தாராபாய் சத்ரபதி சிவாஜியின் மருமகள். சிவாஜியின் இரண்டாவது மகனான ராஜாராமின் மனைவி. தாராபாயின் அத்தை சிவாஜியின் மனைவிகளில் ஒருவர். ஜலதீபம் படித்தவர்களுக்கு பரிச்சயமான பேராகத்தான் இருக்கும்.
மராத்திய அரசை சிவாஜியின் இறப்புக்குப் பிறகு உயிரோடு வைத்திருந்ததில் தாராபாயின் பங்கு முக்கியமானது. பிரஜ் கிஷோர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் – Tarabai and Her Times – தாராபாயின் காலத்தில் மராத்திய அரசு எப்படி உயிர் பிழைத்தது, எப்படி மீண்டும் வலுக் கொண்டது, எப்படி பேரரசாக மாறியது என்பதை விவரிக்கிறது. இது பிரஜ் கிஷோரின் முனைவர் பட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாம். அதை ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார்.
பிரஜ் கிஷோரின் தனிப்பட்ட எண்ணங்கள் இதில் ஊடுறுவவதை அவரால் முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை. அவரது மராத்திய சார்பு, மராத்திய அரசிலும் ஷாஹூ அரசராவதே சரியானது போன்றவை தெரிகின்றன. இருந்தாலும் நடுநிலையோடு எழுத முயற்சித்திருக்கிறார்.
ஔரங்கசீப் தென்னிந்தியாவை மொகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று கடுமையாக முயன்றார். அதற்குத் தடையாக இருப்பது பீஜப்பூர் அரசோ கோல்கொண்டா அரசோ அல்ல, மராத்தியர்களே என்பதை அவர் உணர்ந்திருந்தார். சிவாஜி இறப்புக்குப் பிறகு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று ஔரங்கசீப் முழுமூச்சாக மராத்தியர்களைத் தாக்கினார். சிவாஜிக்குப் பிறகு அரசனான சாம்பாஜியை (சம்புஜி என்று எழுத வேண்டுமோ என்னவோ தெரியவில்லை) போரில் வென்று சாம்பாஜியை சிறைப்பிடித்தார். முஸ்லிமாக மாறி மொகலாயப் பேரரசின் மேலாண்மையை ஏற்கும் குறுநில மன்னனாகலாம் என்று ஆசை காட்டியபோது சாம்பாஜி மறுக்க, சாம்பாஜி மிகக் குரூரமான முறையில் கொல்லப்பட்டார். ஆனால் சாம்பாஜியின் மகனான ஷாஹூ, மற்றும் மனைவி யேசுபாய் ஆகியோரை வீட்டுக் காவலில் வைத்து மரியாதையோடு நடத்தி இருக்கிறார். யேசுபாய் சாம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டதும் தான் சாம்பாஜியைப் பிரிய விரும்பவில்லை என்று தானே போய் தன் குழந்தையோடு சரணடைந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில சாம்பாஜியின் தம்பி ராஜாராம் (இவரை சாம்பாஜி சிறையில் வைத்திருந்தார். சிறையில்தான் தாராபாயோடு திருமணம் எல்லாம்) பொறுப்பேற்றார். ஆனால் மொகலாயர்களை எதிர்க்க முடியாமல் செஞ்சிக் கோட்டைக்கு சென்றார். அங்கும் மொகலாயர்கள் துரத்த அங்கிருந்து தப்பி தஞ்சாவூருக்குச் சென்றார். சிறிய அளவில் மொகலாயர்களை எதிர்க்க ஆரம்பிக்கும்போது இறந்துவிட்டார்.
இப்போதுதான் தாராபாயின் உச்சக்கட்டம். கிட்டத்தட்ட 15 வருஷங்களில் தாராபாய் ஏறக்குறைய அழிந்து போன மராத்திய அரசை மீண்டும் உயிர் கொள்ள வைத்திருக்கிறார். இடைவிடாத தாக்குதல்கள், கோட்டைகளைப் பிடித்தல் என்று விடாமல் முயன்று கொண்டே இருந்திருக்கிறார்.
அன்றைய மராத்தியர்களுக்கு சிவாஜி ஏறக்குறைய தெய்வம். சிவாஜியின் மகன், மருமகள் என்றுதான் எல்லாருக்கும் மதிப்பு. இளைஞனாக வளர்ந்துவிட்ட ஷாஹூ விடுதலை செய்யப்பட, இப்போது தாராபாயை ஆதரிப்பதா, இல்லை ஷாஹூவையா என்று குழப்பம், பூசல்கள், ஏன் போரே கூட நடக்கிறது.
பாலாஜி விஸ்வநாத் (முதல் பேஷ்வா)வின் திறமையால் கனோஜி ஆங்கரே உட்பட்ட தாராபாயின் ஆதரவாளர்கள் சிலர் கட்சி மாறுகிறார்கள். ஷாஹூவின் அரவணைத்து செல்லும் குணம் அவர் கட்சிக்கு பலத்தை சேர்க்கிறது. மெதுமெதுவாக ஷாஹூ மராத்திய அரசராக ஏற்கப்படுகிறார். ராஜாராமின் இன்னொரு மகன் (இவர் பெயரும் சாம்பாஜிதான்) கோலாப்பூரில் இருந்து தெற்குப் பகுதிகளை ஆட்சி செய்கிறார்.
ஷாஹூவுக்கு மகன் இல்லை. அவரது கடைசி காலத்தில் தாராபாய் ஒரு பையனைக் கொண்டுவந்து இவன் ராஜாராமின் பேரன் என்று சொல்லி அவனை ராஜாவாக்குகிறார். ஆனால் பேஷ்வாக்கள் அப்போது மிகவும் பலமாக இருந்தார்கள், தாராபாயால் மீண்டும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லை.
தாராபாயின் பலவீனங்களைப் பற்றி பிரஜ் கிஷோர் நிறையவே பேசுகிறார். அவரது அதிகார ஆசைதான் அவரை ஷாஹுவை எதிர்க்க வைத்தது, அது தவறு என்கிறார். அரசியலில் உரிமையாவது கிரிமையாவது? சிவாஜிக்கு என்ன உரிமை இருந்தது? தாராபாய் ஆணாக இருந்திருந்தால் ஷாஹுவால் வென்றிருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
புத்தகத்தில் எனக்கு takeaway என்பது அன்றைய சாதாரண மக்களின் நிலைதான். மொகலாயப் படைகளும் மராத்தியப் படைகளும் நிஜாமின் படைகளும் மாறி மாறி போரிட்டுக் கொண்டிருந்தால் கிராமத்து விவசாயிகளும் சிறு வணிகர்களும் பிழைப்பது எப்படி? கொள்ளை அடிப்பது வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது.
இதெல்லாம் வரலாற்றில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும்தான்.
தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு
Like this:
Like ஏற்றப்படுகின்றது...