பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள்

bernard_cornwellகார்ன்வெல் நல்ல மசாலா எழுத்தாளர். விறுவிறுப்பான சரித்திரக் கதைகளை எழுதுபவர். இந்த நான்கு நாவல்களில் (Harlequin அல்லது Archer’s Tale, Vagabond, Heretic, 1356) அவர் 1300களின் நடுப்பகுதியில் தொடங்கிய 100 Years War-ஐ பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார்.

100 Years War நூறு வருஷங்களுக்கும் மேலாக, ஐந்தாறு தலைமுறைகளாக இங்கிலாந்துக்கும் ஃப்ரான்ஸுக்கும் நடந்த போர். இங்கிலாந்தின் மன்னர் பரம்பரை தாய் வழியாக ஃப்ரான்சுக்கு உரிமை கொண்டாடியது. அதனால் ஏற்பட்ட போர். முதல் பாதியில் இங்கிலாந்து பெருவெற்றி பெற்றாலும், கடைசியில் ஃப்ரான்ஸ் வென்று இங்கிலாந்து மன்னர்களை இங்கிலாந்திலேயே முடக்கியது.

longbow_crossbowஇந்தப் போர்களில் longbow என்று அழைக்கப்பட்ட (ராமன் கையிலிருக்கும் வில்தான் longbow), ஆளுயுர வில்தான் இங்கிலாந்துக்கு முதலில் வெற்றிகளைத் தேடித் தந்தது. ஃப்ரென்சுக்காரர்கள் அப்போது பெரும்பாலும் குதிரை மீதிருந்து போர் புரியும் வீரர்களைத்தான் (knights) தங்கள் பிரதான பலமாக வைத்திருந்தார்கள். ஆங்கிலேய longbow வில்லாளிகள் எதிரிகளின் குதிரைகள் மீது அம்புகளை எய்து அவர்களை சுலபமாக வெற்றி கொள்ள முடிந்தது. ஃப்ரென்சுக்காரர்களும் விற்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் பயன்படுத்தியது crossbow. அவை இன்னும் தூரம் செல்லக் கூடிய அம்புகளை எய்தாலும் அவற்றைப் பயன்படுத்துவது கஷ்டம். crossbow வில்லாளிகள் ஒரு அம்பு விடுவதற்குள் longbow-காரர்கள் நான்கு அம்புகளை எய்ய முடிந்ததாம்.

கதையின் நாயகன் தாமஸ். வில்லாளி. இங்கிலாந்தின் patron saint ஆன புனித ஜார்ஜ் கையிலிருந்த ஈட்டியைக் கைப்பற்ற தாமசின் அப்பா கொல்லப்படுகிறார். அப்போது வில்லாளியாக மாறி, அந்த ஈட்டி, holy grail (ஏசுவை சிலுவையில் அறைந்தபோது கொட்டிய அவரது ரத்தம் இந்த சட்டியில் பிடிக்கப்பட்டது என்று ஐதீகம்) போன்றவற்றை தேடிக் கொண்டிருக்கும் எதிரிகளோடு பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். அவனுடைய சாகசங்கள், போர்கள் ஆகியவை இந்த நாவல்கள் மூலம் விவரிக்கப்படுகின்றன. பல சரித்திர நிகழ்ச்சிகள் (Crecy போர், Poitiers போர்) மிக சுவாரசியமான முறையில் காட்டப்படுகின்றன.

புத்தகத்தில் என்னைக் கவர்ந்தவை அன்றைய நகர அமைப்புகள். ஒவ்வொரு நகரமும் தன் பாதுகாப்புக்காக ஒரு கோட்டையை எழுப்பிக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிலம்தான் அந்தஸ்து, பணத்தை அளிக்கிறது. ஆனால் சுயமாக சம்பாதித்து (வியாபாரம்தான் ஒரே வழி) பணக்காரன் ஆனாலும் அந்தஸ்து வராது. இரண்டாதாக படை அமைப்பு. பத்து பேர் கொண்ட படை இருந்தால் அனேகமாக பிரபு. கோட்டையைக் கைப்பற்ற ஆறு பேரால் கூட முடியும். நூறு வில்லாளி இருந்தால் அது பெரிய படை. அவர்களால் ஒரு நகரத்தைப் பிடிக்க முடியும். ஐயாயிரம் பேர் இருந்தால் அது மாபெரும் படை. இது உண்மையாகத்தானே இருக்க முடியும்? தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துக்கு எத்தனை பேர் அடங்கிய படையை கூட்டிச் சென்றிருப்பான்? சில நூறுகள்? ஆயிரம் பேர்?

இவை வணிக நாவல்கள்தான். இவை காட்டும் சரித்திரமும், வரலாற்று நிகழ்ச்சிகளும் நமக்கெல்லாம் அன்னியமானவைதான். ஆனாலும் பாத்திரங்கள் சுவாரசியமானவர்கள். போர்கள், அமைப்புகளின் சித்திரம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அதனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்