காயத்ரி திரைப்படத்தைப் பற்றிய பதிவிலிருந்து தாவித்தாவி சாரதாவின் இந்த சுவாரசியமான பின்னூட்டத்தைப் பார்த்தேன். இப்போது ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். ஓவர் டு சாரதா!
‘காயத்ரி’ நாவல், அப்போது பிரபலமாக இருந்த தினமணிகதிர் என்ற வார இதழில்தான் வெளியானது. வெளியானபோது நான் படிக்கவில்லை, அப்போது பிறந்திருந்திருப்பேனா என்பதும் தெரியாது. ஆனால் அந்நாளில் வெளியான நாவல்களை நான் படிக்க உதவியாக இருந்தது, சென்னை மயிலாப்பூரில் இயங்கிய ஒரு லெண்டிங் லைப்ரரி (காசு கொடுத்துப்படிக்க வேண்டும்… ஒரு புத்தகத்தை இத்தனை நாளைக்குள் திருப்பித் தரவேண்டும்… அதற்குள் படித்துவிட்டுக் கொடுக்காவிட்டால் மறுகட்டணம் என்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு). அந்நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கே வாங்கிப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாவல்கள் அனைத்தும் பதிப்பகங்களில் வெளியான புத்தகங்கள் அல்ல. குமுதம், விகடன், கதிர், கல்கி போன்ற வார இதழ்களில் கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. கதை யோட்டத்துடன் அமைந்த கண்ணைக்கவரும் அழகான படங்களுடன், அடிஷனல் போனஸாக அப்பக்கங்களில் வெளியாகியிருக்கும் துணுக்குகள், ஜோக்குகள் இவைகளுடன். கிழித்து பைண்ட் செய்யப்பட்ட நாவல்களில் இரட்டிப்பு சந்தோஷம் என்னவென்றால்… ஒன்று, வார இதழ்களில் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம். இன்னொன்று, கதையை எங்காவது ரொம்ப சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி “தொடரும்” என்று போட்டுவிடுவார்களோ என்ற பயமின்றி படிக்கலாம்.
இவ்வகையில், பைண்ட் செய்யப்பட’காயத்ரி’ நாவலைப் படித்துவிட்டு, அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது. கதையில் கணேஷ்-வசந்த் இருவரும் காயத்ரியைக் காப்பாற்றி அழைத்து வருவதாக இருந்த முடிவை மாற்றி, படத்தில் காயத்ரி இறந்துபோய் விடுவதுபோல முடித்திருப்பார்கள். ஆக, படம் முழுக்க பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீண் என்பதுபோல தெரியும்.
காயத்ரி திரைப்படத்தில் கணேஷ் ரோலில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், வசந்த் ரோலில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் எல்லாக் கதைகளிலும் கணேஷ் ரோல் கொஞ்சம் சீரியஸானது என்பதும் வசந்த் ரோல் கொஞ்சம் கோமாளித்தனமானது என்பதும் நமக்குத்தெரிந்தது தானே. ஆனால் காயத்ரி நாவலில் முழுவீச்சில் வந்த கணேஷ் ரோலை (வசந்த் ரோலையும்தான்) வெட்டிக்குறைத்து, ஒரு கெஸ்ட் ரோலுக்கும் கொஞ்சம் அதிகமாக சுருக்கி விட்டனர்.
படத்தில் முதலில் அந்த “அக்கா” ரோலுக்கு பிரமீளாவைத்தான் புக் செய்திருந்தார்களாம். இடையில் எப்படி ராஜசுலோச்சனா மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. நல்லதுதான். பிரமீளாவிடம் ராஜசுலோச்சனா வின் அடாவடித்தனத்தை பார்த்திருக்க முடியாது.
படம் பார்த்த நமக்கே இவ்வளவு ஏமாற்றம் எனும்போது, கதையைக் கருவுற்ற சுஜாதாவின் ஏமாற்றம் எப்படியிருக்கும் என்று உணரலாம். ‘காயத்ரி’ ரிலீஸானபோது ‘ப்ரியா’ தயாரிப்பில் இருந்தது. காயத்ரியைப்பார்த்து அதிர்ந்த எழுத்தாளர் சுஜாதா, குமுதம் பேட்டியில், “பஞ்சு (அருணாச்சலம்)கதையைக் கேட்டாரே என்பதற்காகக் கொடுத்தேன். பஞ்சு பஞ்சாக்கிவிட்டார். ப்ரியா என்ன கதியாகப்போகிறாளோ” என்று சொல்லியிருந்தார். அவர் பயந்ததுபோலவே நடந்தது. ஆனால் எஸ்.பி.தமிழரசிக்கு ‘கல்லாப்பெட்டி’ நிறைந்தது (உபயம் ரஜினி + இளையராஜா + சிங்கப்பூர்).
(காயத்ரி நாவலின் கடைசி வரி இன்னும் நினைவிருக்கிறது…..
காயத்ரியை ஏற்றிக்கொண்டு வந்த கார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலைநோக்கி விரைந்தது. காயத்ரி “ஏன் ஓட்டலுக்குப் போறீங்க?. உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேனே. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”. அதற்கு வசந்த், “உங்களுக்கு நம்பிக்கையிருக்கு. ஆனா எங்க மேல எங்களுக்கு நம்பிக்கையில்லே”. கார், ஓட்டல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது).
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், திரைப்படங்கள், விருந்தினர் பதிவுகள்
excellent.innocent review compared to the falsely qualified critics’ version adding their own prejudices in their assessment.
LikeLike