் சம்மதம் இல்லாமல் பயன்படுத்துவதால் ரகசியமாக நடக்கிறது. இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் மாயா. மாயாவின் அக்கா மேனகாவும் அங்கேதான் வேலை பார்த்தாள், ஆனால் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் காதலனோடு அமெரிக்கா போய்விடுகிறாள். அவ்வப்போது தொலைபேசுகிறாள், அத்தோடு சரி. நிறுவனம் சாரங்கபாணி, நரேந்திரநாத் என்று இரு குழுக்களாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. மாயா மீதும் பரிசோதனைகள் நடக்கின்றன. திடீரென்று மாயா அலுவலகத்திலேயே தங்க நேரிடுகிறது. கணேஷ்-வசந்த் நுழைகிறார்கள், சாகசங்கள் புரிகிறார்கள்.

கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் நாவல்: அனிதா இளம் மனைவி

sujathaஅனிதா: இளம் மனைவி சுஜாதாவின் புகழ் பெற்ற கணேஷ்-வசந்த் நாவல். ஜெயமோகன் பரிந்துரைக்கும் தமிழ் வணிக நாவல்.

1971-இல் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கதையின் விறுவிறுப்பு, மற்றும் முடிச்சு அப்போது இதன் பெரும் கவர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் படித்துவிட்டு ஒரு நிமிஷம் யோசித்தால் கூட முடிச்சின் செயற்கைத்தனம், பலவீனம் எல்லாம் புரியும்.

ஒரு பிணம் கிடைக்கிறது. இறந்தவர் பணக்கார ஷர்மா என்று அவரது அழகிய இரண்டாம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள். வேலைக்கார கோவிந்த் மேல் சந்தேகம் விழுகிறது. முதல் மனைவியின் பெண் மோனிகா கணேஷை கதைக்குள் இழுக்கிறாள். கணேஷ் அனிதாவால் கவரப்படுகிறான். சின்னச் சின்ன முரண்கள் (discrepancies) தெரிகின்றன. அவற்றைப் பின் தொடர்ந்து இறந்தது ஷர்மா அல்ல, கோவிந்த், கொன்றதே ஷர்மாதான் என்று கண்டுபிடிக்கிறான்.

எத்தனை முட்டாள்தனம்? போலீஸ் இறந்தது ஷர்மா என்று நம்பிவிட்டாலும் ஷர்மா தன் கம்பெனியை எப்படி நடத்துவார்? எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு புது வாழ்க்கை தொடங்கினாலும் இது வரை சேர்த்து வைத்த சொத்து ஷர்மாவுக்கு எப்படி கிடைக்கும்? சரி மனைவியை மிரட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றாலும் இனி மேல் அனிதாவுடன் சேர்ந்து வாழ்வது எப்படி? உற்றார் உறவினர் இல்லாத கோவிந்தின் பிணத்தை வீட்டின் பின்னால் புதைத்தால் பிரச்சினைகள் வராமல் இருக்குமே? கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பானேன்? இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்ப நேரமில்லாமல் விறுவிறுவென்று போவதுதான் புத்தகத்தின் வெற்றி. இன்றும் கூட இதைப் போல குற்றப் பின்னணி உள்ள ஒரு நாவல் தமிழில் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இது எப்படி இருக்கு என்று ஜெய்ஷங்கர், ஸ்ரீதேவி நடித்து திரைப்படமாகவும் வந்தது. ஓடவில்லை.

வணிக நாவல்கள் தமிழில் எப்படி வளர்ந்தன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், சுஜாதா ரசிகர்கள் தவறவிடக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்

சாஹித்ய அகடமி விருது பெற்ற ஓல்காவின் சிறுகதை – ‘ஒரு பெண்ணின் கதை’

கௌரி புண்ணியத்தில் தெலுகு மொழிக்காக சாஹித்ய அகடமி விருது பெற்ற ஓல்காவின் சிறுகதை ஒன்று கீழே. படிக்கலாம், ஆனால் நேரடியான ‘பெண் அடக்கப்படுகிறாள், ஆணாதிக்க சமுதாயம்’ கதைதான். இதை விட இன்னும் சிறப்பான படைப்புகளுக்காகத்தான் விருது கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஓல்காவின் இன்னொரு சிறுகதை – இதுதான் அகடமி பரிசு பெற்ற விமுக்தா சிறுகதைத் தொகுப்பின் தலைப்புச் சிறுகதை – சொல்வனத்தில் படிக்கலாம்.

ஒரு பெண்ணின் கதை

volga_lalitha_kumariநான் செய்த தவறு என்னவென்று புரியவில்லை. நடந்தவற்றில் கொஞ்சமாவது தவறு இருந்தால், அதைத் தடுத்து நிறுத்துவதும், வேறு விதமாக மாற்றுவதும் என் கையில் இருந்தால் எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது என்று மட்டும் சொல்ல முடியம்.

இது போன்ற கஷ்டம் என் கணவருக்கு வந்தபோது அவருக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தேன்? எவ்வளவு ஆறுதல் சொன்னேன்? எப்படி இதயத்தில் அடைக்கலம் கொடுத்தேன்? அன்று மாலை இப்பொழுதும் எனக்கு நினைவு இருக்கிறது. சாதாரண நினைவு இல்லை. கண்ணுக்கு முன்னால் நடப்பது போன்ற நினைவு.

