சுஜாதா ரசித்த அசோகமித்ரன் சிறுகதைகள்

asokamithran1978-இல் படிகள் என்ற சிற்றிதழுக்காக சுஜாதா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பேட்டியில் அசோகமித்ரனைப் பற்றி ஒரு கேள்வி.
படிகள்: அசோகமித்திரனின் எந்தக் கதைகளை ரொம்ப ரசிக்கிறீர்கள்?

சுஜாதா: உதாரணமாக ‘வழி‘ ஒரு கதை. இன்னொன்று புலிக்கலைஞன், எலி, விமோசனம், நிறைய கதைகள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், அசோகமித்ரன் பக்கம்

ஜெஃப்ரி ஹவுஸ்ஹோல்ட் எழுதிய “Rogue Male”

Rogue Male ஒரு சிம்பிளான, அதே சமயம் விறுவிறுப்பான த்ரில்லர். கதை பூராவும் ஒரே தீம்தான். ஒரு மனிதனைத் தேடுகிறார்கள். ஏறக்குறைய வேட்டையாடப்படுகிறான். அவ்வளவுதான். அந்த தீமிலிருந்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கொஞ்சம் கூட நகருவதில்லை, அதனால்தான் புத்தகம் நன்றாக வந்திருக்கிறது.

1930களில் நடக்கும் கதை. பாஸ்போர்ட், விசா எல்லாம் தேவையில்லாத காலம். ஒரு assassination முயற்சியோடு ஆரம்பிக்கிறது. ஹிட்லரை நினைவுபடுத்தும் ஒரு கதாபாத்திரம். அவனும் ஒரு நாட்டின் அதிபர்தான். பெயரில்லாத நம் நாயகன் ஆங்கிலேயன், வசதியானவன். இந்த அதிபர் வாழவே தகுதி இல்லாதவன் என்று நினைக்கிறான். அவனைக் கொல்ல  முயற்சிக்கிறான், மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு ஆங்கில அரசுக்கும் official ஆக எந்தத் தொடர்பும் இல்லை, இருந்தாலும் போலீஸ் அதிகாரிகள் அவன் ஆங்கில அரசு அனுப்பிய கொலையாளிதான் என்று நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். சித்திரவதை. எப்படியோ தப்பி மீண்டும் இங்கிலாந்துக்கு வந்துவிடுகிறான். இங்கிலாந்தில் அவனைப் பின் தொடரும் ஒரு எதிரி நாட்டு உளவாளியைக் கொன்றுவிடுகிறான். இப்போது இங்கிலாந்து போலீசும் அவனைத் தேடுகிறது. ஹீரோ ஒரு அத்துவானப் பிரதேசத்தில் பூமிக்குள் ஒரு குழி வெட்டிக் கொண்டு மாதக் கணக்கில் பதுங்கி இருக்கிறான். தேடுவதும் பதுங்குவதும்தான் கதை. அதை மிகச் சிறப்பாக சித்தரித்திருக்கிறார்.

த்ரில்லர் விரும்பிகள் Rogue Male புத்தகத்தை நிச்சயமாகப் படிக்கலாம். 1939-இல் வெளிவந்திருக்கிறது. 1941-இல் Manhunt என்று திரைப்படமாகவும் வந்ததாம்.

நாற்பது வருஷத்துக்கு அப்புறம் இதற்கு Rogue Justice என்று ஒரு sequel-ஐயும் ஹவுஸ்ஹோல்ட் எழுதி இருக்கிறார்.

ஹவுஸ்ஹோல்டின் வேறு எந்த நாவலையும் நான் படித்ததில்லை. நீங்கள் படித்திருந்தால் அதைப் பற்றி எழுதுங்கள்!

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெஃப்ரி ஹவுஸ் ஹோல்ட் பற்றிய விக்கி குறிப்பு

புனிதன் II – ரா.கி.ரங்கராஜனின் அஞ்சலி

புனிதன் மறைந்தபோது ரா.கி.ர. எழுதிய அஞ்சலி.

என் ஐம்பதாண்டுக் கால நண்பரான புனிதன் என்ற சண்முகசுந்தரம் திடீரெனக் காலமாகி விட்டார்.

punithanஅயனாவரத்தில், அவருடைய பிள்ளையின் வீட்டில், இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முன்பின் தெரியாத ஓர் இளைஞர் என்னிடம் வந்து, தாழ்ந்த குரலில், ‘நேற்றும் ஆஸ்பத்திரியில் உங்களை கவனித்தேன். இன்றைக்கும் இங்கே வெகு நேரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய நெருங்கிய உறவினர்கள் கூட இப்படிக் குமுறிக் குமுறி, நினைத்து நினைத்து அழவில்லை. நீங்கள்தான் இப்படி அழுகிறீர்கள்’ என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? ‘ரொம்ப சிநேகிதம்’ என்று சொன்னேன். சிநேகிதம் என்று சொன்னாலும் சரி, ‘ரொம்ப’ என்று சேர்த்துச் சொன்னாலும் சரி, என் கனத்த இதயத்தின் நனைந்த நினைவுகளை அந்த உயிரற்ற சொற்களில் அடைத்து விட முடியாது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், நான் மூவரும் சற்று முன் பின்னாகக் குமுதத்தில் சேர்ந்தோம். பக்கத்துப் பக்கத்து மேஜைகளில் குப்பை கொட்டினோம். எனக்குப் பதவி உயர்வு (!) ஏற்பட்டபோது, என் மேஜையை சிறிது விலக்கிப் போட்டுக் கொண்டேனே தவிர வேறு அறைக்கோ வேறு இடத்துக்கோ போகவில்லை. எங்கள் மூவருக்குமாக சேர்த்து ஒரே ஒரு மின்சார விசிறிதான் சுழலும். பல நேரங்களில் நாங்கள் ஹோ ஹோவென்று சிரித்துக் கும்மாளம் போடும்போது, அடுத்த அறையில் இருக்கும் பதிப்பாளர் பார்த்தசாரதி வந்து, ‘நாங்கள் வேலை பார்க்கணும் சார்! இப்படி சத்தம் போட்டால் எப்படி?’ என்று கோபித்துவிட்டு செல்வார்.

அலுவலகம் மட்டுமல்ல, புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் நாங்கள் குடியிருந்த வீடுகளும் அருகருகாக இருந்ததால், எங்கள் குடும்பங்களும் கண்படக் கூடிய அளவுக்கு ஒற்றுமையுடன் வளர்ந்தன. கல்யாணங்கள் நடந்தன. குழந்தைகள் பிறந்தன. வளர்ந்தன. பேரன் பேத்திகள் முளைத்தனர். முதிர்ந்த சருகுகள் விழுந்தன. இளம் தளிர்கள் மலர்ந்தன. எல்லா சந்தர்ப்பங்களிலும் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

பிற்பாடு குவார்ட்டர்ஸ் கிடைத்து சேர்ந்து குடியேறியபோதும் அப்படித்தான். தண்ணீர்ப் பஞ்சம் என்றால் குழாயை சரிபார்க்கும் இஞ்சினீயரையும், குவார்ட்டர்சுக்குப் பொறுப்பானவர்களையும், கிணற்றில் தூர் வாருகிறவர்களையும் சேர்ந்தே போய்ப் பார்த்து மன்றாடுவோம்.

ஒரு பிள்ளையார் கோவில் கட்ட வேண்டுமென்றால் பிள்ளையார் சிலை எங்கே கிடைக்கும் என்று சேர்ந்தே போய்த் தேடுவோம். பிள்ளையார் கிடைத்துப் பிரதிஷ்டை செய்தபின், அன்றாட பூஜையை யார் செய்வது என்று சேர்ந்தே யோசித்து முறை போட்டுக் கொள்வோம்.

குடும்பப் பாசத்தில் புனிதனுக்கு நிகர் புனிதனேதான். நாங்களாவது எங்கள் குழந்தைகளைப் பற்றிக் குறை சொல்வோம். குழந்தைகளுடன் சண்டை போடுவோம். ஒரு தடவைகூடப் புனிதன் தன் குழந்தைகளைக் கண்டித்தது இல்லை. ஒரு சுடுசொல் சொன்னது கிடையாது. அவர்கள் இப்படி முன்னுக்கு வந்திருக்கிறார்களே, இவர்கள் இப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசியோ, பொறாமையுடன் குறிப்பிட்டோ ஒரு நாளும் நான் கேட்டதில்லை.

குறிப்பாக மனைவியிடம் அபாரப் பிரியம். மனைவியை மனைவியாக நினைக்காமல் தன் குழந்தைகளில் ஒன்றாக எண்ணுவார். அவருக்கு இவருடைய மன உறுதி கிடையாது. உள்ளம் நெகிழ்கிற போது கண்ணிலிருந்து நீர் கொட்டி விடும். போன மாதம் ஒரு நாள் நான் அவர் வீட்டுக்கு சென்றிருந்த சமயம் ‘நீங்கள்ளாம் இருக்கிறதாலேதான்…’ என்று கண் கலங்கினார். ‘பார், பார், இப்படித்தாம்ப்பா இவள் எப்பவும்’ என்று சிரித்தவாறு மனைவியை அடக்கினார்.

