சாஹித்ய அகடமி பரிசு (தெலுகு) பெற்ற ஓல்கா

இந்த வருஷத்துக்கான சாஹித்ய அகடமி விருதை தெலுகு  மொழிக்காகப் பெற்றிருப்பவர் ஓல்கா (லலிதகுமாரி). அவரைப் பற்றி கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரை கீழே.

சாகித்ய அக்காதமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர் ஒல்கா

volga_lalitha_kumariபிரபல தெலுங்கு பெண் எழுத்தாளர் ஒல்கா அவர்களுக்கு “விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்கு சாகித்ய அக்காதமி  அவார்ட் கிடைத்துள்ளது. அவருடைய இயற் பெயர் P. லலிதகுமாரி. தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணிய வாதத்தின் கண்ணோட்டத்தை சீர்தூக்கி நிறுத்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். 1950 நவம்பர், 27 ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடித்த பிறகு தெனாலியில், வி.எஸ்.ஆர். கல்லூரியில் தெலுங்கு லெக்சரர் ஆக பணி புரிந்திருக்கிறார். கதைகளுடன் நாவல்களையும் எழுதி இருக்கிறார்.

திரை உலகிலும் காலடி பதித்து இருக்கிறார். உஷாகிரண் நிறுவனத்தில் கதைப் பிரிவில் வேலை பார்த்து, மூன்று படங்களை தயாரித்து விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

அவர் எழுதிய “ஸ்வேச்சா” என்ற  நாவல் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

1991 லிருந்து 1997 வரையில் Asmita Resource Centre for Women நிறுவனத்திற்கு தலைவியாக இருந்திருக்கிறார். தற்பொழுது முக்கியச் செயலாளர் ஆக இருக்கிறார். 1990ல் தெலுங்கு பல்கலைக்கழகம் இவருக்கு “சிறந்த பெண் எழுத்தாளர்”  என்ற விருதை வழங்கி கௌரவித்து உள்ளது. 2014ல் Loknayak Foundation இலக்கிய  விருது பெற்றிருக்கிறார்.

தமிழ் வாசகர்களுக்கு அவருடைய படைப்புகளை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு.

இது வரையில் தமிழில் வெளிவந்த ஒல்காவின் படைப்புகள்

  1. மீட்சி (சாகித்ய அக்காதமி விருது பெற்ற தெலுங்கு நாவல்)
  2. தொடுவானம் தொட்டுவிடும் தூரம் (திண்ணை  இணைய இதழில்    தொடராக வெளிவந்தது.
  3. சுஜாதா
  4. ஒரு பெண்ணின் கதை

இவற்றை பதிப்பித்த பாரதி புத்தகாலயம்( 7, Elango Salai, Teynampet,, Chennai, Tamil Nadu 600018, India Phone:+91 44 2433 2424) அவர்களுக்கு எனது நன்றி என்றும் உரியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பக்கம்

ஆ. மாதவனுக்கு சாஹித்ய அகடமி விருது

aa. madhavanஇந்த வருஷத்துக்கான சாஹித்ய அகடமி விருது ஆ. மாதவனுக்குக் கிடைத்திருக்கிறது. வரவர அகடமி திருந்திவிட்டாற்போல இருக்கிறது. தேர்ந்தெடுத்த ஜூரிகள் நாஞ்சில், (சிலம்பொலி? பேராசிரியர்) செல்லப்பன், சிற்பி பாலசுப்ரமணியம். எனக்கென்னவோ இது நாஞ்சிலின் கைங்கர்யம் என்றுதான் தோன்றுகிறது. 🙂

அவரது இலக்கியச் சுவடுகள் என்ற கட்டுரை நூலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். மூன்று வருஷங்களுக்கு முன் வெளியான படைப்புக்குத்தான் விருது தரப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் இந்தப் புத்தகத்துக்கு என்று அறிவித்திருக்கிறார்களாம். அவரது சிறுகதைகள் – குறிப்பாக ‘கடைத்தெரு கதைகள்‘ – மற்றும் இரண்டு நாவல்கள் – கிருஷ்ணப்பருந்து (1982), புனலும் மணலும் (1974) – ஆகியவைதான் அவரது முக்கியமான படைப்புகள் என்று நினைக்கிறேன்.

நான் கிருஷ்ணப்பருந்தை ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் நிறைய தேடி இருக்கிறேன், கிடைக்கவே இல்லை. திலீப்குமாரின் கடையில் கூட கிடைக்கவில்லை. நண்பர்களிடமும் கிடைக்கவில்லை. இன்று வரை படிக்க முடியவில்லை. இந்த விருதுக்கு அப்புறமாவது அவரது புத்தகங்கள் மீண்டும் பதிக்கப்பட வேண்டும்.

நானெல்லாம் மாதவனின் எழுத்துக்களை இணையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்ததுதான். அவரது நாயனம் சிறுகதை பரவலாகப் பேசப்படும் ஒன்று. ஜெயமோகனது சிறுகதைப் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று, ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பட்டியல் மீது எனக்கு முழு நம்பிக்கை இல்லை. என் சீர்தூக்கிப் பார்த்தலில் அடிப்படையில் நான் இந்தச் சிறுகதையைப் பரிந்துரைக்கிறேன். ஆனால் நான் எனது டாப் நூறு தமிழ்ச் சிறுகதைகள் என்று தொகுத்தால் அதில் வராது.

அவரது இன்னும் இரண்டு சிறுகதைகள் – பாச்சி, சாத்தானின் திருவசனம் – அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைக்கின்றன. இன்னொரு சிறுகதை – திருடன் – அவரது தளத்தில் கிடைக்கிறது. எல்லாவற்றையும் நான் பரிந்துரைக்கிறேன்.

முதல் விஷ்ணுபுரம் விருது பெற்றவரும் மாதவன்தான்.

மாதவனுக்கு ஒரு தளமும் இருக்கிறது. ஜெயமோகன் அவரை பேட்டி கண்டது, நாஞ்சில் கிருஷ்ண்ப்பருந்தைப் பற்றி எழுதி இருப்பது, வேதசகாயகுமார் அவரது சிறுகதைகளைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று, எஸ்ராவின் கட்டுரை ஒன்று என்று பல சுவாரசியமான பதிவுகள் அங்கே கிடைக்கின்றன.

தெலுங்கில் வோல்கா பரிசு பெற்றிருக்கிறார். வோல்காவின் பேரையாவது நான் கேட்டிருப்பது கௌரி கிருபானந்தனின் புண்ணியத்தில்தான். கௌரி அவரைப் பற்றி எழுதிய அறிமுகக் கட்டுரைதான் அடுத்த பதிவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆ. மாதவன் பக்கம், விருதுகள்