ஜான் க்ரிஷமின் ‘Rogue Lawyer’

john_grishamரொம்ப நாளாச்சு இந்த மாதிரி ஒரு மசாலா நாவலைப் படித்து.

க்ரிஷம் பல வருஷங்களாகவே போரடிக்கிறார், கிறுக்குத்தனமாக அவர் புத்தகங்களைப் படித்து நேரத்தை வீணடிக்கிறேன் என்று ஒரு பதிவில் எழுதி இருந்தேன். இந்த மாதிரி நாவல்களைத்தான் அவரிடம் எதிர்பார்க்கிறேன்!

கதையின் நாயகன் – வேறன்ன, ஒரு வக்கீல். எல்லாரும் கைவிட்டாலும் அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக வாதாட நீதிபதியே ஒரு வக்கீலை நியமிப்பார். மும்பையின் குண்டு வைத்த கசபுக்கும் வாதாட ஒரு வக்கீல் முன்வந்தால் எப்படிப் பார்க்கப்படுவானோ அப்படித்தான் இவன். அந்த மாதிரி கேஸ்களில் ஸ்பெஷலிஸ்ட். ஒரு கேஸில் கற்பழித்து கொலை செய்துவிட்டான் என்று ஒரு இளைஞனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். கேஸ் முழுக்க முழுக்க ஜோடனை. இன்னொரு கேசில் இவனுடைய கட்சிக்காரன் மாஃபியா ரௌடி. தூக்குத்தண்டனை கொடுத்தாயிற்று. இவன் அப்பீல் மேல் அப்பீல் செய்து கொண்டிருக்கிறான். இன்னொரு கேசில் ஆர்வக்கோளாறு போலீஸ் கிழவன் ஒருவன் வீட்டில் புகுந்து தாக்குகிறது. இன்னொரு கேசில் குத்துச்சண்டை வீரன் கடுப்பில் ரெஃப்ரியை அடிக்க, ரெஃப்ரி இறந்துவிடுகிறார்.

ஒவ்வொரு கேசிலும் – குறிப்பாக ஆர்வக் கோளாறு போலீஸ் கேசில் குறுக்கு விசாரணை கலக்கலாக இருக்கிறது. பெரிதாக விவரிக்க விரும்பவில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்