உல்லாசப் பயணமாகவோ, சுவாமி தரிசனத்துக்காகவோ நாங்கள் வெளியூர்களுக்குப் பல முறைகள் சேர்ந்து சென்றிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட தொகையை அவரிடம் முன் கூட்டிக் கொடுத்து விட வேண்டும். சாப்பாட்டு செலவு, தங்கிய செலவு, ரயில் செலவு முதலியவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு ஊர் திரும்பியதும் கரெக்டாய் மூன்றாக வகுத்து மிச்சமிருந்தால் கொடுத்துவிட்டுக் கணக்கும் காட்டுவார்.

ஒரு முறை காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டுக் காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு வேளை. டிரைவர் அந்தப் பாதைக்குப் பழக்கமில்லாத புதியவர். புனிதன்தான் வழி சொல்லிக் கொண்டு வந்தார். ஓரிடத்தில் சாலைகள் பிரிந்தன. ‘இப்படித் திரும்பி, நேராய்ப் போ’ என்றார் புனிதன். கொஞ்ச தூரம் சென்றதும் எனக்கு சந்தேகம் வந்தது. ‘ஏம்ப்பா சண்முகம், அங்கே நேராய் இல்லே போயிருக்கணும்? இப்படித் திரும்ப சொல்லிட்டியே?’ என்றேன். ‘கம்முனு இரு. எனக்குத் தெரியும்’ என்றார். மேலும் சிறிது தூரம் போனதும் என் சந்தேகம் வலுத்தது. சுந்தரேசனிடம், ‘ஏனய்யா, இவன் பாட்டுக்கு இப்படிப் போகச் சொல்கிறான். நீர் பேசாமல் இருக்கிறீரே?’ என்றேன். ‘அவனுக்குத் தெரியும். பேசாமல் இருங்கள்’ என்று அவரும் என்னை அடக்கிவிட்டார். கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் போனதும் எனக்குப் பொறுக்கவில்லை. அதே திசையில் போய்க் கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர்காரரை நெருங்கும்படி டிரைவரிடம் சொல்லி, ‘இது மெட்ராஸ் போகிற ரோடுதானே?’ என்று அவரிடம் கேட்டேன். ‘இல்லையே, இது பெங்களூர் போகிற ரோடு. எதிர்த்திசையில் போனால்தான் மெட்ராஸ்’ என்று ஸ்கூட்டர்காரர் சொன்னதும், நாங்கள் இருவரும் புனிதனை மொத்து மொத்தென்று முதுகில் சாத்தினோம்.

எழுதுவதற்கு முன்னும் எழுதிய பின்னும் மாற்றும்படியும், திருத்தும்படியும், வெட்டும்படியும், சேர்க்கும்படியும் ஆசிரியர் எஸ்ஏபி சொல்ல, மூவரும் கதைகளுக்காக அவரிடம் வதைபட்டிருக்கிறோம். ஆனால் அதிகம் வதைபட்டவர் புனிதன்தான். சில சந்தர்ப்பங்களில் எஸ்ஏபி அவர் கதையை என்னிடம் தந்து ‘இதை சரி பண்ணுங்கள்’ என்பார். என் பங்குக்கு நானும் வதைத்துப் புனிதனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதுண்டு. ஆனால் மூன்று பேரில் மிகுந்த பொறுமைசாலி அவர்தான்.

அவர் எழுதிய பாதபூஜை ஒரு நல்ல சிறுகதை. நாங்கள் மூவரும் எழுதிய சில நல்ல சிறுகதைகளைத் தனியே எடுத்து, சிறு பைண்டு புத்தகமாகத் தன் மேஜையில் வைத்திருந்தார் எஸ்ஏபி. அவற்றில் ‘பாதபூஜை’யும் ஒன்று.

நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகளை ஒரு பெளராணிகரின் கதா காலட்சேப பாணியில் ‘சுந்தர பாகவதர்’ என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய ஹாஸ்யக் கதைகள் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

மற்றவர்களுக்காக அவர் கஷ்டப்பட்டிருப்பாரே தவிர, மற்றவர்களுக்கு அவர் கஷ்டம் தந்தது கிடையாது. முதல் நாள் எதையோ எடுப்பதற்காக நாற்காலியில் ஏறி நின்று கீழே விழுந்தார். அன்று இரவு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறு நாள் நிலைமை கிரிட்டிகல் என்றார்கள். அதற்கு அடுத்த நாள் காலமாகிவிட்டார். வாரக் கணக்கில் நினைவு நீச்சின்றிப் படுத்த படுக்கையாகக் கிடந்து டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கஷ்டம் தரவில்லை. நாற்பது மணி நேரம்தான் – புண்ணிய தினமான வைகுண்ட ஏகாதசியன்று போய்விட்டார்.

இறந்த பிறகும் கூட யாருக்கும் கஷ்டம் தரவில்லை. வீட்டுக்கு அருகிலேயே மயான பூமி இருந்தது. வெகு தூரம் வெய்யிலில் நடந்து போகும்படியான கஷ்டத்தை யாருக்கும் அவர் தரவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

புனிதன் (சுந்தர பாகவதர்)

punithanஒரு காலத்தில் குமுதத்தைப் படிக்காத தமிழ் மத்தியதரக் குடும்பமே தமிழகத்தில் கிடையாது. புனிதன் குமுதத்தை அப்படி பெருவெற்றி பெறச் செய்த டீமில் முக்கியமான ஒருவர். குமுதம் ஆசிரியர் குழுவினர் வெளியே தெரிவதில்லை. அவர்கள் அனைவரிலும் மிக அடியில் புதைந்து கிடப்பவர் புனிதன். எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ரா. கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் நால்வரில் புனிதனைத்தான் கடைசியாக வைப்பேன். ஒரு வேளை எஸ்ஏபியும் அப்படிதான் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, அனைவரிலும் மிகக் குறைவாக எழுதியவரும் அவர்தான் (என்று நினைக்கிறேன்).

சுந்தர பாகவதர் என்ற பேரில் பிராமண பாஷையில் எழுதுவார். சுந்தர பாகவதர் என்பது ரா.கி. ரங்கராஜனின் புனைபெயர், ஜ.ரா. சுந்தரேசனின் புனைபெயர் என்று கூட தவறான தகவல்கள் இணையத்தில் உலவுகின்றன. அது புனிதனேதான். “அப்புறம் என்ன ஆச்சு?” என்ற சிம்பிளான கதை நினைவு வருகிறது. வக்கீல் பையன்-கிளையன்ட் பெண் காதல். அதை ஒரு கதாகாலட்சேப நடையில் எழுதி இருக்கிறார். அந்த நடை மட்டும்தான் கதையின் ஒரே ப்ளஸ் பாயின்ட்.

தன் பெயரிலேயே எழுதிய ஒரு துப்பறியும் கதையும் – என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் – நினைவு வருகிறது. என்ன முடிச்சு என்பது சுத்தமாக நினைவில்லை. ஆனால் கதையில் peephole club என்று நாலு வரி வரும். அதாவது ஆணும் பெண்ணும் கூடுவதை சுவரில் துவாரம் வழியாகப் பார்ப்பார்களாம். பதின்ம வயதில் படித்தபோது அதிர்ச்சியாகவும் இருந்தது, கிளுகிளுப்பாகவும் இருந்தது. குமுதம் ஏன் வெற்றி பெறாது?

மற்ற கதைகளில் நினைவிருப்பது “அவன் அவள் அது“. புனிதனைப் பற்றி பதிவு எழுதலாம் என்று தோன்றியதும் இணையத்தில் தேடியபோது கிடைத்தது. கூடிய சீக்கிரம் மறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன், மூளையில் கொஞ்சம் இடம் மிச்சமாகும்.

அவருடைய ஒரு கதையை இங்கே படிக்கலாம். சிம்பிளான கதைதான், ஆனால் படிக்கக் கூடிய கதை.

புனிதன் ஒரு எழுத்தாளராக – வணிக எழுத்தாளராகக் கூட – பொருட்படுத்தப்பட வேண்டியவர் அல்லர். ஆனால் தமிழ் வணிக எழுத்துலகில் அவருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. அவர் தனது memoirs-ஐ எழுதி இருந்தால் சுவையாக இருந்திருக்கும். இணையத்தில் அங்கும் இங்கும் கிடைத்ததை எல்லாம் கீழே பதித்திருக்கிறேன்.

நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான்.

பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ. (விஸ்வநாதம்) அவர்கள் தமிழ்நாடு என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் ஒட்டக்கூத்தன் என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன.

முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பொன்னியில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது.

நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன்.

இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். முதலில் கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.மில் சேர்த்தார். அதை முடிக்குமுன் இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்கவிட்டார்.

அப்போதும் என் கவனம் அந்த நாள் பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்தப்படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா?

முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ. சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் 1951ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?

‘விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.’

விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால் ரேடியோ மெக்கானிஸம் துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.

தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ.

நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

தமிழ்வாணன் சீண்டல்:
உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார்.

நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘இவர் கூடப் பத்திரிகைக்கு எழுதுவார் அண்ணே’ என்றார்.

தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘என்ன எழுதுவீங்க’ என்று கேட்டார்.

‘கவிதைதான் எழுதுவேன்’ என்றேன் மகா கர்வத்தோடு.

உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து ‘இப்பல்லாம் கவிதையை யார் சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்’ என்றார்.

தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால் நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.

அவர் அப்படிச் சொன்னதும் எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்துவிடுவோம்!

தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ. தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டேன் இரண்டு கதைகளையும்.

மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து ‘கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.

திரும்பிப் பார்த்தால் தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். ‘என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?’ என்றார்.

‘நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை’ என்றேன் விறைப்பாக.

மறுபடியும் அதே சிரிப்பு. ‘சரி இப்ப பார்’ என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார்.

ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும் அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! ‘சண்முகம்’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது.

நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். ‘உம், மேலே புரட்டு!’ புரட்டினேன். நடுப்பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. ‘சுந்தரம்’ என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம்+சுந்தரம் = சண்முகசுந்தரம் – என் இயற்பெயர்.

அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது.

கல்கண்டு உதவியாசிரியர்: ஒரு நாள், ‘படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?’ என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.

‘ஏதாவது வேலை தேடணும்…’ என்று இழுத்தேன்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே – ஆளாகியிருந்த நேரம் அது.

‘நீ என் கூடவே இருந்துடு’ என்றார்.

‘சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்’ என்று விடைபெற்றேன்.

நான் திருமணம் முடித்துக் கொண்டு – உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன்.

சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம் இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது.

தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார்.

ஆசிரியரும், துணையாசிரியரும் ‘வா போ’ என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் சக்தி பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர. அப்போதெல்லாம் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப், அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும்.

தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. ‘ரங்கராஜன் சார் வரலியா?’ என்று தமிழ்வாணனிடம் கேட்டேன்.

மணியடித்து ஆஃபீஸ் பையனை வரவழைத்து ‘அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா’ என்றார்.

பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952 ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன்.

சற்றுப் பொறுத்து ‘சரி வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்’ என்று கூட்டிப் போனார்.

அப்போதுதான் நான் முதன்முதலாக ஆசிரியர் எஸ்ஏபி அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங்காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது சிலிர்த்துப் போனேன். ‘தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு’ என்றார்.

அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளிநடந்தேன்.

அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால் பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான ஓட்டர் லிஸ்ட் புரூஃப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் தமிழ்வாணன் பாராட்டினார்.

மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.

குமுதம் நாற்காலி:

தமிழ்வாணனிடம் பயிற்சி பெற்றுக் குமுதத்துக்கு வந்தால் தன் பளு ஓரளவு குறையும் என்று ஆசிரியர் எஸ்ஏபி கருதினார்.

குமுதம் மாதம் மூன்று இதழாக வந்து கொண்டிருந்தது அப்போது.

ஆசிரியருக்கு முழு நேரத் துணையாசிரியராய் ரா.கி.ர. பணியாற்றினாலும், ரிசர்வ் வங்கியில் பணி புரிந்த ஆனந்ததீர்த்தனும், வக்கீலாய் இருந்த ராம. நாராயணனும் பகுதி நேரத் துணைகளாய் இருந்து வந்தனர்.

ஜ.ரா. சுந்தரேசன் நான் குடியிருந்த வெள்ளாளர் தெருவிலேயே ஓர் அறையில் தங்கி ரேடியோ அஸம்பிளிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கல்கண்டுக்கு கதைகள் நாடகங்கள் எழுதி வந்தார். அதனால் எனக்கு அவருடைய பரிச்சயம் ஏற்பட்டது. இருவரும் ஒரே ஜில்லாக்காரர்கள் என்பதால் பாசம் சுரக்க, ‘டா’ உறவில் பழக ஆரம்பித்தோம். இன்று வரை அது நீடிப்பது வேறு விஷயம்.

குமுதத்தில் 1953 வாக்கில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருற்தார்கள். அந்தப் போட்டியில் ஜ.ரா.சு. கலந்து கொண்டார். பரிசு பெற்றார். அலுவலகத்துக்கு ஜ.ரா.சு. வரப்போக, ஆசிரியர் அவரைக் கவனித்திருந்திருக்கிறார். அவரது எழுத்தும் பிடித்துப் போயிற்று. தமிழ்வாணனிடம் சொல்லிவிட்டுக் குமுதத்தில் இணைத்துக் கொண்டார்.

என்னதான் கல்கண்டில் ‘தேசபந்து’வாகக் கொட்டி முழக்கினாலும், பெரியவர்களுக்கு எழுதவேண்டும்; காதல் கதைகள் தரவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு உள்ளுர இருந்து வந்தது.

நான் கொஞ்சம் வெள்ளை. எதையும் மனசுக்குள் மறைத்து வைக்கத் தெரியாதவன். பட்டதைப் பட்டென்று சொல்லி, கேட்டு, கண்டித்துப் பலரின் வெறுப்புக்கு ஆளான அனுபவம் உண்டு.

அப்படித்தான் ஆசிரியரிடம் நேரில் சென்று ‘எனக்கும் குமுதத்தில் இடம் வேணும்’ என்று கேட்டுவிட்டேன்.

அப்புறம் எனக்கும் ஒருவழியாய் குமுதத்தில் துணையாசிரியர் நாற்காலி போடப்பட்டது.

நானும் சுந்தரேசனும் ஏதும் பிரச்சனை கிளப்பாவிட்டாலும் எங்களை வைத்துக் கொண்டு ஆசிரியரும் ரா.கி.ர.வும் சிண்டு முடியும் தோரணையில் கலாட்டா செய்வது வேடிக்கையாய் இருக்கும்.

‘சீனியர் ஜ.ரா.சு. என்ன சொல்றார்?’ என்பார் ரா.கி.ர.

‘அதெப்படி? குமுதம் ஆபீஸ்ல முதல்ல சேர்ந்தவர் புனிதன்தானே? அதனால அவர்தான் சீனியர்’ என்று வக்காலத்து வாங்குவார் ஆசிரியர்.

இது பல சந்தர்ப்பங்களில் பலவித சீண்டல்களாய் வெளிவரும்.

நாம் மூவர்

அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அமர்வதற்கு ரா.கி. ரங்கராஜன், புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் ஆகிய நாங்கள் மூவரும் முக்காலியானோம். முக்காலியில் எந்தக் காலுக்குப் பொறுப்புக் குறைச்சல்?

வெளியுலகத்தில் அதிக சர்குலேஷன் உள்ள பத்திரிகைகளில் எல்லாம் அத்தனை பேர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று தனித்தனி அறைகள், எடுபிடிகள், ஆளம்புகள் என்று அமர்க்களப்படும்போது, இங்கு ஒரே ஒரு ஹாலில் மூன்று மேசை நாற்காலியைப் போட்டுக் கொண்டு, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எப்படி இந்தியாவிலேயே அதிக வினியோகம் உள்ள பத்திரிகை என்று பாராளுமன்றத்திலேயே சுட்டிக் காட்டும் அளவுக்குக் கொண்டு செலுத்த முடிந்தது?

முதல் காரணம் ஆசிரியர் வியத்தகு மேதையாய் இருந்து, வேறு எவருக்கும் கட்டுப்படத் தேவை இல்லாத உரிமையாளராகவும் அமைந்தது. கால நேரம், சொந்த விருப்புவெறுப்பு, உடலுபாதை ஏதும் பொருட்படுத்தாமல் ஆசிரியரின் எண்ணத்தை ஈடேற்றி வைப்பதே குறிக்கோளாய்க் கொண்டு பாடுபட்டு உழைத்தோமே நாங்கள் மூவர், அது இரண்டாவது காரணம்.

ஆசிரியரின் கூர்ந்த மதியாகட்டும், அவரது படிப்பறிவாகட்டும், அனுபவங்களைக் கிரகித்துச் சொல்லும் நுணுக்கமாகட்டும், இந்தக் காரணத்தால் இது இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லும் கணிப்பாகட்டும், அவருக்கு முன்னால் நாங்கள் சிசுக்கள்தான்.

‘உங்களுக்கு எந்தக் குழப்பமும் வேண்டாம். நான் வழிகாட்டுகிறேன். நீங்கள் சும்மா என் பின்னால் வந்தால் போதும்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதுவே எங்களுக்குச் சுமையேதும் இல்லை என்று எண்ண வைத்து லேசாக்கியது.

