பிடித்த சிறுகதை – ஜெயமோகனின் ‘பழைய பாதைகள்’

hemachandranநான் வளர்ந்து வந்த காலத்தில் கம்யூனிசம் – குறைந்த பட்சம் சோஷலிசம் – கவர்ச்சிகரமான அரசியல் தத்துவம். ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்றால் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பதின்ம வயதுகளிலேயே இது வேலைக்காகாத அரசியல் தத்துவம் என்று தோன்றிவிட்டது. தனி மனித உரிமைகளை, குறிப்பாக சொத்துரிமையைக் காக்காத எந்த சமூகமும் உருப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இது போன்ற கதைகளைப் படிக்கும்போது சொத்துரிமையை தூக்கிப் பிடிப்பதன் போதாமை தெளிவாகத் தெரிகிறது. என் இளமைப் பருவத்தில் கம்யூனிசத்துக்கு இருந்த கவர்ச்சியும் என்னவென்று புரிகிறது. காந்தீய வழி, அகிம்சை எல்லா நேரத்திலும் சரிப்படாது என்பதும் தெரிகிறது.

பழைய பாதைகள் அறம் சிறுகதைகளோடு தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. ஹேமசந்திரன் போன்ற ஆளுமைகள் நம்மூர் அரசியலில் அருகிக் கொண்டே போகிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

மஹாபாரதச் சிறுகதை – கட்டாய ஓய்வு

தமிழ் ஹிந்து தளத்தில் இன்னுமொரு மஹாபாரதப் பின்னணிச் சிறுகதை வெளியிருக்கிறது.அவர்களுக்கு என் நன்றி!

எத்தனை திருத்தினாலும் திருப்தியே இருப்பதில்லை. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை, எனக்கு கதை எல்லாம் எடிட் செய்யப்படாத திரைப்படம் மாதிரிதான் இருக்கிறது. என் வேலை எல்லாம் எதைக் காட்டுவது, எதை வெட்டுவது என்று தீர்மானிப்பது மட்டும்தான். இங்கே பதித்திருக்கும் version-இல் கர்ணனும் சகுனியும் இன்னும் கொஞ்சம் பேசுகிறார்கள்.


கட்டாய ஓய்வு

நாகக் கொடி பறந்த கூடாரத்தின் வாசலின் நின்றிருந்த இரண்டு காவல் வீரர்களும் கர்ணனைக் கண்டதும் ஈட்டிகளைத் தாழ்த்தினர். ஒன்பது நாள் போருக்குப் பின்னும் ஈட்டிகள் பளபளவென்றே இருந்ததை கர்ணன் கவனித்தான். சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தபோது துரியோதனன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். சகுனி காலை நீட்டி ஒரு திண்டில் சாய்ந்து கண்களை மூடி ஏறக்குறைய மோன நிலையில் ஆழ்ந்திருந்தார். துச்சாதனன் ஒரு தூணில் சாய்ந்திருந்தான். அவன் மேலாடை தரையில் கிடந்தது. அவன் கையில் இருந்த மதுக் கிண்ணம் வெறுமையாக இருந்தது. அவன் கண்கள் மிகவும் சிவந்திருந்தன. அருகே ஒரு பீடத்தில் பெரிய தாமிரக் குடுவை இருந்தது.

துரியோதனனைக் கண்டதும் கர்ணன் முகம் வழக்கம் போலவே மலர்ந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக கர்ணனைக் கண்டதும் துரியோதனனின் முகம் எரிச்சலில் முகம் சுளித்தான். ‘எல்லாம் உன்னால்தான் அறிவு கெட்டவனே!’ என்று இரைந்தான். சகுனி கண்களைத் திறக்காமலே புன்னகை புரிந்தார். கர்ணன் ‘ஆம், தவறு செய்துவிட்டேன் துரியா. இனி ஒரே வழிதான் இருக்கிறது, நீ மறுத்தாலும் அதைத்தான் செய்யப் போகிறேன். உன்னிடம் தகவல் சொல்லவே வந்தேன்’ என்றான்.

‘முட்டாளே, நமக்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை! நீ என்ன, என்ன கிழித்துவிடப் போகிறாய்?’ என்று எரிச்சல் கொஞ்சமும் குறையாத குரலில் துரியோதனன் கத்தினான். ‘நீ மறுக்கக் கூடாது துரியா’ என்று கர்ணன் ஆரம்பித்தான். ‘சொல்லித் தொலை மூடா, பீடிகைக்கெல்லாம் என்ன அவசியம்!’ என்று துரியோதனன் மீண்டும் கத்தினான். கர்ணன் கனைத்தான். ‘வந்து, வந்து…’ என்று ஆரம்பித்தான், ஆனால் தொடர முடியவில்லை. சகுனியின் புன்னகை பெரிதாகியது. அந்தப் புன்னகை துரியோதனனை மேலும் சினம் கொள்ள வைத்தது. ‘பெரிய மதியூகி என்று பேர்தான், சிக்கலை அவிழ்க்க எந்த வழியும் தெரியவில்லை. இதில் புன்னகை வேறு!’ என்று இரைந்தான். துச்சாதனன் அருகே போய் அங்கே இருந்த மதுக் குடுவையிலிருந்து ஒரு கோப்பை காந்தார மதுவை ஊற்றி ஒரே மூச்சில் குடித்தான். துச்சாதனன் உடனே அந்தக் குடுவையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்.

‘நான் மதியூகியாய் இருந்து என்ன பயன், மருகா! நான் சொல்லும் யோசனைகள் ஏற்கப்பட வேண்டுமே? கர்ணனைத்தான் தலைமை சேனாபதியாக நியமிக்க வேண்டும், பீஷ்மர் அவன் தலைமையில்தான் போரிட வேண்டும், பீஷ்மரும் துரோணரும் நீ அரசன் என்ற தோரணையில் ஆணை பிறப்பித்தால் அதை மீற மாட்டார்கள் என்று சொன்னேன், நீயும் கேட்கவில்லை, இதோ இப்போது வந்து தவிக்கும் இந்த மூடனும் கேட்கவில்லையே!’ என்றார் சகுனி.

