சேதுப்பிள்ளையின் பங்களிப்பு அவரது தமிழ் நடைதான் என்று கருதுகிறேன். பிள்ளையின் தமிழ் கேட்கவும் படிக்கவும் சுகமாக இருக்கும். ஆனால் செயற்கையாகவும் இருக்கிறது. இன்று காலாவதி ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் திரு.வி.க., சாமிநாத சர்மா ஆகியோர் இதே போல அழகான, சுகமான தமிழில்தான் எழுதி இருக்கிறார்கள், என் கண்ணோட்டத்தில் அவற்றில் செயற்கைத்தனம் குறைவாக இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
சேதுப்பிள்ளையின் தமிழ் அன்றைய திராவிட இயக்கத்தினரின் – குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதியின் அலங்காரத் தமிழை ஒத்திருந்தது. அண்ணாவின் தாக்கம் சேதுப்பிள்ளையிடம் இருந்ததா இல்லை பிள்ளையின் தாக்கத்தால் அண்ணா அப்படி எழுதினாரா என்று தெரியவில்லை. என்ன, அண்ணாதுரையின் தமிழில் இந்த செயற்கைத்தனம் இன்னும் அதிகம். கருணாநிதியோ, அடே அப்பா, செயற்கைத்தனம்தான் வியாபித்திருக்கிறது.
சேதுப்பிள்ளையின் ஏதோ ஒரு கட்டுரை எங்களுக்கு பள்ளியில் தமிழ்ப் பாடமாக இருந்தது. கடற்கரையில் நின்று பாரதியார் சேதுப்பிள்ளை பாணியில் தமிழ் பேசுவார். எங்கள் வாத்தியார் ‘என்னா இவரு பாரதியார் தனியா கடற்கரையில் நின்னுக்கிட்டு தனக்குத் தானே பேசிக்கிட்டார்னு எழுதறார்? பாக்கறவன்லாம் பாரதியார் பைத்தியம்னு நினைச்சுக்க மாட்டான்?” என்று ஜோக்கடித்தார்.
பிள்ளையின் சிலப்பதிகாரக் கதை, சிலப்பதிகார விளக்கம் போன்றவை முன்னோடி எழுத்துக்கள் என்று கருதுகிறேன். இன்றும் சிலப்பதிகாரத்துக்கு நல்ல அறிமுகமாக இருக்கும்.
ஓவர் டு அஜயன் பாலா!
ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதியது.
ரா.பி. சேதுப்பிள்ளை: பிறப்பு: 02-03-1896, மறைவு: 25-04-1961
சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்டவர். தமிழ் பொழியும் பெரும் கொண்டல் என திரு.வி.க.வின் பாராட்டை பெற்றவர். உரைநடைத் தமிழுக்கு வளம் சேர்த்த தமிழர். தமிழர் தொன்மம், தமிழ்ப் பண்பாடு ஆகிய துறைகளில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருபதுக்கும் மேற்பட்ட நூல்ளை எழுதியவர் .
ராஜவல்லிபுரம் பிறவிபெருமாள் சேதுபிள்ளை நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரத்தில் பிறந்தவர். தந்தை பிறவிப்பெருமாள் பிள்ளை, தாயார் சொர்ணத்தம்மை. இருவருக்கும் பத்தாவது மகனாக பிறந்தவர். ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதரின் அருளால் பிறந்ததாக அவர்கள் நினைத்த காரணத்தால் சேது என பெயரிட்டனர். ஐந்தாம் வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்ப்ட்டார். பின் பாளையங்கோட்டை பள்ளியில் சேர்க்கப்ப்ட்டார். ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒரு போட்டியில் இவருக்கு முதல் பரிசாக கிடைத்த நூல் திருக்குறள். அதிலிருந்து திருக்குறளின் தமிழின்பத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்தார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் தொடர்ந்து சட்டக்கல்லூரியிலும் படித்து வழக்கறிஞராக தகுதி அடைந்தார்.
தொழில்தான் சட்டமே தவிர இவர் எண்ணமெல்லாம் தமிழாக மட்டுமே மணந்துகொண்டிருந்தது. கம்பனைப் படித்தார். ராமாயணச் சொற்பொழிவுகள் நடத்தினார். பிள்ளையவர்களின் சொற்பொழிவு தமிழ் எனும் பெருமழையில் நனைவது போல.
அதனால் அண்ணாமலை பல்கலைகழகம் இவரை தமிழ்ப் பணிக்கு அழைத்தது. தொடர்ந்து சென்னை பல்கலைகழகத்திலும் விரிவுரையாளராக பணியாற்றினார். இலக்கியம் ஆய்வு வரலாறு என பல துறைகளில் நூல்களை எழுதினார். திராவிடப் பொது நூல்கள், ஊரும் பேரும், தமிழின்பம் போன்றவை குறிப்பிடத் தக்கன. இவற்றுள் தமிழின்பம் நூலுக்கு சாஹித்ய அகாடமி விருதும் ஐயாயிரம் ரூபாய் பரிசும் கிடைத்தது. இவரது கடற்கரையினிலே எனும் நூல் திருவள்ளுவர் முதல் பாரதி வரை பலரும் கடலைப் பார்த்துப் பேசுவது போல முழுவதும் கற்பனையிலே எழுதப்பட்டது.
இவரது பணிகளைப் பாராட்டி தருமபுர ஆதீனம் இவருக்கு சொல்லின் செல்வர் எனும் பட்டம் வழங்கி கவுரவித்தது. சென்னை பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்
3 thoughts on “தமிழறிஞர் வரிசை: 13. ரா.பி. சேதுப்பிள்ளை”