ஓர் இதழை ஒருவர் கவனித்தால் போதும், மற்ற இருவரும் இதழ் பொறுப்பிலிருந்து விடுபட்டு அடுத்த வேலையைக் கவனிக்கலாம் என்று கழற்றி விட்டு விட்டார். இதனால் ஒவ்வொருவரும் ஒரு வாரம் பணியாற்றினால் இரண்டு வாரம் ஓய்வு என்ற பிரமையில் அந்த ஒரு வார வேலையில் முனைப்பாக ஈடுபட ஒரு தார்மீக உந்து சக்தி பிறந்தது. ஈடுபட்டோம்.

எவரிடம் எந்தத் திறன் ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்வதில் அவருக்கு இணையாக இன்னொருவரைச் சுட்டிக் காட்ட இயலவில்லை.

தினமும் காலையில் வந்ததும், ஒரு pep talk கொடுப்பார். அதிலே பத்திரிகை பற்றிய கனவுகளை விதைப்பார். அவற்றை நனவாக்க வேண்டும் என்ற ஆவலை, நிறைவேற்றிப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்வார்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் அவருக்குப் பிடித்த மாதிரியில் நாங்கள் ஏதாவது எழுதி முடித்தால், தட்டிக் கொடுத்து மனசாரப் பாராட்டிப் புகழ்ந்ததையெல்லாம் எப்படி மறக்க முடியும்? இன்று வரை நினைத்துப் பெருமிதப்பட வைக்கிறது.

இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டும்தான் என்னால் தர முடியும். இதுதான் அந்தக் காலத்துக் குமுதம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதோ சில அனுபவங்கள்.

மக்கள் படிப்பு:

இதழ் முடித்த நேரத்தில் ஒரு விச்ராந்தி முகத்தில் தெரியும். அதை ‘விடாயேற்றி உற்சவம்’ என்று வேடிக்கையாய் குறிப்பிட்டுச் சிரிப்பார் ஆசிரியர்.

இந்த உற்சவம் எங்களுக்கு மட்டும்தானே தவிர, ஒவ்வோர் இதழிலும் அவர் முகம் தெரியத் தனிப்பட அவர் படும்பாடு ஏதும் எங்களுக்குத் தெரியாது. தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்.

அந்த ஓய்வு நாட்களில் எங்களுக்கு நோகாமல் அப்படியொரு பயிற்சி கொடுப்பார். படிப்றிவுப் பயிற்சி. எனக்கு ஸ்டீன்பெக், பி.ஜி.உட்ஹவுஸ், ஓ. ஹென்றி சிறுகதைகள் அவரது நூலகத்திலிருந்து எடுத்துக்கொடுப்பார். இவற்றை ஆபீஸ் நேரத்திலேயே – மாடியில் மீட்டிங் ஹாலில் உட்கார்ந்து படிக்க வேண்டும். அடுத்த நாள் அதில் ரசித்த கட்டங்களைச் சொல்லி, எந்த எழுத்து முறையால் அது எடுபடுகிறது என்று சுட்டிக் காட்டி ஒரு விவாதம் நடக்கும். அடுத்து எழுதும் கதையில் அந்த உத்தி கையாளப்பட வேண்டும்.

இதோடு நிறுத்தாமல் வெளியுலகத் தொடர்பு தேவை என்று இன்னொரு நாள் ஊர் சுற்ற அனுப்புவார்! ‘வெறுமனே சுற்றிப் பார்த்து நமக்கு என்ன ஆச்சு? ஏதாவது வித்தியாசமான மக்களைக் கவனியுங்கள் அவரை பேட்டி எடுங்கள். படம் எடுத்து வர ஏற்பாடு செய்யுங்கள். இரண்டொரு பக்கம் போடலாம்’ என்றார்.

மக்களை பேட்டி முடித்த பிறகு படம் எடுப்பதற்காக அப்புறமாய் ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அனுப்பி நேரத்துக்குக் கிடைக்காமல் அவஸ்தைப்பட்ட முன் அனுபவம் எனக்கு இருந்தது.

அப்போது எனது நண்பர் ஒருவர் யாஷிகா கேமரா ஒன்று எனக்காக சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். நான் அதற்கு முன் படம் எடுத்ததில்லை. யாஷிகா கிடைத்ததும் உற்சாகம் பிய்த்துக் கொண்டது. தோளில் காமெராவை மாட்டிக் கொண்டு தென்சென்னைப் பகுதியில் சுற்றினேன். சினிமாத் தொழிலாளர்களின் குடிசைக் குடியிருப்புப் பகுதியிலே ஒரு போர்டு கண்ணில் பட்டது.

இங்கே பாம்புகள் படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்படும்.

‘நம்ம பச்சா கூடப் பாம்பு புடிப்பான் சார்!’ என்றார்.

இப்போது அவரது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. ‘கூப்பிடு, கூப்பிடு’ என்று காமெரா விரித்தேன்.

மூன்று வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. சும்மா கொழுக் மொழுக்கென்று இருந்தான். பாவா ஒரு பெரிய நல்ல பாம்பு ஒன்றை அவன் கையில் கொடுத்தார். எனக்கே பயம். அவர் ‘விஷப் பை எடுத்தாச்சு சார். பயப்படாதே’ என்றார்.

பையன் பாம்பைத் தூக்கிப் பிடித்தான். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. பாம்பை இறக்கி விட்டானோ என்னவோ! பையன் கன்னத்தில் ஓங்கி ஒரு போடு போட்ட அதே தருணம் என் காமெரா கிளிக் செய்துவிட்டது.

பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்த உயிர்த் துடிப்பான காட்சி அந்தி வெளிச்சத்தில் காண்ட்ராஸ்ட்டாய் அற்புதமாய் வந்திருந்தது. ஆசிரியர் அதைப் பார்த்து அடைந்த சந்தோஷம்! நண்பர்கள், ஓவியர் வர்ணம் அனைவரையும் கூப்பிட்டுக் காட்டிப் பாராட்டி, ‘யார் எடுத்தது தெரியுமா? நம்ம கார்ஷ் ஆப் ஒட்டாவா’ என்றது நேற்றுப்போல் இருக்கிறது.

அந்தத் தெம்பிலே குமுதம் அட்டைக்காகவும் நான் அவ்வப்போது வண்ணப் படங்கள் எடுத்தேன். தணிகை என்ற பெயரில் அவை அன்றைய குமுதம் இதழ்களில் இடம் பெற்றன.

சுந்தர பாகவதர் ஆனேன்:

நாங்கள் மூவரும் கட்டாயம் ஆளுக்கு ஒரு கதை ஒவ்வோர் இதழுக்கும் எழுதியாக வேண்டும். எல்லாரும் எல்லாவிதமான கதையும் எழுத வேண்டும்.

மொத்தம் ஐந்து கதைகள் ஒவ்வோர் இதழிலும் இடம் பெறும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசம். நகைச்சுவை, கிராமம், இளமைத் துள்ளல், க்ரைம், விஞ்ஞானம் அல்லது இவற்றில் காதல் ரசம் தூக்கல். இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் மட்டுமே வெளியாருக்கு ஒதுக்கியது. மற்ற மூன்றும் நாங்கள்.இந்த இதழுக்கு எழுதிய கதைவகை, அடுத்த இதழுக்கு எழுதலாகாது. நாங்கள் எழுத வேண்டிய கதைக்கருவைக் கையகலச் சீட்டில் எழுதிக் கொடுத்து அப்ரூவல் பெற்றுக் கொண்ட பிறகு, அதை ஆசிரியர் அவர்களுடன் பேசி விளக்கம் பெற்று, எந்த உத்தியில் எழுதுவது என்று தீர்மானித்து, பிறகே எழுத வேண்டும். ‘இது நம்ம பத்திரிகை. நமக்குப் பிடிச்ச கதையை நாமதான் எழுதணும். நம்மாலதான் கதைகள்’ என்றே அறிவிப்புக் கொடுத்தார்.

ஒரு முறை என் பங்காக நகைச்சுவைக் கதை எழுத வேண்டும். ஆசிரியருடன் பேசி முடித்துக கதை உருவாக்கியாயிற்று. என்ன உத்தியில் எழுதுவது? அன்று காலை ஒரு காலட்சேபம் பற்றி விரிவாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதை நினைவூட்டி அதே காலட்சேப உத்தியில் எழுதும்படி சொல்லிவிட்டார்.கதைப் பிரதியை அவர் படித்த பிறகுதான் அச்சுக்கு அனுப்புவது வழக்கம். அன்று கதையைப் பேசி முடித்ததும் அவர் ஊருக்குக் கிளம்ப வேண்டியிருந்ததால் ‘நான் பார்க்க வேண்டியதில்லை. கம்போசுக்கு அனுப்பி விடுங்கள். வந்து பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நாளை மறுநாள் வருவதாய்ச் சொல்லியிருந்தார்.