எங்களுக்குத் திருமணமாகி அப்போதைக்கு ஒரு வருடமாகியிருந்தது. அந்த ஒரு வருட காலத்தில் என் வாழ்க்கையின் மாற்றங்களை அசைப் போட்டுக்கொண்டே அவருடைய சட்டைக்கு பித்தான் தைத்துக் கொண்டிருந்தேன்.
அவருடைய பெயரை முதல் முறையாக பெரியப்பாவின் வாயிலாகக் கேட்டேன். பெரியப்பாதான் எனக்காக இந்த வரனைக் கொண்டு வந்தார். மதுசூதன் என்ற பெயர் எவ்வளவு அழகாக, இனிமையாக, மனதிற்கு உல்லாசம் தருவதாக இருந்தது! திரும்பத் திரும்ப அந்த பெயர் என் மனதில் எதிரொலித்தது. நான் இவ்வளவு நாளாய் காத்திருந்த ஜென்ம சாபல்யம் அந்தப் பெயரில்தான் இருப்பது போல் தோன்றியது. மூன்று வருடங்களாக எந்தப் பெயருடன் என் பெயர் இணையப் போகிறது என்று காத்திருந்தேனோ, என் எதிர்பார்ப்பு பலித்துவிட்டது போல் சந்தோஷமடைந்தேன். அந்த நிமிடம் முதல் நான் பிறந்து வளர்ந்த வீட்டை வேற்று வீடாக பாவித்தேன். அது திடீரென்று ஏற்பட்ட எண்ணம் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் நான் எந்த மாற்றம் செய்தாலும், அம்மா தனக்கு அது பிடிக்காவிட்டால் “உன் வீட்டில் நீ அப்படி செய்து கொள். இந்த வீட்டில் பழையபடியே நடக்கட்டும்” என்று சொல்லி வந்தாள். என் விருப்பம் போல் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு எனக்கு என்று ஒரு வீடு இருக்கப் போகிறது என்று நாளாவட்டத்தில் புரிந்துகொண்டு அந்த வீட்டுக்காகக் காத்திருக்ககத் தொடங்கினேன். இறுதியில் அந்த வீடு ஹைதராபாதில் இருப்பது தெரிந்த போது என் சந்தோஷத்தை என்னவென்று சொல்வேன்? ஹைதராபாத், மதுசூதன் .. இந்த இரண்டு பெயர்களும் என் மனதில் தோன்றிய போதேல்லாம் என் இதழ்களில் எப்படி புன்முறுவல் தவழுமோ என் தங்கை கேலி செய்தபடி சொல்வாள். அதைக் கேட்டு வெட்கத்தால் என் முகம் சிவந்து விடும்.

மதுசூதனுக்கு ஐம்பதாயிரம் வரதட்சிணை கொடுப்பதற்கு எங்கள் வீட்டார் சம்மதித்து விட்டார்கள். அந்த விஷயத்தை என் சிநேகிதிகளிடம் சொன்னேன். பி.ஏ. தேர்வுகள் எழுதிவிட்டு திருமணத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் சிநேகிதிகளுக்கு நடுவில் எப்போதும் திருமணத்தைப் பற்றிய பேச்சுதான் நடக்கும். எல்லோருக்கும் முன்னால் எனக்கு வரன் நிச்சியமானதாலோ என்னவோ எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. வரதட்சிணைப் பற்றிக் கேள்விப்பட்டு என் சிநேகிதிகளில் சிலர் “அம்மாடியோவ்! அவ்வளவா!” என்றார்கள். வேறு சிலர் “மலிவாக நல்ல வரனை தட்டிக் கொண்டுவிட்டாய்” என்றார்கள். ஒருத்தி மட்டும் “வரதட்சிணை எதற்கு?” என்று வாதம் புரிந்தாள். திருமணம் செய்துகொண்டு நான் அவனுக்கு சுகத்தைத் தருவேனாம். சிசுரூஷை செய்வேனாம். குழந்தைகளைப் பெறுவேனாம். திரும்பவும் அவர்களுக்காக நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருப்பேனாம். “இத்தனை வேலைகளை செய்யப்போகிற உனக்கு, இத்தனை பொறுப்புகளைத் தலையில் போட்டுக் கொள்ளப்போகிற உனக்கு அவன் வரதட்சிணைக் கொடுத்தாலும் அர்த்தம் இருக்கிறது. நீ எதுக்குக் கொடுக்கணும்?” என்று விதண்டாவாதம் புரிந்தாள்.
எனக்கு அவனுடன் ஏற்படப்போகும் புனிதமான பந்தத்தை இவ்வளவு முட்டாள்தனமாக புரிந்துகொண்ட அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது எனக்கு உடல் பற்றி எறிவது போல் இருந்தது.

“நான் மட்டும் சுகப்பட மாட்டேனா? அந்த உழைப்பு எனக்காகவும் இல்லையா? குழந்தைகள் பிறந்தால் அவர்கள் எனக்கும் குழந்தைகள் இல்லையா?” என்று கேட்டேன், அவளுடைய வக்கிரப் பார்வை எவ்வளவு தூரம் போகும் என்று தெரிந்து கொள்வதற்காக. ”அப்படி இருக்கும்போது ஐம்பதாயிரம் எதற்கு, இருவரும் சேர்ந்து சுகம் அடையும் பட்சத்தில்” என்றாள் லா பாயின்ட் எடுத்துரைப்பது போல்.

இப்படி குதர்க்கம் பேசுபவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? சொன்னாலும் அவர்கள் மண்டையில் ஏறப்போகிறதா என்று நினைத்தவளாய் “அது பரம்பரைப் பழக்கம். எனக்கும், என் வீட்டாருக்கும் இல்லாத ஆட்சேபணை உனக்கு எதற்கு?” என்றேன். அதற்கு அவள் “எதற்கு என்று கல்யாணம் ஆன பிறகு உனக்கே புரியும்” என்று போய்விட்டாள்.

ஆனால் கல்யாணம் ஆன பிறகும் எனக்கு எதுவும் தெரியவில்லை. திருமணம் விமரிசையாக நடந்தேறி விட்டது. மணமேடையில் முதல் முறையாக அவரைப் பார்த்த இனிமையான தருணத்தை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. போட்டோவில் பார்த்ததை விட நேரில் அழகாக இருந்தார். அவருடைய பெயர், அவருடன் என் வாழ்க்கை எல்லாமே இனிமையானவை என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. திருமணத்தில் ஒவ்வொரு சடங்கையும் ரொம்ப புனிதமாக நினைத்து மனம் ஒன்றி செய்தேன். திரு மாங்கலயத்தை பக்தி சிரத்தையுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு மார்பில் புதைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பேரதிர்ஷ்டம், அபூர்வமான வரம் அந்த மாங்கல்யம்தான் என்று நினைத்தேன்.

அவருடைய வாழ்க்கைத் துணையாக கஷ்ட சுகங்களில் பங்கு பெறவேண்டும் என்று எவ்வளவு மனப்பூர்வமாக நினைத்தேன் என்றால், பின் வரும் நாளில் கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டாலும், திருமண நாளான்று நான் எடுத்துக் கொண்ட முடிவை நினைவு கூர்ந்து, அந்த கஷ்டத்தை மென்று விழுங்கியபடி சந்தோஷமாக அவருடன் ஒத்துழைத்தேன். கணவன் மனைவியின் பந்தத்தைப் பற்றி, மனைவி கணவனிடம் செலுத்த வேண்டிய கடமைகளைப் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். “அன்பால் நிறைந்த வீடுதான் சுவர்க்கத்திற்கு ஒப்பானது” என்றும் “பெண்ணின் வாழ்க்கை கோடி போன்றது, பந்தல் இருந்தால் படர்ந்து செழிக்கும்” என்று சிறு வயது முதல் பாடி வந்தேன். அப்படிப்பட்ட பாடல்கள், கதைகள், நாவல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நானும் கொடியைப் போல் மதுசூதனனுடன் பிணைந்து கொண்டு நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறேன் என்ற திருப்தியை விட வேறு என்ன வேண்டும்?

ஆனால் இதெல்லாம் எளிதாக, சுனாயாசமாக நடந்து விடவில்லை. திருமண நாளன்று ஏற்பட்ட புனிதமான எண்ணத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கு நான் ரொம்ப போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அவருடைய பழக்க வழக்கங்கள் எனக்கு நேர் எதிர். அவருக்கு சுத்தம் சுகாதாரம் ரொம்ப குறைவு. தன் சுற்றிலும் இருக்கும் இடத்தை குப்பையாக, களேபரமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் அவருடையது. என்னுடைய சுத்தம் அவருக்கு எரிச்சலைத் தந்தது. ஆறு மாதங்களில் நானும் அவரைப் போல் மாறுவதற்கு ரொம்ப முயற்சி செய்தேன். எங்கள் பக்கத்து வீட்டுக்காரிக்கு என்னைப் போல் சுத்தம் பற்றி பித்து கிடையாது. அவளுடைய கணவருக்கு கொஞ்சம் தூசி, குப்பை இருந்தாலும் பைத்தியம் பிடித்து விடுமாம். அந்தம்மாள் மிரண்டு போகாத குறையாய் அவருக்கு வேண்டிய விதமாக வைத்துக் கொள்வதற்கு திண்டாடிக் கொண்டிருப்பாள். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது இதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். நான் அவளுக்கு என்னுடைய பழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவளுடைய சோம்பேறித் தனத்தை கொஞ்சம் இரவல் வாங்கிப் கொண்டேன்.

அவர் என்னை அன்புடன் நடத்தி வந்தார். அன்பிற்கு அளவுகோல் என்ன? ஒரு முழம் பூ வங்கி வருவது, சினிமாவுக்கும், ஊர் சுற்றுவதற்கும் அழைத்துப் போவது என்றால் அதில் எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் எனக்கு விருப்பமான கனகாம்பரம் வைத்துக் கொண்டாலும், ஹிந்தி சினிமாவுக்குப் போகலாம் என்று சொன்னாலும் அவருக்கு எரிச்சல் வந்து விடும். அவருக்கு எரிச்சல் தரக்கூடாது என்று திருமண நாளன்றே சத்தியம் செய்து கொண்டேன் இல்லையா, அதனால் நாங்கள் ரொம்ப அன்புடன்தான் இருந்து வந்தோம். எங்க மாமியார், மாமனார் ரொம்ப நல்லவர்கள்தான். திருமணத்தின்போது வரதட்சிணை, சீர்வரிசை தவிர வேறு எந்த வேண்டாத விருப்பங்களையும் தீர்த்து வைக்கச் சொல்லிக் கேட்டதில்லை. அது போறாது இது போறாது என்று என்னை ஒருநாளும் துன்புறுத்தியதில்லை. அவர்கள் வேறு ஊரில் இருந்ததால் எனக்கு மாமியார் கொடுமையும் இருந்ததில்லை. எல்லாம் நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது.

அன்று… எங்கள் திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைந்த அன்றைக்கு… கடந்த வருடம் எனக்குக் கிடைத்த பந்தலானது எவ்வளவு குளிர்ச்சியானதோ, எவ்வளவு வெப்பம் நிறைந்ததோ மனதிலேயே அசை போட்டுக் கொண்டிருந்தபோது, அவருடைய சட்டைக்கு பித்தான் தைத்துக் கொண்டிருந்த ஊசி என் விரலில் சுருக்கென்று தைத்து விட்டது. ‘அம்மா!” என்று பெரும் குரலெடுத்து கத்தும் முன்பே வாசலில் பெரிய ஆரவாரம் கேட்டது. எனக்கு பயமாக இருந்தது. ஒரே எட்டில் வாசலுக்கு ஓடினேன். நிறுத்தப்பட்ட ஆட்டோவைச் சுற்றிலும் கும்பலாக மனிதர்கள் கூடியிருந்தார்கள். ஸ்கூட்டர்களிலிருந்து ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த கும்பலிலிருந்து வழி ஏற்படுத்திக் கொண்டே என் கணவரை நான்கு பேர் ஆட்டோவிலிருந்து கீழே இறக்கினார்கள். சோர்வாக அடியெடுத்து வைத்தபடி வந்து கொண்டிருந்தவரைப் பார்த்ததும் என்ன நடந்தது என்று தெரியாமலேயே ஹோவென்று கதறினேன்.

“ஒன்றும் இல்லையம்மா. ஒன்றும் நடக்கவில்லை. நாமெல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்” என்றபடி பெரியவர் ஒருவர் அவரைக் கட்டில் மீது படுக்க வைத்தார், அப்பொழுதுதான் பார்த்தேன். அவருடைய வலது கையில் பெரிய கட்டு. ரத்தத்தில் தோய்ந்த பேண்டேஜ். எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. சோர்வு ஆட்கொண்டதில் நிற்க முடியாமல் தரையில் சரிந்து விட்டேன்.

