சுப்ரபாரதிமணியன் என் மனதுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் வாழைப்பழம் போல அவசரமாக விழுங்கிவிட ஏற்றவை அல்ல. மாதுளம்பழம் போல மெதுவாக உரித்து கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து சாப்பிட வேண்டும். மனதில் மெதுவாக அசை போடலாம். மங்கலான இரவில் மொட்டை மாடியில் பழைய தமிழ் சினிமா பாட்டுகளைக் கேட்கிற சுகம் அவரது எழுத்தில் உண்டு.
அவரது புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது “அப்பா” என்ற சிறுகதைத் தொகுப்பு. மனிதருக்கு மரத்தடியில் தூங்குவது, லக்ஷ்மி வெடி வெடிப்பது எல்லாம் அருமையான கதையாக உருவாகிறது.
அவர் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் வருஷாவருஷம் கஷ்டப்பட்டு ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்துவார். அங்கே நான் சுஜாதா புத்தகங்களைத்தான் தேடிப் போனேன். ஆனால் என்னென்னவோ வாங்கினேன். அப்புறம் கண்காட்சி நடத்துகிறாரே, இவர் புத்தகம் ஒன்றாவது வாங்க வேண்டுமோ என்று கொஞ்சம் சலித்துக் கொண்டேதான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதுவும் சுஜாதா முன்னுரை எழுதி இருக்கிறாரே, மோசமாக இருக்காது என்று ஒரு கணிப்பு. ஆனால் முதல் ஒன்றிரண்டு கதைகளைப் படித்த பிறகு இந்த அழுவாச்சி கதைகளை எல்லாம் எவன் படிப்பான் என்று பரணில் தூக்கிப் போட்டுவிட்டேன். ஓரளவு வயதான பிறகு, முதிர்ச்சி வந்த பிறகுதான் இதெல்லாம் எவ்வளவு உன்னதமான எழுத்து என்று புரிந்தது. சுஜாதாவின் முன்னுரை புரியவும் செய்தது, எங்கெல்லாம் சுஜாதாவின் கருத்திலிருந்து என் கருத்துகள் வேறுபடுகின்றன என்பதும் தெரிந்தது. வாசகனாக எனக்கு ஓரளவு தேர்ச்சி வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டேன்.
சமீபத்தில் அவர் அந்த முன்னுரையின் ஒரு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிந்திருந்தார். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.
சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: (ஒரு பகுதி)
சுப்ரபாரதிமணியனின் “அப்பா” : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது
சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில்தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள் நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன, தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப் போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள்.
இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள். பலர் சொந்தமாகவே கைக்காசை செலவழித்து அழகான புத்தக வடிவில் வெளிவருகிறார்கள். இந்த வகையில் தமிழில் வருஷத்துக்கு நாம் முன் சொன்ன கிழச்சிங்கங்களின் கவலையை மதிக்காது பத்துப் பன்னிரண்டு நல்ல கதைகள் தேறுகின்றன.
இவ்வாறு நல்ல கதைகள் எழுதும் இவர்கள் பெரும்பாலோர் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் இன்னமும் கவிதையும் எழுதுகிறார்கள் (சிலர் அதே பெயரில் சிலர் புனை பெயரில்) சிலர் சித்திரங்கள் வரைகிறார்கள். சிலர் வண்ண ஓவியங்கள். இப்படி இவர்கள் தத்தம் உள்ளங்களை வெளிப்படுத்த அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வகையில் சுப்ரபாரதிமணியனும் கவிதைகளும் கதைகளும் எழுதுகிறார். இந்த இரட்டை வேடத்தில் சிரமங்களும் சௌகரியங்களும் இருக்கின்றன. கவிதை மனமும் ஒரு கவிஞனின் உன்னிப்பான பார்வையும் சிறுகதைக்கு மிகவும் உதவும். அதே சமயம் சிறுகதை வடிவமும் கவிதை வடிவமும் வேறு வேறு. அதனால் சிறுகதையல்லாததையெல்லாம் சிறுகதை என்று ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய அபாயங்கள் கவிஞர்கள் எழுதும் சிறுகதைகளுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
நான் மேலே சொன்ன இரண்டு வகைக்கும் சுப்ரபாரதிமணியனின் இந்த தொகுப்பிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குமுன் சிறுகதை பற்றிய செய்திகள்:
சிறுகதைக்கு மேற்கத்திய இலக்கியத்தில் முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணம் எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டன. இனிமேல் புதுசாக சாத்தியக் கூறுகளை ஆராயவேண்டுமெனில் விஞ்ஞான கதைகளில்தான் முடியும் என்று ஒரு சித்தாந்தம் உண்டு.
தலையணை நாவல்கள் லட்சக்கணக்கில் விற்க சிறுகதைத் தொகுதிகள் மேலைநாட்டில் விற்காததற்கு காரணம் என்னவென்று அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை. இருப்பினும் சிறுகதை இலக்கியம் மறுகிக் கொண்டிருப்பது நிஜமே. தமிழில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. தமிழ் வார மாதப் பத்திரிகைகளில் பெரும் அளவு சிறுகதைகளைப் பதிப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (அவைகளின் தரம் பற்றி நாம் இப்போது பேசவில்லை.) எண்ணிக்கையில் தமிழில் இப்போது சிறுகதைகள் நிறையவே எழுதப்படுகின்றன. ஆனால் நாவல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளிவரும் அளவுக்கு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவருவதில்லை. இதற்கு காரணம் பதிப்பாளர்கள் சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகம் விலை போவதில்லை என்கிறார்கள். இரண்டு பாகம் மூன்று பாகம் என்று ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட உறையூர் ஒற்றர்களைக் கொண்ட சரித்திர நாவல்களை எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பவர்கள் சிறுகதைத் தொகுப்புக்களுக்கு ஆதரவு தராதது தமிழ் நாட்டின் எத்தனையோ சோகங்களில் ஒன்று.
இதனால் மனசிழந்த நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் கவிதைக்குத் தாவி விட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. நம்பிக்கை இழக்காமல் சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் விடாப்பிடியாக சிறுகதை எழுதிக்கொண்டிருப்பதை உற்சாகப்படுத்த வேண்டும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம், சுஜாதா பக்கம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...