கிழவனின் நினைவாக – லாரி பேக்கர்

laurie_bakerலாரி பேக்கரைப் பற்றி நான் கேள்விப்பட்டது என் நண்பன் ஸ்ரீகுமார் மூலம்தான். நானும் பொறியியல் படித்தவன்தான். ஆனால் பேக்கர் வீடுகளைப் பற்றி கேள்விப்பட்டபோது ‘அட இது நம்ம வாத்தியார்களுக்குத் தெரியவே இல்லையே’ என்று தோன்றியது. அப்போது ஃபுகுவோகா (One Straw Revolution), Appropriate Technology போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் உற்சாகம் தந்தன.

சமீபத்தில் பேக்கர் எழுதிய ஒரு புத்தகம் – Manual of Cost Cuts for Strong Acceptable Housing – கண்ணில் பட்டது. பேரைப் படித்ததுமே படிக்கும் உற்சாகம் போய்விடும். ஆனால் சுவாரசியமான புத்தகம். தலைப்பு மட்டும்தான் போரடிக்கிறது.

அன்றிருந்ததை விட இன்று வீடு கட்டும் பொறியியலோடு தூரம் அதிகம். இருந்தாலும் அவர் சொல்வது இன்னமும் மிகவும் sensible ஆக இருக்கிறது. சென்னையில் வெள்ளத்திற்குப் பிறகு இன்று வீடு கட்டித் தருகிறேன் என்று கிளம்புபவர்கள் இதையெல்லாம் பார்த்தால் நல்லது.

பேக்கர் எழுதிய ஒரு கட்டுரையும் கண்ணில் பட்டது.

சுதந்திரப் போராட்டம், கிராம முன்னேற்றம், ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு, அதே நேரத்தில் அதன் குறைகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை நிவர்த்திக்க முயற்சி, காதி, சபர்மதி ஆசிரமம், முறைத்துக் கொண்ட மகன் இப்படி ஆயிரம் விஷயங்கள் இருந்தும் நடுவில் லாரி பேக்கர், குமரப்பா மாதிரி ஆட்களை உருவாக்கி இருக்கும் அந்தக் கிழவனை மாதிரி இன்னொருவர் வர நூற்றாண்டுகளாகும்.

அப்படியே அர்விந்த் குப்தாவைப் பற்றியும் ஒரு வார்த்தை. முப்பது வருஷங்களுக்கும் மேலாக மலிவு விலையில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். பலவும் pirated-தான். ஆனால் அவர் மூலம்தான் டோட்டோசான், One Straw Revolution என்று பல புத்தகங்களைப் படித்தேன். இணையம் இல்லாத காலத்தில் இவையெல்லாம் இந்தியாவில் சுலபமாகக் கிடைத்துவிடாது. சிறுவர்களுக்காக பல அறிவியல் சோதனைகள், புத்தகங்களை இன்று இவரது தளத்தில் காணலாம். கட்டாயம் தளத்தைப் போய்ப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்