Skip to content

சீனி. வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’

by மேல் திசெம்பர் 1, 2015

சீனி. வேங்கடசாமி அறிமுகத்தில் என் போன்ற பாமரர்களுக்கு

அவரது முக்கியமான பங்களிப்பு என்ன, அவரது எந்த நூல்கள் இன்றும் முக்கியமானவை என்பதெல்லாம் பற்றி எதுவும் தெரியவில்லை. இணையத்தில் கிடைக்கும் புகழாரங்களால் தேடல் உள்ளவர்களுக்கு எந்தப் பயனுமில்லை.

என்று எழுதி இருந்தேன். நானே படித்து புரிந்துகொண்டால்தான் உண்டு என்பதால் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். வேங்கடசாமி தமிழறிஞர்தான், வரலாற்று உணர்வுடையவர், ஆனால் அவரது தமிழ் உணர்வு அவரை கொஞ்சூண்டு முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது என்று தோன்றியது. அவரது அணுகுமுறை அறிவுபூர்வமாக இருக்கிறது. (தேவநேயப் பாவாணர் நிறையவே உணர்வுபூர்வமாக அணுகுவார்) படித்துப் பட்டம் பெறவில்லை என்பதால் அவருக்கு கிடைக்க வேண்டிய கௌரவம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகமே முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு தகுதி உள்ளதுதான். என்ன, கொஞ்சம் ramble ஆகிறார். நல்ல வழிநடத்துனர் இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

seeni_venkatasamiஎனக்குத் தெரிந்த வரையில் பல்லவர்களுக்கு முன்னால் – சிம்மவிஷ்ணுவுக்கு முன்னால் – தமிழ்நாட்டுக்கு சரியான வரலாறு கிடையாது. அதிலும் இந்த களப்பிரர்களைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. என் பள்ளிக் காலத்தில் வரலாற்று வகுப்பில் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று ஒன்றிரண்டு வரிகளோடு நின்றுவிட்டபோது அப்பாடா நல்ல வேளை எதுவும் தெரியவில்லை, இல்லாவிட்டால் இதில் யார் பிள்ளை யார், எங்கே எவனோடு போரிட்டான் என்றெல்லாம் படித்துத் தொலைக்கவேண்டும் என்று ஆசுவாசமாக இருந்தது.

வேங்கடசாமி களப்பிரர் வரலாற்றை எழுதுவது ரொம்ப கஷ்டம் என்கிறார். அவர்கள் கல்வெட்டு, செப்பேடு எதுவும் இது வரை சரியாகக் கிடைக்கவில்லை. அவர்கள் இன்றும் நிற்கும் கோவில் எதையும் கட்டவில்லை. மெய்க்கீர்த்தி எதையும் எழுதவில்லை. சங்க கால மன்னர்களைப் போல அவர்கள் மேல் நிறைய கவிதைகள் எழுதப்படவில்லை. பிறகு எதை வைத்து ஆராய்வது?

களப்பிரர்களைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆதாரம் வேள்விக்குடி செப்பேடுகள்தானாம். அவற்றில் பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்று பிராமணர்களுக்கு அவன் மூதாதையரால் தானமாகத் தரப்பட்ட கிராமங்களை மீட்டுத் தந்திருக்கிறான் என்று இருக்கிறதாம்.

வேங்கடசாமி இந்தச் செப்பேட்டைத் தவிர நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம் இலக்கியங்களில் கிடைக்கும் குறிப்புகள்தான் என்கிறார். அவற்றை முறையாகத் தொகுத்திருக்கிறார். எங்கெல்லாம் என்னவெல்லாம் பாடல்கள் கிடைத்திருக்கின்றனவோ அத்தனையையும் மேற்கோள் காட்டுகிறார். அப்படியும் அது ஒன்றும் பெரிய பட்டியல் இல்லை. ஒரு 20-25 மேற்கோள்கள் இருக்கலாம், அவ்வளவுதான். அவற்றுக்குள்ளும் பெரியபுராணத்தில் வரும் மூர்த்தி நாயனார், சாக்கிய நாயனார் கதைகளுக்கு எல்லாம் ஏதாவது சரித்திர மதிப்பு உண்டா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

அடுத்தபடியாக தமிழ் தவிர்த்த மொழிகளில் என்னவெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன என்று தேடி இருக்கிறார். இலங்கை ராஜவம்சத்தின் வரலாறான மஹாவம்சத்தில், சீன யாத்ரீகரான யுவான் சுவாங்கின் குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆனால் கி.பி. 600-இல் பிறந்த யுவான் சுவாங்கின் குறிப்புகளில் இவர் கூற்றுப்படி கி.பி. 575-இல் முடிந்துபோன களப்பிரர்கள் பற்றி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. அவர் 1975-இல் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். இன்றைய ஆய்வாளர்கள் இன்னும் தேடலாம் – சமஸ்கிருத, பாலி, தெலுகு, கன்னட வரலாற்றுச் சுவடிகளில், செப்பேடுகளில் ஏதாவது கிடைக்கலாம்.

