சினிமா சிபாரிசுகள் சில: Winged Migration
நெட்ஃப்ளிக்சில் இருக்கும் இந்தப் படத்தை இது வரை பார்த்ததில்லை என்றால் அவசரமாக செய்து கொண்டிருக்கும் வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு உடனடியாக பார்த்து விடவும்.
நான் சென்ற முறை தென்திருப்பேரை போயிருந்த பொழுது தாமிரவருணியில் குளிக்கப் போயிருந்தேன். இப்பொழுது அப்படி குளிக்கப் போகும் ஆட்களையெல்லாம் சாக்கடையில் குளிக்கப் போகும் பன்றிகளைப் போல அந்த ஊர்க்காரர்கள் அருவருப்புடன் பார்க்கிறார்கள். சாக்கடைக்கும் நதிக்கும் ஆறு வித்தியாசம் கூட இருப்பதில்லை. இருந்தாலும் நான் ஏற்கனவே பன்றியை விட மோசமானவன் என்பதினால் அதைக் கண்டு கொள்ளாமல் ஆற்றுக்குப் போய் விட்டேன். அங்கே நதியின் நடுவே உள்ள திட்டுக்களில் நிறைய கருவேல மரங்கள் வளர்ந்து கிடந்தன. அந்தத் திட்டுக்கள் முழுக்க ஏதேதோ பெரிய பெரிய பறவைகள். நாம் இங்கே கயோட்டி காயலில் பார்க்கும் பறவைகள் போலவே ஏதேதோ பெயர் தெரியாத பறவைகள். அவைகள் எல்லாம் கண்டம் விட்டு கண்டம் வந்தவவையாக இருக்கலாம். நான் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தால் அவைகள் ஆஸ்திரேலியாவில் இருந்தோ சைபீரியாவில் இருந்தோ வந்திருக்கக் கூடும். எனக்கும் அவைகளுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை இருவருமே சாப்பாட்டுக்காக இடப் பெயர்வு செய்து கொள்ளும் ரகம் என்பது மட்டுமே. மற்றபடி அவைகள் ஊர் விட்டு ஊர் கிளம்பும் முன் காஸ்ட்கோவில் போய் சாக்லெட்டுகளும் இருட்டுக் கடையில் போய் அல்வாக்களும் வாங்கிக் கொண்டு மூட்டை கட்டிக் கொண்டு பறப்பதில்லை.
ஏதோ ஒரு திட்டத்தில் வடக்கில் இருந்து தெற்காகவும் தெற்கில் இருந்து வடக்காகவும் பறந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு சில அசுரப் பறவைகள் ஆர்ட்டிக்கில் இருந்து கிளம்பி அண்ட்டார்ட்டிகா வரையிலும் பறக்கின்றன. பறந்து கொண்டேயிருக்கின்றன. ஆங்காங்கே குளம் குட்டை நதிகளில் ஸ்நானம் செய்து கொண்டு சிரமப் பரிகாரம் செய்து கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன. அப்படி ரெஸ்ட் எடுக்க இறங்கும் இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டோ, நாயால் கடிக்கப் பட்டோ வலையால் பிடிக்கப்பட்டோ உயிரிழந்தவை போக மீதப் பறவைகள் பயணத்தைத் தொடர்கின்றன. யாருக்கோ திரும்பி வருவோம் என்று சத்தியம் செய்து கொடுத்தவை போல பறக்கின்றன. அவைகளுக்கு யார் ஜிபிஎஸ் கொடுத்தார்கள்? யார் எந்த இடத்தில் எந்த மீன் கிடைக்கும் என்று சொல்லிக் கொடுத்தார்கள், எப்படி வடக்கு தெற்கை கண்டு பிடிக்கின்றன? எவ்வாறு பூமியின் காந்தப் புலன்களை உணருகின்றன? தெரியாது. ஆனால் அவைகளின் இடப்பெயர்ச்சியைக் காணும் பொழுது ஒன்று மட்டும் தெரிந்தது கடவுள் இருக்கிறான் என்பது மட்டும்.
பறவைகளுடன் சேர்ந்து பறப்பது போன்ற ஒரு உணர்வு பறப்பதைப் போலவே ஜில்லென்று கிளம்பும் இசை, பாடல்கள் அற்புதமான நிலக் காட்சிகள் என்று படம் முழுக்க பரவசமான ஒரு உணர்வு. கீழே மனிதனின் பெரும் நிர்மாணங்கள். போடா புல்லே என்று அவற்றைப் பொருட்படுத்தாமல் தன் இலக்கு நோக்கி அவைகள் பறந்து கொண்டேயிருக்கின்றன. சுதந்திர தேவி சிலை, வோர்ல்ட் ட்ரேட் சென்டர், கோல்டன் கேட் ப்ரிட்ஜ், சீனப் பெருஞ்சுவர், ஐஃபில் டவர் என்று மனித நிர்மாணங்களின் உச்சங்களையெல்லாம் உதாசீனம் செய்து அதை விட பிரமிப்புடன் அந்த பறவைகள் அவற்றின் மீது பறந்து கொண்டேயிருக்கின்றன. அபாரம், அபாரம்.
இதை எப்படி படம் பிடித்திருப்பார்கள் என்பதை நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. ஏதோ அந்தப் பறவைகளில் ஒரு பறவை தன் இறக்கையில் காமிராவைக் கட்டிக் கொண்டு பறந்ததைப் போல நாமும் பறவையாகி மாறி அவைகளுடன் பறப்பதைப் போன்ற உணர்வை அளிக்கும் அற்புதமான படப்பிடிப்பு.
அடுத்த முறை எந்தவொரு பறவையைக் கண்டாலும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
Winged Migration தளம்
ஐஎம்டிபி குறிப்பு
விக்கி குறிப்பு