‘என்ன ஆயிற்று இவருக்கு? என் தெய்வம் திரும்பவும் எனக்குக் கிடைக்குமா?’ விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டே அவர்கள் எல்லோரும் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அவர் தினமும் பாக்டரியில் இயக்கும் இயந்திரத்தைப் பற்றிச் சொன்னார்கள். அந்த இயந்திரத்தை எவ்வளவு திறமையுடன் இயக்கினால் எவவளவு போருட்களை தயாரிக்க முடியுமோ விவரமாகத் தெரிவித்தார்கள். அவர் அந்த வேலையை ஏழு வருடங்களாக எவ்வளவு திறமையுடன் செய்து வந்தார் என்றும் சொன்னார்கள். அப்படியும் இன்று அந்த மிஷின் அவருடைய வலது கை விரல்களை எப்படி கத்தரித்து விட்டதென்று சொன்னார்கள். அது ஒன்றும் பெரிய ஆபத்து இல்லை என்றும், செய்ய வேண்டிய முதலுதவி செய்து விட்டார்கள் என்றும், மேற்கொண்டு சிகிச்சை செய்ய வைப்பார்கள் என்றும் சொன்னார்கள். அவருக்கு இப்பொழுது ஓய்வும், போஷாக்கான ஆகாரமும் தேவை என்றும், அதற்கு செலவழிக்கச் சொல்லி என் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். அவர்கள் என் கணவர் வேலை பார்க்கும் பாக்டரி யூனியனில் வேலை செய்பவர்களாம். கடவுள்தான் அவர்கள் உருவில் இந்த கஷ்டத்தில் எனக்கு ஆதரவு கொடுப்பதற்கு வந்திருக்கிறார் போலும் என்று தோன்றியது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தைரியம் சொல்லுவது போல் அவர் பக்கம் பார்த்தேன். எல்லோருக்கும் காபி கலந்து கொடுக்கும் வரையில் அவர்கள் எங்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் போகாமல் அப்படியே நாள் முழுவதும் தங்கியிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கஷ்டத்தில் இருக்கும் என்னை ஆதரிப்பதற்கு, கூட பிறந்த அண்ணன் தம்பி வந்து உட்கார்ந்து இருப்பது போல் தோன்றியது. அவர்களுடைய தைரியம் நிறைந்த பேச்சுக்கள் மட்டும் இல்லை என்றால் நான் என்னவாகி இருப்பேனோ? கஷ்டம் வந்துவிட்டது என்ற நினைப்பு வரும் முன்பே அந்த கஷ்டத்தில் நாம் தனியாக இல்லை என்றும், கரையில் சேர்ப்பதற்கு கைகள் நம் சுற்றிலும் இருக்கிறது என்று தெரியும் போது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

அவர்களை அனுப்பிவிட்டு வாசல் கதவைச் சாத்திவிட்டு வரும் போது திரும்பவும் என் வேதனை எல்லாம் நெஞ்சுக்குள் வந்தது உடகார்த்திருப்பது போல் தோன்றியது. ஆனால் நான் அழவில்லை. மறுபடியும் அழும் வாய்ப்பை என் கணவர் எனக்குக் கொடுக்கவில்லை. நான் உள்ளே வரும்போது அவர் அழுது கொண்டிருந்தார். முடமாகிவிட்ட தன் கையைப் பார்த்துக் கொண்டு குமுறி குமுறி அழுது கொண்டிருந்தார். நான் எங்கிருந்தோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கண்ணீரை விழுங்கி அவருடைய கண்ணீரைத் துடைத்தேன். தாய் கைக் குழந்தையை மார்போடு அரவணைத்துக் கொள்வது போல் அவரை அணைத்துக் கொண்டு சமாதானப் படுத்தினேன். தைரியம் சொன்னேன். விரல்கள் இல்லாவிட்டாலும் அவருடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையது என்றேன். அவர் எந்த அளவுக்கு கோழை ஆகி விட்டார் என்றால், அந்த விரல்கள் இல்லாததால் அவர் மீது என்னுடைய அன்பும் குறைந்துவிடும் என்று நினைத்து விட்டார். “எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறீங்க தெரியுமா?” என்று கடிந்து கொண்டேன். அவர் எப்படி இருந்தாலும் என்னுடயவர் என்றும், என்னுடைய காதலுக்கு இது போன்ற சோதனைகள் ஒரு பொருட்டு இல்லை என்றும் சொன்னேன். ரத்தத்தால், மருந்துகளால் தோய்ந்திருந்த அந்தக் கையின் கட்டை மென்மையாக, அன்புடன் என் இதழ்களை பொருத்தி முத்தமிட்டேன்.

ஆனால் அவருக்கு வேறு ஒரு கவலை பிடித்துக் கொண்டு விட்டது. விரல்கள் இல்லாமல் அந்த வேலையை எப்படி பார்ப்பது? வேலையிலிருந்து நீக்கிவிட்டால் என்ன செய்வது? இனிமேல் யாராவது எந்த வேலையாவது தருவார்களா? நான் எவ்வளவு தைரியம் சொன்னாலும் அவருடைய கவலை நீங்கியபாடில்லை. தூக்க மாத்திரைக் கொடுத்து அவரைத் தூங்க செய்தேன். நான் மட்டும் விடிய விடிய விழித்துக் கொண்டிருந்தேன்.

மறுநாள் செய்தி தெரிந்து மாமியாரும் மாமனாரும் வந்தார்கள். திரும்பவும் அழுகை. இனி இந்த அழுகைக்கு முடிவே இல்லையா? அவரை இதிலிருந்து மீள விட மாட்டார்களா என்று நினைத்துக் கொண்டிருந்த போது திரும்பவும் யூனியன்காரர்கள் வந்தார்கள். அவர்களுடைய வருகையினால் வீட்டில் கொஞ்சம் தைரியம் ஏற்பட்டது. வேலையைப் பற்றி எந்த பயமும் இல்லை என்றார்கள். “உன்னை வேலையை விட்டு அனுப்பி விடுவதாக இருந்தால் அப்புறம் இந்த யூனியன் இருப்பது எதற்காகவாம்?” என்றார்கள். காம்பன்சேஷன், வேலை விஷயம் எல்லாம் தங்களுக்கு விட்டு விட்டு உடல் நலனை கவனித்துக் கொள்ளச் சொன்னார்கள். அவருக்கு எவ்வளவு தைரியம் வந்தது என்று சொல்ல முடியாது. என்னை அழைத்து யூனியன் தலைவருக்கு அறிமுகம் செய்து வைத்து அவருடைய கால்களில் விழுந்து வணங்கச் சொன்னார். நானும் பதற்றத்துடன், ஆனால் மனப்பூர்வமாகவே அவருக்கு வணங்கினேன். அப்பொழுது அவர் தன் கால்களை பின்னால் இழுத்துக் கொண்டு, நான் அப்படிச் செய்தற்கு நொந்துகொண்டே சில விஷயங்களைச் சொன்னார். இன்று என் கணவரின் வேலை நிலைத்திருக்கப் போகிறது என்றால் அது இந்த யூனியன் மகிமையோ, இந்த யூனியன் தலைவரின் தயவோ இல்லையாம். எப்பொழுதோ நூற்றி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய தொழிலாளர்களின் புரட்சியாம். தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை, போராட்டங்கள், புரட்சி எதுவும் இல்லாதபோது இது போன்ற பிரச்னையில் சிக்கிக்கொண்டவர்கள் தவிக்க வேண்டியதுதானே தவிர, எந்த பாக்டரி உற்பத்திக்காக விபத்திற்கு உள்ளானார்களோ அவர்கள் எதையும் பொருட்படுத்த மாட்டார்களாம். தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து எத்தனையோ சட்டங்களை கொண்டு வந்தார்களாம். அதனால்தான் என் கணவரின் பிரச்சினை எளிதாக முடிந்து விட்டதாம். அவர் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டேன். எனக்கு புரிந்த வரையில் என் கணவரோ, அவரைப் போல் பிரச்சினையில் மாட்டிக் கொண்ட யாராக இருந்தாலும் சரி, தனியாக இருக்க வேண்டியதில்லை, அவர்களுக்குத் துணையாக யூனியன் இருக்கிறது. அதைக் கேட்ட பிறகு எனக்கும், என் கணவருக்கும் மலையளவுக்கு தைரியம் வந்தது.

