அரவிந்தன் நீலகண்டனின் “ஹிந்துத்வம் – ஒரு எளிய அறிமுகம்”

அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா பக்கம் வந்திருப்பதால் இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டன் தீவிர ஹிந்துத்துவர். நானோ ஹிந்துத்வத்தை எதிர்ப்பவன் (என்று நினைக்கிறேன்.) ஹிந்துத்வம் என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு எனக்கு பலத்த ஆட்சேபணை உண்டு. நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்வம் என்பது கெட்ட வார்த்தை என்பது எனக்கு கிறுக்குத்தனமாக இருக்கிறது. நான் கிருஸ்துவன், கிருஸ்துவத்தை எதிர்க்கிறேன் என்றால் எப்படி இருக்கும்? நாங்கள் பார்ப்பானை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்பது மாதிரி! இப்படி ஹிந்துத்வத்தை என் போன்ற சாதாரண ஹிந்துக்களிடமிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்ட சவர்க்கார் போன்ற ஹிந்துத்வர்களின் மீது எனக்கு கொஞ்சம் காண்டு உண்டு.

ஹிந்துத்வம் என்றால் என்ன என்று ஒரு முறை கேட்டதற்கு ஜடாயு எனக்கு பதில் சொல்ல முயற்சித்தார். தீவிர வாதப் பிரதிவாதத்துக்குப் பிறகு உனக்கு ஒண்ணும் தெரியலே, இந்தப் புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டு வா என்று ஹோம்வொர்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அடிக்கடி சந்திக்கும் இன்னொரு ஹிந்துத்வரான ராஜன் அ.நீ.யின் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் – “ஹிந்துத்வம் – ஒரு எளிய அறிமுகம்”. ஜடாயு கொடுத்த ஹோம்வொர்க்கை ஆரம்பிக்கவில்லை என்றாலும் இதையாவது படிப்போம் என்று இறங்கினேன்.

சுருக்கமாக:

 1. ஹிந்து மதத்தின்/ஹிந்துத்வத்தின் இரு முக்கியக் கூறுகள் theo-diversity (பல தெய்வ வழிபாடு) மற்றும் bio-diversity (இயற்கையில் இறைவனைக் காண்பது).
 2. இந்தியா ஹிந்து தேசமாக இருப்பதால்தான் இந்திய அரசு மதச்சார்பற்றதாக இருக்க முடிகிறது.
 3. ஹிந்துத்வா சிந்தனை முறை மாற்றங்களை ஏற்கக் கூடியது.
 4. தொன்மங்களில் ஜாதி முறை இல்லை, வியாசர் மீனவர், கீதை குணமே வர்ணத்தை நிர்ணயிக்கிறது என்று சொல்கிறது இத்யாதி.
 5. இடிக்கப்பட்டது கும்மட்டம், மசூதி இல்லை.
 6. குஜராத்தில் நடந்தது கலவரம், படுகொலை இல்லை.
 7. ஏமாற்று மதமாற்றத்தைத்தான் எதிர்க்கிறோம், மதமாற்றத்தை இல்லை.
 8. இந்தியர் எல்லோரும் ஒரே இனக்குழுவினரே – “ஆரியர்”.
 9. சமஸ்கிருதம் எல்லோருக்கும் சொந்தம், எல்லோரும் படிக்க வேண்டும்.
 10. வனவாசிகள் (பழங்குடிகள்) ஹிந்துக்களே.
 11. கோல்வால்கர் இந்தியாவின் “அந்நிய இனங்கள்” இந்து தேசியத்தன்மையை ஏற்க வேண்டும், குடியுரிமையை எதிர்பார்க்கக் கூடாது என்று சொன்னார்தான், ஆனால் இது நாஜியிசம் இல்லை.