துரியோதனன் அவர் வார்த்தைகளை பருப்பொருள் போல பாவித்து தன் கையால் அவற்றைத் தள்ளினான். ‘முடிந்து போன கதை மாமா, இப்போது என்ன செய்யலாம்? ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள், நாளுக்கு நாள் நாம் பலவீனமாகிக் கொண்டே போவதை நீங்கள் அறியவில்லையா என்ன! இந்த ஒன்பது நாள் போரில் நம் பக்கம் இரண்டு அக்குரோணி சேனை அழிந்துவிட்டது, அவர்கள் பக்கம் ஒரு அக்குரோணி சேனைதான் நஷ்டம். ’ என்றான்.

சகுனி தன் மோவாயைத் தடவிக் கொண்டார். காலை இன்னும் கொஞ்சம் நீட்டினார். துரியோதனன் சிரமத்துடன் பொறுமையாகக் காத்திருந்தான். ‘எனக்கு மூன்று வழிகள்…’ என்றார் சகுனி.

‘மூன்றா! இங்கே ஒன்றுக்கே வழியைக் காணோம் மாமா, பொறுமையை சோதிக்காதீர்கள், என்னவென்று சொல்லுங்கள்’ என்று துரியோதனன் குறுக்கிட்டான்.

சகுனி கர்ணனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தார். கர்ணனும் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தான். ‘நீங்களே என் யோசனையையும் சொல்லிவிடுங்கள், எனக்கு வார்த்தை எழும்ப மறுக்கிறது’ என்றான்.

சகுனி ‘ஒன்று இதோ இந்தக் கர்ணனின் வழி. இவனை அழைத்துக் கொண்டு நேராக பிதாமகரின் கூடாரத்துக்கு செல். இவன் அவர் காலில் விழட்டும். அவர் தலைமையில் போரிடுகிறேன் என்று சொல்லட்டும். அவர் சம்மதிக்கும் வரை மன்றாடட்டும். பிறகு நாளை இவன் போரில் நுழைவான், போரின் நிலை மாறிவிடும்’ என்றார்.

துரியோதனன் அவசர அவசரமாக சகுனியை மறுத்தான். ‘மாமா, கர்ணனின் கௌரவத்துக்கு குறைவு வரக்கூடாது’ என்றான். இது வரை மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த சகுனி இப்போது இரைந்தார் – ‘கௌரவம் முக்கியமா, கௌரவர்கள் முக்கியமா துரியா? இன்று நீங்கள் நூற்றுவர் இல்லை, எழுபத்து இருவர்தான்!’ என்று உறுமினார். கர்ணன் பக்கம் திரும்பினார் – ‘நீ என்ன சொல்கிறாய், கர்ணா?’ என்று வினவினார்.

‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா? இதைச் சொல்லத்தானே நானே வந்தேன்! நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். பாதி மூடியிருந்த கண்களைத் திறந்த கர்ணனை வியப்புடன் நோக்கிய துச்சாதனன் ‘நீ எப்போது வந்தாய் கர்ணா?’ என்று கேட்டான். மூவரும் அவனை சட்டை செய்யவே இல்லை. துச்சாதனனின் கண்கள் மீண்டும் பாதி மூடிக் கொண்டன.

‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான். சகுனி ‘இவன் என்ன சம்மதிப்பது? கர்ணா, நீ போய் பீஷ்மரைப் பார்’ என்று கர்ஜித்தார். கர்ணன் துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். ‘நீங்கள் மிச்சம் இருக்கும் இரண்டு வழிகளையும் சொல்லுங்கள் மாமா, அவை எதுவும் சரிப்படவில்லை என்றால் இவன் என்ன சொன்னாலும் நான் போய் பீஷ்மர் காலில் விழுகிறேன்’ என்றான்.

‘கர்ணன் உன் உயிர் நண்பன், அவன் கௌரவத்துக்கு ஒரு குறை வர நீ சம்மதிக்க மாட்டாய், சரி. ஆனால் பீஷ்மரின் கௌரவத்துக்கு குறை வருவதையாவது ஏற்றுக் கொள். அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிடு’ என்றார். துரியோதனன், கர்ணன் இருவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கர்ணன் ‘ஆனா…’ என்று ஆரம்பித்தான். சகுனி அவனை கைநீட்டி இடைமறித்தார். ‘பெரும் வெற்றிகளை அடைய எது தடையாக இருந்தாலும் அதை நீக்க வேண்டும் என்பதுதான் ராஜநீதியின் முதல் விதி. போர் உன் களம்; ராஜநீதி என் களம். உன் களத்தில் நீ போராடு, என் களத்தில் நான். எந்த சிறந்த நிர்வாகியும் இதைத்தான் சொல்வான் கர்ணா! என் இடத்தில் பிதாமகர் மேல் பெரும் அன்பு கொண்ட விதுரன் இருந்தாலும் இதைத்தான் உங்களுக்கு சொல்வான்’ என்று கூச்சலிட்டார். அவருக்கு மூச்சிரைத்தது. துச்சாதனனை நோக்கினார். துரியோதனனே அவருக்கு ஒரு கோப்பை மதுவை கொண்டுவந்தான்.

சகுனி மதுவை கொஞ்சம் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ‘இப்போது நடப்பது போரே அல்ல கர்ணா, வெறும் நிழல் யுத்தம்.ஒன்பது நாள் போரில் ஒரு மஹாரதி கூட இறக்கவில்லை, அப்பாவி வீரர்கள்தான் இறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் கூட பீமன் மட்டுமே முழுமூச்சாகப் போரிடுகிறான். இரு தரப்பிலுமே போரிடுவது போல நடிக்கிறோம், அவ்வளவுதான். ஆனால் நம் வியூகங்களும் சரி, நம் பெருவீரர்களுக்கு அளிக்கப்படும் பணிகளும் சரி, அவர்களை விட பலவீனமாக இருக்கிறது, அதனால் நம் இழப்புகள் அதிகமாக இருக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு மாதத்தில் நம் படைபலம் பாண்டவர் பலத்தை விட குறைந்துவிடும். நாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்றுக் கொண்டிருக்கிறோம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர் தலைமை சேனாதிபதி அல்லாமல் வேறு யார்? அவருடைய திறமையின்மையினால்தான் தோற்றுக் கொண்டிருக்கிறோம். திறமையற்றவரை மாற்றுவதில் என்ன் தவறு?’ என்று கேட்டார்.