ஒரு மாதத்தில் அவருடைய கை குணமாகி விட்டது. கட்டுகளைப் பிரித்துக் கொண்டு வந்த அன்று இரவு அந்த முடமான கையைத் தொடும் போது அருவருப்பால் என் உடல் சிலிர்த்தது உண்மைதான். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த அருவருப்பை மோகமாக மாற்றிக் கொண்டு அந்த கையை ஆவேசத்துடன் முத்தமிட்டேன்.

யூனியன்காரர்களின் பிடிவாதத்தால் அவருக்கு உதவியாக ஒரு அசிஸ்டென்டைப் போட்டார்கள். காம்பன்சேஷனாக பத்தாயிரம் மட்டும் கொடுத்தார்கள். வேலையில் எந்த மாற்றமும் இல்லாததால் அதை விட அதிகம் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். யூனியன்காரர்களும் மேற்கொண்டு வாதம் வேண்டாம், கொடுத்ததைக் கொண்டு திருப்திப் படுவோம் என்றார்கள். அவரும் சம்மதித்தார். நான்கு மாதங்கள் கழித்து பழையபடி எங்கள் வாழ்க்கை திரும்ப கிடைத்து விட்டாற்போல் இருந்தது.

அப்பொழுதுதான் நான் கருவுற்று இருப்பதாக சந்தேகம் வந்தது. மேலும் ஒரு மாதம் போனதும் உறுதியாகி விட்டது. டாக்டரிடம் போனபோது அவள் சோதித்துவிட்டு, எடையைப் பார்த்து டானிக்குகளை எழுதிக் கொடுத்தாள். அதற்குப் பிறகு அவர் என்னை ரொம்ப அபூர்வமாக பார்த்துக் கொண்டார். எனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி தந்தார். பழமும், பாலும் சாப்பிடச் சொல்லி வலியுறுத்தினார். என் கணக்கு படி மூன்று மாதங்கள் முடிந்து விட்டன. அன்று மாலை தலைக்குக் குளித்துவிட்டு சிடுக்கு எடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அடி வயிற்றில் பயங்கரமான வலி வந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பொறுத்துக் கொள்வோம் என்று பார்த்தேன். ஆனால் தீ அதிகமாகிவிட்ட சோற்றுப் பானை பொங்குவது போல் வலி மெம்மேல் அதிகரித்துக் கொண்டிருந்தது. வயிற்றில் ஏதோ கொந்தளிப்பு. இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று தோன்றியது. அடுத்த வீட்டுக்காரிக்கு குரல் கொடுத்ததாக லேசாக நினைவு. அவள் வந்ததோ, அவளிடம் நான் என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன் என்பதோ எதுவும் எனக்கு நினைவு இல்லை. சுய நினைவு இழந்து விட்டிருந்தேன். திரும்பவும் நான் கண்களைத் திறந்துப் பார்க்கும்போது ஆஸ்பத்ரியில் இருந்தேன். என்னைச் சுற்றிலும் என் வீட்டார் இருந்தார்கள். என் பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் எனக்கேதாவது ஆகியிருக்குமோ என்று பயந்து பார்த்தபோது ஒரு கையில் சலைனும், இன்னொரு கையில் இரத்தமும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வயிற்றுக்குள் பச்சைப் புண்ணாக இருந்தது. எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்த பிறகு அம்மா மெதுவாகச் சொன்னாள். என் குழந்தை கருப்பையில் வளரவில்லையாம். அதற்கு முன்னால் இருக்கும் குழாயில் வளர்ந்து இருந்ததாம். அப்படி என்றால் என்னவென்றோ, அது எப்படி நடந்தது என்றோ எனக்கு எதுவும் புரியாவிட்டாலும், நடக்கக் கூடாதது ஏதோ நடந்துவிட்டது என்று மட்டும் புரிந்தது. வளர்ந்த அந்தக் கரு சிதைந்து என் வயிற்றுக்குள் முழுவதும் இரத்தக் குட்டையாகி விட்டதாம். டாக்டர்கள் ஆபரேஷன் செய்து, உள்ளே சுத்தப்படுத்தி, திரும்பவும் தைப்பதற்கு ஆறு மணி நேரங்களுக்கு மேலேயே பிடித்ததாம். அந்த ஆபரேஷன் காரணமாக இனி எனக்குக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இல்லையாம்.

“எப்படியோ உயிருடன் மீண்டு வந்து விட்டாய். இனி எதிர்காலம் என்னவாகப் போகிறதோ?” என்றாள் அம்மா.

அந்த வார்த்தைகள் எனக்கு வேடிக்கையாக இருந்தன. இருந்தாலும் என் நிலைமையை ஒரு முறை யோசித்துப் பார்த்துக் கொண்டேன். புயல் வந்த பிறகு சரிந்து விட்ட கூடு போல் இருந்தேன், மாலையில் அவர் வந்ததும் என்னால் துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “இனி எவ்வளவு அழுது எனன பயன்? நம் தலையெழுத்து இப்படி இருக்கும்போது” என்றார் அவர் குத்தல் நிறைந்த தொனியில்.

எனக்கு வந்த ஆபத்திற்கு அவர் கலங்கிப் போய் விடுவார் என்று நினைத்தேன். என் தலையை வருடிக் கொடுத்து, என் கண்ணீரைத் துடைப்பார் என்று நினைத்தேன்.

