இது இந்தத் தளத்தின் ஆயிரமாவது பதிவு.
ஐந்து வருஷங்களில் ஆயிரம் பதிவுகள் என்றால் குத்துமதிப்பாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு. பரவாயில்லை.
ஆனால் இதைத் தொடர முடியுமா என்று தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு நூறு பேர் இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள். சமநிலை (equilibrium) வந்துவிட்டது என்று நினைக்கிறேன், இதற்கு மேலும் நிறைய பேர் வந்து படிப்பார்கள் என்றெல்லாம் எனக்கு நினைப்பு இல்லை. நான் பதிவுகளை எழுதுவது எனக்கு அது விருப்பமான செயலாக இருப்பதால்தான் என்றாலும், நூறு பேர்தான் படிக்கிறார்கள் எதற்கு மாய்ந்து மாய்ந்து எழுதுகிறோம் என்ற அலுப்பு சில சமயம் எழத்தான் செய்கிறது.
விடாமல் எழுதியதன் ஒரே லாபம் நண்பர்கள்தான். அனேகரை இன்னும் பார்த்தது கூட இல்லை, இருந்தாலும் நண்பர்கள்தான். கேசவமணி, ரெங்கசுப்ரமணி, ராஜ் சந்திரா, சிவா கிருஷ்ணமூர்த்தி, பாஸ்டன் பாலா, நட்பாஸ், எம்.ஏ. சுசீலா, கௌரி+கிருபானந்தன் ஆகிய பேர்கள் இந்தக் கணத்தில் நினைவு வருகின்றன. பல பேர்களை விட்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியும்.
எழுத்தாள நண்பர்களும் உண்டு. தளத்தின் மீது நிறைய தாக்கம் உள்ளவர் என்றால் அது ஜெயமோகன்தான். நீ ஏன் ஜெயமோகன் என்ற கண்ணாடி வழியாகவே எதையும் பார்க்கிறாய் என்று ஆரம்ப காலத்தில் தோழி சாரதாவும் விமலும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் எனக்கு ஒரு reference என்று புரிய வைப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. மேலும் ராட்சஸன் போல எழுதுகிறார், பத்து எழுதினால் ஒன்றாவது என்னை யோசிக்க வைக்காதா? இந்தத் தளத்தின் மீது அவரது தாக்கம் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.
பி.ஏ. கிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் நாடனின்
தாக்கம் இந்தத் தளத்தில் ஜெயமோகன் அளவுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இருவரையும் நெருக்கமானவர்களாக உணர்கிறேன். அந்த நெருக்கத்துக்கு இந்தத் தளமும் ஒரு காரணம்.
விடாமல் தொடர படிக்கும் ஆர்வமும் தேடலும் கொண்ட எங்க ஏரியா சிலிகன் ஷெல்ஃப் என்ற சிறு குழு தரும் ஊக்கம் ஒரு முக்கியமான காரணம். இவர்களோடு பேசுவதும் கலாய்ப்பதும் சண்டை போடுவதும் எப்போதுமே ஜாலியான விஷயம்தான். ஏறக்குறைய கல்லூரிப் பருவ விடலைகள் மாதிரிதான் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தளத்தின் support structure இவர்கள்தான். அடுத்த முறை இந்த கும்பல் கூடும்போது ஒரு புகைப்படம் எடுத்து இந்தப் பதிவில் போடுகிறேன்…
இந்தத் தள வாசகர்களுக்கு இவர்கள் யாரும் தெரியாதவர்கள் இல்லை, இருந்தாலும் சுருக்கமான அறிமுகத்துக்கு இது உகந்த தருணம்.
என்னை ஆச்சரியப்படுத்தும் இளைஞர்கள் முகினும் விசுவும். எனக்கு அவர்கள் வயது இருக்கும்போது இத்தனை அறிவோ, ஆழமான படிப்போ, தேடலோ இல்லை. இப்ப மட்டும் என்ன வாழுது என்று முகினின் மைண்ட வாய்ஸ் கேட்கிறது.
பாலாஜி நான் மட்டும் என்ன கிழவனா என்று கேட்பார். அவரது ஆழமான+அகலமான படிப்பு அவரது வயதையும் கொஞ்சம் உயர்த்திக் காட்டுகிறது. இப்படி எழுதியதற்காக பாலாஜியின் மனைவி அருணா என்னை அடுத்த முறை பார்க்கும்போது இரண்டு அடி போடப் போகிறார்!
