“இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்” எழுதிய பெங்களூர் ரவிச்சந்திரன்

இருபது இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னால் – சுஜாதாவின் லாண்டரி கணக்கு வழக்கைக் கூட பத்திரிகைகள் பிரசுரிக்க தயாராக இருந்த காலம். அதையும் படிக்க தயாராக இருந்தவர்களில் நானும் ஒருவன்.

செகந்தராபாதில் ஒரு புத்தகக் கண்காட்சியில் நான் சுப்ரபாரதிமணியனை முதல் முறையாக சந்தித்தேன். அவர் பேச்சுவாக்கில் பெங்களூர் ரவிச்சந்திரன் என்பவரின் நடை உங்களுக்கு சுஜாதாவை நினைவுபடுத்தலாம் என்று சொன்னார். அப்போது வாங்கிய புத்தகம்தான் இந்த இந்திரா காந்தியின் இரண்டாவது முகம். எனக்குத் தெரிந்து இந்த ஒரு புத்தகம் மட்டுமே எழுதி இருக்கிறார். ஆர்.பி. ராஜநாயஹம் மேலும் சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன என்று தகவல் தருகிறார். இறந்துவிட்டாராம்.

ம.வே. சிவகுமாரின் அஞ்சலியில் நண்பர் ராஜன் ரவிச்சந்திரனைக் குறிப்பிட்டிருந்தார். அப்போது இவரது நினைவு வந்தது.

உண்மை, ரவிச்சந்திரனின் நடை கொஞ்சம் சுஜாதாவை நினைவுபடுத்தியது. எப்படி சொல்வது, “யூத்” நடை. கொஞ்சம் துள்ளலும் ஆர்ப்பாட்டமும் வேகமும் கலந்த நடை. சில வருஷங்களுக்கு முன்னால் மீண்டும் படிக்கும்போது அந்த நடை ஒன்றுதான் நின்றது. அன்றைய குமுதம் விகடன் சிறுகதைகளோடு ஒப்பிட்டால் இவை அடுத்த தலைமுறைக்கான வணிகச் சிறுகதைகள் என்று சொல்வேன். எந்தச் சிறுகதையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லைதான். இருந்தாலும் தொகுப்பு ஒரு நல்ல ambience-ஐக் கொடுக்கிறது.

ஒன்றுமில்லாத சம்பவத்தை எல்லாம் உரக்க எழுத்தி இருப்பார். ஆனால் டக்கென்று தெரியாது. எல்லா கதைகளிலும் நாயகன் இளைஞன். கொஞ்சம் அறிவுஜீவி, விஷயம் தெரிந்தவன். கொஞ்சம் தீசத்தனம் உள்ளவன். அடிதடிக்கு அஞ்சாதவன். பெண்களைக் கவர்பவன்.

இன்று கையில் புத்தகம் இல்லை. (யாருப்பா அதை தள்ளிக் கொண்டு போனது?) அவரை நினைவு கூர்பவர்கள் யாராவது இருந்தால் என்னோடு சேர்த்து சிறுகதைகளைப் பற்றி ஓரிரு வரிகளாவது எழுதுங்கள்!

இணையத்தில் சுரேஷ் கண்ணன் புண்ணியத்தில் ஒரு சுமாரான சிறுகதை கிடைக்கிறது.

எனக்கு இன்னும் நினைவிருக்கும் சிறுகதைகளைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே.

தலைப்புச் சிறுகதை ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்‘. எண்பதுகளின் ஆரம்பத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு வேல் திருடு போய்விட்டது, கணக்கு பார்க்கப் போன அறநிலையத் துறை அலுவலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்று பரபரப்பாக இருந்தது. இன்று வரை கொலையாளி யார், வேல் எங்கே போனது என்று தெரியாது. இந்த சம்பவத்தை பின்புலமாக வைத்து ஒரு கதை; இறந்தவரின் மனைவி சாப்பாட்டுக்கே அல்லாடும் நிலை. கடைசி முயற்சியாக டெல்லிக்குப் போய் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்கிறார். இந்திரா காந்தி ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறார்.

வெல்லிங்டன் என்று ஒரு சிறுகதையில் நண்பன் ராணுவத்தில் சேரச் செல்கிறான், துணைக்கு கதையின் நாயகனும். இவன் கொஞ்சம் அறிவுஜீவி, இம்ப்ரஸ் ஆகும் ராணுவ அதிகாரி நீ ராணுவத்தில் சேர் என்கிறார்.

தி.ஜா.வை நினைவுபடுத்தும் ஒரு சிறுகதை. தி.ஜா. பைத்தியமான ஒரு எழுத்தாளன் தஞ்சாவூர் பக்கம் தி.ஜா.வின் பின்புலத்தை உணரப் பார்க்கிறான். அங்கே ஒரு மணமான பெண்ணோடு உறவு. கதை பேர் நினைவில்லை.

பதின்ம வயது அவனும் அவளும் ஒருவரை ஒருவர் நோக்க, பெற்றோர் அளவில் பெரிய சண்டை. சண்டை நெருப்பு அணைந்து கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்குகிறார்கள்.

ஊருக்குப் போன மனைவி சொன்ன நாளில் திரும்பி வரவில்லை என்று மனைவியை அடித்தே விடுகிறான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல மனைவி கை ஓங்குகிறது.

தனிக்குடித்தனம் போக விரும்பும் மனைவியை அடக்கும் கணவன் என்று ஒரு கதை.

எனக்குப் பிடித்த கதை கடைசிக் கதை. தீசத்தனம் நிறைந்த தம்பி அக்காவை சைட்டடிக்கும் பையனின் குடும்பத்தில் தனக்குத் தெரிந்த பயில்வானின் உதவி கொண்டு அடிதடிக்கிறான்.

உங்கள் யாருக்காவது நினைவிருந்தால் கட்டாயம் மறுமொழி எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: ஆர்.பி. ராஜநாயஹம் ரவிச்சந்திரனை நினைவு கூர்கிறார்.