சுஜாதாவின் சில பல புத்தகங்கள்

sujathaசுஜாதாவின் பெரிய பலம் அனாவசிய வார்த்தைகள், உபதேசங்கள், புலம்பல் இல்லாமல் எழுதுவது, கச்சிதமாக எழுதுவது, நல்ல நடை, பாத்திரங்களின் நம்பகத்தன்மை. பல குறுநாவல்களில் இது தெரிகிறது. ஆனால் பல குறுநாவல்களில் அன்றைய “யூத்துக்காக” எழுதி இருப்பது, deadline அழுத்தம் எல்லாமும் தெரிகிறது. சிறு வயதில் என் மீது சுஜாதாவுக்கு இருந்த தாக்கத்தால் நான் இன்னும் இந்தக் குறுநாவல்களைப் படிக்கலாம், ஆனால் இவற்றில் வெகு சிலவே படிக்க வேண்டியவை. ஆனால் அனேகமாக எதுவுமே போரடிக்காது.

இவற்றில் நான் பரிந்துரைப்பது 6961 (சூழலில் பொருந்தாத மனைவி பாத்திரத்துக்காக), ஆதலினால் காதல் செய்வீர் (தமிழாசிரியை பாத்திரத்துக்காக), ஜேகே, நில் கவனி தாக்கு மற்றும் பதினாலு நாட்கள் (விறுவிறுப்புக்காக), ரோஜா (எழுபதுகளின் வேலை நிறுத்த சூழலின் தத்ரூப சித்தரிப்புக்காக), மூன்று நாள் சொர்க்கம் மற்றும் தேடாதே (கச்சிதமான வடிவத்துக்காக). பரிந்துரைப்பது என்றால் படித்தே ஆக வேண்டும் என்பதில்லை. ஏதோ ஒரு விஷயமாவது என்னைக் கவர்ந்தது, அவ்வளவுதான்.

நான் படித்தவற்றுக்கான ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள் கீழே.

பரிந்துரைப்பவை:

மூன்று நாள் சொர்க்கம்: ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் இதைத்தான் சொல்வேன். ஓடிப் போகும் ஜோடி; ஆண் தன் இரு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு ஓடிப் போகிறான். காதல் மாறுகிறது. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.

6961: பணக்கார மனைவி கார் ட்ரைவரிடம் சினேகிதம் காட்டுவது ட்ரைவரின் கொலையில் முடிகிறது. மனைவி தன் சூழலில் பொருந்தாதது நன்றாக வந்திருக்கும்.

ஆதலினால் காதல் செய்வீர் அவர் மிகவும் பாப்புலராக இருந்த காலத்தில் எழுதப்பட்டது. சிம்பிளாக முடிச்சு போட்டு சிம்பிளாக அவிழ்த்திருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவை உணர்ச்சி அபாரம். அந்த தமிழாசிரியை பாத்திரம் பிரமாதம். நினைவிருக்கப் போவது அந்தப் பாத்திரம்தான்.

ஜேகே: அவரது ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று. அன்றைய யூத்துக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார், ஆனால் சில இடங்கள் இன்று செயற்கையாகத் தெரிகின்றன. இறுதியில் நல்ல ட்விஸ்ட்.

நில் கவனி தாக்கு: சுஜாதாவின் ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று. அப்போதெல்லாம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்தான் சுஜாதாவின் ஆதர்சமாக இருந்திருக்க வேண்டும். விறுவிறுவென்று போகும் கதை. அந்தக் காலகட்டத்தின் யூத்துக்கு அப்பீல் ஆக வேண்டும் என்று முனைந்திருக்கிறார். கடைசி ட்விஸ்ட் இந்தக் கதையை நினைவு கொள்ள வைக்கிறது.