அவரது அணுகுமுறை – களப்பிரர் பற்றி இலக்கியத்தில், தமிழ் தவிர்த்த மொழிகளில் கிடைக்கும் மேற்கோள்களைத் தொகுத்து அதன் மூலம் அவர்கள் வரலாற்றை அறியமுடியுமா என்று பார்ப்பது – தர்க்கபூர்வமாக சரியாக இருக்கிறது. ஆனால் சில சமயம் அவர் தன் முடிவுகளை சொல்கிறார் – அந்த முடிவுகளுக்கு எப்படி வந்தார் என்று விளக்குவதில்லை. எனக்கு மிகவும் உறுத்தியது களப்பிரர்கள் இன்றைய கர்நாடக மாநிலத்திலிருந்து வந்தவர்கள், அதுவும் சிரவணபெலகோலா பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று அவர் சொல்வதுதான். ஏன் அந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் களப்பிரர்கள் பூர்வீகம் பற்றி சொல்வது தவறாம். ஏன் என்று எந்த விளக்கமும் இல்லை.

அவரது முடிவுகளை இப்படி சுருக்குகிறேன்.

 1. சேரமான் குட்டுவன் சேரல், கொங்கு நாட்டு கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான், பாண்டியன் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் ஆகிய சமகாலத்து மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு கர்நாடகத்து களப்பிரர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
 2. களப்பிரர் ஆதிக்கம் குத்துமதிப்பாக கி.பி. 250-இலிருந்து கி.பி 575 வரை நீடித்தது.
 3. களப்பிரர் ஆதிக்கத்தின் கீழ் பழைய சோழர் பாண்டியர் பரம்பரை முழுதாக அழிந்துவிடவில்லை.
 4. பாண்டியன் கடுங்கோன், சிம்மவிஷ்ணு பல்லவன், சாளுக்கியர் ஆகியோர் களப்பிரர ஆதிக்கத்தை ஏறக்குறைய சமகாலத்தில் ஒழித்தனர்.
 5. பின்னாளில் களப்பிரர் தமிழரோடு முழுதாகக் கலந்துவிட்டனர்.
 6. களப்பிரர் சமண மதத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் எல்லா மதங்களும் செழித்தன.
 7. இலக்கியம் நன்றாக வளர்ந்தது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பட்டவையே. சீவகசிந்தாமணி, குண்டலகேசி போன்ற மாபெரும் சாதனைகளும் இவர்கள் காலத்தில் எழுதப்பட்டவையே.
 8. இந்தக் காலகட்டத்தை இருண்ட காலம் என்று சொல்வது தவறு.

தமிழக வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். அவரது அணுகுமுறைக்காகவே படிக்கலாம்.

வேங்கடசாமியின் இன்னொரு குறிப்பிட வேண்டிய புத்தகம் மகேந்திரவர்மன். மகேந்திரவர்மன் ஆட்சியின் சமகாலத்து அரசியல் நிகழ்ச்சிகள் (புலிகேசி, ஹர்ஷர், பாண்டிய அரசு, இலங்கை அரசியல்), இலக்கிய, கலை, சமய நிகழ்ச்சிகளை கழுகுப் பார்வையில் (bird’s eyeview) தொகுத்திருக்கிறார்.

பௌத்தக் கதைகள் என்று புத்தரைப் பற்றிய தொன்மங்களையும் தொகுத்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

Advertisements
2 பின்னூட்டங்கள்
 1. excellent. I have been reading about this book as an ad in Kalachuvadu. i
  do not think anyone reviewed it in Kalachuvadu. you have done well to bring
  it to blog followers’ notice (I do not know how many are there!) thanks Bala

  Like

  • tkb1936rlys,சராசரியாக ஒரு நாளைக்கு நூறு பேர் படிக்கிறார்களாம்…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: