அணுகுண்டு வெடித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனின் வாழ்க்கை வரலாறு

trumanடேவிட் மகல (David McCullough) அமெரிக்க வரலாற்று எழுத்தாளர். இரண்டு முறை புலிட்சர் பரிசை வென்றவர். அவர் வென்ற முதல் புலிட்சர் பரிசு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனின் வாழ்க்கை வரலாற்றுக்காக.

1948-இலிருந்து யார் சிறந்த அமெரிக்க ஜனாதிபதி என்று பல கணிப்பெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் பங்கு கொண்டவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள்… – அதாவது நிபுணர்கள். இந்த கணிப்புகளை எல்லாம் மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் ட்ரூமன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். முதல் ஐந்து இடங்கள் ஏப்ரஹாம் லிங்கன், ஃப்ராங்க்ளின் ரூஸவெல்ட், ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், தியோடோர் ரூஸவெல்ட் ஆகியோருக்கு. உட்ரோ வில்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், ட்வைட் ஐசன்ஹோவர், ஜேம்ஸ் போக் ஆகியோர் டாப் டென்னை பூர்த்தி செய்கிறார்கள்.

ட்ரூமன் கிட்டத்தட்ட எட்டு வருஷங்களாக ஜனாதிபதியாக இருந்தவர். ஃப்ராங்க்ளின் ரூஸவெல்ட்டுடன் துணை ஜனாதிபதியாக 1944-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூஸவெல்ட் இரண்டு மாதங்களில் இறந்துவிட இவர் ஜனாதிபதி ஆனார். ரூஸவெல்ட் போன்ற பெரிய ஆளுமைக்கு பதிலாக இவரா என்று எல்லார் மனதிலும் கேள்விதான். இவருடைய ஆட்சி காலத்தில்தான் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது. ஜப்பான் மீது அணுகுண்டு வீச முடிவெடுத்தவர் இவர்தான். கம்யூனிஸ்ட் ரஷியா மேலை நாடுகளுக்கு தலைமை எதிரியாக உருவானது இவர் காலத்தில்தான். ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பல உதவிகள் செய்து அவற்றை மீண்டும் ஒரு வலிமையான பொருளாதார சக்தியாக உருவாக்கியதில் இவருக்கும் இவரது சகா ஜார்ஜ் மார்ஷலுக்கும் பெரும் பங்குண்டு. அந்த திட்டத்துக்கே மார்ஷல் திட்டம் என்றுதான் பேர். ஜார்ஜ் மார்ஷலுக்கு இந்தத் திட்டத்துக்காக சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

ட்ரூமன் கம்யூனிசம் மற்ற நாடுகளுக்கு பரவக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார், அதை அமெரிக்க அரசின் கொள்கையாகவே – ட்ரூமன் கொள்கை – என்று அறிவித்தார். அதன் விளைவாகத்தான் கொரியப் போரில் அமெரிக்கா ஈடுபட்டது. ஆனால் அமெரிக்கத் தளபதி மக்கார்தர் – அமெரிக்க மக்களின் பேராதரவு பெற்ற நாயகன் – வாலை ஆட்டியபோது எந்தத் தயக்கமும் இல்லாமல் மக்கார்தரை வேலையிலிருந்து தூக்கிவிட்டார். மன உறுதிக்கும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுப்பதற்கும், முடிவெடுத்த பிறகு எந்தத் தயக்கமும் இல்லாமல் அதை நிறைவேற்றுவதற்கும், விடாமுயற்சிக்கும், தனிப்பட்ட நேர்மைக்கும் பேர் போனவர்.

மகல ட்ரூமனின் கொள்ளுத்தாத்தா காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார். மிசௌரி மாநிலத்தில் வந்து செட்டில் ஆகிறார்கள். விவசாயம். அப்பா சில தொழில்களை செய்து பார்க்கிறார். மத்தியதரக் குடும்பம். பணம் புரண்டெல்லாம் ஓடவில்லை. ட் ரூமன் தலையெடுத்து வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். ஆனால் குடும்ப நிலத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக ஊருக்கு திரும்பிவிடுகிறார். முதல் உலகப் போரில் காப்டனாக பணி புரிகிறார். அங்கிருந்து திரும்பி வந்து கான்சாஸ் நகரில் துணிக்கடை வைக்கிறார். திவால்!

பிறகு அரசியலில் இறங்குகிறார். அப்போது பெண்டர்காஸ்ட் குடும்பத்தின் கையில்தான் கான்சாஸ் நகரே இருக்கிறது. பெண்டர்காஸ்ட் எல்லாம் ஊழல் பேர்வழிகள், காட்ஃபாதர்கள். கொஞ்சம் ராபின் ஹூட் டைப். ஏழை எளியவர்களுக்கு உதவி கட்டாயம் உண்டு. அவர்களிடம் ஓட்டுகளைப் பெற்றுக் கொண்டு அரசை தன் கையில் வைத்திருந்தவர் அதைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். அன்றைய ஜனநாயகக் கட்சியில் இது போன்று பல நகரங்களில் party bosses உண்டு. இதை machine என்று சொல்வார்கள். அவர்களைப் பகைத்துக்கொண்டு யாரும் ஜனநாயகக் கட்சியை நடத்த முடியாது. ட்ரூமன் பெண்டர்காஸ்ட்டை எதிர்க்கவில்லை. மாறாக அவர்களுடன் சேர்ந்து ஒரு பதவி பெறுகிறார். ட்ரூமனிடம் ஊழல், லஞ்சம் என்ற பேச்சே கிடையாது. எல்லாரும் வியக்கும் வண்ணம் ரோடு போடுகிறார், பிரமாதமாக நிர்வகிக்கிறார். ஒரு கட்டத்தில் மிசௌரி மாநில கவர்னராக ஆசைப்படுகிறார். ஆனால் பெண்டர்காஸ்ட்டின் ஆதரவு இல்லை. கடைசியில் செனடராகிறார்.