“நான் இருக்கிறேன். நீ எதற்காக அழுகிறாய்?’ என்று என் கையைப் பற்றிக் கொள்வார் என்று நினைத்தேன். இவை எதுவும் நடக்காமல் போனதோடு அவர் கண்களில் என்னைப் பற்றி வெறுப்பு நிறைந்திருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ”உன்னால் இனி குழந்தைகளைப் பெற முடியாது என்று உன் மாமியாருக்கு உன் மீது எரிச்சலாக இருக்கு” என்று அம்மா மறு நாள் சொல்லும் வரையில் எனக்கு அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று புரியவில்லை.
புரிந்த பிறகு எல்லை மீறிய பயம் ஏற்பட்டது. “அம்மா! இனி என் கதி என்ன? நான் என்ன செய்வது?” என்றேன் மிரண்டு போனவளாக.

“என்ன செய்ய முடியும்? உன் வாழ்க்கை இப்படிச் சீரழிந்து விட்டதே? குழந்தையைத் தூக்கிக் கொள்ளும் அதிர்ஷ்டம் இல்லை. இனி அவர்கள் என்ன சொன்னாலும் சகித்துக் கொள்வதைத் தவிர் உன்னால் என்ன செய்ய முடியும்?” அம்மா இயலாமையும், வருத்தமும் கலந்த குரலில் அழத் தொடங்கினாள்.

எனக்கு கண்ணீர் கூட வராத அளவுக்கு பயம் ஏற்பட்டது. அந்த பயத்தில் எனக்குப் புரிந்தது என்னவென்றால் நான் தனிமையில் விடப்பட்டிருக்கிறேன். எனக்கு வந்த இந்த கஷ்டத்தில் என் மேல் இரக்கம் காட்டுவதற்கு யாரும் தயாராக இல்லை. அவர்கள் எல்லோருக்கும் இனி குழந்தை பிறக்காது என்ற விஷயத்தைத் தவிர, எனக்கு நடந்த விபத்து முக்கியமானதாகத் தோன்ற வில்லை. கடைசியில் அம்மா உள்பட கவலைப்படுவதெல்லாம் பிறக்காத, பிறக்க முடியாத குழந்தையைப் பற்றித்தான். இப்பொழுது நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனை, என் உடல் நலம் தேறிக் கொள்ள வேண்டிய அவசியம், என் உடல் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவஸ்தை இதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. சிரத்தை இல்லை.

“எவ்வளவு பெரிய கண்டத்திலிருந்து தப்பியிருக்கிறாள்!” ஆஸ்பத்ரியில் ஆயா சொன்ன போது “யாரை சந்தோஷபடுத்த? பட்டுப் போன மரமாய் அவன் நிம்மதியைக் குலைப்பதற்கு அல்லாமல் எதற்காக உயிர் பிழைத்தாள்?” என்று முணுமுணுத்துக் கொண்டாள் என் மாமியார்.

குழந்தைகள் பிறக்காமல் போனது எனக்கும் வேதனை தரும் விஷயம் என்றோ, எனக்கும் குறையாக இருக்கும் என்றோ நினைப்பு வராத அளவுக்கு என் காரணமாக அவருக்கு வந்த கஷ்டம் அதிகமாகி விட்டது. அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் போய் விடுவார்கள். அவருடைய வம்சம், வீட்டுப் பெயர், சொத்து எல்லாம் வியர்த்தமாகப் போய் விடும். இதற்கெல்லாம் காரணம் நான்! எல்லோரும் இந்த ரீதியில்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு சிகிச்சை நடந்து வருகிறது. மருந்து மாத்திரைகள் கொடுத்து வருகிறார்கள். ஆனால் எல்லாம் இயந்திர கதியில் நடந்து கொண்டிருந்தன. என்னை வேலைக்கு உதவாத ஒரு இயந்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டில் வேலைக்கு உதவாமல், நடமாடுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் பழைய தையல் மிஷினைப் பார்த்து சலித்துக் கொள்வது போல் சலித்துக் கொள்கிறார்கள்.

நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்தேன். அம்மா அப்பா வேலை இருப்பதாகச் சொல்லி உடனே கிளம்பிவிட்டார்கள். அவர்கள் என்னை தம்முடன் அழைத்துப் போவதற்கு பயப்படுவது போல் தென்பட்டார்கள். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் என்னை உடன் அழைத்துப் போகாததற்கு மாமியார் குத்திக் காட்டிப் பேசினாள். இந்த ரகளையில் என் கணவர் நடந்து கொண்ட முறை என்னை ரொம்பவும் பாதித்தது.

நான் எதற்கும் லாயக்கு இல்லாதவள் என்று அவர் எப்படி நினைப்பார்? குழந்தைக்காக மட்டும்தானா என்னைத் திருமணம் செய்து கொண்டது? நட்பு, காதல், சகவாசம் இதற்கெல்லாம் அர்த்தமே இல்லையா?
இத்தனை நாட்களும் நடந்தது போலவே நான் அவர் சொல்லும் செய்திகளைக் கேட்டுக்கொண்டும், அவருக்கு வேண்டியதை செய்து கொண்டும், அவருக்கு ஓய்வை, சுகத்தை தந்து கொண்டும், அவருடன் சினிமாவுக்கும், வெளிவாசலுக்கும் போய்க் கொண்டும் இருக்கக் கூடாதா? அப்படி இருப்பதற்கு என்ன தடை?

குழந்தைகள் இல்லாத பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தேன். உடனே ருக்மிணி அத்தை நினைவுக்கு வந்தாள். அவளுக்குக் குழந்தையில்லை. நாற்பது வயது வரும் வரையில் குழந்தைக்காக எத்தனையோ முயற்சி செய்தார்கள். பார்க்காத டாக்டர் இல்லை. கும்பிடாத தெய்வம் இல்லை. ஆபரேஷன்கள், மருந்துகள் ஒரு பக்கம், பூஜைகள், நோன்புகள் ஒரு பக்கம் அவள் வாழ்க்கையை ஆக்ரமித்துக் கொண்டன. அவள் யோசனைகள், நினைப்பு எல்லாமமே குழந்தைக்காகதான். எல்லோரும் அவளை இரக்கத்துடன் பார்ப்பார்கள்.

