மோனிகா ஃபெல்டன் பிரிட்டிஷ் பெண். எம்.பி.யாக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். 1955-56 வாக்கில் இந்தியா வந்து ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்றிருக்கிறார். இரண்டு மூன்று வருஷம் இந்தியாவில் தங்கி, ராஜாஜியை அடிக்கடி சந்தித்திருக்கிறார். அந்த நினைவுகளைத்தான் ‘I Meet Rajaji’ என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.
Intimate Portrait என்று சொல்வார்கள். இந்தப் புத்தகத்தின் charm அதுதான். பெரிசு அவ்வப்போது செய்யும் குசும்பு, விடாமல் செய்த முயற்சிகள், நேருவை விமர்சிக்கும்போதும் அதன் ஊடாகத் தெரியும் அவர்களது பரஸ்பர அன்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் முறை ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்த ஒருவரின் நினைவுகள்.
ராஜாஜி அப்போது அரசியலிலிருந்து விலகி இருந்த நேரம். தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஏறக்குறைய வெளியேற்றப்பட்டிருந்தார். வியாசர் விருந்து, ராமாயணம் எல்லாம் அப்போது வெளியாகி இருந்தன. அவருக்கு வாழ்க்கை வரலாறு போன்றவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் மோனிகா ஃபெல்டனோடு நட்பு உருவாகி இருக்கிறது. முதலில் மரியாதைக்காக சந்தித்திருப்பார், மோனிகா கண்ணில் தான் ஒரு ஹீரோ என்பது அந்த நட்பு உருவாக வழிவகுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அந்தக் கட்டத்தில் ராஜாஜி பெரிதாக எதையும் செய்யவில்லை. அதனால் இன்றைக்கு நமக்கு சுவாரசியமாக இருக்கக் கூடிய வம்புகள் எதுவும் இல்லை. காமராஜின் பேர் ஒரே ஒரு இடத்தில் வருகிறது. நேருவை விமர்சித்தாலும் அடக்கித்தான் வாசித்திருக்கிறார். லைசன்ஸ் கோட்டா பர்மிட் ராஜ் என்று கடுமையான வார்த்தைகள் இல்லை. நேருவும் ராஜாஜியின் விமர்சனத்துக்கு பதிலாக தான் ராஜாஜியை பெரிதும் மதிப்பதாகவும், பெரிசு கொஞ்சம் தாட்சணியம் காட்ட வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்.
ராஜாஜி அப்போது சென்னையில்தான் வசித்தார். அவருடைய நேரம் எல்லாம் ஸ்வராஜ்யா பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதிலும் அவ்வப்போது கூட்டங்களில் பேசுவதிலும்தான் போய்க் கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் எல்லாரும் கிழவர்கள். மோனிகா உடனிருந்த இரண்டு மூன்று வருஷங்களில் அவருடைய நண்பர்கள் சிலர் இறந்திருக்கிறார்கள். ராஜாஜிக்கும் ஆரோக்கியம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. வாழ்க்கை வரலாறு என்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இந்த நிலையில் அவரை தினமும் தேடி வந்து பேசும் ஒரு பெண்ணோடு அவருக்கு நட்பு உருவாகாதா என்ன?
அந்தக் காலத்தில் ராஜாஜி அணு ஆயுதங்களை உலகம் கைவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்தார். மோனிகாவும் இதில் தீவிரமாக இருந்தார். ஆனால் ராஜாஜி அரசியல் அதிகாரம் இல்லாத ஒரு வயதான கிழவனால் எதையும் பெரிதாக கிழித்துவிட முடியாது என்பதை மோனிகாவை விட நன்றாகவே உணர்ந்திருந்தார். World Peace Council மாதிரி சில அமைப்புகளுக்கு தந்தி அனுப்புவது, நியூ யார்க் டைம்ஸ் மாதிரி பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவது, குருஷ்சேவுக்கு கடிதம் எழுதுவது இது மாதிரி முயற்சிகளை செய்து கொண்டிருந்தார். குருஷ்சேவ் இவருடைய கடிதங்களுக்கு தொடர்ச்சியாக பதில் எழுதி இருக்கிறார். காந்தி மாதிரியே சின்னச் சின்ன வெற்றிகளுக்கு முயன்றிருக்கிறார். ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு சோதனைகளை குருஷ்சேவ் ஒரு வருஷம் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்.
ராஜாஜிக்கு அப்போது ஓரளவு fan following இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது ராஜாஜியின் பழைய நண்பர்கள், வயதானவர்கள், பிராமணர்களோடு குறுகிவிட்டதோ என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் கல்லூரி நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசி இருக்கிறார். மாறாக ஹைதராபாத், கல்கத்தாவில் அவரைப் பார்க்க, அவர் சொல்வதைக் கேட்க இளைஞர்கள், ஏழைகள் கூடி இருக்கிறார்கள்.
ராஜாஜி நேருவுக்கு சமமான ஆகிருதி உள்ள தலைவர் இல்லாதது நேருவை பலவீனப்படுத்துகிறது என்று நினைத்திருக்கிறார். ஒரு இடத்தில் சொல்கிறார் – காந்தி இருந்திருந்தால் பின்னணியில் அவரது தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். படேல் போய்விட்டார்; ஆசாத் அவ்வளவு பயன்படமாட்டார். (useless என்று சொன்னதாக நினைவு). நானோ ஓய்வு பெற்றுவிட்டேன். யாராலும் நேருவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.
1959-இல் ஸ்வதந்திரா கட்சி அறிவிப்புடன் புத்தகம் முடிகிறது.
புத்தகம் எல்லாருக்குமானது இல்லை. மோனிகா ராஜாஜி ஒதுங்கி இருந்த நாட்களைத்தான் விவரிக்கிறார். அதனால் சுவாரசியம் குறைவு. ஆனால் அவரது ஆளுமை வெளிப்படுகிறது. என் புத்தக அலமாரிக்காக நான் வாங்குவேன்.
நாரண. துரைக்கண்ணனும் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். குறிப்பாக சொல்ல ஒன்றுமில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்
தொடர்புடைய சுட்டி: மோனிகா ஃபெல்டன் பற்றிய விக்கி குறிப்பு