புனிதன் II – ரா.கி.ரங்கராஜனின் அஞ்சலி

புனிதன் மறைந்தபோது ரா.கி.ர. எழுதிய அஞ்சலி.

என் ஐம்பதாண்டுக் கால நண்பரான புனிதன் என்ற சண்முகசுந்தரம் திடீரெனக் காலமாகி விட்டார்.

punithanஅயனாவரத்தில், அவருடைய பிள்ளையின் வீட்டில், இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முன்பின் தெரியாத ஓர் இளைஞர் என்னிடம் வந்து, தாழ்ந்த குரலில், ‘நேற்றும் ஆஸ்பத்திரியில் உங்களை கவனித்தேன். இன்றைக்கும் இங்கே வெகு நேரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய நெருங்கிய உறவினர்கள் கூட இப்படிக் குமுறிக் குமுறி, நினைத்து நினைத்து அழவில்லை. நீங்கள்தான் இப்படி அழுகிறீர்கள்’ என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? ‘ரொம்ப சிநேகிதம்’ என்று சொன்னேன். சிநேகிதம் என்று சொன்னாலும் சரி, ‘ரொம்ப’ என்று சேர்த்துச் சொன்னாலும் சரி, என் கனத்த இதயத்தின் நனைந்த நினைவுகளை அந்த உயிரற்ற சொற்களில் அடைத்து விட முடியாது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், நான் மூவரும் சற்று முன் பின்னாகக் குமுதத்தில் சேர்ந்தோம். பக்கத்துப் பக்கத்து மேஜைகளில் குப்பை கொட்டினோம். எனக்குப் பதவி உயர்வு (!) ஏற்பட்டபோது, என் மேஜையை சிறிது விலக்கிப் போட்டுக் கொண்டேனே தவிர வேறு அறைக்கோ வேறு இடத்துக்கோ போகவில்லை. எங்கள் மூவருக்குமாக சேர்த்து ஒரே ஒரு மின்சார விசிறிதான் சுழலும். பல நேரங்களில் நாங்கள் ஹோ ஹோவென்று சிரித்துக் கும்மாளம் போடும்போது, அடுத்த அறையில் இருக்கும் பதிப்பாளர் பார்த்தசாரதி வந்து, ‘நாங்கள் வேலை பார்க்கணும் சார்! இப்படி சத்தம் போட்டால் எப்படி?’ என்று கோபித்துவிட்டு செல்வார்.

அலுவலகம் மட்டுமல்ல, புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் நாங்கள் குடியிருந்த வீடுகளும் அருகருகாக இருந்ததால், எங்கள் குடும்பங்களும் கண்படக் கூடிய அளவுக்கு ஒற்றுமையுடன் வளர்ந்தன. கல்யாணங்கள் நடந்தன. குழந்தைகள் பிறந்தன. வளர்ந்தன. பேரன் பேத்திகள் முளைத்தனர். முதிர்ந்த சருகுகள் விழுந்தன. இளம் தளிர்கள் மலர்ந்தன. எல்லா சந்தர்ப்பங்களிலும் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

பிற்பாடு குவார்ட்டர்ஸ் கிடைத்து சேர்ந்து குடியேறியபோதும் அப்படித்தான். தண்ணீர்ப் பஞ்சம் என்றால் குழாயை சரிபார்க்கும் இஞ்சினீயரையும், குவார்ட்டர்சுக்குப் பொறுப்பானவர்களையும், கிணற்றில் தூர் வாருகிறவர்களையும் சேர்ந்தே போய்ப் பார்த்து மன்றாடுவோம்.

ஒரு பிள்ளையார் கோவில் கட்ட வேண்டுமென்றால் பிள்ளையார் சிலை எங்கே கிடைக்கும் என்று சேர்ந்தே போய்த் தேடுவோம். பிள்ளையார் கிடைத்துப் பிரதிஷ்டை செய்தபின், அன்றாட பூஜையை யார் செய்வது என்று சேர்ந்தே யோசித்து முறை போட்டுக் கொள்வோம்.

குடும்பப் பாசத்தில் புனிதனுக்கு நிகர் புனிதனேதான். நாங்களாவது எங்கள் குழந்தைகளைப் பற்றிக் குறை சொல்வோம். குழந்தைகளுடன் சண்டை போடுவோம். ஒரு தடவைகூடப் புனிதன் தன் குழந்தைகளைக் கண்டித்தது இல்லை. ஒரு சுடுசொல் சொன்னது கிடையாது. அவர்கள் இப்படி முன்னுக்கு வந்திருக்கிறார்களே, இவர்கள் இப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசியோ, பொறாமையுடன் குறிப்பிட்டோ ஒரு நாளும் நான் கேட்டதில்லை.

குறிப்பாக மனைவியிடம் அபாரப் பிரியம். மனைவியை மனைவியாக நினைக்காமல் தன் குழந்தைகளில் ஒன்றாக எண்ணுவார். அவருக்கு இவருடைய மன உறுதி கிடையாது. உள்ளம் நெகிழ்கிற போது கண்ணிலிருந்து நீர் கொட்டி விடும். போன மாதம் ஒரு நாள் நான் அவர் வீட்டுக்கு சென்றிருந்த சமயம் ‘நீங்கள்ளாம் இருக்கிறதாலேதான்…’ என்று கண் கலங்கினார். ‘பார், பார், இப்படித்தாம்ப்பா இவள் எப்பவும்’ என்று சிரித்தவாறு மனைவியை அடக்கினார்.

