ஜெஃப்ரி ஹவுஸ்ஹோல்ட் எழுதிய “Rogue Male”

Rogue Male ஒரு சிம்பிளான, அதே சமயம் விறுவிறுப்பான த்ரில்லர். கதை பூராவும் ஒரே தீம்தான். ஒரு மனிதனைத் தேடுகிறார்கள். ஏறக்குறைய வேட்டையாடப்படுகிறான். அவ்வளவுதான். அந்த தீமிலிருந்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கொஞ்சம் கூட நகருவதில்லை, அதனால்தான் புத்தகம் நன்றாக வந்திருக்கிறது.

1930களில் நடக்கும் கதை. பாஸ்போர்ட், விசா எல்லாம் தேவையில்லாத காலம். ஒரு assassination முயற்சியோடு ஆரம்பிக்கிறது. ஹிட்லரை நினைவுபடுத்தும் ஒரு கதாபாத்திரம். அவனும் ஒரு நாட்டின் அதிபர்தான். பெயரில்லாத நம் நாயகன் ஆங்கிலேயன், வசதியானவன். இந்த அதிபர் வாழவே தகுதி இல்லாதவன் என்று நினைக்கிறான். அவனைக் கொல்ல  முயற்சிக்கிறான், மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு ஆங்கில அரசுக்கும் official ஆக எந்தத் தொடர்பும் இல்லை, இருந்தாலும் போலீஸ் அதிகாரிகள் அவன் ஆங்கில அரசு அனுப்பிய கொலையாளிதான் என்று நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். சித்திரவதை. எப்படியோ தப்பி மீண்டும் இங்கிலாந்துக்கு வந்துவிடுகிறான். இங்கிலாந்தில் அவனைப் பின் தொடரும் ஒரு எதிரி நாட்டு உளவாளியைக் கொன்றுவிடுகிறான். இப்போது இங்கிலாந்து போலீசும் அவனைத் தேடுகிறது. ஹீரோ ஒரு அத்துவானப் பிரதேசத்தில் பூமிக்குள் ஒரு குழி வெட்டிக் கொண்டு மாதக் கணக்கில் பதுங்கி இருக்கிறான். தேடுவதும் பதுங்குவதும்தான் கதை. அதை மிகச் சிறப்பாக சித்தரித்திருக்கிறார்.

த்ரில்லர் விரும்பிகள் Rogue Male புத்தகத்தை நிச்சயமாகப் படிக்கலாம். 1939-இல் வெளிவந்திருக்கிறது. 1941-இல் Manhunt என்று திரைப்படமாகவும் வந்ததாம்.

நாற்பது வருஷத்துக்கு அப்புறம் இதற்கு Rogue Justice என்று ஒரு sequel-ஐயும் ஹவுஸ்ஹோல்ட் எழுதி இருக்கிறார்.

ஹவுஸ்ஹோல்டின் வேறு எந்த நாவலையும் நான் படித்ததில்லை. நீங்கள் படித்திருந்தால் அதைப் பற்றி எழுதுங்கள்!

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெஃப்ரி ஹவுஸ் ஹோல்ட் பற்றிய விக்கி குறிப்பு