சுந்தரேஷ் தீவிர ஹிந்துத்துவர். சில சமயம் இலக்கியத்தையும் ஹிந்துத்துவ கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது எங்களுக்குள் அடிதடி சண்டை நடக்கும். அவரது மனைவி நித்யாவும் தீவிர வாசகி. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடமும் நன்றாகப் பேசுவார். ஆனால் பாருங்கள் உலகக் கன்னட மாநாட்டுக்கு போன வருஷம் பைரப்பா வந்தபோது அவரது சொற்பொழிவை எழுதித் தருகிறேன், சிலிகன் ஷெல்ஃபில் போடலாம் என்று சொன்னார். சிலிகன் ஷெல்ஃபில் பதிவைப் போடுவதகு பதிலாக அந்த வார்த்தையை அவர் வீட்டு ஷெல்ஃபில் – பரணில் – போட்டுவிட்டார்!
சுந்தரேஷ் தீவிர ஹிந்துத்துவர் என்றால் ராஜன் அதிதீவிர ஹிந்துத்துவர். இலக்கியம் மட்டுமல்ல, எல்லாவற்றையுமே ஹிந்துத்துவ கண்ணாடி வழியாகத்தான் பார்ப்பார். எனக்கு வழுக்கை, அவருக்கு தலை நிறைய முடி என்றால் அதற்கும் நான் மோடிக்கு எதிரான அரசியல் நிலை எடுப்பதும் அவர் மோடியை ஏறக்குறைய தெய்வமாக வழிபடுவதும்தான் காரணம் என்பார். எங்களுக்குள் சில சமயம் இல்லை, பல சமயம் அடிதடி சண்டை நடக்கும். அவரை சிலிகன் ஜில்லா தமிழ் ஆர்வலர்களின் உந்துவிசை என்றே சொல்லலாம். விடாமல் இலக்கியவாதிகளை அழைத்து வந்து, திட்டமிட்டு, பணம் சேர்த்து… அவரது உழைப்பைக் கண்டு பொறாமைப்படுகிறேன். எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. ஜெயமோகனோடு ஏற்பட்ட சமீபத்திய கசப்பு அவரையும் பாரதி தமிழ் சங்கத்தையும் முடக்கிவிடக் கூடாது. எனக்கு ராஜனோடு சண்டை போடுவதிலேயே நேரம் போய்விடும், அதனால் அவரது மனைவி செல்வியோடு பேசுவது கொஞ்சம்தான். ஆனால் அந்தக் கொஞ்சப் பேச்சிலேயே அவருடைய வாசிப்பும் சிறப்பானது என்று உணர முடிகிறது.
பத்மநாபன் புத்தகங்களைப் பற்றி பேச தவறாமல் வருபவர். பேசுவதும் தெளிவாக, சிறப்பாக இருக்கும்.
காவேரியால் எல்லா நேரமும் வரமுடிவதில்லை. ஆனால் வரும்போதெல்லாம் பிய்த்து உதறுவார். பழைய தமிழ் இலக்கியம், சங்கப் பாடல்கள் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.
நான் மிகவும் மிஸ் செய்வது தோழி அருணாவைத்தான். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் இந்தியா திரும்பிவிட்டார். ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ளவர். மடை திறந்தது போல பேசுவார்.
ஆரம்பத்திலிருந்தே கூட இருப்பவன் பக்ஸ்தான். முப்பது வருஷத்துக்கு மேலாகப் பழக்கம். அவனிடமும் சரி, அளந்தே பேசும் அவன் மனைவி சித்ராவிடமும் சரி, உரிமையோடு பழகலாம். அவனிடம் என்னை கடுப்படிக்கும் விஷயம் ஒன்றுதான் – எனக்கு தொந்தி சரிந்து மிச்சம் மீதி இருக்கும் மயிரே வெளிர்ந்து தந்தம் அசைந்து முதுகே வளைந்தும், அவன் காலேஜில் பார்த்த மாதிரியேதான் இருக்கிறான்! கூட எழுதுகிறேன் என்று ஆரம்பித்தான், ஆனால் வருஷத்துக்கு ஒன்றிரண்டு பதிவு மட்டுமே எழுதுகிறான். நல்லா இருடே!
என் படிப்பு ஆர்வத்துக்கு ஊற்றுக்கண் என் அம்மாதான். அம்மாவின் தேடல்தான் என்னிடமும் ஒட்டிக் கொண்டது. ஆனால் அம்மாவுக்கு கம்ப்யூட்டர் இன்னும் பிடிபடவில்லை, இதையெல்லாம் படிப்பதில்லை…
கடைசியாக என் மனைவி ஹேமா – ஹேமாவுக்கு நான் படிப்பில் மூழ்கி மிச்ச விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுகிறேன் என்று சில சமயம் (நியாயமான) கோபம் வரும். ஆனால் எனக்கு இது முக்கியம் என்பதால் எனக்கு முழு சப்போர்ட்தான். சிலிகன் ஷெல்ஃபிற்கு என்று ஏதாவது பெருமை இருந்தால் பாதியாவது அவளைச் சேர வேண்டும்…
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்