தமிழறிஞர்களைப் பற்றி, அவர்கள் பங்களிப்பு பற்றி எல்லாம் – அவர்கள் சமீபத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி – தெரிந்து கொள்வது ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. உ.வே.சா., சி.வை. தாமோதரம் பிள்ளை போன்ற வெகு சிலரைத் தவிர்த்து வேறு யாருடைய பங்களிப்பபையும் சுலபமாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவர்களைப் பற்றி எழுதுபவர்கள் புகழ்மாலையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இந்த அறிஞர்களால் தமிழைப் பற்றி, நம் வரலாற்றைப் பற்றி நம் புரிதல் எப்படி முன் நகர்ந்தது, இவர்களுடைய தாக்கம் என்ன, முக்கியமான ‘கண்டுபிடிப்புகள்’ என்ன என்பதை நமக்குச் சொல்ல வேண்டும் என்பதே இந்த அறிஞர்களைப் பற்றி எழுதுபவர்களுக்குப் புரிவதே இல்லை. இறந்தவர்களை விமர்சிக்கக்கூடாது என்று ஒரு எழுதப்படாத விதி வேறு குறுக்கே நிற்கிறது. சீரியசாக எழுதுபவர்களும் அறிஞர்களின் பங்களிப்பைப் பற்றி எழுத வேண்டும் என்றால் என்பது எழுதிய புத்தகங்களின் பட்டியலைக் கொடுத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
மறைமலை அடிகள் சிறந்த தமிழறிஞர் என்று எனக்கு ஒரு பிம்பம் இருப்பது உண்மைதான். ஆனால் ஏன் என்று கேட்டால் என்னால் தெளிவாக பதில் சொல்ல முடியாது. ஆர்வம் உள்ள எனக்கே இப்படி என்றால் சராசரி தமிழன் என்ன செய்வான்(ள்)? தமிழில் மொழிக்கலப்பு கூடாது என்று இடைவிடாது முயன்றவர். ஆனால் அதனால் தமிழறிஞர் என்று ஆகிவிடுமா? ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த, அஜயன் பாலா எழுதிய இந்த சிறு அறிமுகங்களிலும் நான் சொன்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் சில சந்தேகங்கள் தீர்கின்றன. உதாரணமாக இந்த அறிமுகத்தைப் படித்தபோது சரி முல்லைப்பாட்டுக்கும் பட்டினப்பாலைக்கும் உரை எழுதியவர் அறிஞராகத்தான் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன். (ஆனால் மனோன்மணீயத்துக்கு உரை எதற்கு, வெட்டிவேலை!) நல்ல வேளை, இந்த காலத்து டிவி தமிழையும் பீட்டர் தமிழையும் பார்ப்பதற்கு முன் போய்ச் சேர்ந்துவிட்டார்.
இவரது சில புத்தகங்கள் ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கின்றன. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி எல்லாம் படிக்க எனக்கு அறிவு பத்தாது. மற்றவற்றை (இந்தி பொதுமொழியா?, தனித்தமிழ் மாட்சி, அறிவுரைக்கொத்து), முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவர், பழந்தமிழ் கொள்கையே சைவ சமயம், சிந்தனை கட்டுரைகள், சாகுந்தல நாடக ஆராய்ச்சி போன்றவற்றை நுனிப்புல் மேய்ந்தேன். எதையும் பரிந்துரைக்கமாட்டேன். கொஞ்சம் கடினமான பண்டித நடை வேறு. சைவ சித்தாந்த ஞானபோதம் போன்றவற்றை புரிந்து கொள்ள எனக்கு அறிவு பத்தாது. ஆரிய-திராவிட வேறுபாடுகள், வடவர் ஆதிக்கம், பார்ப்பன சூழ்ச்சி, தமிழும் சைவமும் ஒன்று, தமிழனே உலகின் ஆதி மனிதன், அவனே எகிப்து, ஐரோப்பா, அமெரிக்காவில் பரவினான் (ஆனால் பார்ப்பனன் வந்தேறி) போன்ற கருத்துகளில் நம்பிக்கை கொண்டவர். வேளாளர் நாகரிகம் என்ற புத்தகத்தில் வேளாளரிலிருந்து பிராமணரும், ஷத்ரியரும் உருவாகினர், அதனால் வேளாளர் நால்வர்ணத்திலும் உயர்ந்தவர் என்கிறார் – அடுத்த பல பக்கங்களில் அவருக்கு வேளாளர் குறைந்த பட்சம் வைசியர், நிச்சயமாக சூத்திரர் அல்லர் என்று வாதங்களை வைக்கிறார். ஒரு பக்கம் வர்ணாசிரமம் பார்ப்பன சூழ்ச்சி, மறுபக்கம் அந்த சூழ்ச்சியான வர்ணங்களில் வேளாளர் சூத்திரர் அல்லர் என்பதிலுள்ள முரண்பாடு கூட அவருக்குப் புரியவில்லை. வர்ணமே சூழ்ச்சி என்றால் அதில் உயர்வுதாழ்வு என்ன? விளக்கங்கள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன என்றுதான் தோன்றுகிறது.
கோகிலாம்பாள் கடிதங்கள் (1911) என்ற புனைவையும் எழுதி இருக்கிறார். அடிக்கடி புன்முறுவல் வரவழைத்த புனைவு. பார்ப்பன இளம் விதவை கோகிலா தெய்வநாயக முதலியாருக்கு எழுதும் காதல் கடிதங்கள். அந்தக் கடிதங்கள் மூலம் தன் தியரிகளை – பார்ப்பன சூழ்ச்சி, சிவனே உயர்ந்த கடவுள் , தமிழே உயர்ந்த மொழி – முன்வைக்கிறார். தமிழ் மென்மையான சப்தங்கள் மட்டுமே கொண்ட மொழியாம். பாம்பு சீறுவது போன்ற ஸ, ஷ சத்தங்கள் இல்லையாம். கசடதபற வல்லினமாம் என்பதைக் கூடவா மறந்துவிட்டார்? மென்மையான மொழி என்று வேற்று மொழிக்காரர் அல்லவா சொல்ல வேண்டும்? பரிந்தீர குமார் கோஷ் என்று நினைக்கிறேன், அந்தமானில் அரசியல் கைதியாக இருந்தவர், அரவிந்தரின் உறவினர். சென்னை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாள் இருந்திருக்கிறார். தன் நினைவுகளில் தமிழ் மொழியைக் கேட்கும்போது கல்லை பாத்திரத்தில் போட்டு உருட்டுவது போலிருக்கிறது என்று எழுதி இருக்கிறார். 🙂 பார்ப்பனர்கள் சாதாரணமாக அயோக்கியர்கள் என்று மீண்டும் மீண்டும் எழுதுகிறார். 1911-இலேயே பார்ப்பன வெறுப்பு தனித் தமிழ் பேசுபவர்களிடம் பரவலாக இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
மறைமலை அடிகள்: பிறப்பு 15-8-1876, மறைவு 15-9-1950
தனித்தமிழ் எனும் சொல்லுக்கு வித்திட்ட காரணத்தால் தனித்தமிழ்த் தந்தை என அழைக்கப்பட்ட்வர்.
நாகப்பட்டினம் அருகே கடம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த மறைமலை அடிகளின் தந்தை பெயர் சொக்கநாதப் பிள்ளை, தாயார் சின்னம்மை. மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தன் பெயரை வேதம்=மறை சலம்=மலை எனும் அடிப்படையில் மறைமலை என்பதாக் அவர் மாற்றிக்கொண்டார். நாளடைவில் இதுவே மறைமலை அடிகள் என அழைக்கும்படி ஆனது.
நாகப்பட்டினத்தில் வெ. நாராயணசாமிப் பிள்ளை எனும் புலவரால் சிறு வயதிலேயே தமிழ் மேல் ஆர்வம் தூண்டப் பெற்றவர். தினந்தோறும் 50 ரூபாய்க்கு நூலை வாங்கிப் படிப்பதை கொள்கையாக கொண்டு அதனை கடைப்பிடித்து இன்று புகழ் பெற்று விளங்கும் மறைமலை அடிகள் நூலகத்துக்கு அடித்தளமிட்டவர். அது நாள் வரை வடமொழி ஆங்கிலம் உருது ஆகியவ்ற்றின் கலப்பினால் மூச்ச்டைத்துக் கிடந்த தமிழ் தன்னுணர்வு பெற்று விழிப்பு நிலை பெற்றது இவரால். தொடர்ந்து மற்ற மொழிக் கலப்பிலிருந்து தமிழை விடுவிக்க போராடியவர். அதற்காக தனித்தமிழ் எனும் இயக்கத்தையும் வழி நடத்தியவர் என்பது இவரது வாழ்நாள் சிறப்பு. 1898 முதல் 1911 வரை பதின்மூன்று ஆண்டுகள் சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்தவர். கல்லூரி நிர்வாகம் தமிழ் வளர்க்க கட்டாயப் பாடமாக்காததைக் கண்டித்து தன் பணியை துறந்தார். 1911ல் சமரச சன்மார்க்க சங்கத்தை துவக்கினார்.
சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் நூலுக்கு பாடல்களால் சிறப்பான உரை எழுதி தமிழ்ப் பணியை துவக்கியவர்.தொடர்ந்து முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை (1906) ஆகியவற்றிற்கு இவர் எழுதிய விளக்க உரைகள் அவரது இலக்கியப் பணியின் உரைகற்கள். மாணிக்கவாசகர், சைவ சித்தந்த ஞான போதம், தமிழர் மதம் போன்ற நூல்களை எழுதியதோடு, இன்றும் தமிழ் வளர்க்கும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் எனும் காலத்தால் அழியாமல் இன்றும் தமிழ்த்தொண்டு செய்யும் பதிப்பகம் வர காரணமாக இருந்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் புலமை பெற்ற அடிகள் வாழ்நாளில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 50க்கும் மேல்.
1937-இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்த்தில் கலந்துகொண்டு தன் தமிழை காப்பாற்றப் போராடியவர்.
ஞானசேகரம், சித்தாந்த தீபிகை எனும் இதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். Mystic Mynah, Oriental Wisdom எனும் ஆங்கில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
இவரது மனைவி சௌந்தரவல்லி. குழந்தைகள் நான்கு ஆண் மூன்று பெண். அவர்களுள் ஒருவர் நீலாம்பிகை. சுதந்திரப் போராட்ட வீராங்கனை. காந்தி அடிகளால் பாராட்டப் பெற்றவர்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்