உல்லாசப் பயணமாகவோ, சுவாமி தரிசனத்துக்காகவோ நாங்கள் வெளியூர்களுக்குப் பல முறைகள் சேர்ந்து சென்றிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட தொகையை அவரிடம் முன் கூட்டிக் கொடுத்து விட வேண்டும். சாப்பாட்டு செலவு, தங்கிய செலவு, ரயில் செலவு முதலியவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு ஊர் திரும்பியதும் கரெக்டாய் மூன்றாக வகுத்து மிச்சமிருந்தால் கொடுத்துவிட்டுக் கணக்கும் காட்டுவார்.

ஒரு முறை காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டுக் காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு வேளை. டிரைவர் அந்தப் பாதைக்குப் பழக்கமில்லாத புதியவர். புனிதன்தான் வழி சொல்லிக் கொண்டு வந்தார். ஓரிடத்தில் சாலைகள் பிரிந்தன. ‘இப்படித் திரும்பி, நேராய்ப் போ’ என்றார் புனிதன். கொஞ்ச தூரம் சென்றதும் எனக்கு சந்தேகம் வந்தது. ‘ஏம்ப்பா சண்முகம், அங்கே நேராய் இல்லே போயிருக்கணும்? இப்படித் திரும்ப சொல்லிட்டியே?’ என்றேன். ‘கம்முனு இரு. எனக்குத் தெரியும்’ என்றார். மேலும் சிறிது தூரம் போனதும் என் சந்தேகம் வலுத்தது. சுந்தரேசனிடம், ‘ஏனய்யா, இவன் பாட்டுக்கு இப்படிப் போகச் சொல்கிறான். நீர் பேசாமல் இருக்கிறீரே?’ என்றேன். ‘அவனுக்குத் தெரியும். பேசாமல் இருங்கள்’ என்று அவரும் என்னை அடக்கிவிட்டார். கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் போனதும் எனக்குப் பொறுக்கவில்லை. அதே திசையில் போய்க் கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர்காரரை நெருங்கும்படி டிரைவரிடம் சொல்லி, ‘இது மெட்ராஸ் போகிற ரோடுதானே?’ என்று அவரிடம் கேட்டேன். ‘இல்லையே, இது பெங்களூர் போகிற ரோடு. எதிர்த்திசையில் போனால்தான் மெட்ராஸ்’ என்று ஸ்கூட்டர்காரர் சொன்னதும், நாங்கள் இருவரும் புனிதனை மொத்து மொத்தென்று முதுகில் சாத்தினோம்.

எழுதுவதற்கு முன்னும் எழுதிய பின்னும் மாற்றும்படியும், திருத்தும்படியும், வெட்டும்படியும், சேர்க்கும்படியும் ஆசிரியர் எஸ்ஏபி சொல்ல, மூவரும் கதைகளுக்காக அவரிடம் வதைபட்டிருக்கிறோம். ஆனால் அதிகம் வதைபட்டவர் புனிதன்தான். சில சந்தர்ப்பங்களில் எஸ்ஏபி அவர் கதையை என்னிடம் தந்து ‘இதை சரி பண்ணுங்கள்’ என்பார். என் பங்குக்கு நானும் வதைத்துப் புனிதனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதுண்டு. ஆனால் மூன்று பேரில் மிகுந்த பொறுமைசாலி அவர்தான்.

அவர் எழுதிய பாதபூஜை ஒரு நல்ல சிறுகதை. நாங்கள் மூவரும் எழுதிய சில நல்ல சிறுகதைகளைத் தனியே எடுத்து, சிறு பைண்டு புத்தகமாகத் தன் மேஜையில் வைத்திருந்தார் எஸ்ஏபி. அவற்றில் ‘பாதபூஜை’யும் ஒன்று.

நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகளை ஒரு பெளராணிகரின் கதா காலட்சேப பாணியில் ‘சுந்தர பாகவதர்’ என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய ஹாஸ்யக் கதைகள் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

மற்றவர்களுக்காக அவர் கஷ்டப்பட்டிருப்பாரே தவிர, மற்றவர்களுக்கு அவர் கஷ்டம் தந்தது கிடையாது. முதல் நாள் எதையோ எடுப்பதற்காக நாற்காலியில் ஏறி நின்று கீழே விழுந்தார். அன்று இரவு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறு நாள் நிலைமை கிரிட்டிகல் என்றார்கள். அதற்கு அடுத்த நாள் காலமாகிவிட்டார். வாரக் கணக்கில் நினைவு நீச்சின்றிப் படுத்த படுக்கையாகக் கிடந்து டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கஷ்டம் தரவில்லை. நாற்பது மணி நேரம்தான் – புண்ணிய தினமான வைகுண்ட ஏகாதசியன்று போய்விட்டார்.

இறந்த பிறகும் கூட யாருக்கும் கஷ்டம் தரவில்லை. வீட்டுக்கு அருகிலேயே மயான பூமி இருந்தது. வெகு தூரம் வெய்யிலில் நடந்து போகும்படியான கஷ்டத்தை யாருக்கும் அவர் தரவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து