துரியோதனன் தயங்கி தயங்கி ‘இருந்தாலும் பிதாமகர்…’ என்று ஆரம்பித்தான். கர்ணன அதற்குள் குறுக்கிட்டான். ‘பிதாமகர், தாத்தா என்றெல்லாம் எனக்கு எந்த உறவும் இல்லை. நான் இதை மூன்றாவது மனிதனாகச் சொல்கிறேன். பீஷ்மரை விலக்கினால் நம் படைகளின் உற்சாகம் குன்றும். துரோணர் போன்றவர்கள் போரில் முழுமூச்சாக ஈடுபடமாட்டார்கள். இவரை விலக்குவதால் நமக்கு கிடைக்கும் பயனை விட ஏற்படும் பலவீனங்கள்தான் அதிகம். இது சரிப்படாது மாமா, நான் சென்று அவர் காலில் விழுகிறேன்’ என்றான்.

துரியோதனன் ‘கொஞ்சம் இரு கர்ணா. மூன்றாவது வழி என்ன மாமா?’ என்றான்.

சகுனி ரகசியக் குரலில் ‘பாண்டவர்கள் அவரை வெல்வதை சுலபமாக்குவது’ என்றார். கர்ணன் திடுக்கிட்டான். துரியோதனன் புரியாமல் தன் புருவத்தைச் சுளித்தான். துச்சாதனன் திடீரென்று சிரித்தான். ‘அண்ணா, மது அருந்துகிறீர்களா?’ என்று கேட்டான். யாரும் அவனை பொருட்படுத்தவில்லை.

‘என்ன சொல்கிறீர்கள், மாமா?’ என்று கேட்டான் துரியோதனன். ‘உன் நண்பனுக்குப் புரியும் வகையில்…’ என்று சகுனி கையை ஆட்டினார். கர்ணன் ‘பீஷ்மர் சிகண்டியோடு போரிடமாட்டார் என்பது ஊரறிந்த ரகசியம். சிகண்டி பீஷ்மரோடு போரிட வரும்போதெல்லாம் துச்சாதனன் பிதாமகருக்கு அரணாக நின்று சிகண்டியைத் தடுத்து நிறுத்துகிறான். அப்படி பீஷ்மரை சிகண்டியிடமிருந்து பாதுகாப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார் மாமா’ என்றான்.

‘ஆனால் சிகண்டியால் பீஷ்மரை வெல்ல முடியுமா?’ என்று துரியோதனன் கேட்டான். ‘பேசாமல் இந்தப் போருக்கு பிறகு நீ முடிசூட்டிக் கொள் கர்ணா, அத்தனை கௌரவர்களின் புத்தியும் உன் ஒருவனின் புத்தியும் சமம்தான்’ என்று சகுனி சிரித்தார். கர்ணன் ‘இல்லை துரியா, சிகண்டிக்கு பின்னால் நின்று அர்ஜுனன் அம்புகளைத் தொடுப்பான். ஆனால் முன்னால் நிற்பது சிகண்டிதான், அவனோடு போரிட மாட்டேன் என்று பீஷ்மர் தன் வில்லை கீழே போட்டுவிடுவார். பிறகு பிதாமகரின் இறுதி நிச்சயம்’ என்றான்.

துரியோதனின் முகம் மலர்ந்தது. ‘மாமா, அருமையான யோசனை. இன்னும் எத்தனை காலம் போனாலும் மதியூகத்துக்கு சகுனி என்று உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். எப்படியோ கர்ணன் களத்தில் இறங்கினால் போதும். பிதாமகர் களத்தை விட்டு நீங்குவதில் நமக்கு பெரிய நஷ்டமில்லை. ஆனால் இதில் நம் கை இருப்பது தெரியக் கூடாது, அப்படி தெரிந்தால் கர்ணன் சொல்வது போல மூத்த பெருவீரர்களின் – அதுவும் குறிப்பாக ஷத்ரியப் பெருவீரர்களின் ஊக்கம் குன்றும், அதற்காக என்ன வேண்டுமோ செய்யுங்கள்’ என்றான். பிறகு கர்ணனை நோக்கி ‘கர்ணா, ஏழு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் நிம்மதியாக உறங்கப் போகிறேன்’ என்று நகைத்தான். கம்பத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த துச்சாதனனை காலால் எற்றினான். துச்சாதனன் அரைத்தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான். ‘மாமா, காந்தார மது ஏன் எப்போதும் இத்தனை கசப்பாக இருக்கிறது?’ என்று கேட்டுக் கொண்டே குடுவையைக் கவிழ்த்து அதிலிருந்த கடைசித் துளிகளை தன் வாய்க்குள்ளேயே விட்டுக் கொண்டான் . துரியோதனன் நகைத்தான். ‘உன் கூடாரத்துக்கு சென்று உறங்கு துச்சா! நாளை உனக்கு வேலை இல்லை ஆனால் பொறுப்பு இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு கூடாரத்தின் உள்ளறை ஒன்றுக்கு சென்றான். துச்சாதனன் தள்ளாடிக் கொண்டே எழுந்து மெதுவாக நடந்து கூடாரத்தை விட்டு வெளியேறினான். எத்தனை போதை இருந்தாலும் அண்ணன் சொல்வதை உடனே நிறைவேற்றும் தம்பியை சகுனி பெருமிதத்தோடு நோக்கினார். வெளியே நின்றிருந்த காவல் வீரர்கள் துச்சாதனனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.

