தங்கர் பச்சான்

Thangar Bachan
ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆகிய முகங்களைத் தவிர தங்கர் பச்சானுக்கு இன்னொரு முகமும் உண்டு. எழுத்தாளர். அவரது ‘ஒன்பது ரூபாய் நோட்டு‘ நாவலையும் ‘குடிமுந்திரி‘, ‘வெள்ளை மாடு‘ சிறுகதைத் தொகுப்புகளையும் இது வரை படித்திருக்கிறேன். குடிமுந்திரி சிறுகதை என்றாவது நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் அதில் இடம் பெறும். ஒரே ஒரு படைப்பைப் படிக்க வேண்டுமென்றால் நான் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

அப்படி என்ன கதை? விவசாயக் குடும்பம். படிக்கும் பையனுக்கு ஷூ வாங்க வேண்டும். அவ்வளவுதான் கதை. இந்தச் சின்ன சட்டகத்தை வைத்து விவசாயத்தின் வீழ்ச்சி, அரசு வேலைக்குப் போகும் இடைநிலை ஜாதிகள், நகரமயமாகிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு என்ற சமுதாய மாற்றங்களை கோடி காட்டிவிடுகிறார். அவர் சொல்லாத இடங்களால்தான் கதை சிறக்கிறது.

‘வெள்ளை மாடு’ தொகுப்பிலும் தலைப்புக் கதையைக் குறிப்பிடலாம். பிரேம்சந்த் எழுதிய அற்புதமான “தோ பைலோன் கி கஹானி” கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது. இதுவும் சிம்பிளான கருதான். வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த வெள்ளை மாட்டை விற்க வேண்டி இருக்கிறது. பிறகு ஒரு நாள் அதை பார்க்கிறார்கள். அவ்வளவுதான்.

ஒன்பது ரூபாய் நோட்டு நல்ல நாவல். ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை. ஒரு கணத்தில் தன் மகன்களிடம் சண்டை போட்டுக்கொண்டு ஊரை விட்டும் போகும் மாதவர் தான் சேர்த்த சொத்து அத்தனையும் தன் பிள்ளைகள் கட்டி காக்காததை பார்த்துவிட்டு சாகிறார். மிக சரளமான நடை. கடலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் நம் கண் முன் கொண்டு வருகிறார்.

தங்கருக்கு தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் ஒரு இடம் உண்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்