அ.நீ.யின் பல கருத்துகளில் எனக்கு இசைவில்லை. உதாரணமாக கோல்வால்கர் அப்படி சொன்னது நாஜியிசமா இல்லையா என்பது எனக்கு அனாவசியம். இதுதான் கோல்வால்கரின், அ.நீ.யின், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலை என்றால் “அந்நிய இனங்கள்” இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலையை ஏற்க வேண்டும் என்று என்ன தலைவிதியா? நான் அமெரிக்காவில் வாழ்கிறேன், இந்த விதியை அமெரிக்க அரசு கடைப்பிடித்தால் நான் அமெரிக்கக் குடிமகனாக மாற ஏதாவது சான்ஸ் இருக்கிறதா என்ன? அ.நீ. போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கதி இந்த கோல்வால்கர் விதியின் கீழ் என்னாகும் என்று ஒரு நொடி கூட யோசிக்கவில்லை! அரேபிய எண்ணெய் நாடுகளில் எத்தனை இந்தியர்கள் குடியுரிமை பெறுகிறார்கள்? அமெரிக்காவில் எத்தனை பேர்? இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று இந்த ஹிந்துத்வர்கள் யோசிக்க வேண்டும்.

அப்புறம் இடித்தது மசூதியா கோவிலா கும்மட்டமா கக்கூசா என்ற கேள்வியும் அனாவசியம். இடித்தார்களா இல்லையா, இடிக்க வேண்டும் என்று ஒரு வெறியைக் கிளப்பினார்களா இல்லையா என்பதல்லவா கேள்வி? ஆமாம் இடித்தேன் என்று பெருமைப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. ஜடாயு இன்று குடியிருக்கும் வீடுதான் நான் தெய்வமாக வணங்கும் என் முப்பாட்டனின் ஜன்ம பூமி என்று நான் சொன்னால் ஜடாயு வீட்டைக் காலி செய்துவிடுவாரா? என் நம்பிக்கைதான் அளவுகோல் என்று ஆரம்பித்தால் இதை எங்கே நிறுத்த முடியும்? சட்டம் எதற்கு?

மீண்டும் மீண்டும் சொல்லப்படும் இன்னொரு வாதம் நிறைய ஹிந்துக்கள் இதை விரும்புகிறார்கள், இது அவர்கள் மானப் பிரச்சினை இத்யாதி, அதனால் இது சரிதான் என்பது. எக்கச்சக்க கன்னடிகர்கள் கூடத்தான் காவேரித் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று நினைக்கிறார்கள், என்ன செய்வது?

இப்படிப்பட்ட dispute-களை தீர்க்க ஒரே வழிதான் இருக்கிறது – சட்டம், கோர்ட். தீர்ப்பு வருவதற்குள் கும்மட்டத்தை, கோவிலை, மசூதியை, ஏதோ ஒரு எழவை இடிப்போம் என்று கிளம்புபவர்களுக்கு நியாயம், நீதி, நேர்மை என்ற பாசாங்கெல்லாம் எதற்கு?

இன்றைக்கு வந்திருக்கும் தீர்ப்பு எனக்கு சரியாகப் புரியவில்லை, தவறான தீர்ப்பு என்று படுகிறது. ஆனால் சட்டப்படி தீர்வு வந்தாகிவிட்டது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனக்கு தவறு என்று தோன்றுகிறது என்பதற்காக அதை மீறுவதற்கில்லை. ஆனால் தீர்ப்பு ஹிந்துத்வர்களுக்கு எதிராக வந்திருந்தால் அதை ஹிந்துத்வர்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவர்களுடைய நிலையின் அடிப்படை நம்பிக்கை, ஹிந்துக்களின் எண்ணிக்கை, சட்டம்/நியாயம்/தர்மம் எல்லாம் இல்லை.

தொன்மங்களில் ஜாதி முறை இல்லை என்ற பேச்சு போலியானது. கண்ணன் அப்படி சொன்னான் இப்படி சொன்னான் என்பதெல்லாம் டகல்பாஜி வேலை. கிருஷ்ணன் கீதையில் என்ன சொன்னான் (கீதை பிற்சேர்க்கையா இல்லையா என்ற கேள்விக்கே நான் போகவில்லை) என்பதை விட கிருஷ்ணன் என்ன செய்தான், கர்ணனை சத்ரியனாக ஏற்றானா, ஏற்கும்படி யாருக்காவது சொன்னானா, கர்ணனை இழிவாகப் பாண்டவர்கள் பேசியபோது ஒரு முறையாவது கண்டித்தானா, அஸ்வத்தாமா/துரோணரின் பிராமணத்துவத்தை நிராகரித்து அவர்களை சத்ரியன் என்று சொன்னானா, கடோத்கஜனை பாண்டவர் அரசுக்கு வாரிசாக நியமிக்க ஏதாவது செய்தானா (ஹிடிம்பி/கடோத்கஜன் ராஜசூய யாகத்துக்குக் கூட அழைக்கப்படவில்லை) என்பதெல்லாம் முக்கியம். கருணாநிதி கூடத்தான் டெசோ, தனி ஈழம், உண்ணாவிரதம் என்று ஆயிரம் பேசுகிறார், யாராவது நம்புகிறார்களா என்ன? சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்பது நான் வணங்கும் கிருஷ்ணனுக்கும் கூட பொருந்துகிறது.