கர்ணன் யோசனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று துள்ளி எழுந்தான். ‘அர்ஜுனன் நிராயுதபாணியாக நிற்கும் பிதாமகர் மீது அம்புகளைத் தொடுப்பானா மாமா? முதல் நாளே கிருஷ்ணன் தூண்டி இராவிட்டால் அவன் களத்திலிருந்து விலகி இருப்பான். இன்று கூட அவன் முழுமூச்சாகப் போரிடாததால் கண்ணன் தன் ஆழியை எடுத்துக் கொண்டு பீஷ்மர் மீது பாய்ந்ததை நானே பார்த்தேன். ஒரு முறைதான் இந்த வாய்ப்பு கிடைக்கும், வாய்ப்பை விட்டுவிட்டால் பிதாமகர் தானே வேறு யாரையாவது தன் பாதுகாப்புக்கு நியமித்துக் கொண்டுவிடுவார்’ என்றான்.

சகுனியின் முகத்தில் மீண்டும் ஒரு விஷமப் புன்னகை மலர்ந்தது. ’வா போய்க் கொண்டே பேசுவோம்’ என்றார். வெளியே வந்ததும் ‘ஏற்கனவே கிருஷ்ணனுக்கு உலூகன் மூலம் செய்தி அனுப்பிவிட்டேன்’ என்றார். கர்ணன் ஸ்தம்பித்துப் போய் நின்றான். ‘இந்த நிழல் யுத்தத்தை முடித்து நிஜப் போரை ஆரம்பிக்கத்தான் அவனும் விழைகிறான், கர்ணா! அதனால்தான் அவனே ஆழியோடு பீஷ்மர் மீது பாய்ந்தான். நாளை சிகண்டியை துச்சாதனன் எதிர்க்கமாட்டான் என்று செய்தி அவனைப் போய் சேர்ந்துவிட்டது, அவன் பார்த்துக் கொள்வான்’ என்றார்.

‘உங்களைக் கண்டால் சில சமயம் அச்சமாக இருக்கிறது மாமா! நல்ல வேளை நீங்கள் இந்தப் பக்கம்! துரியன் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பான் என்று எப்படி இவ்வளவு சரியாக கணித்தீர்கள்?’

சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன.

சகுனி மெல்லிய குரலில் சொன்னார் – ‘ரத்த உறவு உள்ள துரியனை விட உன்னிடம்தான் என்னால் மனம் விட்டுப் பேச முடிகிறது கர்ணா. என் சிந்தனையைப் புரிந்து கொள்ளும் சக்தியும் உனக்குத்தான் இருக்கிறது, அந்த இரண்டு மூர்க்கர்களுக்கும் இல்லை. அதனால்தான் நீ எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவனாக இருக்கிறாய்’.

கர்ணன் பதில் எதுவும் பேசாமல் சகுனியையே பார்த்தான்.

‘இந்தப் போருக்கு முன் துரியனிடம் நான் எதையும் கணிக்க வேண்டி இருக்கவில்லை கர்ணா! இதற்கு முன் நாம் நால்வருக்குள் கருத்து வேறுபாடுகளே இருந்ததில்லை என்பது நீ அறிந்ததே. பிதாமகரும் ஆசார்யரும் உன் தலைமையில் போரிட வேண்டும் என்ற என் ஆலோசனை நிராகரிக்கப்பட்ட பிறகுதான் நான் துரியனை வேறொருவனாகப் பார்க்கவே ஆரம்பித்திருக்கிறேன், அவனிடம் எப்படி ஒரு யோசனையைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் சிந்திக்கிறேன்’.

கர்ணன் தலையைக் குனிந்து கொண்டான். ‘மாமா, பீஷ்மரை தலைவராக்க வேண்டும் என்று நான்தான் ஆரம்பித்தேன்.அந்த முடிவுக்கு நான்தான் மூல காரணம்…’

சகுனி அவசர அவசரமாக குறுக்கிட்டார் – ‘இல்லை கர்ணா, மாற்றுக் கருத்துக்கள் இருந்தால்தான் என் சிந்தனைகளும் கூர்மை பெறும். எனக்கும் அப்போது உன் எண்ணம் சரி என்றுதான் பட்டது. ஆனால் உன் உணர்வுகள் சீண்டப்பட்டு நீ வெளியேறுவாய் என்பதை நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. நீ பீஷ்மர் தலைமையில் அர்ஜுனனுக்கு எதிராக வில்லேந்தி இருந்தால் இது நிழல் யுத்தமாக இருந்திருக்காது. ஆனால் அந்த நிகழ்ச்சியிலிருந்து நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். அந்தப் பாடத்தைத்தான் இன்று நீயும் பார்க்கிறாய்’

சகுனி தொடர்ந்தார் – ‘நீ பீஷ்மர் காலில் விழுவதை துரியன் உணர்வுபூர்வமாக அணுகுவான். உனக்கு அது அவமானம் என்று எண்ணுவான், அதை அவனால் சுலபமாக ஏற்க முடியாது. பீஷ்மரோடு அவனுக்கிருக்கும் பந்தம் அவ்வளவு பலமானது அல்ல. அவரைப் பதவியிலிருந்து விலக்குவதை அவன் அறிவுபூர்வமாகத்தான் அணுகுவான், லாப நஷ்டக் கணக்குத்தான் போடுவான். அதனால் முதல் வழியை விட இரண்டாவதை ஏற்பது அவனுக்கு இன்னும் கொஞ்சம் சுலபம். இரண்டாவது வழியிலிருக்கும் நஷ்டத்தை மூன்றாவது வழி அகற்றுகிறது, அதனால் இரண்டாவதை விட மூன்றாவது வழிதான் சிறந்தது என்று நினைப்பான் என்று கணித்தேன் கர்ணா!’

கர்ணன் அவரை நெகிழ்ச்சியோடு நோக்கினான். ‘நீங்கள் இருக்கும் வரை எந்த சிக்கலுக்கும் விடை உண்டு!’ என்றான்.

