சாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், மர்மக் கதைகள் எல்லாம் இலக்கியம் ஆக முடியுமா? முடியும் என்பதற்கு மால்டீஸ் ஃபால்கனை (1929) ஆதாரமாகக் காட்டலாம்.
மால்டீஸ் ஃபால்கனை இலக்கியமாக்குவது துப்பறியும் சாம் ஸ்பேடின் பாத்திரப் படைப்பு. ஸ்பேட் காவிய நாயகன். பீமன், கும்பகர்ணன், பீஷ்மர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவன். அவன் என்ன மர்மத்தை அவிழ்க்கிறான், யார் கொலையாளி, கதையில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவை எல்லாம் ஸ்பேடின் குணாதிசயங்களை, விழுமியங்களை, அவனுடைய அறத்தை, சுய பெருமிதத்தை எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்பதுதான் முக்கியம். ஸ்பேட் ஒரு archetype. Western genre’s – ‘கௌபாய்’ கதைகளின் நாயகன். நகரத்தில் வாழ்கிறான் அவ்வளவுதான்.
பிற கதாபாத்திரங்களும் நினைவில் நிற்பவைதான். குறிப்பாக குட்மன். குட்மன் எப்போதும் கொஞ்சம் formal, stilted மொழியில்தான் பேசுவான். அது அவன் எத்தனை அபாயமானவன் என்பதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது. சின்ன சின்ன பாத்திரங்கள் கூட – ஸ்பேடின் அலுவலகக் காரியதரிசி பெர்ரின் போன்றவர்கள் கூட சிறப்பான கோட்டோவியமாக வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கதையின் க்ளைமாக்ஸ், denouement காட்சி மிகப் பிரமாதமானது. நாடகமாக நடிக்க ஏற்றது. ஹம்ஃப்ரி போகார்ட், ஜாக் நிக்கல்சன், அல் பசினோ போன்றவர்கள் பிய்த்து உதற வாய்ப்புள்ளது. (திரைப்படத்தில் நடித்தது போகார்ட்தான்). இந்த மர்மக் கதையை இலக்கியமாக்குவதில் அதற்கு பெரிய பங்குண்டு. 1941-இல் ஜான் ஹுஸ்டன் இயக்கத்தில் திரைப்படமாக வந்திருக்கிறது.
இலக்கியமாக்கும் இன்னொரு காட்சி – ஸ்பேட் தன் பழைய கேஸ் ஒன்றை விவரிப்பான். கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒரு சந்தோஷமான மத்திமர் குடும்பம். ஒரு நாள் அலுவலகம் செல்லும் கணவன் திரும்பவில்லை. பிணம் கிடைக்கவில்லை. ஸ்பேட் கண்டுபிடிக்க இறங்குகிறான். கணவன் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்று நினைக்கிறான், ஆனால் அவனுக்கு எந்தப் பணப் பிரச்சினையும் இல்லை, எதிரிகள் இல்லை, மனைவியிடம் சண்டை சச்சரவு இல்லை, அவன் பர்சில் இருக்கும் இருபது முப்பது டாலர்களோடு மட்டும்தான் ஓடிப் போயிருக்க வேண்டும், வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்கக் கூட அவன் முயற்சி செய்யவில்லை, எந்தத் தடயமும் இல்லை. ஸ்பேடால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருஷங்கள் கழித்து கணவனை தற்செயலாக இன்னொரு நகரத்தில் பார்க்கிறான். அவனைப் பிடித்து விசாரிக்கிறான். காணாமல் போன அன்று மதிய நேரத்தில் உயரமான கட்டிடத்திலிருந்து ஒரு செங்கல் விழுந்திருக்கிறது. கணவன் மயிரிழையில் தப்பித்திருக்கிறான். அவனது வாழ்க்கையின் பொருள் என்ன, இந்தக் குடும்பம், குழந்தை, செய்து கொண்டிருக்கும் பிசினஸ் இதெல்லாம் வாழ்க்கை இல்லை என்று தோன்றி இருக்கிறது. பாக்கெட்டில் இருக்கும் பணத்தோடு ஓடிவிட்டான். ஓடியவன் இப்போது இருக்கும் நகரத்தில் அதே பிசினஸைத்தான் செய்து கொண்டிருக்கிறான். மீண்டும் மணம் செய்துகொண்டிருக்கிறான், குழந்தைகள் பிறக்கின்றன. அதே மத்திமர் வாழ்க்கை!
இன்னொரு நல்ல காட்சி – ஜோயல் கெய்ரோ என்பவன் ஸ்பேடின் அலுவலகத்தில் மால்டீஸ் ஃபால்கன் இருக்கிறதா என்று தேட வருகிறான். ஸ்பேடை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஸ்பேட் சின்னதாக சண்டை போட்டு அலட்சியமாக அவன் துப்பாக்கியைப் பிடுங்கிக் கொள்ள கெய்ரோ ஸ்பேடையை சிலையைத் தேட நியமிக்கிறான். பிசினஸ் எல்லாம் பேசி முடித்த பிறகு ஸ்பேட் கெய்ரோவிடம் துப்பாக்கியைத் திருப்பித் தர, இப்போது கெய்ரோ ஸ்பேடை துப்பாக்கி முனையில் வைத்து அலுவலகத்தில் தேடிப் பார்க்கிறான்!
Hard-boiled detective stories என்று துப்பறியும் கதைகளில் ஒரு sub-genre உண்டு. ஹாம்மெட்டே இதற்கு முன்னாலும் அப்படிப்பட்ட சில கதைகளை எழுதி இருந்தாலும் இதுதான் அந்த sub-genre-இல் முதல் படைப்பாகக் கருதப்படுகிறது. அவரும் ரேமண்ட் சாண்ட்லரும் இந்த sub-genre-இல் சிறப்பான புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள்.
மால்டீஸ் ஃபால்கன் குறைகள் இல்லாத புத்தகம் இல்லை. Rough edges தெரிகின்றன. நுண்விவரங்கள் எல்லாம் மிகக் குறைவு. உண்மையைச் சொன்னால் நுண்விவரங்கள் வரும்போது கதை எப்போது தொடரும் என்றுதான் பொறுமை இல்லாமல் படித்தேன். இரண்டாம் வரிசை இலக்கியம்தான். ஆனாலும் இலக்கியமே. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
ஸ்பேட் துப்பறியும் சில சிறுகதைகள் Adventures of Sam Spade என்று வெளிவந்திருக்கின்றன. இவை தீவிர ஹாம்மெட் ரசிகர்களுக்கு மட்டுமே.
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், துப்பறியும் கதைகள்