கடைசில் இனி குழந்தை பிறக்காது என்று முடிவாகிவிட்ட பிறகு எங்க மாமா தன் தம்பியின் மகனை வளர்த்துக் கொண்டார். என்னவானாலும் குழந்தை இல்லாத பெண்ணுக்கு கஷ்டங்கள் தீராது. அப்படி என்றால் திருமணம் குழந்தைக்காகதானா? ஒரு பெண் பிறந்து வளர்வது குழந்தைகளைப் பெறுவதற்காகதானா? ஒரு ஆணுக்குக் குழந்தையைப் பெற்றுத் தருவது தான் பெண்ணின் ஜென்ம சாபல்யமா? பெண் என்றால் கருப்பையும், சினைமுட்டைகள் தானா? அவை இல்லாத நான் எதற்கும் பயன் இல்லாதவளா? யோசிக்க யோசிக்க எனக்குத் தெரிந்த வரையில் பெண்களில் யாரும் மன நிம்மதியுடன் இருப்பது போல் தெரியவில்லை.

வரதட்சிணைக் கொடுத்து என்னால் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் என் சிநேகிதிகளில் சிலர் வரதட்சிணை கொடுக்க முடியாமல் கல்யாணம் ஆகாமல் நின்றுவிட்டார்கள். கல்யாணம் ஆகாமல் போனதால் எல்லோரும் மதிப்புக் குறைவாக பார்க்கும் போது அதைத தாங்கிக் கொள்வதற்கு போராடிக் கொண்டிருந்தார்கள். கொடுத்த வரதட்சிணை போதவில்லை என்று மாமியார் வீட்டுக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் நிர்மலாவும், சரோஜாவும் தற்கொலை செய்து கொண்டார்கள். கமலாவை அவள் கணவனே கொன்று விட்டதாகக் கேள்வி. இரண்டுமே பெண்ணாக பெற்றதற்கு அடுத்த வீட்டு மாமி துன்புறுத்தலை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். இத்தனை நாளும் நான் ஏன் குருடியாக இருந்து வந்தேன்? நாடு முழுவதும் பெண்களின் அவலக் குரல்களால் எதிரொலித்துக் கொண்டிருக்கும் போது, நான் அன்னியோன்ய தாம்பத்தியத்தைப் பற்றி, அன்பு நிறைந்த இல்லத்தைப் பற்றி எப்படி கனவுகள் கண்டு கொண்டிருந்தேன்? என்னைப் போன்ற லட்சக் கணக்கான அஞ்ஞானிகள் அது போல் கனவுகள் கண்டு கொண்டும், எங்கேயும் கிடைக்காத அது போன்ற காதலுக்காக தங்களுடைய இரத்தத்தை தாரை வார்த்தும் வருகிறார்கள். ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது? இந்தக் கேள்விகள் என்னைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன.

நாட்கள் கழிந்துக் கொண்டிருந்தன. ஒரு நாள் என் மாமியார் திடீரென்று என் மீது தாக்குதல் துவக்கினாள். என் காரணமாக அவளுடைய மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டதாம். இளைத்துத் துரும்பாகி விட்டானாம். கவலையில் குன்றி போய் விட்டானாம். இது முற்றிலும் பொய். என்னுடன் முகம் கொடுத்து பேசுவது இல்லையே தவிர மற்ற விஷயங்களில் நன்றாகவே இருந்தார். ஆபீசில் வேலை குறைந்து விட்டது. உடல் நலம் தேறி, கொஞ்சம் பருமனும் ஆகி விட்டிருந்தார்.

இளைத்துத் துரும்பாகி விட்டது நான்தான். அப்படி இருக்கும் போது மாமியார் இந்த தாக்குதலை ஏன் தொடங்கினாள் என்று புரியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட என் மாமியாருடன் சேர்ந்து என் கணவர் படும் கவலையைப் பற்றி, இளைத்துப் போவதைப் பற்றி வருத்தப்பட தொடங்கினார்கள். நான் தனிமையில் விடப் பட்டேன். தனியாய் குமுறிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் என் மாமியார் மறைமுகமாக அல்லாமல் தெளிவாகவே தன் அபிப்பிராயத்தைச் சொல்லி விட்டாள். என் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கப் போகிறாளாம். நான் பயத்தால் நடுங்கி போய் விட்டேன். சரியாக பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் எப்படியோ நான் இந்த வீட்டில் விழுந்து கிடந்தேன். என்னை என் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டு வேறொரு பெண்ணைக் கொண்டு வருவார்களாம். என் கணவரிடம் கேட்ட போது, “அம்மாவுக்கு பேரக் குழந்தை வேண்டுமாம். நான் என்ன செய்யட்டும்?” என்றார். ஆனால் தன்னுடைய அம்மாவைத் தூண்டிவிட்டதே இவர்தான் என்று புரிந்தது, அவருடைய போக்கைப் பார்க்கும்போது.

“என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டதற்கு என்னை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னார். சாதாரணமாக தொடங்கிய இந்த பேச்சு போகப் போக மிரட்டலாக மாறியது. நானாக முன் வந்து விவாகரத்துக்கு சம்மதித்தால் சரி, இல்லா விட்டால் எந்த முறையில் விவாகரத்து வாங்கிக் கொள்ள முடியும் என்று சில வழிமுறைகளைச் சொன்னார். அதைக் கேட்கும்போது என் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.

எங்க அம்மா, அப்பாவை அழைத்தார்கள். என்னை அழைத்துப் போகச் சொல்லி விட்டார்கள். இயலாமையுடன் தலையைக் குனிந்துக் கொள்வதைத் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் வீட்டை விட்டு போக வேண்டுமாம். இது என் வீடு இல்லையாம். அவருக்கு யார் குழந்தையைப் பெற்றுத் தருவாளோ அவளுடையதாம். திருமண நாள் அன்று சொல்லப் பட்ட புனிதமான மந்திரங்களுக்கு அர்த்தம் அவருடைய வம்சத்தை அபிவிருத்தி செய்தபோதுதானாம். அதாவது அவருக்குக் குழந்தைப் பெற்றுத் தரும் உத்தியோகம் இது. ஐம்பதாயிரம் கொடுத்து வாங்கிக் கொண்ட உத்தியோகம் இது. அந்த வேலைக்கு நான் லாயக்கு இல்லாமல் போய் விட்டேன் என்பதால் என்னை ஒதுக்கி விட்டு வேறு ஆளை போட்டுக் கொள்வார்கள். இதுதான் திருமணத்தின் உண்மையான அர்த்தம். அதை மறைத்து வைத்துவிட்டு, காதல், அன்பு, ஆதரவு என்று பசப்பு வார்த்தைகள் சொல்லுவானேன்? எதற்காக இந்த ஏமாற்று வேலை? ஏன் என்றால் உத்யோகம் என்றால் உரிமைகளைக் கேட்பார்கள். பிரதிபலனை கேட்பார்கள். போனஸ் கொடுக்கச் சொல்லுவார்கள். அதுவே தாம்பத்தியம், தாய்மை என்று சொன்னால் மனதை, உடலை ஒப்படைத்து வேலை செய்வார்கள். எதையும் கேட்காமல் கொடுத்ததைக் கொண்டு திருப்தி அடைவார்கள். நல்லவனாக இருந்து கொஞ்சம் அன்பு செலுத்திவிட்டால் தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடுவார்கள். அதையும் இதையும் கொண்டு வா என்று கேட்டால் சண்டைக்காரி என்று பட்டப்பெயர் வந்து விடுமோ என்று பயப்படுவார்கள். இத்தனை லாபங்கள் இருக்கும்போது அதைத் திருமணம் என்று அழைக்காமல் வியாபாரம், உத்தியோகம் என்று ஏன் சொல்லப் போகிறார்கள்?