சகுனி இருட்டில் மங்கலாகத் தெரிந்த பாண்டவர் கூடாரங்களையே உற்று நோக்கினார். அவரது பார்வை கருடக் கொடி பறந்த கூடாரத்தில் நிலைத்து நின்றது. இரண்டு நிமிஷ்ம் மௌனமாக இருந்தவர் ‘நான் கண்ணனை அஞ்சுகிறேன் கர்ணா! அர்ஜுனனின் மாவீரத்தையும் உன்னால் வெல்ல முடியும், ஆனால் கண்ணனின் தந்திரங்களை வெல்ல முடியுமா என்றுதான் கவலையாக இருக்கிறது. அவனுக்கு நான் ஒரு மாற்று குறைவோ, அவன் மதியூகத்துக்கு முன் நான் தோற்றுவிடுவேனோ, என்னால் கண்ணனிடமிருந்து உன்னையும் துரியனையும் காக்க முடியாதோ என்றுதான் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது’ என்று சகுனி பெருமூச்சுடன் சொன்னார். இருவரும் கொஞ்ச நேரம் மௌனமாக எங்கோ வெறித்தார்கள்.

‘பிதாமகர் மாபெரும் வீரர் மாமா! அவரை இப்படி கவிழ்ப்பது வருத்தமாக இருக்கிறது’

‘ஆம் அவர் பெருவீரர்தான். உன் தலைமையில் உன் கட்டளைப்படி போரிட்டால் அவர் நமக்கு பெரும் ஆயுதமாக இருந்திருப்பார். ஆனால் ஒரு தளபதியாக அவர் தோற்றுவிட்டார் என்பதை உணர் கர்ணா!’

‘இருந்தாலும் அவர் புகழுக்கு எந்தக் களங்கமும் வராமல்…’ கர்ணன் திடீரென்று அமைதியானான். பீஷ்மரின் கூடார விளக்குகள் அணைய ஆரம்பித்திருந்தன. அவரது கூடாரத்திலிருந்து ஆறு பேர் வெளியேறியது மங்கலாகத் தெரிந்தது. அவற்றில் ஒன்று பீமனின் பேருருவம். சகுனி மெல்லிய குரலில் ‘இவர்கள் இங்கே என்ன…’ என்று புருவத்தைத் தூக்கினார்.

சகுனியின் அணுக்கனான விப்ரசேனன் சகுனியை நோக்கி ஓடிவந்தான். அவர் காதில் என்னவோ ரகசியம் பேசினான். பேசி முடித்ததும் சகுனி கசப்புடன் நகைத்தார் – ‘கவலை வேண்டாம் கர்ணா, பிதாமகரின் புகழ் இன்னும் ஓங்கத்தான் போகிறது. ஊரறிந்த ரகசியம்தான். ஆனால் அதை பீஷ்மரின் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறான் இந்தக் கண்ணன். நாளை சூதர் பாடுவார்கள் பார் – பிதாமகரே அவரைத் தோற்கடிக்கும் வழியை பாண்டவர்களுக்கு சொன்னார், இல்லாவிட்டால் அவரை வெல்ல யாராலும் முடியாது என்று!’

சாரு நிவேதிதா பரிந்துரைகள்

charu_niveditaசாரு சென்ற நூற்றாண்டின் சிறந்த இலக்கியப் படைப்புகள் என்று போட்டிருக்கும் ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. சென்ற நூற்றாண்டின் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாத இலக்கியப் படைப்புகள் என்றுதான் இவற்றை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார், இவைதான் சென்ற நூற்றாண்டின் டாப் டென் என்று அவர் கருதமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

அவரது பட்டியலில் மண்ணில் தெரியுது வானம், இடைவெளி பற்றி பதிவுகளே எழுதி இருக்கிறேன். இடைவெளி சாதனைதான். ஆனால் ம.தெ. வானம் எனக்கு பெரிதாக அப்பீல் ஆகவில்லை. செம்பருத்தியை முடிக்க வேண்டும். காதுகள், கடைத்தெரு கதைகள், சுதந்திர தாகம் எல்லாம் படிக்க வேண்டும். அசோகமித்திரனின் குறுநாவலைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. ந. முத்துசாமியை நாடக ஆசிரியராகத்தான் தெரியும், ஒன்றோ இரண்டோ சிறுகதைகள்தான் படித்திருக்கிறேன். தஞ்சை பிரகாஷ் intriguing எழுத்தாளர், ஆனால் தமிழ் இலக்கியத்தில் ஒரு footnote ஆகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

வசதிக்காக பட்டியல் கீழே.
1. சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம்.
2. ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம்.
3. தி. ஜானகிராமனின் செம்பருத்தி
4. லா.ச.ரா.வின் சிறுகதைகள்.
5. எஸ்.சம்பத்தின் இடைவெளி.
6. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள்.
7. ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகள்.
8. அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்.
9. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள்.
10. ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

வஞ்சகன் கண்ணன்

தமிழ் ஹிந்து தளத்தில் என் இன்னொரு சிறுகதை. வசதிக்காக இங்கே (சில சில்லறைத் திருத்தங்களோடு) மீள்பதித்திருக்கிறேன்.


வஞ்சகன் கண்ணன்

முதலைத்தோல் காலணிகளின் பழக்கமான சர்ரரக் சரக் சர்ரரக் சரக் என்ற சத்தம் மிருகநயனியின் காதுகளில் ஒலித்தது. காலணிகள் அவள் அருகே வந்து நின்றன. இடது காலணி வலதை விட சற்றே உயரமான குதிகால் பகுதியைக் கொண்டது. மஞ்சள் சாயம் பூசப்பட்ட காலணிகள். அங்கங்கே ரத்தக் கறைகள் படிந்திருந்தன. சில கறைகள் காய்ந்து கருநிறம் கொண்டிருந்தன. சில சமீபத்தில் பட்ட கறைகள். இன்னும் மெல்லிய வாடை கூட இருந்தது. காலணிகளின் மேல் அங்கங்கே கிழிந்திருந்த கறுப்பு நிற வேட்டி.

மிருகநயனியின் புலன்கள் உணர்ந்த இந்தச் செய்திகள் எவையும் அவள் நெஞ்சில் பதியவில்லை. அவள் குனிந்த தலை நிமிரவில்லை. சகுனி அவள் தலையைக் கோதியபோதுதான் அவள் திடுக்கிட்டு தன்னுணர்வு பெற்றாள். சகுனி அவளை தழுதழுத்த குரலில் அழைத்தார் -‘மகளே!’