நானும் எழுதி அனுப்பி விட்டேன். மீசா புராணம் என்பது கதைப் பெயர். மனசுக்குள் பக்பக்தான். அவர் நினைத்தபடி கதை இல்லாவிட்டால் நிர்தாட்சண்யமாய் நிறுத்தி விடுவார். நாளை மறுதினம்தான் பேஜ் தயாராகும். எப்படியும் மெஷின் புரூப் பார்க்க வந்து விடுவார். என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். இரவு போயிருந்திருக்கும்.

அன்று நான் ஆபீஸ் போனபோது என்னைப் பார்த்து ஒரேயடியாய்ச் சிரித்தார். ‘நல்லாருந்தது. நடுநடுவே இந்த ஸ்டைல்ல கதை எழுதுங்க’ என்றார்.

இந்த மாதிரிக் கதைகளுக்காக சுந்தர பாகவதர் நாமகரணம் சூட்டிக் கொள்ளப் பெயர் கொடுத்தவர் சீனியர் ரா.கி.ர.தான்.

எங்களுக்கு எதற்கு நகை? என்று ஒரு சுந்தர பாகவதர் கதை. பேசிப் பேசி எழுதியதில் நீண்டு அடுத்த இதழில் முடித்து விடலாம் என்று சொல்லி அதிலும் முடியாமல் கட்டாயம் அடுத்த இதழில் முடியும் என்று அறிவித்து… இப்படித் தொடர்ந்து ஐந்து இதழுக்கு நீண்டது.

வெள்ளாளத் தெருவில் குடியிருக்கும்போது அதே தெருவில் குடி இருந்த நடிகர் வி.எஸ். ராகவன் எனக்கும் சுந்தரேசனுக்கும் பழக்கமானவர்தான். அவர் ஒரு நாள் ஆபீஸ் வந்து சுந்தரேசன் எதிரில் உட்கார்ந்து அவர் கதையை நாடகமாக்கப் போவதாகக் கேட்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

எந்தக் கதை என்று சுந்தரேசன் கேட்டபோது ‘சுந்தர பாகவதர்னுட்டு எழுதினா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேளாக்கும்? அதான் எங்களுக்கு எதற்கு நகை?’ என்றதும் சுந்தரேசன் சிரித்தார். அதை எழுதியது நான்தான் என்று அறிந்தபோது வி.எஸ். ராகவன் நம்பவில்லை. அப்புறம் உறுதி செய்து கொண்டு ஒருவிதமாய் கதை வாங்கிச் சென்று நகையே உனக்கொரு நமஸ்காரம்! என்ற பெயரில் நாடகமாக்கி மேடையேற்றி, எம்ஜிஆர் கையால் எனக்கும் கேடயம் வாங்கித் தந்தார். வானொலியில் தொடர் நாடகமாய் அது இடம்பெற்றது. அப்புறம் தொலைக்காட்சி நாடகமாகவும் இடம் பெற்றது.

என்னை உசுப்பி விட்டு ஒரு சவால் உணர்வை ஏற்படுத்தி சுந்தர பாகவதர் ஆக்கியது ஆசிரியரின் வெற்றி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

கவிதையிலே கதை:

குமுதத்தில் இணைகையில் நான் வித்துவான் தேர்வு முதலாண்டு எழுதியிருந்தேன். தனியாகப் படித்து வித்துவான் பட்டம் பெற ஆவல். இந்த ஏக்கத்தை ஆசிரியரிடம் சொன்னேன்.

அவர் சற்றுப் பதறிப் போய் ‘வேண்டாம் வேண்டாம். பத்திரிகைக்கு உங்கள் தமிழறிவே அதிகம். இதற்கு மேல் வேண்டாம். ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டுங்கள்’ என்று அறிவுரை வழங்கயதோடு, ‘உங்களுக்குக்கென்ன கவிதை எழுதணும். அவ்வளவுதானே? நடுநடுவே எழுதுங்க’ என்று சமாதானம் செய்தார்.

அதன்படி கண்ணம்மா என்ற பெயரில், மரபுக் கவிதைகளாய் அவ்வப்போது (அறுபதுகளில்) எழுதி வந்தேன். ஒரு முறை கதையொன்று பேசும்போது, ‘இது கொஞ்சம் கவிதைத்தனமாக இருக்கே. கவிதையிலே எழுதிப் பாருங்களேன்’ என்றார்.

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம் போன்ற கதைக் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை அந்தத் தூண்டுதலில் நானும் ஒரு கவிதைத் கதை தயாரித்தேன். பாராட்டி வெளியிட்டார். அதன் பிறகுதான் பகுதி நேரக் கவிஞனின் கவிதைக் கதையே இந்த அளவுக்கு இருக்கும்போது, முழுநேரக் கவிஞரைக் கொண்டு கவிதைக் கதை செய்யச் சொன்னால் இன்னும் சிறப்பாய் இருக்குமே என்று ஆசிரியருக்குத் தோன்றியிருக்கும் போலும்.

கவிஞர் சுரதாவை வரவழைக்க ஏற்பாடு செய்தார். அவரிடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கதையொன்றைத் தந்து, இதைக் கவிதையிலே மாற்றித் தர இயலுமா என்று கேட்டார். அவரும் பெருமையோடு ஒப்புக் கொண்டார்.

அலுவலகத்து மாடியிலேயே கவிஞர் சுரதா மீட்டிங் ஹாலில் அமர்ந்து அந்தக் கதைக் கவிதை எழுதித் தர, குமுதத்தில் இடம்பெற்றது பசுமை நினைவு.

பொள்ளாச்சியில் புனிதன்:

ஒரு முறை நா. மகாலிங்கம் அவர்கள் பொள்ளாச்சியில் விவேகானந்தர் விழா நடத்தினார். அதில் சென்னையிலிருந்து கி.வா.ஜ.வுடன் ஆசிரியரையும் அழைத்திருந்தார். அப்போதெல்லாம் பொதுக்கூட்டங்களில் பேசுவதுண்டு. பேச்சுக்காக அவர் மெனக்கெட்டு ஆயத்தம் செய்து கொள்வதை பார்க்கும் போது இத்தனை மெனக்கெடல் தேவையா என்று தோன்றும்.

அப்படி அவர் பொள்ளாச்சியில் சென்று வந்த பிறகு அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். நினைவு கூர்ந்து கூடுமானவரை அவர் வார்த்தையிலேயே தருகிறேன்.

“நான் மேடையிலே உட்கார்ந்திருக்கிறேன். பக்கத்திலேயே அந்தக் காலேஜ் பிரின்சிபால் உட்கார்ந்திருந்தார். அவர் என் காதுகிட்ட வந்து, ‘இப்ப உங்க புனிதன் வரப் போறார்’ என்றார்.

நான் ‘வரமாட்டார்’ என்றேன்.

ஏன் அப்படிச் சொல்றீங்க? நான் இங்க வர்றதுக்கு முன்னால அவரைப் பார்த்தேன். பின்னாலேயே வரதா சொன்னாரேன்னார்.

நான் பார்த்திருக்க முடியாது. ஏன்னா நான் ரயில் ஏர்றப்ப புளிதன்தான் ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்பிச்சார். என்கிட்ட சொல்லாம அவர் எப்படி வர முடியும் என்றதும் முகம் ஒருமாதிரியாயிடுச்சு.

எனக்கு அப்பவே சந்தேகம்தான்னு சொன்னார்.

அவங்க காலேஜ் ஸ்டாஃப்பாம் அந்த ஆள். தான்தான் புனிதன்னு சொல்லிக்கிட்டு குமுதத்திலே வர்ற கதையை எடுத்து வச்சிட்டு அதைத்தான் எப்படி எழுதினேன், இன்ஸ்பிரேஷன் எது, காரெக்டர் எப்படி உருவாச்சுன்னெல்லாம் லெக்சர் வேற கொடுப்பாராம். எப்படியிருக்கு?”

அதுக்கப்புறம் யாராவது புனிதன்னு சொன்னால், ‘யாரு, பொள்ளாச்சி புனிதனா?’ என்று கிண்டலடிப்பார்.

சொல்லச் சொல்ல எழுதுவேன்

அந்த நாளில் ஆசிரியரின் நாவல்கள் குறிப்பாக ஓவியம் – அவர் சொல்லச் சொல்ல நான்தான் பிரதியெடுப்பது வழக்கம்.

அவர் வீட்டுக்கு அழைக்கிறார் என்றால் பெரும்பாலும் எழுதுவதற்காகத்தான் இருக்கும். நீண்ட கைப்பிடியில் பலகை வைத்து சாய்ந்து உட்கார்ந்து எழுதுவதற்கென்றே டிஸைன் செய்த அந்தப் பிரம்பு நாற்காலியில்தான் அவர் வீட்டில் என்னைப் பார்க்கலாம்.

அவர் டிக்டேட் செய்யும் அழகே அழகு! நடமாடிக் கொண்டு, நடித்துக் கொண்டு கொச்சையாய் அவர் பேசுவதை நான் இலக்கண சுத்தமாய் எழுதி விடுவேன் என்ற அவரது நம்பிக்கையை இறுதிவரை காப்பாற்றி விட்டேன்.

