தமிழறிஞர் வரிசை: 12. ரா. ராகவையங்கார்

ரா. ராகவையங்காரின் முக்கிய பங்களிப்பு அகநானூறு (1901, 1920), தொல்காப்பியம்-செய்யுளியல், முத்தொள்ளாயிரம், இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை ஆகியவற்றைப் புத்தகமாகப் பதித்தது என்று தெரிகிறது. குறுந்தொகை, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றிற்கு உரை எழுதி இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சேதுபதி சமஸ்தானம், நான்காம் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதிய அறிமுகம் கிளப்பிய ஆர்வத்தால் இணையத்தில் அவரது புத்தகங்கள் ஏதாவது கிடைக்கின்றனவா என்று தேடினேன். அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன, அதனால் தமிழ் இணைய நூலகத்தில் அவர் எழுதிய சில புத்தகங்கள் கிடைக்கின்றன. கொஞ்சம் பண்டித நடை. என்னால் நுனிப்புல் மேயத்தான் முடிந்தது, இந்தப் புத்தகங்களுக்குத் தேவையான உழைப்பைத் தர முடியவில்லை.

அறுபதுகள் வரை பழந்தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பலர் உருவானதற்கு இவரும் ஒரு காரணி ஆக இருந்திருக்கிறார். அ.ச. ஞானசம்பந்தன் தன் நினைவுக் குறிப்புகளில் ராகவையங்கார் பாடம் நடத்தினால்தான் தமிழிலக்கியம் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததையும் அதை ஐயங்கார் ஏற்றதையும் குறிப்பிடுகிறார்.


raa. raghavaiyangarரா. ராகவையங்கார் பிறப்பு: 20- 09- 1870, மறைவு: 11-7- 1946

பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை துவக்கியபோது அவருடன் அக்காரியத்தில் இயைந்து தமிழ்த் தொண்டு நிமித்தம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டிஅவற்றை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் நம் ராகவையங்கார். அது மட்டுமல்லாமல் காளிதாசனின் சாகுந்தலத்தையும், வால்மீகியின் ராமாயணத்தையும் நம் தமிழுக்குத் தந்தவர்.

தமிழ்த் தொண்டிற்கு பேர் போன இரண்டு ராகவையங்காரில் மூத்தவர். இன்னொருவரான மு. ராகவையங்கார் வேறு யாருமில்லை இவரது மருமகன்தான்.

சிவகங்கை சீமையின் தென்வராயன் புதுக்கோடையில் பிறந்தவர் தந்தை ராமானுஜ ஐயங்கார், தாயார் பத்மாசனி. தாய்மாமன் முத்துசாமி ஐயங்காரால் வளர்க்கப்பட்டவர். அவரது தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும்தான் ராகவையங்காரிடம் ஒட்டிக்கொண்டது. உடன் வடமொழியிலும் அவரிடமே புலமை பெற்றார். பின் மெட்ரிகுலேஷன் வரை பயின்று ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.

ராமநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க ராஜ ராஜேஸ்வர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோரிடம் அரசவைப் புலவராக சில காலம் பணி புரிந்தார். இக்காலத்தில் இவரது தமிழ்ப் புலமை சமஸ்தானம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது.

இச்சமயத்தில்தான் பாண்டித்துரைத் தேவர் இவரை தன் நான்காம் தமிழ் சங்கத்திற்கு பணிபுரியுமாறு அழைப்பு விடுக்க அங்கிருந்துகொண்டு செந்தமிழ் எனும் இதழை துவக்கி ஆசிரிய பொறுப்பேற்று அதில் எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிதள்ளினார். இதனை கேள்வியுற்ற ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் இவரை தனது அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு தமிழ்த் துறையில் விரிவுரையாளராக பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார். அப்பணியில் சேர்ந்தவுடன் அவர்களை பதிப்புத் துறைக்கு ஆர்வம் பெற வைத்து அதற்கு தானே தலைவர் பொறுப்பையும் ஏற்றார். அதன் முதல் வெளியீடாக கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரி மன்னின் கதையை செய்யுளாக இயற்றி பாரிகாதை எனும் நூலையும் எழுதினார். தொடர்ந்து சங்கப் பெண் கவிஞர்களை பற்றி நல்லிசை புலமை மெல்லியலார்கள் எனும் தலைப்பில் அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டார். குறுந்தொகை, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றிற்கு விளக்க உரையும் இவர் தீட்டியுள்ளார்.

இவற்றோடு இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை, முத்தொள்ளாயிரம் மற்றும் இன்னும் சில அரிய பைந்தமிழ் ஏடுகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை நூலாக பதிப்பித்துள்ளார். உ.வே.சா.வால் மகாவித்வான் என அழைக்கப்பட்ட ஒரே புலவர் ராகவையங்கார் என்பது ஒன்றே போதும் அவரது தமிழ்ப் புலமைக்கு தரச் சான்று கூற.

விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு பாண்டித்துரைத் தேவர் அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்