இவை எல்லாம் உதாரணங்களே. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வதென்றால் நானே புத்தகம் எழுத வேண்டி இருக்கும். எழுதலாம், யார் பிரசுரிப்பார்கள்? 🙂

பிரச்சினை என்னவென்றால் போலி மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச இந்த ஹிந்துத்வர்களை விட்டால் யாருமில்லை. அந்நிய மத நிறுவனங்கள் மனமாற்றத்தின் மூலம் மதமாற்றம் என்று செயல்படுவது அபூர்வமே. ரம்ஜான் உண்ணாவிரதம் நல்லது, அமாவாசைக்கு இருந்தால் மூட நம்பிக்கை என்று கருணாநிதி/நாஞ்சில் மனோகரன் பேட்டி கொடுத்து நானே படித்திருக்கிறேன். இதை எல்லாம் கண்டிக்க வேறு ஆளே இல்லை என்பதுதான் இவர்களை இன்னும் relevant ஆக வைத்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே இந்த வாதத்தை எப்படி மறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே படிக்கக் கூடாது, திறந்த மனதோடு அணுக வேண்டும் என்று முயற்சித்தேன். என்னால் அது முடிந்தது என்று நான் நினைக்கிறேன்; அ.நீ.யும், ராஜனும், ஜடாயுவும் அப்படி நினைப்பார்களா என்று சொல்வதற்கில்லை. 🙂

பிற்சேர்க்கை: ஜடாயு கோல்வால்கரே ‘அன்னிய இனங்கள்’ பற்றி எழுதி இருந்த புத்தகத்தை மீண்டும் பதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அதனால் அந்தக் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பின்னூட்டம் ஒன்றில் எழுதி இருந்தார். எதற்காகப் பதிக்க வேண்டாம் என்பது தெளிவாகும் வரை – அ.நீ. போன்றவர்கள் அந்தக் கருத்து நாசிசமா இல்லையா என்று மயிர் பிளக்கும் வரை -அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

14 thoughts on “அரவிந்தன் நீலகண்டனின் “ஹிந்துத்வம் – ஒரு எளிய அறிமுகம்”

 1. எல்லோரும் இந்து என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அல்லது எல்லோரையும் இந்து என்ற வட்டத்துக்குள் அடைப்பதை என்னால் ஏற்க முடியாது. நாட்டுப்புறக்கடவுள்களை செவ்வியலாக்கம் செய்வதை மிக அருமையாக மாடன்மோட்சத்தில் ஜெயமோகன் எழுதியிருப்பார். பழங்குடிகள் எல்லோரும் தொன்மையான வழிபாடு முறையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் இந்து என்று சொல்வது தவறு. தங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.

  \\இந்தியர் எல்லோரும் ஒரே இனக்குழுவினரே – “ஆரியர்”\\ வாசித்ததும் சிரிப்புத் தான் வந்தது.

  பகிர்விற்கு நன்றி.

  Like

 2. அன்புள்ள ஆர்.வி, முதலில் இந்த சிறிய பிரசுரத்தைப் படித்து அது குறித்து பதிவும் இட்டதற்கு நன்றி. இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும், மேலதிக இந்துத்துவ நூல்களையும் நீங்கள் படிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் :))

  // இதுதான் கோல்வால்கரின், அ.நீ.யின், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலை என்றால் “அந்நிய இனங்கள்” இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலையை ஏற்க வேண்டும் என்று என்ன தலைவிதியா? //
  // அ.நீ. போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கதி இந்த கோல்வால்கர் விதியின் கீழ் என்னாகும் என்று ஒரு நொடி கூட யோசிக்கவில்லை! அரேபிய எண்ணெய் நாடுகளில் எத்தனை இந்தியர்கள் குடியுரிமை பெறுகிறார்கள்? //