நான் முறைப்படி 1988ல் ஓய்வு பெற வெண்டியிருந்தது. இருந்தும், ரா.கி.ர.வைப் போல நானும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

முதல் ரிடையர்மெண்ட்:

அந்த நேரத்தில் குமுதத்தில் அக்கறையுள்ள பலர் ‘உங்களுக்கும் வயதாகி விட்டது. உங்கள் உதவியாளர்களும் ஓய்வு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். குமுதத்தின் எதிர்காலம் என்ன?’ என்கிற மாதிரி கேட்டு யோசிக்க வைத்தார்கள்.

அப்போதுதான் நிர்வாகத்தினர் புது ரத்தம் புகுத்த மாலன், பிரபஞ்சன் ஆகிய இலக்கியவாதிகளையும், ப்ரஸன்னா, ப்ரியா கல்யாணராமன் ஆகிய இளைஞர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இலக்கியவாதிகள் இருவருக்கும் குமுதம் சரிப்பட்டு வரவில்லை. விலகி விட்டனர். நானும் கண்ணியமாய் விலகிக் கொண்டுவிட்டேன். உடனடியாய் தினமலர் வாரமலர் இதழில் தொடர்கதை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன்.

அதே நேரத்தில் கல்கி ஆசிரியர் கி. ராஜேந்திரன் அவர்களும் என்னை கவுரவித்தார். கோகுலம் கவுரவ ஆசிரியராய் இருந்த அழ. வள்ளியப்பா அவர்கள் திடீர் மரணமடைந்திருந்த தருணம் அது. நான் துவக்கத்தில் தேசபந்துவாக கல்கண்டில் மிளிர்ந்ததை அவர் அறிவார். எனவே, அழ. வள்ளியப்பா அவர்களின் இடத்தை நிரப்ப என்னை அழைத்தார். ஏதோ ஒரு வகையில் பத்திரிகைப் பணி தொடர்ந்தது. வாரமலர் இதழில் அடுத்தடுத்து மேலும் மூன்று தொடர்கதைகள் எழுதினேன்.ஆனந்த விகடனில் ‘அப்புறம் என்ன ஆச்சு?‘ என்று சுந்தர பாகவதரின் முதல் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. கல்கியில் தொடர்ந்து சினிமா விமர்சனம் செய்தேன் பி.எஸ்.எஸ். என்ற பெயரில்.

நான் குமுதத்தை விட்டு விலகிய பிறகும் ஆசிரியரை விட்டு விலகவில்லை. வெள்ளிக்கிழமைதோறும் மாலை ஐந்து மணிக்கு மேல் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவேன்.

இரண்டாம் அப்பாயின்ட்மெண்ட்

அப்போதே ஆசிரியர் பேச்சில் தெளிவு காணாமல் போயிருந்தது. அவரது உடல்நிலை குறித்து வருத்தம் ஏற்பட்டது.

அக்டோபர் 1990ல் ஜ.ரா.சு. வீட்டுக்கு வந்தார். ஆசிரியர் என்னை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைத்ததாகச் சொன்னார்.

ஜ.ரா.சு. ஓய்வு பெறப் போவதாகவும், ஊரில் தமது நிலபுலன்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால் தொடந்து பணியாற்ற இயலாது என்றும், ரா.கி.ர.வுக்கும் அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போவதால் என் துணையை ஆசிரியர் எதிர்பார்ப்பதாயும் சொன்னார்.

வீட்டில் உள்ள எவருக்கும் நான் திரும்பக் குமுதத்துக்குச் செல்வதில் விருப்பம் இல்லை. வீட்டிலிருந்தவாறே நான் சுதந்திரமாய் எழுவதுதான் எனக்கும் சுகம், அவர்களுக்கும் வசதி என்று நினைத்தார்கள். இரண்டாண்டு காலத்தில் நான் இதற்கு முன் இத்தனை தொடர்கதைகள் எழுதியதில்லையே!

இருந்தாலும் நான் நன்றி மறக்கவில்லை. ‘முகவரி இல்லாமல் இருந்த எனக்கு முகவரி கொடுத்தவர் ஆசிரியர். தந்தை ஸ்தானத்திலிருந்து நமது குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காட்டியது மறக்க முடியாதது. அவரை இன்றும் என் தந்தை ஸ்தானத்தில் வைத்தே மதிக்கிறேன். அவரே என் உதவி தேவை என்று ஆள் விட்டிருக்கும்போது நான் அதைத் தட்டிக் கழிக்கத் தயாரில்லை’ என்று மீறிக் கொண்டு சென்றேன்.

போகப் போகத்தான் தெரிந்தது, ஆசிரியர் எதை எதிர்பாத்து என்னை மீண்டும் அழைத்தார் என்பது.

பத்திரிகைக்கு இளரத்தம் தேவை என்று இன்றைய ஆசிரியர் குழுவினர் மூவரையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த மூவரில் ஒருவரை நான் கொண்டு வந்து சேர்த்தேன்.

மூவருக்கும் பத்திரிகைத் தொழிலில் பயிற்சி தர எஞ்சியிருந்தது நான் மட்டும்தான். ரா.கி.ர.வும் ஓய்வு பெற்று வீடு திரும்பி விட்டார். தொடர்ந்து ப்ரஸன்னாவும் விடைபெற்றுக் கொண்டார்.

ப்ரூஃப் ரீடிங்கிலிருந்து பேஜ் மேக்கப் அமைப்பு முறை வரை அவர்கள் என்னிடம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொண்டார்கள். புரிய வைத்தேன். புரிந்து கொண்டார்கள்.

‘சரியான நேரத்தில் நீங்கள் திரும்ப வந்து பெரிய ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். மறக்க முடியாது’ என்று மனம் திறந்து எனக்குப் புகழ் மாலை சூட்டினார் ஆசிரியர்.

எனக்கு அது போதும். ஆசிரியர் இடறி விழுந்து விட்டதாய்க் கேட்டு ஏப்ரல் 6ம் தேதி அவரைக் காண வீடு சென்றேன். மூக்கிலே கொஞ்சம் சிராய்ப்புத் தெரிந்தது.

இன்னும் இரண்டு நாளில் ஸ்டேட்ஸ் போவதாயும். அதுவரை குமுதத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைத்துச் செல்வதாயும் சொன்னார். அனேகமாய் எனக்கு விடைதரும் விதமாய் இருந்தது அவர் பேச்சு. ஏப்ரல் 17 ஞாயிறு இரவு ப்ரியா கல்யாணராமன் போன் செய்து ஒரு சகாப்தம் முடிந்த செய்தி சொன்னார்.

ஆசிரியர் என்னை ஆளாக்கியதற்கு பிரதியாக அவர் எதிர்பார்த்த அளவுக்கு செய்து விட்டதாகவே நிறைவடைகிறேன்.

ஆசிரியர் அழைத்ததற்காக குமுதம் அலுவலகத்திற்குள் திரும்ப நுழைந்தேன். இதற்கு மேல் எனக்கு அங்கு வேலை இல்லை என்று இரண்டாம் முறையாக ஓய்வு பெற்று திரும்பி விட்டேன்.

ஆசிரியர் இல்லாத அலுவலகத்துக்குள் எட்டிப் பார்க்கவும் இப்போது மனசு இடம் தர மாட்டேன் என்கிறது.

பின்னுரை

நாற்பது ஆண்டுகள்! குமுதத்தில் எனது நாற்பது ஆண்டு கால நீண்ட பயணம் ஆசிரியர் அவக்ளின் இறுதிப் பயணத்துடன் நிறைவெய்தி விட்டது.

எத்தனை எத்தனையோ இன்ப-துன்ப அனுபவங்கள். அவற்றில் கசப்பையெல்லம் விழுங்கிக் கெண்டு எண்ணிப் பார்த்துப் பெருமிதம் கொள்ளத்தக்க இன்ப நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு நினைவு கூர்ந்தேன்.

அதில் ஓரளவு தம்பட்ட ஓசை எழுப்பியிருக்கிறேன் என்பதை நான் மறுக்கவில்லை. அது சாமானியனாய் இருந்த என்னை இந்த அளவு தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தக்கவனாய் மாற்றிய ஆசிரியரின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகத்தான் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

மாட்டுப்பொங்கல் சிறுகதை – வீரம்மாளின் காளை

maattuppongal

ஒவ்வொரு வருஷமும் மாட்டுப்பொங்கல் அன்று ‘வாடிவாசல்‘ பதிவை மீள்பதிப்பேன். இந்த முறை எனக்குப் பிடித்த இன்னொரு ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய ‘வீரம்மாளின் காளை‘. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கு.ப.ரா. பக்கம்

பொங்கல் சிறுகதை – லா.ச.ரா.வின் ‘மண்’

pongal

பொங்கலுக்காக ஒரு சிறுகதை என்றவுடன் முதலில் நினைவு வந்தது லா.ச.ரா. எழுதிய ‘மண்‘ சிறுகதைதான். மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாட வேண்டிய வேளையில் இப்படி ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையா என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். அப்புறம் லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகள் நினைவு வந்தன.

