அனிதா: இளம் மனைவி சுஜாதாவின் புகழ் பெற்ற கணேஷ்-வசந்த் நாவல். ஜெயமோகன் பரிந்துரைக்கும் தமிழ் வணிக நாவல்.
1971-இல் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கதையின் விறுவிறுப்பு, மற்றும் முடிச்சு அப்போது இதன் பெரும் கவர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் படித்துவிட்டு ஒரு நிமிஷம் யோசித்தால் கூட முடிச்சின் செயற்கைத்தனம், பலவீனம் எல்லாம் புரியும்.
ஒரு பிணம் கிடைக்கிறது. இறந்தவர் பணக்கார ஷர்மா என்று அவரது அழகிய இரண்டாம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள். வேலைக்கார கோவிந்த் மேல் சந்தேகம் விழுகிறது. முதல் மனைவியின் பெண் மோனிகா கணேஷை கதைக்குள் இழுக்கிறாள். கணேஷ் அனிதாவால் கவரப்படுகிறான். சின்னச் சின்ன முரண்கள் (discrepancies) தெரிகின்றன. அவற்றைப் பின் தொடர்ந்து இறந்தது ஷர்மா அல்ல, கோவிந்த், கொன்றதே ஷர்மாதான் என்று கண்டுபிடிக்கிறான்.
எத்தனை முட்டாள்தனம்? போலீஸ் இறந்தது ஷர்மா என்று நம்பிவிட்டாலும் ஷர்மா தன் கம்பெனியை எப்படி நடத்துவார்? எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு புது வாழ்க்கை தொடங்கினாலும் இது வரை சேர்த்து வைத்த சொத்து ஷர்மாவுக்கு எப்படி கிடைக்கும்? சரி மனைவியை மிரட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றாலும் இனி மேல் அனிதாவுடன் சேர்ந்து வாழ்வது எப்படி? உற்றார் உறவினர் இல்லாத கோவிந்தின் பிணத்தை வீட்டின் பின்னால் புதைத்தால் பிரச்சினைகள் வராமல் இருக்குமே? கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பானேன்? இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்ப நேரமில்லாமல் விறுவிறுவென்று போவதுதான் புத்தகத்தின் வெற்றி. இன்றும் கூட இதைப் போல குற்றப் பின்னணி உள்ள ஒரு நாவல் தமிழில் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இது எப்படி இருக்கு என்று ஜெய்ஷங்கர், ஸ்ரீதேவி நடித்து திரைப்படமாகவும் வந்தது. ஓடவில்லை.
வணிக நாவல்கள் தமிழில் எப்படி வளர்ந்தன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், சுஜாதா ரசிகர்கள் தவறவிடக் கூடாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்
One thought on “கணேஷ்-வசந்த் நாவல்: அனிதா இளம் மனைவி”