ஐசக் அசிமோவின் ‘I, Robot’

Three Laws of Robotics

  1. A robot may not injure a human being or, through inaction, allow a human being to come to harm.
  2. A robot must obey orders given it by human beings except where such orders would conflict with the First Law.
  3. A robot must protect its own existence as long as such protection does not conflict with the First or Second Law.

issac_asimovமனிதர்களால் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது ஃப்ராங்கன்ஸ்டைன் காலத்திலிருந்து எந்திரன் சினிமா வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஒரு கரு. தன் கதை உலகத்தில் அந்த அச்சத்தைத் தவிர்க்கவே அசிமோவ் இந்த விதிகளை ஒரு சட்டகமாக வரையறுத்தார். இது என்ன பிரமாதம், சாதாரண காமன் சென்ஸ்தானே என்று தோன்றலாம். ஆனால் இதை வைத்துக் கொண்டு – ஏறக்குறைய கணிதத் தேற்றங்கள் போல இந்த மூன்று விதிகளிலிருந்து ஆரம்பித்து அசிமோவ் ஒரு புது உலகத்தையே படைத்திருக்கிறார்.

அவரது ரோபோக்கள் உலகத்தில் மீண்டும் மீண்டும் இந்த மூன்றே விதிகள் எப்படி ரோபோக்களின் செயல்களை பாதிக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறார். உதாரணமாக முதல் விதியை எடுத்துக் கொள்ளுங்கள். ரோபோவின் கண்ணெதிரில் ஒரு கொலை நடந்தால் அதை கொலைகாரனுக்கு சின்ன அடி கூட படாமல் எப்படித் தடுப்பது? ரோபோ நீதிபதியாக அமர்ந்திருக்கிறது, ஆயிரம் பேரைக் கொன்ற தீவிரவாதிக்கு எப்படி தண்டனை வழங்கும்? ஒரு மனிதன் ரோபோவை ‘தற்கொலை’ செய்து கொள்ள ஆணையிட்டால், அதை அது கடைப்பிடிக்க வேண்டுமா? அப்படி தன்னைத் தானே அழித்துக் கொண்டால் எதிர்காலத்தில் இன்னொரு மனிதனுக்கு வரும் கஷ்டங்களைத் தவிர்க்க முடியாமல் போகலாம். என்ன செய்வது? பீஷ்மருக்கும் துரோணருக்கும் கர்ணனுக்கும் முன்னால் இருந்த அதே இரண்டு சரியான அல்லது இரண்டு தவறான தேர்வுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விதான் அசிமோவின் ரோபோ சிறுகதைகளிலும் நாவல்களிலும் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன.

‘I, Robot’-வில் உள்ள சிறுகதைகள் நாற்பதுகளில் எழுதப்பட்டன. ஐம்பதுகளில் முதல் தொகுப்பு புத்தகமாக வந்தது. அதற்குப் பிறகு பல சிறுகதைகள், நாவல்கள் வந்துவிட்டன.

இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகள் Reason – சிந்திக்க ஆரம்பித்த ரோபோவால் தன்னை விட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த மனிதர்கள் தன்னைப் படைத்தார்கள் என்று நம்பமுடியவில்லை, அது ஒரு எனர்ஜி கன்வெர்டர்தான் தன்னைப் படைத்த கடவுள் என்று நம்புகிறது, ஒரு மதத்தை ஆரம்பிக்கிறது; Liar! – எப்படியோ மனிதர்களின் ஆழ்மன எண்ணங்களை ஒரு ரோபோவால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களை புண்படுத்தக் கூடாது என்பதற்காக அது பொய் சொல்கிறது! Evidence – ரோபோக்கள் பற்றி அச்சம் நிறைந்திருக்கும் காலத்தில் பொறுப்பான பதவிக்கான தேர்தலுக்கு நிற்கும் ஒரு வக்கீல் மனிதன் இல்லை, மனித உருவத்தில் இருக்கும் ரோபோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த வக்கீல் பொதுக் கூட்டத்தில் நைநை என்று நச்சரிக்கும் ஒரு மனிதனை கன்னத்தில் ஒரு அறை விடுகிறான். ரோபோக்கள் முதல் விதிப்படி மனிதனை காயப்படுத்த முடியாது என்பதால் அவன் சுலபமாக ஜெயிக்கிறான். ஆனால் அறை வாங்கியது மனிதன்தானா?

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF