சி.ஆர். ரவீந்திரன்

சி.ஆர். ரவீந்திரனைப் பற்றி நான் கேள்விப்பட்டது ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியல் (பல்வேறு வகையில் முக்கியமான, ஆனால் முழுமையான கலை வெற்றி கூடாத படைப்புகள்) வழியாகத்தான். ரவீந்திரனின் “ஈரம் கசிந்த நிலம்” இடம் பெறுகிறது. அவரது பட்டியலில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. சில சமயம் அவரது தேர்வுகள் ஏமாற்றம் அளிக்கின்றன. அந்த மாதிரி சமயங்களில் இதுவும் ஒன்று.

குத்தகைக்காரர்களுக்கே நிலம் என்று அரசு சட்டம் வந்தபோது கிராமங்களில் நில உரிமையாளர்களிடமிருந்த அதிகாரம் குத்தகைக்காரர்களுக்கு மாறியது. ஈரம் கசிந்த நிலத்தில் அந்தக் காலகட்டத்தை ரவீந்திரன் விவரிக்கிறார். நம்பகத்தன்மை உள்ள சித்தரிப்புதான், இருந்தாலும் எனக்கு அவ்வளவாக சுவாரசியப்படவில்லை. இத்தனைக்கும் எனக்கே இதைப் பற்றி கொஞ்சம் நேரடி அனுபவம் உண்டு. என் தாத்தா வயதான காலத்தில் நிலத்தை தானே பார்த்துக் கொள்ள முடியாமல் நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். போயே போச்சு. அந்த குத்தகைக்காரர் எப்போதாவது கண்ணில் தென்பட்டால் வணக்கம் சொல்வார், இரண்டு மூன்று வருஷத்துக்கு ஒரு முறை ஒரு பலாப்பழம் தருவார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் என் தாத்தாவுக்கு உஷ்ணப் பெருமூச்சுதான். அப்படி நேரடி அனுபவம் இருந்தாலும் இந்தப் புத்தகத்தில் ஒன்ற முடியவில்லை.

ஜெயமோகனிடமே இதன் முக்கியத்துவம் என்ன என்று கேட்டேன். நேர்மையான விவசாய சித்தரிப்பு, அந்த வகைப் புத்தகங்களுக்கு இது ஒரு பிரதிநிதி என்றார். எனக்கு நாகம்மாள்தான் அதற்கு சரியான பிரதிநிதி. இதில் பாத்திரப் படைப்பு எல்லாம் அரைகுறையாக இருக்கிறது. இந்தக் கதையை ஒரு கூட்டத்தின் கை உயர்ந்து இன்னொரு கூட்டத்தின் கை தாழும் எந்த சூழலிலும் எழுதலாம். நிலம் சார்ந்த சமூகத்தில் அரசு வேலைக்குப் போய் சம்பாதித்து உயர்பவர்கள், கிருஸ்துவர்களாக மாறி படிப்பும் வேலையும் பெற்ற “கீழ்” ஜாதியினர் என்று எதிலும் பொருந்தும். பாத்திரங்கள் அந்த நிலத்தில்/தளத்தில் அவ்வளவு ஆழமாக பதியவில்லை. விவசாயம் கிவசாயம் எல்லாம் பெரிய விஷயமில்லை.

ரவீந்திரனின் வேறு இரண்டு புத்தகங்கள் – ஓடைப்புல் மற்றும் காற்றே! கனலே! இதை விட உண்மையான சித்தரிப்பு உடையவை.

வானம் பார்த்த வனம், ரிவோல்ட் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் படித்தேன். எந்தக் கதையும் என்னைக் கவரவில்லை.

ஈரம் கசிந்த நிலம் எனக்கு நிறைவளிக்காவிட்டாலும் ரவீந்திரன் குறிப்பிட வேண்டிய எழுத்தாளர் என்றே கருதுகிறேன். என் கண்ணில் ஓடைப்புல் மற்றும் காற்றே! கனலே! ஆகிய புத்தகங்கள் ஜெயமோகன் பரிந்துரைக்கும் ஈரம் கசிந்த நிலத்தை விட சிறந்தவை. ஆர். ஷண்முகசுந்தரம் (நாகம்மாள்), பெருமாள் முருகன், வா.மு. கோமு என்று தொடரும் எழுத்தாளர் பரம்பரையில் அவருக்கும் ஒரு முக்கிய இடமுண்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்