பண்டிதமணி சிறந்த தமிழறிஞர். சைவப் பாரம்பரியத்தில் வந்தவர். தூய தமிழில் பேசி எழுத வேண்டும் என்று விடாமல் முயன்றவர். ஆனால் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றவர். மிருச்சகடிகம், சுக்ரநீதி போன்ற நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மஹோமஹோபாத்யாயர் என்று உ.வே.சா.வைத்தான் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இவருக்கும் அரசு அந்தப் பட்டத்தை அளித்திருந்தது. அபிராமணர்கள் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெறுவது அபூர்வம். அதிலும் தூய தமிழுக்காக முயலும் பலரிடம் அது பிற மொழி வெறுப்பாகவே மாறிவிடுவதைப் பார்க்கிறோம். இவர் இப்படித் தேர்ச்சி பெற்றதற்கும், பிராமணர்களுக்கே அனேகமாக வழங்கப்பட்ட மஹோமஹோபாத்யாயர் பட்டத்தைப் பெற்றதற்கும் ஒரு ஜே!
பண்டிதமணி பற்றி சோமலே எழுதிய ஒரு புத்தகமும் கிடைத்தது. இவர் போன்றவர்களின் தாக்கத்தை இன்று உணர்வது கொஞ்சம் கஷ்டம், ஆனாலும் இந்தப் புத்தகம் கொஞ்சம் உதவுகிறது.
ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதியது.
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்: பிறப்பு 16-10-1881, இறப்பு 24-10-1953
ஏழு மாத கல்வி கூட பள்ளியில் பயிலாமல் பன்னிரண்டு வருடங்கள் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர். மேலைசிவபுரி சன்மார்க்க சபையின் தோற்றுவாய். எண்ணற்ற மாணவர்களை தமிழ் கடலுக்குள் தள்ளி அவர்கள் முத்தெடுக்க காரணமாக இருந்தவர். அன்னைத் தமிழின் திருப்பாதங்களுக்கு எண்ணற்ற நூல்களை எழுதி காணிக்கையாக்கியவர். எத்தகைய சூழலிலும் மனம் தளராமல் எதிர்ப்புகளை துடுப்புகளாக்கி தமிழுக்காக வாழ்ந்த மாணிக்கக் குன்று. பண்டிதமணி என அனைவராலும் போற்றபட்டவர். முத்துகருப்ப கதிரேசன் செட்டியார்.
பூங்குன்றம் சங்க இல்க்கியத்தில் புகழ்பெற்ற நானிலம். யாவரும் கேளீர் என உலகையே தன்னுணர்வில் கரைத்த கணியன் பூங்குன்றனார் அவதரித்த திருத்தலம். இப்போது மகிபாலன்பட்டி என அழைக்கப்படும் செட்டிநாடுக்குட்பட்ட பகுதி. இந்த மகிபாலன் பட்டி எனும் பண்டைய பூங்குன்றம் எனும் ஊரில் பிறந்த பெருமைக்குரியவர் கதிரேசனார். தந்தை முத்துகருப்பன். தாயார் சிகப்பி. தன் மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப் பெற்ற காரணத்தால் பண்டிதமணி இளம் வயதில் பெரும் அவதியுற்றார். பள்ளிக் கல்வியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஆகியவை கற்றுத் தேர்ந்தாலும் நெடுநாள் நீடிக்கவில்லை. குடும்பச் சூழல் காரணமாக கல்வி கைதவறிப் போனது. பதினோரு வயதில் இலங்கை சென்றார். வாழ்க்கை அங்கும் வீதி நாயாக விரட்டியது. தந்தை இறந்ததும் மீண்டும் மகிபாலன்பட்டி திரும்பினார். தமிழ் ஆர்வம் துளிர்தத்து. சோழவந்தான் அரசஞ்சண்முகனாரிடம் தமிழை முறையாகப் படித்தார். உடலுக்குள் தமிழுணர்வு ஆறாக பெருக்கெடுத்தது. பதினான்கு வயதில் பண்டிதமணியின் தந்தை காலமானார். அதே ஆண்டில் அவரது இடது காலும், இடது கையும் வலுக்குறைந்தன. உடல் நலம் குறையக் குறைய அதற்கு மாற்றாக அறிவு பலத்தை பெருக்கும் ஆவல் அவரை உந்தி தள்ளியது. தருவை நாராயண சாஸ்திரியிடம் வடமொழி கற்றார்.
தொடர்ந்து அதன் மூலம் பெற்ற அறிவை தமிழ் கூறும் நல்லுலகம் பயனுறச் செய்வதில் முனைப்பு காட்டினார். இதனால் மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்), உதயண சரிதம், சுக்ரநீதி, சுலோசனை போன்ற நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் தமிழுக்குத் தொண்டு செய்தார்.
இது மட்டுமல்லாமல் தமிழில் உரைநடைக்கோவை எனும் தலைப்பில் பல கட்டுரைகள் அடங்கிய இரு தொகுதிகளையும், நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு, கதிர்மணி விளக்கம், பண்டிதமணி பாடல்கள், பண்டிதமணி கடிதங்கள் போன்ற நயமிக்க நேரடி தமிழ் நூல்களையும், மற்றும் திருவாசகம், திருவெம்பாவை போன்றவற்றிற்கு விளக்க உரைகளையும் எழுதியுள்ளார்.
தனக்கு இன்பமளித்த தமிழை பலருக்கும் உண்டாக்கும் வகையில் மதுரையின் நான்காம் தமிழ்சங்கம் போல மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை எனும் ஒன்றை உருவாக்கினார். தமிழ் பிரவேச, பண்டித, பாலபண்டித வகுப்புகளை உருவாக்கி எண்ணற்ற மாணவர்களுக்கு தமிழ் எனும் இன்ப அருவியை அறிமுகப்படுத்தினார்.
பண்டிதமணியாரின் தமிழ் அறிவை கேள்வியுற்ற அண்ணாமலை அரசர் முறையாக துவக்கக் கல்வி கூட பெற்றிராத அவரை அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆசிரியராக வரும்படி அழைத்து பணியமர்த்தினார். பின் பண்டிதமணி தன் அறிவால் படிப்படியாக உயர்ந்து பல்கலைகழகத்தின் தமிழ்த்துறைக்கே தலைவராக உயர்ந்தார்.
“பண்டிதமணி”, “முதுபெரும் புலவர்”, “சைவ சித்தாந்த வித்தகர்”, “மகாமகோபாத்தியாய” ஆகிய மிக உயரிய பட்டங்களைத் தம் வாழ்நாள் பணிகளுக்காகப் பெற்றார். ஏழ்மை சூழல், முறையான கல்வியில்லை, கைகால் ஊனம் என பல குறைகள் அவரை வீழ்த்த காத்திருந்த போதும் அவர் மூச்சாக நம்பியிருந்த அவரது தமிழும் தளராத தன்னம்பிக்கையுமே அவர் அடைந்த உயரங்கௌக்கெல்லாம் மூலகாரணம்.
இளம்பிள்ளை வாதத்தால் இருந்தது, அந்த
ஒண்டமிழ்ப் புலவர்க்கு ஒருகால் ஊனம்; இல்லை-
ஒண்டமிழ்ப் புலமையில் ஒருகாலும் ஊனம்!
வடமொழியும் வண்ணத் தமிழும் வீற்றிருந்தன விரல் நுனியில்
நற்கருத்தும் நகைச்சுவையும் குமிழியிட்டிருந்தன குரல் நுனியில்!
-பண்டிதமணி பற்றி கவிஞர் வாலி
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...