ரோம் பேரரசின் சிசரோ – அரசியல்வாதி, பேச்சாளர், வக்கீல்

சீசர்கள் மன்னர்களாக ஆகும் வரை ரோம் பேரரசில் மீண்டும் மீண்டும் நல்ல தலைவர்கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். அந்த நீண்ட பாரம்பரியத்தில் சிசரோவும் ஒருவர். சிசரோவை நாயகனாக வைத்து ராபர்ட் ஹாரிஸ் ஒரு trilogy-ஐ எழுதி இருக்கிறார் – Imperium (2006), Conspirata aka Lustrum (2009), Dictator (2015). விறுவிறுப்பான மசாலா நாவல்கள். ஆனால் சாண்டில்யன் போல ஒரு வரியை எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட fantasy-கள் அல்ல. அனேகமாக எல்லா நிகழ்ச்சிகளுமே நடந்தவைதான்.

என்னைக் கவர்ந்தவை அன்றைய ரோமின் அரசியல் சித்தரிப்புகள்தான். அன்றைய ரோமில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறக்காதவர்கள் சுலபமாக அதிகாரத்தை அடையமுடியாது. பிரபுக்களுக்குமே அதிகாரத்தை அடைய சில வழிகள்தான் இருந்தன – தானே முன்னின்று படை திரட்டி அதைக் கொண்டு பிற நாடுகளை வெல்வது அல்லது ரோமைப் பாதுகாப்பது, பேச்சுத் திறமை, பணம். பிரபுக்களுக்கு இருந்த லட்சியவாதம் எல்லாம் குறைந்துகொண்டே போய் இன்று அதிகாரத்துக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் பெருகிவிட்டனர். அரசியல் சட்டம் அதிகாரக் குவிப்பைத் தவிர்க்க என்னென்னவோ விதிகளை வகுத்திருந்தாலும் அவற்றை வளைப்பது எப்படி என்பது எல்லாருக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. சுதந்திரம் கிடைத்த பிறகு அறுபதுகளின் இந்தியா மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ciceroசிசரோ பிரபு மாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்தவர். பணக்காரர் இல்லை. பணத் தேவைகளுக்காக டெரன்ஷியாவை மணக்கிறார். வக்கீலாக புகழ் பெற ஆரம்பித்திருக்கிறார். நாவல் இங்கேதான் தொடங்குகிறது. கன்னாபின்னாவென்று திருடி இருக்கும் சிசிலியின் கவர்னர் வெர்ரஸ் மீது கேஸ் போட்டு ஜெயிக்கிறார். அந்த வெற்றியை மூலதனமாக வைத்து செனட்டர் ஆகிறார். அன்றைய ரோமின் முடிசூடா மன்னர்களான பாம்பி, க்ராஸ்ஸஸ், முன்னால் வந்து கொண்டிருக்கும் ஜூலியஸ் சீசர் ஆகிய மூவருக்கும் நடுவில் ஒரு பக்கம் சேர வேண்டிய நிலை. பாம்பி பக்கம் சேர்ந்து ரோமின் கான்சல் (கிட்டத்தட்ட ஜனாதிபதி) ஆகிறார். அப்போது ஒரு சதியைக் கண்டுபிடித்து சதிகாரர்களை சட்டத்தை கொஞ்சம் வளைத்து தூக்கிலிடுகிறார். ஆனால் அதன் விளைவாக க்ளோடியஸ் என்பவன் இவரை எதிர்க்க, நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை. சீசருக்கும் பாம்பிக்கும் நடுவே போர் மூள்கிறது. சிசரோ பாம்பி பக்கம், ஆனால் பாம்பி தோற்கிறார். சீசர் சிசரோவை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைக்கிறார். சீசர் அரசராக விரும்புவதும் அதற்காக ஆதரவு இருப்பதும் தெரிகிறது. மன்னராட்சியை வெறுக்கும் சிசரோவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் சீசர் கொல்லப்பட்டதும் ப்ரூட்டஸ் கட்சியில் சேர்கிறார். மார்க் ஆண்டனி வெல்லும்போது கொல்லப்படுகிறார்.

robert_harrisஇதெல்லாம் சரித்திரம். இவற்றை மிக அருமையாக நாவல்களாகக் கொண்டு வந்திருக்கிறார் ஹாரிஸ். சிசரோ அவரது நாயகன், அதனால் சிசரோவின் சந்தர்ப்பவாதத்தை கொஞ்சம் குறைத்துக் காட்டுகிறார் என்று நினைக்கிறேன். வேறு வழி இல்லாமல் சில முடிவுகளை எடுக்கிறார் என்று காட்டுவது முழு உண்மையாக இருந்திருக்க முடியாது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இன்றைய, நேற்றைய இந்திய அரசியல் சூழ்நிலையை நிச்சயம் நினைவுபடுத்தும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

தொடர்புடைய பக்கம்: சிசரோ பற்றிய விக்கி குறிப்பு