அது புரிந்த பிறகு என்னுள் கோபம் வளர்ந்து கொண்டு வந்தது. இது அநியாயம் என்று குரலெடுத்து கத்த வேண்டும் போல் இருந்தது. எல்லாவற்றையும் விட ஆச்சரியம் என்னுடைய தனிமையைப் பற்றி. எனக்கொரு கஷ்டம் வந்தால் பகிர்ந்துகொண்டு எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு ஒருத்தருமே இல்லாமல் போவானேன்? என்னை ஒத்த பெண்களுக்குக் கூட என் வேதனை புரியவில்லையே ஏன்? அன்று பாக்டரியிலிருந்து விரல்கள் வெட்டப்பட்டு அவர் வந்த போது எத்தனை யூனியன்காரார்கள் வந்தார்கள்? எவ்வளவு தைரியம் சொன்னார்கள்? முதலாளியிடம் கேட்டு வைத்தியச் செலவுக்கு பணம் வாங்கிக் கொடுத்தார்கள். நாங்கள் எல்லோரும் உனக்கு துணையாக இருக்கிறோம் என்றார்கள். எங்களுக்குக் கஷ்டம் வந்தால் நீ வர மாட்டாயா என்றார்கள். நாமெல்லோரும் ஒன்று என்றார்கள். திரும்பவும் அந்த வேலைக் கிடைக்கும் வரையில் போராடினார்கள். நஷ்ட ஈடு கிடைக்கும் வரையில் செருப்பு தேய நடந்தார்கள். எனக்கும் தைரியம் சொன்னார்கள். அதெல்லாம் எவ்வளவு நன்றாக இருந்தது? அவருடைய வேதனை, கவலை எல்லாம் ஒரே நாளில் எப்படி தீர்ந்து விட்டது? உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வேலைக்கு உதவாமல் போய்விட்ட கை எவ்வளவு சலுகைகளைப் பெற்றது? எவ்வளளவு ஆதரவு அந்த கையைச் சுற்றிலும் இருந்தது? அதற்குப் பின்னால் எவ்வளவு வரலாறு இருந்தது? எத்தனை போராட்டங்கள், புரட்சிகள் இருந்தன?
நான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளப்போகும் போது, அந்த பணியில் எதிர்பாராமல் ஒரு விபத்திற்கு உள்ளாகிவிட்டால், எனக்கு இந்த தனிமை ஏன்? ஒருக்கால் எனக்கு நடந்த விபத்திற்கு அவரே கூட காரணமாக இருக்கலாம். அந்த அணுவானது இணையவில்லை என்றால் என் கருமுட்டையானது வழக்கம் போல் வியர்த்தமாக வெளியேறி விட்டிருக்குமோ என்னவோ. அவருடைய அணு இணைந்ததால் என் உடல் சீர் குலைந்துவிட்டது. முக்கியமான பகுதி ஒன்று என் உடலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. மலடி என்ற பட்டம் என் தலையில் விழுந்தது. இதெல்லாம் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பணியில்தான் நடந்ததது. எதிர்காலத்தில் பாக்டரி இயந்திரங்களை இயக்கியோ, வங்கியில் கணக்குகள் எழுதியோ, கட்டிடங்களைக் கட்டியோ, மருத்துவம் பார்த்தோ சமுதாயத்திற்கு உபயோகமாக இருக்கப் போகும் ஒரு குழந்தையைப் பெறும் முயற்சியில்தான் நடந்தது. குழந்தையை உற்பத்தி செய்யும் பணியில்தான் நிகழ்ந்தது. இருந்தாலும் எனக்கு எந்த சலுகைகளும் இல்லை. எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை. வேலையிலிருந்து என்னை நீக்கி விட்டார்கள். என்னைத் தேற்றுபவர்களும், எனக்கு தைரியம் சொல்பவர்களும் யாரும் இல்லை. நான் தனித்து விடப்பட்டேன். ஏன்? ஏன்? ஏன்? என் தனிமைக்குப் பின்னால் இருந்த சதித் திட்டம் எப்படி தொடங்கியது? பெண்கள் எல்லோரும் ஏன் ஒற்றுமையுடன் இல்லை? தாய்மார்களாக, மனைவியராக, மகள்களாக, மாமியார்களாக, மருமகள்களாக, நாத்தனார்களாக ஏன் பிரிந்து விட்டார்கள்? யார் அவர்களைப் பிரித்தார்கள்? தாம்பத்தியம் என்ற பெயரில், தாய்மை என்ற பெயரில் ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள்? இந்த ஏமாற்று வேலை யாருக்கு லாபங்களை ஈட்டித் தருகிறது? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கைப்பிடியாக இறுகிக் கொள்ளாமல் பெண்கள் முடமான கையைப் போல் ஒருவருக்கொருவரே ஏன் ஆகி விட்டார்கள் என்று தெரிந்துக் கொள்ளவேண்டும். என்னைப் போலவே வேதனை அனுபவிப்பவர்கள், தற்கொலையை நோக்கி துரத்தப்படுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ நான் அவர்களைச் சந்திக்க வேண்டும். அதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் என்று இப்பொழுது எனக்கு நிச்சயமாகப் புரிந்து விட்டது. என் ஜன்ம சாபல்யம் என் திருமாங்கல்யத்தில் இல்லை. என் கணவருக்கு பணிவிடை செய்வதில் இல்லை. நான் பெற முடியாத குழந்தை பாக்கியத்தில் இல்லை. என்னைப் போன்ற பெண்களுடன் கையை இணைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது.