சின்ன வயதில் குமுதத்தில் ப்ரியாவைத் தொடர்கதையாக படித்த நினைவிருக்கிறது. எத்தனை வில்லன் வந்தாலும் அடித்து நொறுக்கும் எம்ஜிஆர், ஜெய்ஷங்கர் மாதிரி ஹீரோக்களைத்தான் அப்போதெல்லாம் தெரியும். கணேஷ் வில்லன்களை திருப்பி அடித்தாலும் நாலு வில்லன் இருந்தால் அல்லது பலமான வில்லன் இருந்தால் தோற்பார். அப்போது அது ஒரு பெரிய கண்திறப்பாக இருந்தது. சின்னச் சின்ன உத்திகள் – துணை ஹீரோ பரத்திடம் ‘தொலைபேசி எண்ணை மனனம் செய்து கொள்ளப் பார்’ என்று தூய தமிழில் பேசுவது, விமானத்தின் ஒலியை அடையாளம் காண்பது என்பதெல்லாம் அட! போட வைத்தன. அதுதான் முதன்முதலாக முழுமையாகப் படித்த சாகசக் கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எம்ஜிஆருக்கும் ஜெய்ஷங்கருக்கும் மேம்பட்ட சாகசக் கதைகள் உண்டு என்று புரிந்து கொண்டதுதான் அன்று முக்கியமான takeaway.
இந்த நாவலில் கணேஷின் சாகசங்கள் என்று ஒன்றும் பெரிதாகக் கிடையாது. வாசகர்களைப் போலவே அவரும் திருப்பங்களில் திடுக்கிடுவார், அவருக்கும் என்ன நடக்கிறது என்று முக்கால்வாசி நேரம் புரியாது, இரண்டு மூன்று இடங்களை விட்டுவிட்டால் ஏறக்குறைய சராசரி மனிதர்தான். கதையின் முக்கியத் துப்பறியும் நிபுணர் ஸ்காட்லாண்ட் யார்டின் ரோவன்தான்.
Police procedural என்று ஒரு sub-genre உண்டு. காவல்துறை ஒரு குற்றத்தை எப்படி அணுகும், எப்படி தீர்வு காணும் என்பதை விவரிக்கும் genre. இதை முழு police procedural என்று சொல்ல முடியாவிட்டாலும் அரை police procedural என்றாவது சொல்லலாம். வில்லன்களோடு சண்டை போடுவது வேறு, துப்பறிவது வேறு என்று புரிய வைத்த நாவல்.
திடுக்கிடும் திருப்பங்கள் அவ்வப்போது வந்தாலும், நம்ப முடியாத முடிச்சுகளை அங்கங்கே போட்டாலும் கதை வாழ்க்கைக்கு கொஞ்சமாவது அருகே இருக்கிறது. சுஜாதாவின் டச்கள் அங்கங்கே தெரிகின்றன. இன்று படிக்கும்போது பெரிதாகத் தெரியாவிட்டாலும் அன்றைய நிலைக்கு கொஞ்சமாவது கிளுகிளுப்பாக இருந்திருக்கும். அன்றைய குமுதம் லெவல், ஜெயராஜ் படங்கள் என்று நன்றாகத் தெரிகிறது.
ப்ரியா தமிழ் கூறும் நல்லுலகில் உலக மகா ஹிட். அதனால் கதைச் சுருக்கத்தை மிகச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தமிழ் நடிகை ப்ரியாவைக் கட்டுப்படுத்தும் கணவன் ஜனார்த்தனன்; காதலன் பரத். அவள் லண்டனின் படப்பிடிப்புக்கு செல்லும்போது பாதுகாப்புக்கு கூடச் செல்லும் கணேஷ். இவர்களை எல்லாம் மீறி ப்ரியா லண்டனில் கடத்தப்படுகிறாள். அவளை மீட்கும் இங்கிலாந்து போலீஸ், உதவி செய்யும் கணேஷ்.
பின்னால் இதை ரஜினிகாந்துக்காக மாற்றி திரைப்படமாகவும் வந்தது. பாடல்கள் மட்டும்தான் இன்னும் நிற்கின்றன. ஆனால் திரைப்படம் வெளிவந்தபோது எங்கள் நண்பர் குழுவுக்கு நீச்சலுடை ஸ்ரீதேவி முக்கியமான அம்சம்.
ஜெயமோகன் இதை தன் வணிக நாவல் பட்டியலில் சேர்க்கிறார். என் கண்ணில் அவ்வளவு நல்ல வணிக நாவல் அல்ல. கொஞ்சம் போர்தான். ஆனால் அந்த காலகட்டத்துக்கு இதன் ஓரளவாது உண்மையான சித்தரிப்புகள் பெரிய மாற்றமாக இருந்திருக்கும். சங்கர்லால் நாவல்களோடு ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் நடுவே உள்ள வித்தியாசம் தெரியும்.
கணேஷ்-வசந்த் ரசிகர்கள், தமிழின் வணிக நாவல்கள் எப்படி பரிணமித்திருக்கின்றன என்று புரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு மட்டும்தான்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் நாவல்கள்
தொடர்புடைய சுட்டி: ப்ரியா திரைப்படம் பற்றி சுஜாதா நினைவு கூர்கிறார்
மிக சுமாரன கதை. “நீங்க ட்ரீட்மெண்ட் எழுதியிருந்தா படம் பத்து நாள் கூட போயிருக்காது” பஞ்சு அருணாச்சலம் கூறியதாக சுஜாதா எங்கோ எழுதியிருந்தார். மிகச்சரி. சினிமாவிற்கு ஏற்ற கதையே கிடையாது. கதையை கொத்து புரோட்டா போட்டிருக்கின்றார்கள். ராஜாவும், ரஜினியும் இல்லையென்றால் கஷ்டம்தான்.
LikeLike
ரெங்கா, என் கண்ணில் ப்ரியாவின் சினிமா வடிவும் ஒன்றும் பிரமாதமானது அல்ல. பாட்டுக்காகத்தான் பார்க்க வேண்டும்.
LikeLike
ஒன்று எனக்கு புரியவில்லை! குற்றம் சொல்ல வேண்டியது தான் , அதற்கு உரிமையும் இருக்கிறது. ஆனால்
உண்மை என்னவென்றால் – பிரியா மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த படம்
சுஜாதா சொல்லிக்கொண்டிருப்பார் – என் கதையை கொலை பண்ணி விட்டார்கள் என்று
ஆனால் சினிமாவாக பண்ணியிராவிட்டால் யாருக்கும் பிரியா நினைவுக்கு வந்து இருக்க மாட்டாள்
கதை வேறு, திரைக்கதை வேறு
ஆர் கே நாராயண் நெருப்பு உமிழ்ந்தார், தேவ் ஆனந்த் மீது… அவரது “கைடு” நாவலை திரைக்கு கொண்டு வரும்போது தேவ் ஆனந்த் அதைக் கொலை பண்ணி விட்டார் என்று.. ஆனால் தேவ் ஆனந்த் கைடு பண்ணிஇருக்காவிட்டால் “கைடு” நாவலை யாரும் சீண்டியிருக்க மாட்டார்கள்.
சினிமா மூலமாக சில சாதாரண கதைகள் பிரபலம் அடைகின்றன என்றால் அது மிகையாகாது
“இது சத்யம்” ” பிரிவோம் சந்திப்போம்” “காயத்ரி” “சுமைதாங்கி” “கரையெல்லாம் சண்பகப்பூ” போன்ற படங்கள் சொல்லலாம்
“நீதி” படம் கூட ரா.கி. ரங்கராஜன் எழுதியது தான்
LikeLike
சாதாரனக்கதைகள் சிறந்த திரைக்கதையால் மேலும் சிறப்பாகலாம். முள்ளும் மலரும் மாதிரி. பிரியா வெற்றி பெற்ற படமென்றாலும், அதில் மூல நாவலின் பங்கு எங்குள்ளது. பிரியா என்னும் நடிகை, வெளிநாட்டில் கடத்தப்பட்டு மீட்க்கப்பட்டாள். இதை மட்டும் எடுத்துக்கொண்டு காதில்பூ. கணேஷ் கதநாயகனாக மாறுவது, தேங்காய் சீனிவாசனின் அசட்டு ஜோக்குகள், ஒரு சீனக்கதநாயகி வேறு. க்ளைமேக்ஸ், அபத்தத்தின் உச்சம். நாவலிலும் கொஞ்சம் அதீதம் என்றாலும் நம்பும்படி இருக்கும். படத்தில் அப்பாப்பா. கொடுமை. படத்தை காப்பாற்றியது இளையராஜாவும், ரஜினியும் மட்டுமே.
LikeLike
சந்திரப்ரபா, என் கண்ணில் ப்ரியாவோ கைடோ நல்ல படங்களே அல்ல. பாட்டுகளுக்காகத்தான் நினைவு வைத்துக் கொள்கிறோம்(றேன்). (ரெங்கா, ரஜினிக்காக கூட அல்ல) அந்தத் திரைப்படங்களுக்கு ப்ரியா நாவலே தேவலாம். கைட் நல்ல புத்தகம்.
LikeLike