பதினாலு நாட்கள்: பங்களாதேஷ் விடுதலைப் போரை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு சிம்பிள் கதை. அன்றைக்கு பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். ஒரு பைலட் பாகிஸ்தானி விமானங்களுடன் சண்டை போடும்போது சுடப்பட்டு பாகிஸ்தானிய ராணுவத்திடம் பிடிபடுகிறான். அங்கே ஒரு வெறி பிடித்த காப்டனிடம் சித்திரவதைப்படுகிறான். முன்னேறி வரும் இந்தியர் ராணுவம் அவனை மீட்கிறது. இன்றைக்கும் படிக்கலாம்.

ரோஜா: தொழிற்சங்கம், கயமைத்தனம் உள்ள தலைவன், அவன் கற்பழித்துக் கொல்லும் பெண், மோப்பம் பிடிக்கும் இன்ஸ்பெக்டர்; வேலை நிறுத்தத்தில் இன்ஸ்பெக்டர், தலைவன் இருவரும் இறப்பதோடு முடிகிறது.

தேடாதே: கச்சிதமான திரில்லர்; ஒரு புகைப்படக்காரனும், ஒரு தொழிலதிபரின் சின்ன வீடும் மணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்கள். தொழிலதிபருக்கு ஈகோ பிரச்சினை, சின்ன வீட்டை கொலை செய்துவிடுகிறார். துப்பறிவதுதான் கதை.

மற்றவை:

அப்சரா: கொஞ்சம் மனநிலை சரியில்லாத சீரியல் கில்லர்.

ஆஸ்டின் இல்லம்: பணக்கார கூட்டுக் குடும்பம். செல்லப் பேரனுக்கு muscular dystrophy. பிழைக்க வழி இல்லை. மிஞ்சிப் போனால் நாலைந்து வருஷம்தான். இதில் குடும்பத் தகராறு, பணம் வந்த விதம் என்றெல்லாம் பேசுகிறார்கள். சுஜாதாவுக்கு muscular dystrophy பற்றி சொல்ல வேண்டும் என்று ஆசை, அதனால் ஒரு சின்ன குறுநாவல் எழுதி இருக்கிறார். அவ்வளவுதான்.

இளமையில் கொல்: இன்ஸ்பெக்டர், அண்ணன், அண்ணி தரும் அழுத்தத்தால் ஒருவன் தன் நண்பனுக்கெதிராக பொய் சாட்சி சொல்கிறான். ஆனால் கேசில் நண்பன் விடுதலை அடைந்துவிடுகிறான். இவனை பழி வாங்க அலைகிறான். இவன் ஒரு கொலைக் கேசில் மாட்டிக் கொள்ள நண்பனுக்கு அடித்தது சான்ஸ்! அவன் பொய் சாட்சி சொல்ல முன் வருகிறான். ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட் கொடுத்து சுஜாதா தன் திறமையை காட்டுகிறார்.

இன்னும் ஒரு பெண் மனம்: இன்னொரு பெண் மேல் ஆசைப்படும் 45 வயது தொழிலதிபர். மனைவியைக் கொல்லப் போடும் திட்டம் ஓ. ஹென்றி ட்விஸ்ட்டாக தன் மேலேயே வந்து விடிகிறது.

இப்படி ஒரு மாறுதல்: வயதான எம்.டி. செகரடரியைப் பார்த்து ஜொள்ளு. செகரட்டரி எப்படி சமாளிக்கிறாள்? வேஸ்ட்.

ஜோதி: இதுவும் அவரது ஆரம்ப கால முயற்சி. குற்றவாளி யாரென்று தெரிந்தும் கைது செய்ய முடியாத சூழ்நிலை. சுஜாதாவே ஒரு பாத்திரமாக வருவது சுவாரசியம்!

கை: கையை படம் படமாக வரையும் ஓவியனுக்கு கை போய்விடுகிறது. சுமாராக இருக்கிறது.

மனைவி கிடைத்தாள்: அழகி சாதாரணமான வாலிபனை விரும்பி மணக்கிறாள். நண்பன் ரூட் விடும் கதை.

ஓரிரவில் ஒரு ரயிலில்: ஒரு பெரிய சாமியாருக்கு கொலை மிரட்டல். வேஸ்ட்.