மிருகநயனி நிமிர்ந்து சகுனியைப் பார்த்தாள். அவள் கண்கள் உலர்ந்திருந்தாலும். கண்ணீர் வழிந்த கோடுகள் தெரிந்தன. சகுனிக்கு குரல் அடைத்தது. ‘மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்களம்மா!’ என்றார். மிருகநயனி பதிலே சொல்லவில்லை. சகுனி தொடர்ந்தார் – ‘கடைசி நப்பாசையாக துரியன் திராவிட அரசன் சேரலாதனிடம் பணி புரியும் ஒரு மூலிகை மருத்துவனை அழைத்து வர சென்றிருக்கிறான்’ என்றார். ‘சூதாட்டம் நடந்த அன்றே அவரை இறைவன் கைவிட்டுவிட்டான் மாமா! இப்போது அவருக்கு தேவை இந்த வலியிலிருந்து விடுதலை. அவர் இறந்தால் போதும் மாமா!’ என்று மிருகநயனி மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

சகுனி உடைந்துபோனார். ‘எல்லாம் என்னால்தான்! பாண்டவர் மேலிருந்த அழுக்காறால் நாங்கள் சிறுமை கொண்டோம். இவனோ எங்கள் மேல் உள்ள அன்பால் சிறுமை என்று அறிந்தும் விரும்பியே சூடிக் கொண்டான்’ என்று சொன்னபோது எழுந்த கண்ணீரை மறைக்கத் திரும்பினார். ஆதரவுக்காக கூடாரத்தின் ஒரு தூணை பிடித்துக் கொண்டார். கூடாரமே அசைந்து ஆடியது. கூடாரத்தின் துணிச்சுவரில் ஏழு நிழலுருவங்கள் அசைந்து ஆடின.

சகுனி திகைப்புடன் மிருகநயனியின் பக்கம் திரும்பினார். நிழலுருவங்கள் பக்கம் கையைக் காட்டினார். மிருகநயனி தலையை அசைத்தாள். – ‘ஆம் மாமா பாண்டவர்களும், கிருஷ்ணனும், திரௌபதியும்தான்’ என்றாள்.

கூடாரத்தின் துணிக் கதவை ஏறக்குறைய கிழித்துக் கொண்டு துரியோதனன் உள்ளே நுழைந்தான். அவர் பின்னாலேயே நான்கடி உயரமே உள்ள ஒருவர் வந்தார். துரியோதனனின் நடை வேகத்துக்கு ஈடு கொடுக்க அவர் ஓட வேண்டி இருந்தது. துரியோதனன் கூடாரத்தின் உள்ளறை ஒன்றில் நுழைந்து மருத்துவரிடம் கையைக் காட்டி ஏதோதோ பேசினான். பிறகு விரைவாக வெளியே வந்தான். வாசலை நோக்கி நடந்து கொண்டே ’இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?’ என்று உரத்த குரலில் கேட்டான். வாயிலை மூடியிருந்த துணிச்சீலையை விலக்கி ‘உள்ளே வாருங்கள்!’ என்று அழைத்தான்.

பாண்டவர்கள் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். கிருஷ்ணன் தவிர்த்த அனைவரின் ஆடைகள், காலணிகள் எல்லாவற்றிலும் உலர்ந்த ரத்தக் கறைகள் இருந்தன. பீமனின் உடலெங்கும் ரத்தம் தெறித்திருந்தது. திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே திட்டுத்திட்டாக சிவப்பாக இருந்தது. ஆனால் கிருஷ்ணன் மட்டும் மாசுமறுவற்ற ஆடையோடும் நேர்த்தியான அணிகளோடும் வாடாத மாலையுடனும் மயிற்பீலியுடனும் காட்சி தந்தான்.

துரியோதனன் எந்தத் தயக்கமும் இல்லாமல் யுதிஷ்டிரனின் தாள் பணிந்தான். யுதிஷ்டிரன் தழுதழுத்த குரலில் ‘புகழோடு விளங்குவாயாக!’ என்று ஆசீர்வதித்தான். எழுந்தவன் பீமனைப் பார்த்து புன்னகைத்தான். அவனை நோக்கி கைகளை நீட்டினான். பீமன் முன்னகரவில்லை. துரியோதனனே பீமனை நெருங்கி அவனைத் தழுவிக் கொண்டான். பிறகு கொஞ்சம் விலகி பீமனை இன்னும் பெரிய புன்னகையோடு நோக்கினான். ‘அஞ்சாதே பீமா! நேற்றும் நாளையும் எதிரிகள்தான். ஆனால் இந்தக் கணம் நீ கர்ணனின் சகோதரன் என்ற உணர்வுதான் மிஞ்சி இருக்கிறது’ என்றான். பீமன் எதையோ சொல்ல முயன்றான், ஆனால் வார்த்தை எழும்பவில்லை. இரண்டு முறை தொண்டையை செருமிவிட்டு பிறகு விரைந்து முன்னகர்ந்து துரியோதனைத் தழுவிக் கொண்டான்.

துரியோதனன் ‘கர்ணன்தான் மூத்த பாண்டவன் என்று தெரிந்திருந்தால் இந்தப் போரே…’ என்று ஆரம்பித்து தொடர முடியாமல் பெருமூச்சிட்டான். யுதிஷ்டிரன் ‘இத்தோடாவது நிறுத்திக் கொள்வோம் துரியா!’ என்று மெல்லிய குரலில் சொன்னான். ‘காலம் கடந்து விட்டது மூத்தவரே!’ என்றான் துரியோதனன். பிறகு திரௌபதியை நோக்கினான். திரௌபதியின் தலை தானாகக் குனிந்தது. அவளது விரிந்த கூந்தல் அவளது கன்னங்களை மறைத்தது. துரியோதனனின் முகம் விகசித்தது. ‘மேலும் அண்ணியின் முகம் முடிந்த கூந்தலோடுதான் இன்னும் பொலிவாக இருக்கும்’ என்றான். திரௌபதியில் கண்ணோரத்தில் கூட கொஞ்சம் ஈரம் துளிர்த்தது.

