எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.
என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.
எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.
முதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.
நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.
எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.
பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.
பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.
வாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.
தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.
அப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.
அறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.
நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)
அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா? தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.
பக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.
ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.
14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.
சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...