ஒரு சிக்கலில்லாத காதல் கதை: கொஞ்சம் அழகு குறைவான டாக்டர் தன் தொழிலில் நிறைவு காண்கிறாள்.

சிவந்த கைகள், கலைந்த பொய்கள்: போலி எம்.பி.ஏ. சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்து கிடுகிடுவென்று மேலே போகும் ஒரு இளைஞனின் மோசடி தெரிந்துவிடுகிறது. ஏமாற்று வேலை பற்றி தெரிந்த பெரியவரை இளைஞன் “சிவந்த கைகள்” குறுநாவலில் கொன்றுவிடுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது “கலைந்த பொய்கள்” குறுநாவலில்.

தப்பித்தால் தப்பில்லை: சாது கணவன், சோரம் போகும் மனைவி. கணவனுக்கு விஷயம் தெரிகிறது. அவளை கொலை செய்ய கச்சிதமாகத் திட்டமிடுகிறான். பிறகு? இதிலும் ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட்.

விக்ரம்: மசாலா சினிமா கதையில் சுஜாதாவும் ஒன்றும் கிழிப்பதற்கில்லை. இண்டியானா ஜோன்ஸ் படத்திலிருந்து ஒரு காட்சி அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கிறது. சின்ன சின்ன நகாசு வேலை செய்திருக்கிறார், அவ்வளவுதான்.

விளிம்பு: ஸ்கிட்சோபிரனியா என்ற முடிச்சு எழுதப்பட்ட காலத்தில் புதுமையாக இருந்திருக்கும்.

விருப்பமில்லாத திருப்பங்கள்: மெதுமெதுவாக குற்ற உலகில் இழுக்கப்படும் ஒருவன். சுமார்.

விடிவதற்குள் வா: புது கிருஸ்துவர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் நடுவில் டென்ஷன் இருக்கும் ஒரு கிராமம். துபாயிலிருந்து திரும்பி வரும் கணவன். மனைவியைக் காணவில்லை. பாதிரியார் மேல் சந்தேகம் என்று சின்னப் பொறி பெரிய கலவரமாக வெடிக்கிறது. கணவனே தடுக்க முயன்றாலும் நடக்கவில்லை. மனைவி உயிரோடுதான் இருக்கிறாள் என்று முடிக்கிறார். சுமார்.

விழுந்த நட்சத்திரம்: சினிமா உலக நண்பன் ஏமாற்றுகிறான்.

இவற்றைத் தவிர வேறு இரண்டு புத்தகங்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன். தனியாகப் பதிவு எழுதும் அளவுக்கு அவை வொர்த் இல்லை.

வேணியின் காதலன்: நடைபாதை உணவுக்கடை வைத்திருக்கும் குடும்பம். குடிகார அப்பன். டீனேஜ் மகள் வேணிதான் நடத்துகிறாள். அவளை சைட்டடிக்கும் சிலர். காதலன், ஒருதலைக் காதலன், திருமணம் செய்துகொள்ள முன்வரும் காதலன் காணாமல் போவது என்று போகிறது.

தூண்டில் கதைகள், மீண்டும் தூண்டில் கதைகள்: தொண்ணூறுகளின் மத்தியில் சுஜாதா வாரப்பத்திரிகையில் சிறுகதை வடிவம் மறைகிறதே என்று கவலைப்பட்டிருக்கிறார். குமுதத்தில் வாரப் பத்திரிகை சிறுகதை ஸ்டைலில் சில சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ஒரு கணேஷ்-வசந்த் சிறுகதை கூட உண்டு. ஆனால் எதுவுமே அவரது திறமையைக் காட்டவில்லை என்பதுதான் சோகம்.

கடவுள் இருக்கிறாரா அறிவியல் கணிதக் கோட்பாடுகளுக்கு சிறந்த அறிமுகப் புத்தகம். இன்றும் படிக்கலாம். என்ன ஆச்சரியம் தற்செயலைப் பற்றி பேசுகிறது, தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்