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…

மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!

பொங்கல் என்றால் உங்களுக்கு நினைவு வரும் சிறுகதை என்ன? கட்டாயம் அதை மறுமொழியில் குறிப்பிடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

“இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்” எழுதிய பெங்களூர் ரவிச்சந்திரன்

இருபது இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னால் – சுஜாதாவின் லாண்டரி கணக்கு வழக்கைக் கூட பத்திரிகைகள் பிரசுரிக்க தயாராக இருந்த காலம். அதையும் படிக்க தயாராக இருந்தவர்களில் நானும் ஒருவன்.

செகந்தராபாதில் ஒரு புத்தகக் கண்காட்சியில் நான் சுப்ரபாரதிமணியனை முதல் முறையாக சந்தித்தேன். அவர் பேச்சுவாக்கில் பெங்களூர் ரவிச்சந்திரன் என்பவரின் நடை உங்களுக்கு சுஜாதாவை நினைவுபடுத்தலாம் என்று சொன்னார். அப்போது வாங்கிய புத்தகம்தான் இந்த இந்திரா காந்தியின் இரண்டாவது முகம். எனக்குத் தெரிந்து இந்த ஒரு புத்தகம் மட்டுமே எழுதி இருக்கிறார். ஆர்.பி. ராஜநாயஹம் மேலும் சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன என்று தகவல் தருகிறார். இறந்துவிட்டாராம்.

ம.வே. சிவகுமாரின் அஞ்சலியில் நண்பர் ராஜன் ரவிச்சந்திரனைக் குறிப்பிட்டிருந்தார். அப்போது இவரது நினைவு வந்தது.

உண்மை, ரவிச்சந்திரனின் நடை கொஞ்சம் சுஜாதாவை நினைவுபடுத்தியது. எப்படி சொல்வது, “யூத்” நடை. கொஞ்சம் துள்ளலும் ஆர்ப்பாட்டமும் வேகமும் கலந்த நடை. சில வருஷங்களுக்கு முன்னால் மீண்டும் படிக்கும்போது அந்த நடை ஒன்றுதான் நின்றது. அன்றைய குமுதம் விகடன் சிறுகதைகளோடு ஒப்பிட்டால் இவை அடுத்த தலைமுறைக்கான வணிகச் சிறுகதைகள் என்று சொல்வேன். எந்தச் சிறுகதையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லைதான். இருந்தாலும் தொகுப்பு ஒரு நல்ல ambience-ஐக் கொடுக்கிறது.

ஒன்றுமில்லாத சம்பவத்தை எல்லாம் உரக்க எழுத்தி இருப்பார். ஆனால் டக்கென்று தெரியாது. எல்லா கதைகளிலும் நாயகன் இளைஞன். கொஞ்சம் அறிவுஜீவி, விஷயம் தெரிந்தவன். கொஞ்சம் தீசத்தனம் உள்ளவன். அடிதடிக்கு அஞ்சாதவன். பெண்களைக் கவர்பவன்.

இன்று கையில் புத்தகம் இல்லை. (யாருப்பா அதை தள்ளிக் கொண்டு போனது?) அவரை நினைவு கூர்பவர்கள் யாராவது இருந்தால் என்னோடு சேர்த்து சிறுகதைகளைப் பற்றி ஓரிரு வரிகளாவது எழுதுங்கள்!

இணையத்தில் சுரேஷ் கண்ணன் புண்ணியத்தில் ஒரு சுமாரான சிறுகதை கிடைக்கிறது.

எனக்கு இன்னும் நினைவிருக்கும் சிறுகதைகளைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே.

தலைப்புச் சிறுகதை ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்‘. எண்பதுகளின் ஆரம்பத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு வேல் திருடு போய்விட்டது, கணக்கு பார்க்கப் போன அறநிலையத் துறை அலுவலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்று பரபரப்பாக இருந்தது. இன்று வரை கொலையாளி யார், வேல் எங்கே போனது என்று தெரியாது. இந்த சம்பவத்தை பின்புலமாக வைத்து ஒரு கதை; இறந்தவரின் மனைவி சாப்பாட்டுக்கே அல்லாடும் நிலை. கடைசி முயற்சியாக டெல்லிக்குப் போய் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்கிறார். இந்திரா காந்தி ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறார்.

வெல்லிங்டன் என்று ஒரு சிறுகதையில் நண்பன் ராணுவத்தில் சேரச் செல்கிறான், துணைக்கு கதையின் நாயகனும். இவன் கொஞ்சம் அறிவுஜீவி, இம்ப்ரஸ் ஆகும் ராணுவ அதிகாரி நீ ராணுவத்தில் சேர் என்கிறார்.

தி.ஜா.வை நினைவுபடுத்தும் ஒரு சிறுகதை. தி.ஜா. பைத்தியமான ஒரு எழுத்தாளன் தஞ்சாவூர் பக்கம் தி.ஜா.வின் பின்புலத்தை உணரப் பார்க்கிறான். அங்கே ஒரு மணமான பெண்ணோடு உறவு. கதை பேர் நினைவில்லை.

பதின்ம வயது அவனும் அவளும் ஒருவரை ஒருவர் நோக்க, பெற்றோர் அளவில் பெரிய சண்டை. சண்டை நெருப்பு அணைந்து கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்குகிறார்கள்.

ஊருக்குப் போன மனைவி சொன்ன நாளில் திரும்பி வரவில்லை என்று மனைவியை அடித்தே விடுகிறான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல மனைவி கை ஓங்குகிறது.

தனிக்குடித்தனம் போக விரும்பும் மனைவியை அடக்கும் கணவன் என்று ஒரு கதை.

எனக்குப் பிடித்த கதை கடைசிக் கதை. தீசத்தனம் நிறைந்த தம்பி அக்காவை சைட்டடிக்கும் பையனின் குடும்பத்தில் தனக்குத் தெரிந்த பயில்வானின் உதவி கொண்டு அடிதடிக்கிறான்.

உங்கள் யாருக்காவது நினைவிருந்தால் கட்டாயம் மறுமொழி எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: ஆர்.பி. ராஜநாயஹம் ரவிச்சந்திரனை நினைவு கூர்கிறார்.

ம.வே. சிவகுமார் – ராஜனின் அஞ்சலி

ma_ve_sivakumarஎண்பதுகளின் நடு துவங்கி தமிழின் வழக்கமான சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களையும் சு.ரா., க.நா.சு. போன்ற தீவீர இலக்கிய எழுத்தாளர்களையும் தாண்டி கிட்டத்தட்ட சுஜாதாவையும் தி.ஜானகிராமனையும் கலந்தவொரு நடையில் பல புது எழுத்தாளர்களை கல்கி, தினமணி கதிர் போன்ற பத்திரிகைகள் அறிமுகப்படுத்தின. அவற்றில் முக்கியமானவர்களாக எனது கவனத்தை ஈர்த்தவர்களாக ம.வே. சிவகுமார், ஜீவராமுள் பிரமுள், இரா. முருகன், பா. ராகவன், ரவிச்சந்திரன் போன்றோர் இருந்தனர். இவர்களது கதைகள் தமிழில் ஒரு இடைப்பட்ட பேரலல் எழுத்தை உருவாக்கின. இவர்களின் கதைகளை கல்கி தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

எளிய சுவாரசியமான நடையில் அமைந்திருந்த அவரது மத்திமர் கதைகள் அப்பொழுது என்னை வெகுவாக வசீகரித்தன. ஒரு சாதாரண வங்கி ஊழியரின் சினிமா நாடகக் கனவுகள் அது தொடர்பாக அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்று தனது அனுபவங்களையே அவர் பாப்கார்ன் கனவுகள் என்றொரு தொடராக எழுதினார். தினமணிக்கதிரில் வெளி வந்த அவரது வேடந்தாங்கல் அவரது முக்கியமானதொரு நாவல். நெய்வேலி குவார்ட்டர்ஸ்களில் ஆரம்பிக்கும் ஒரு இளைஞனின் விடலைப் பருவத்தில் இருந்து துவங்கும் நாவல் அது.

ம.வே. சிவகுமாரின் சிறுகதைகள் அப்பாவும் ரிக்‌ஷாக்காரரும் என்று தலைப்பில் தொகுக்கப் பட்டு வந்தன. கிழக்கு பதிப்பகம் சமீபத்திய சிறுகதைகளை பிரசுரித்துள்ளது என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் கமலஹாசன் எழுத்தாளர்களை தன் சினிமாக்களில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் மூலமாக அவர் தேவர் மகன் சினிமாவிலும் பணியாற்றினார். அதன் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களுக்குள் சென்றார். அதில் ஏற்பட்ட விரக்தியிலும் வெறுப்பிலும் வடக்கிருந்து உயிர் துறக்கப் போவதாக திண்ணை.காமில் தனது தற்கொலை முயற்சியை அறிவித்தார். அப்பொழுது அவரை நான் அழைத்துப் பேசினேன். தமிழ் நாட்டில் எழுத்தாளர்கள் என்று அல்ல எவரும் எதற்காகவும் எந்தவொரு அங்கீகாரத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் அவருக்கு உண்மையான விருது என்பது என்னைப் போன்ற வாசகர்கள் அவரை நினைவில் வைத்திருப்பது மட்டுமே என்பதைச் சொன்னேன். அவருக்கு அது பெருத்த ஆறுதலாக இருந்தது. அப்பொழுது வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவை ஒத்தி வைத்திருந்த சிவகுமார் இப்பொழுது எந்த திசை நோக்கி மறைந்தார் என்பது தெரியவில்லை. அவரது வேடந்தாங்கல் அவர் பெயரைச் சொல்லி நிற்கும்.

