சார்வாகன் அஞ்சலி

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

என்று ஒரு அற்புதமான திருமூலர் கவிதை உண்டு. charvakanசார்வாகன் அந்தக் கவிதையின் முதல் இரண்டு வரியை எடுத்து யானையின் சாவு என்ற ஒரு நல்ல கதையாக எழுதி இருக்கிறார். சிறுகதை விட்டல்ராவ் தொகுத்த ‘இந்த நூற்றாண்டு சிறுகதைகள்‘ தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. நல்ல சிறுகதை, என்றாலும் என் anthology-இல் வராது. இருந்தாலும் அந்த சிறுகதையின் தாக்கத்தினால்தான் இந்த அஞ்சலியை எழுதுகிறேன். என் துரதிருஷ்டம், அந்த ஒரு சிறுகதையை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அழியாச்சுடர்கள் தளத்தில் அவரது சில சிறுகதைகள் கிடைக்கின்றன. யானையின் சாவு அளவுக்கு இல்லை என்றாலும் படிக்கலாம். படித்த இரண்டு மூன்று கதைகளை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாது – ஆனால் கனவுக்கதை, யானையின் சாவு, கடைத்தேறினவன் காதல் எல்லாம் ஒரு கருத்தை – மரத்தை மறைத்தது மாமது யானை, mob mentality, மாயாவாதம் – விளக்குவதற்காகவே எழுதப்பட்ட கதைகள் போலத் தெரிகின்றன. உத்தியோக ரேகை வேறு மாதிரி இருக்கிறது, அதில் பையனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று வருந்தும் அப்பாவின் சித்திரம் பிரமாதமாக வந்திருக்கிறது. எதுக்கு சொல்றேன்னா ஷிர்லி ஜாக்சனின் கதைகளை நினைவுபடுத்துகிறது. மொத்தத்தில் இன்னும் எழுதி இருக்கக் கூடாதா என்று நினைக்க வைக்கிறேன்.

‘யானையின் சாவு’ சிறுகதை ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகிறது. கனவுக்கதை சிறுகதை எஸ்ராவின் நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகிறது. கனவுக்கதை பற்றி பாவண்ணன் இங்கே அலசுகிறார்.

சாரு நிவேதிதா தினமணி பத்திரிகையில் பழுப்பு நிற பக்கங்கள் என்று ஒரு பத்தி எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் பல மாதங்களாக எழுதிக் கொண்டிருந்தாலும் நான் சமீபத்தில்தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் சார்வாகனைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. அந்தக் கட்டுரைக்கு சுட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அஞ்சலி எழுத வேண்டி இருக்கிறது. சாருவே ஒரு நல்ல அஞ்சலியை எழுதி இருக்கிறார்.

சார்வாகனுக்கு எழுத்தாளர் என்ற அடையாளத்தை விட தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை குணப்படுத்தும் உத்திகளைக் கண்டுபிடித்த மருத்துவர் என்ற அடையாளம்தான் பெரிதாம். அதற்காக பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

எழுத்தாளனுக்கு அஞ்சலி என்றால் அது அவன் எழுதியதைப் பற்றிப் பேசுவதுதான். ஆனால் ஒரே ஒரு கதையைப் படித்துவிட்டு என்ன பெரிதாக எழுத முடியும்? நற்றிணை பதிப்பகம் அவரது எழுத்துக்களை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறதாம், சென்னை போகும்போது வாங்கிப் படிக்க வேண்டும். என் வரையில் அதுதான் அஞ்சலி.

பிற்சேர்க்கை: யானையின் சாவு சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே படிக்கலாம். பிரபஞ்சன் எழுதிய அஞ்சலியை இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்