செனட்டில் ஒன்றும் பிரமாதமாக கிழித்துவிட முடியவில்லை. கஷ்டம்தான். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின் வேகவேகமாக தளவாடங்கள் எல்லாம் தேவைப்படுகிறது. முதலாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள். ட்ரூமன் கடுப்பாகி பல ஊழல்களைக் கண்டுபிடிக்கிறார். ட்ரூமன் கமிட்டியிடம் சொன்னால் போதும், ஆப்புதான் என்ற அளவுக்கு பிரபலமாகிறார். 15 பில்லியன் டாலர்கள் (நாற்பதுகளில்) அவரால் மிச்சமாகிற்று என்று சொல்கிறார்கள்.

dewey-truman-1948பிறகுதான் உபஜனாதிபதி, ஜனாதிபதி, ஜெர்மனி, ஜப்பான், அணுகுண்டு, மார்ஷல் திட்டம், ட்ரூமன் கொள்கை எல்லாம். 48-இல் ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கிறார். அவருக்கு சான்சே இல்லை என்று எல்லாரும் நினைக்கிறார்கள். ட்ரூமன் விடுவதாக இல்லை. நாடெங்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார். யாருமே எதிர்பார்க்காத வகையில் வெல்கிறார். பத்திரிகைகள் எல்லாம் ட்ரூமன் தோல்வி என்று அச்சடித்தேவிட்டன. அப்படி ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு ட்ரூமன் கொடுக்கும் போஸ் மிகவும் பிரபலமானது.

இப்போதுதான் கொரியப்போர், மக்கார்தரை வேலையை விட்டு தூக்குவது எல்லாம்.

mcculloughட்ரூமனின் ஆளுமை மிகச் சுவாரசியமானது. முடிவெடுக்க வேண்டியது தானே – ஜனாதிபதியே – என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். ‘The buck stops here’, மற்றும் ‘If you can’t take the heat, get out of the kitchen!’ என்ற இரண்டும் அவரது பிரபலமான மேற்கோள்கள். அவரது இன்னொரு மேற்கோள் – ஜனாதிபதியாக என்னை விட தகுதி வாய்ந்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள் உண்டுதான்; ஆனால் நான்தான் ஜனாதிபதி, நான்தான் முடிவெடுக்க வேண்டும்!”

லிங்கன், ரூஸவெல்ட் போன்றவர்கள் மாபெரும் ஆளுமைகள். ஆனால் ட்ரூமன் சாதாரணர் என்ற எண்ணத்தைத்தான் உருவாக்குகிறார். குறைகளே இல்லாத மாமனிதரும் அல்லர். தனிப்பட்ட முறையில் நேர்மையானவர்தான், (ஜனாதிபதியாக இருந்தபோதே கொஞ்சம் பணக்கஷ்டம்தான்) பல ஆண்டு நண்பர்கள், வேண்டியவர்கள் சின்ன லெவலில் ஊழல் செய்தால் அவர்களை கண்டு கொள்வதில்லை, மாறாக அவர்களை ஆதரித்தே இருக்கிறார். அவரது விடாமுயற்சியும் நேர்மையும் முடிவெடுக்கும் விதமும் நம்மைப் போன்ற சாதாரணர்களிடமிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு விதத்தில் காமராஜோடு ஒப்பிடலாம். காமராஜ் காந்தி-நேரு-படேல்-ராஜாஜி போன்றவர்களோடு ஒப்பிட்டால் அந்த அறிவு கூர்மையும் படிப்பும் நாகரீகமும் இல்லாத கிராமத்தான் மாதிரித்தான் தெரிகிறார்; அந்த மாதிரிதான் இவரும். சாதாரணராகத் தெரியும் அசாதாரண மனிதர்.

மகல தண்டி தண்டியாக தலையணை சைசில் புத்தகம் எழுதுபவர். இதுவும் அப்படித்தான். Scholarly tome. கிடுக்கிப்பிடி சுவாரசியம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ட்ரூமனின் ஆளுமை என்னை கவர்ந்த ஒன்று, அதனால் நான் படித்தேன். வரலாற்றுப் பிரியர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைப்பேன்.

ஒவ்வொரு தலைமுறையிலும் அமெரிக்கத் தலைவர்களைப் பற்றி இப்படி பாரபட்சம் இல்லாமல் எழுத நல்ல உழைப்பைக் கொடுக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் எங்கிருந்தோ வந்துவிடுகிறார்கள். தண்டி தண்டியாக இருந்தாலும் இவர்கள் புத்தகங்கள் எல்லாம் பெஸ்ட்செல்லர் பட்டியலில் கூட வந்துவிடுகின்றன. இந்த மாதிரி இந்தியத் தலைவர்களைப் பற்றி யாரும் எழுதுவதில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. சரி இந்தத் தலைமுறைக்கு ராமச்சந்திர குஹாவும் ராஜ்மோஹன் காந்தியும் இருக்கிறார்கள், போன தலைமுறைக்கு சர்வபள்ளி கோபால். எதிர்காலத்திலும் யாராவது வருவார்கள் என்று நம்புவோம்…

பிற்சேர்க்கை: மிஸ்டர் சிடிசன் பற்றிய பதிவில் இவருக்கும் அட்லாய் ஸ்டீவன்சனுக்கும் ஆகவில்லை என்று சொல்லி இருந்தேன். அது என் தவறான புரிதல். 52-இல் இவர்தான் மிகவும் முயன்று ஸ்டீவன்சனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: ட்ரூமன் எழுதிய புத்தகம் – மிஸ்டர் சிட்டிசன்