பா. ராகவன் அவரோடு நெருக்கமாக இருந்திருக்கிறார். அவர் சிவகுமாரை நினைவு கூரும் இரண்டு கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், ராஜன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: தென்றல் இதழில் சிவகுமாரின் ஒரு சிறுகதை (Registration Required)

சி.ஆர். ரவீந்திரன்

சி.ஆர். ரவீந்திரனைப் பற்றி நான் கேள்விப்பட்டது ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியல் (பல்வேறு வகையில் முக்கியமான, ஆனால் முழுமையான கலை வெற்றி கூடாத படைப்புகள்) வழியாகத்தான். ரவீந்திரனின் “ஈரம் கசிந்த நிலம்” இடம் பெறுகிறது. அவரது பட்டியலில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. சில சமயம் அவரது தேர்வுகள் ஏமாற்றம் அளிக்கின்றன. அந்த மாதிரி சமயங்களில் இதுவும் ஒன்று.

குத்தகைக்காரர்களுக்கே நிலம் என்று அரசு சட்டம் வந்தபோது கிராமங்களில் நில உரிமையாளர்களிடமிருந்த அதிகாரம் குத்தகைக்காரர்களுக்கு மாறியது. ஈரம் கசிந்த நிலத்தில் அந்தக் காலகட்டத்தை ரவீந்திரன் விவரிக்கிறார். நம்பகத்தன்மை உள்ள சித்தரிப்புதான், இருந்தாலும் எனக்கு அவ்வளவாக சுவாரசியப்படவில்லை. இத்தனைக்கும் எனக்கே இதைப் பற்றி கொஞ்சம் நேரடி அனுபவம் உண்டு. என் தாத்தா வயதான காலத்தில் நிலத்தை தானே பார்த்துக் கொள்ள முடியாமல் நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். போயே போச்சு. அந்த குத்தகைக்காரர் எப்போதாவது கண்ணில் தென்பட்டால் வணக்கம் சொல்வார், இரண்டு மூன்று வருஷத்துக்கு ஒரு முறை ஒரு பலாப்பழம் தருவார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் என் தாத்தாவுக்கு உஷ்ணப் பெருமூச்சுதான். அப்படி நேரடி அனுபவம் இருந்தாலும் இந்தப் புத்தகத்தில் ஒன்ற முடியவில்லை.

ஜெயமோகனிடமே இதன் முக்கியத்துவம் என்ன என்று கேட்டேன். நேர்மையான விவசாய சித்தரிப்பு, அந்த வகைப் புத்தகங்களுக்கு இது ஒரு பிரதிநிதி என்றார். எனக்கு நாகம்மாள்தான் அதற்கு சரியான பிரதிநிதி. இதில் பாத்திரப் படைப்பு எல்லாம் அரைகுறையாக இருக்கிறது. இந்தக் கதையை ஒரு கூட்டத்தின் கை உயர்ந்து இன்னொரு கூட்டத்தின் கை தாழும் எந்த சூழலிலும் எழுதலாம். நிலம் சார்ந்த சமூகத்தில் அரசு வேலைக்குப் போய் சம்பாதித்து உயர்பவர்கள், கிருஸ்துவர்களாக மாறி படிப்பும் வேலையும் பெற்ற “கீழ்” ஜாதியினர் என்று எதிலும் பொருந்தும். பாத்திரங்கள் அந்த நிலத்தில்/தளத்தில் அவ்வளவு ஆழமாக பதியவில்லை. விவசாயம் கிவசாயம் எல்லாம் பெரிய விஷயமில்லை.

ரவீந்திரனின் வேறு இரண்டு புத்தகங்கள் – ஓடைப்புல் மற்றும் காற்றே! கனலே! இதை விட உண்மையான சித்தரிப்பு உடையவை.

வானம் பார்த்த வனம், ரிவோல்ட் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் படித்தேன். எந்தக் கதையும் என்னைக் கவரவில்லை.

ஈரம் கசிந்த நிலம் எனக்கு நிறைவளிக்காவிட்டாலும் ரவீந்திரன் குறிப்பிட வேண்டிய எழுத்தாளர் என்றே கருதுகிறேன். என் கண்ணில் ஓடைப்புல் மற்றும் காற்றே! கனலே! ஆகிய புத்தகங்கள் ஜெயமோகன் பரிந்துரைக்கும் ஈரம் கசிந்த நிலத்தை விட சிறந்தவை. ஆர். ஷண்முகசுந்தரம் (நாகம்மாள்), பெருமாள் முருகன், வா.மு. கோமு என்று தொடரும் எழுத்தாளர் பரம்பரையில் அவருக்கும் ஒரு முக்கிய இடமுண்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

சார்வாகன் அஞ்சலி

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

என்று ஒரு அற்புதமான திருமூலர் கவிதை உண்டு. charvakanசார்வாகன் அந்தக் கவிதையின் முதல் இரண்டு வரியை எடுத்து யானையின் சாவு என்ற ஒரு நல்ல கதையாக எழுதி இருக்கிறார். சிறுகதை விட்டல்ராவ் தொகுத்த ‘இந்த நூற்றாண்டு சிறுகதைகள்‘ தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. நல்ல சிறுகதை, என்றாலும் என் anthology-இல் வராது. இருந்தாலும் அந்த சிறுகதையின் தாக்கத்தினால்தான் இந்த அஞ்சலியை எழுதுகிறேன். என் துரதிருஷ்டம், அந்த ஒரு சிறுகதையை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அழியாச்சுடர்கள் தளத்தில் அவரது சில சிறுகதைகள் கிடைக்கின்றன. யானையின் சாவு அளவுக்கு இல்லை என்றாலும் படிக்கலாம். படித்த இரண்டு மூன்று கதைகளை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாது – ஆனால் கனவுக்கதை, யானையின் சாவு, கடைத்தேறினவன் காதல் எல்லாம் ஒரு கருத்தை – மரத்தை மறைத்தது மாமது யானை, mob mentality, மாயாவாதம் – விளக்குவதற்காகவே எழுதப்பட்ட கதைகள் போலத் தெரிகின்றன. உத்தியோக ரேகை வேறு மாதிரி இருக்கிறது, அதில் பையனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று வருந்தும் அப்பாவின் சித்திரம் பிரமாதமாக வந்திருக்கிறது. எதுக்கு சொல்றேன்னா ஷிர்லி ஜாக்சனின் கதைகளை நினைவுபடுத்துகிறது. மொத்தத்தில் இன்னும் எழுதி இருக்கக் கூடாதா என்று நினைக்க வைக்கிறேன்.

‘யானையின் சாவு’ சிறுகதை ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகிறது. கனவுக்கதை சிறுகதை எஸ்ராவின் நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகிறது. கனவுக்கதை பற்றி பாவண்ணன் இங்கே அலசுகிறார்.

சாரு நிவேதிதா தினமணி பத்திரிகையில் பழுப்பு நிற பக்கங்கள் என்று ஒரு பத்தி எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் பல மாதங்களாக எழுதிக் கொண்டிருந்தாலும் நான் சமீபத்தில்தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் சார்வாகனைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. அந்தக் கட்டுரைக்கு சுட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அஞ்சலி எழுத வேண்டி இருக்கிறது. சாருவே ஒரு நல்ல அஞ்சலியை எழுதி இருக்கிறார்.

சார்வாகனுக்கு எழுத்தாளர் என்ற அடையாளத்தை விட தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை குணப்படுத்தும் உத்திகளைக் கண்டுபிடித்த மருத்துவர் என்ற அடையாளம்தான் பெரிதாம். அதற்காக பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

எழுத்தாளனுக்கு அஞ்சலி என்றால் அது அவன் எழுதியதைப் பற்றிப் பேசுவதுதான். ஆனால் ஒரே ஒரு கதையைப் படித்துவிட்டு என்ன பெரிதாக எழுத முடியும்? நற்றிணை பதிப்பகம் அவரது எழுத்துக்களை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறதாம், சென்னை போகும்போது வாங்கிப் படிக்க வேண்டும். என் வரையில் அதுதான் அஞ்சலி.

பிற்சேர்க்கை: யானையின் சாவு சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே படிக்கலாம். பிரபஞ்சன் எழுதிய அஞ்சலியை இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்