வினோதத் திருடன் நிக் வெல்வெட்

nick_velvetஎட்வர்ட் டி. ஹோக் மர்மக் கதை எழுத்தாளர். அந்த வட்டாரத்தில் ஓரளவு பிரபலமானவர்.

அவரது சீரிஸ் நாயகன் நிக் வெல்வெட். வெல்வெட் திருடன். ஆனால் அவன் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடமாட்டான். பயனற்ற பொருட்களை, பண மதிப்பில்லாத பொருட்களை மட்டும்தான் திருடுவான். வினோதத் திருட்டுகள். அவை யாருக்காவது அந்த நேரத்தில் தேவைப்படுகிறது, அதற்காக நிறையப் பணம் கொடுத்து இவனைத் திருடித் தர வேலைக்கு அமர்த்துகிறார்கள். உதாரணமாக ஒரு நீச்சல் குளத்திலிருந்து தண்ணீரைத் திருடித் தரும்படி ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு முடித்துத் தருகிறான். இன்னொரு கதையில் சினிமா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் ஒரு prop – எலி பொம்மையைத் திருட வேண்டி இருக்கிறது. ஒரு பைசா நாணயம் (அபூர்வ நாணயம் அல்ல), சர்க்கஸ் போஸ்டர் ஒன்று, மிருகக் காட்சி சாலியிலிருந்து ஒரு புலி, ஒரு பூனை, ஒரு பேஸ்பால் டீம், வீட்டிலிருந்து வெளியே போடப்படும் குப்பை, பண மதிப்பே இல்லாத ஒரு கிரீடம் என்று பலவற்றைத் திருடித் தருகிறான். ஒரு கதையில் அவனே ‘திருடப்படுகிறான்’! எல்லாக் கதைகளிலும் இவற்றை ஏன் திருட வேண்டி இருக்கிறது என்று அவனே கண்டுபிடித்துத்தான் பிரச்சினைகளிலிருந்து மீள வேண்டி இருக்கிறது.

edward_d_hochநிக் வெல்வெட் கதைகள் எதையும் நான் நல்ல சாகசக் கதை என்றோ, நல்ல துப்பறியும் கதை என்றோ வகைப்படுத்தமாட்டேன். அவற்றைக் காப்பாற்றுவது அவன் திருடும் பொருட்கள்தான். இவற்றைத் திருடி என்ன பயன் என்று யோசிக்க வைக்கும் அந்த ஒரு நிமிஷம்தான் இந்தக் கதைகளின் கவர்ச்சி. அது உங்களையும் கவரும் என்றால் மட்டும் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகசக் கதைகள்