இந்தக் காட்சியை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த மிருகநயனி செருமினாள். ‘இந்த நெகிழ்ச்சி, பாசம் எல்லாம் நாளைக்கு இருக்காது என்று இன்றிரவே முழுமூச்சாக ஈடுபடுகிறீர்கள், சரி. ஆனால் அவருக்கு ஒரு வழி சொல்லிவிட்டு இதையெல்லாம் நடத்தக் கூடாதா?’ என்று ஆங்காரத்தோடு கேட்டாள்.

ஓரிரு நிமிஷம் அசௌகரியமான மௌனம் நிலவியது. அதை துரியோதனனே கலைத்தான். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் சொன்னான் – ‘அவன் பிழைக்கமாட்டான் அண்ணி! விலா எலும்புகள் நுரையீரலைத் துளைத்திருக்கின்றன. பாதி ரத்தத்தையாவது இழந்திருக்கிறான். மருத்துவர்கள் அர்ஜுனனின் அம்பு அவனைத் தேர்க்காலில் தாக்கியபோதே அவன் இறந்திருக்க வேண்டும், இத்தனை நேரம் உயிர் பிழைத்திருப்பதே அதிசயம்தான், இன்னும் சில நிமிஷங்கள்தான் என்கிறார்கள். நாம் அனைவரும் இந்த நேரத்தில் அவன் அருகில் இருப்போம், அது ஒன்றுதான் நாம் செய்யக் கூடியது. வாருங்கள்’ என்றான்.

‘இன்னும் சில நிமிஷங்கள்தான் என்றுதான் எட்டு நாழிகையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா?’ என்று மிருகநயனி துரியோதனனைக் கேட்டாள்.

துரியோதனன் மௌனமாக நின்றான்.

‘அவர் இறக்க மாட்டார். எத்தனை காயம்பட்டாலும், எத்தனை ரத்தம் போனாலும், என்ன ஆனாலும் சரி, அவரது மனோதிடம் அவரை இறக்கவிடாது. அவருடைய வாழ்வின் பொருள் நீங்கள்தான் அண்ணா! உங்களைக் காக்க வேண்டும், உங்களுக்காக போரிட வேண்டும் என்றுதான் உயிரை இன்னும் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். முன்னூறு அம்புப் படுக்கை வலியை தாங்கிக் கொண்டும் அவர் விழைவதெல்லாம் மீண்டும் வில்லெடுத்து போரிட வேண்டும் என்றுதான். அவரது கை நரம்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன, அவரால் மீண்டும் நாணைத் தொடுக்க முடியாது என்றெல்லாம் அவர் அறியமாட்டார். உங்களை தனியே விட்டுவிட்டு அவர் இறக்கமாட்டார் அண்ணா, இறக்கமாட்டார்!’

மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

மிருகநயனியின் விசும்பல்கள் மெதுமெதுவாக குறைந்தன. சகுனி, யுதிஷ்டிரன், துரியோதனன், பீமன் என்று ஒவ்வொருவரையும் பார்த்தாள். அர்ஜுனன் மீது அவள் பார்வை கொஞ்ச நேரம் நிலைத்து நின்றது. அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது.

கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்.

கண்ணன் தன் பொன்னிற உத்தரீயத்தை மடித்து மீண்டும் தோளில் போட்டுக் கொண்டான். ‘வரும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அர்ஜுனனின் அம்புகளாலும் கர்ணனைக் கொல்ல முடியாது, அவன் செய்த தானதருமங்கள் அவன் உயிரைக் காக்கின்றன, அவையே அவனுடைய புதிய கவசம், கர்ணன் மீண்டெழுந்து வருவான், அர்ஜுனனை வெல்வான் என்று பாடிக் கொண்டிருந்தான்’ என்றான்.

மிருகநயனி ஐயோ என்று தன்னிச்சையாக அலறினாள். ‘இது மாதிரி ஒரு பாடல் அவர் காதில் விழுந்தால் அவர் மூவாயிரம் அம்புப் படுக்கைகளின் வலி இருந்தாலும் தன் இறப்பை அனுமதிக்கமாட்டார், அவர் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை கண்ணா! அவருக்கு விடுதலை கொடு, அவரை எப்படியாவது கொன்றுவிடு, அவருக்கு விடுதலை கொடுத்துவிடு!’ என்று கதறினாள்.

கண்ணன் துரியோதனனை நோக்கினான். துரியோதனன் உச்சுக் கொட்டினான். பிறகு சம்மதம் தெரிவிக்கும் வகையில் தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

கதவு போல இருந்த கறுப்பு நிறச் சீலையை விலக்கி கண்ணன் உள்ளே சென்றான். அவன் பின் துரியோதனனும் யுதிஷ்டிரனும் அர்ஜுனனும் மிருகநயனியும் சென்றனர். கர்ணன் அங்கே ஒரு மேடை மேல் வாழை இலைகளின் மீது சாய்ந்து உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவனது வலது கை முழுவதும் கந்தக மணம் வீசிய ஒரு பூச்சினால் மூடப்பட்டிருந்தது. அவன் மார்பில் பெரிதாக கீறி இருந்தது. வெள்ளையாக எலும்புகள் தெரிந்தன. சேவகர்கள் ஈக்கள் வராமல் இருக்க விசிறிக் கொண்டிருந்தார்கள். ஒரு மருத்துவர் அங்கே ஒரு சின்ன சட்டியில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தார். அபின் புகையும் வாசம் வந்து கொண்டிருந்தது. ரத்தத்தில் ஊறிய பல வெள்ளைத் துண்டுகள் ஒரு ஓரமாக குவிக்கப்பட்டிருந்தன. உள்ளே வந்தவர்களைப் பார்த்ததும் கர்ணன் புன்னகத்தான். யுதிஷ்டிரன் விரைந்து வந்து அவன் தாள் பணிந்தான். மிகவும் சிரமத்துடன் ‘வெற்றி பெறுக’ என்று கர்ணன் வாழ்த்தினான்.

வாழ்த்திய பிறகு என்னவோ முணுமுணுத்தான். கண்ணன் அவன் வாயருகில் தன் காதை குவித்துக் கேட்டான். பிறகு நிமிர்ந்தான். மாறாத புன்னகையுடன் சொன்னான் – “‘மீண்டும்; போர்; அர்ஜுனன்’ என்கிறான்”

மிருகநயனியின் முகம் கோணியது. அவள் சீலையை விலக்கிக் கொண்டு வெளியேறினாள். அர்ஜுனன் எவ்வளவு முயன்றாலும் முகத்தில் கவலையின் சாயல் தோன்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை. துரியோதனன் எவ்வளவுதான் முயன்றாலும் பெருமிதத்தால் அவன் முகம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. கண்ணன் எல்லோரையும் பார்த்தான். ‘நீங்கள் எல்லோரும் கொஞ்சம் வெளியே நில்லுங்கள்’ என்று சொன்னான். அவனை மறுக்க வாயெடுத்த மருத்துவரும் அவன் கண்ணைப் பார்த்ததும் அடங்கினார். ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.

கண்ணன் கர்ணன் அருகே அமர்ந்தான். ‘துரியோதனனே உனது ஜீவன், இல்லையா கர்ணா?’ என்று கேட்டான். கர்ணன் புன்னகைத்தான். இதை இந்த நேரத்தில் கண்ணன் கேட்பது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை என்பதை அவனுடைய முகபாவம் காட்டியது. ‘அப்படி என்றால் அவனுக்கு ஏன் துரோகம் செய்தாய் கர்ணா? என்று கண்ணன் கேட்டான். கர்ணனின் புருவம் நெளிந்தது. மிகவும் சிரமத்துடன் இன்னும் நிமிர்ந்து உட்கார்ந்தான். மிக மெல்லிய குரலில் ‘என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘துரியோதனனின் வெற்றியே உனக்கு முக்கியம் என்றால் எப்படி அர்ஜுனன் தவிர்த்த துரியோதனனின் எதிரிகளைக் கொல்லமாட்டேன் என்று நீ குந்திக்கு வாக்கு கொடுக்கலாம்? அதுவும் துரியோதனனைக் கொல்ல பிரதிக்ஞை எடுத்திருக்கும் பீமனைக் கொல்லமாட்டேன் என்று நீ எப்படி வாக்கு கொடுக்கலாம்? சரி அர்ஜுனனைக் கொல்லும் வாய்ப்புகளையும் ஏன் தவிர்த்தாய்? என்ன அவமானம் நேர்ந்தாலும் நீ பிதாமகரின் கீழ் நின்று போர் புரிந்திருக்க வேண்டுமே கர்ணா? முதல் நாளிலேயே நீ அர்ஜுனனைத் தேடிச் சென்று போர் புரிந்து உன் சக்தி ஆயுதத்தால் அவனைக் கொன்றிருந்தால் இந்தப் போர் நான்கு நாட்கள் கூட நடந்திருக்காதே? இத்தனை நேரம் துரியோதனன் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக முடி சூடி இருக்கலாமே! சரி பத்து நாட்கள் கழித்து போரில் கலந்து கொண்டாய். அர்ஜுனனை போரில் சந்திக்க நீ ஏன் முயலவே இல்லை? நான் உன்னைத் தவிர்த்திருப்பேன், ஆனால் சம்சப்தகனாக நீ நின்றிருந்தால் உன்னை என்னாலும் தவிர்க்க இயலாதே? ஜயத்ரதனைக் காத்து நின்றபோது துரியோதனன் கூட அர்ஜுனனைத் தேடி வந்து போர் புரிந்தான். நீ என்ன செய்து கொண்டிருந்தாய் கர்ணா? சக்தி ஆயுதம் இல்லாமல் போகும் வரை நீ ஏன் அர்ஜுனனைத் தவிர்த்தாய்? இதில் மீண்டு வந்து அர்ஜுனனோடு போர் புரிவேன் என்று வீண் வஞ்சினம் வேறு. துரியோதனனுக்கு நீ விசுவாசமாக இல்லை கர்ணா! ஏன் இப்போது கூட யுதிஷ்டிரன் வெற்றி பெற வேண்டும் என்றுதான் வாழ்த்தினாய். நீ துரியோதனன் வெல்ல வெண்டும் என்று விரும்பவில்லை உன் தம்பிகள் வெல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறாய். துரியோதனனுக்காக உன் உயிரைக் கொடுத்து தியாகசீலன், நட்புக்கு உதாரணம் என்று புகழ் பெற விரும்புகிறாய், அவ்வளவுதான்!’

கர்ணனின் உதடுகள் துடித்தன. மூச்சு வேகவேகமாக வந்தது. சில நொடிகளில் அடங்கியும் போனது.

தூணில் மாட்டி இருந்த கேடயம் ஒன்றில் கண்ணன் தன் உருவத்தை நோக்கினான். அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை மறைந்து அவன் உதடு சுழித்தது. வெறுப்போடு அந்தக் கேடயத்தை கீழே தள்ளினான். அதை போட்டு மிதித்து எட்டி உதைத்தபோது ‘ணங்’ என்ற சத்தத்தோடு அது சாத்தி வைக்கப்பட்டிருந்து ஒரு இரும்பு வில்லோடு மோதியது. சத்தத்தைக் கேட்டு மிருகநயனி வேகமாக உள்ளே புகுந்தாள். அவள் அலறலைக் கேட்டு அனைவரும் உள்ளே விரைந்தனர். கண்ணன் தன் கால்களை தரையில் உதைத்துக் கொண்டே கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான். ‘செய்த புண்ணியங்கள் கர்ணனைக் காத்து நின்றன. வஞ்சகன் கண்ணன் அந்தப் புண்ணியங்களை தானமாகக் கேட்டு வாங்கிக் கொண்டான், அதனால்தான் கர்ணன் இறந்தான்!’ என்று பாடலைக் கேட்டதும் கண்ணனின் வழக்கமான புன்னகை திரும்பியது. கழுத்தில் இருந்த மணியாரத்தை கழற்றி சூதனின் கையில் கொடுத்துவிட்டு கூடாரத்தை நோக்கி நடந்தான்.


தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்