  இது ஆர் எஸ் எஸ்ஸின் நிலை என்றூ எங்காவது அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறாரா? 1930ல் ஸ்ரீகுருஜி எழுதி, பிறகு அவரே தூக்கியெறிந்து விட்ட ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு பாராவை வைத்து இன்று வரை ஆர் எஸ் எஸ் நாசியிஸம் பேசுகிறது என்று இந்துத்துவ விரதிகள் ஜல்லி அடிப்பதற்குத் தான் அவர் மறுப்பு கூறியிருக்கிறார் (அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதுமே ஹிட்லரைப் பற்றி அப்படித்தான் நினைத்தது. இந்தக் காலகட்டத்தில் இதை விட பல மடங்கு அதிகமாக ஹிட்லரை தீவிரமாக ஆதரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை ஆர் எஸ் எஸ்ஸைத் திட்டும் இடதுசாரிகள் மறைக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கலாகாது ஆர்.வி) இது குறித்து கொய்ன்ராட் எல்ஸ்ட் the saffron swastika என்று முழு புத்தகமே எழுதியிருக்கிறார். அ.நீயின் இந்தக் கட்டுரையையும் பார்க்கவும்: பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம் – http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_13.html

  ஸ்ரீகுருஜி எழுதிய Bunch of thoughts என்ற புத்தகம் தான் தனது சித்தாந்த வழிகாட்டி என்று ஆர்.எஸ்.எஸ். 50 வருடங்களாக சொல்லி வருகிறது. இவ்விஷயத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் நிலைப்பாடு தான் ஆர்.எஸ்.எஸ் உடையதும் – equal rights for all, appeasement of none – அனைவருக்கும் சமஉரிமை, யாரையும் தாஜா செய்யவேன்டியதில்லை. எங்காவது பிறமதத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்று ஆர். எஸ் எஸ்ஸோ அல்லது மற்ற இந்து இயக்கங்களோ கோரிக்கைகளோ போராட்டங்கள் நடத்தியதாக நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சிறுபான்மையினருக்கு வழங்கப் படும் அராஜகமான கல்விச் சலுகைகள் (Article 30) நீக்கப் படவேண்டும் என்று மட்டும் தான் குரலெழுப்பியுள்ளது.

  பிறகு ஏன் இப்படி சேறு பூசுகிறீர்கள்?

  – ஜடாயு

  Liked by 1 person

 3. // ஜடாயு இன்று குடியிருக்கும் வீடுதான் நான் தெய்வமாக வணங்கும் என் முப்பாட்டனின் ஜன்ம பூமி என்று நான் சொன்னால் ஜடாயு வீட்டைக் காலி செய்துவிடுவாரா? என் நம்பிக்கைதான் அளவுகோல் என்று ஆரம்பித்தால் இதை எங்கே நிறுத்த முடியும்? சட்டம் எதற்கு? //

  அயோத்தி பிரசினை, பின்னணி பற்றி எதுவுமே தெரியாமல் உதிர்க்கப் பட்ட கருத்து இது. அங்கு பிரசினை “நம்பிக்கை” சார்ந்தது அல்லவே அல்ல.

  பாபரி கும்மட்டம் நின்ற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா, அது எவ்வளவு பழையது, முதலில் பாபராலும் பின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களாலும் அது இடிக்கப் பட்டதா, அதற்கு உரிமை கொண்டாடி இந்துக்கள் போராடியதற்கு, வழக்குத் தொடுத்ததற்கு ஆதாரம் உள்ளதா? – இவையெல்லாம் தான் அடிப்படை கேள்விகள்.

  இந்த எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு வரலாற்று சான்றுகள் இந்துத் தரப்பிலிருந்து அளிக்கப் பட்டிருக்கின்றன. கே எஸ் லால், பி பி லால், ஆர். நாகசாமி என்று பெருமதிப்பிற்குரிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ராமர் கோயில் இருந்ததற்கும், இடிக்கப் பட்டதற்குமான ஆதாரங்களை தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பரிசீலித்துத் தான் இந்திய நீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. நீங்கள் இங்கு சொசு அடிப்பது போல ஒரு கருத்தை உதிர்ப்பது மாதிரி தான் இந்திய நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்று நினைக்கிறீர்கள் போலிருக்கீறது. நல்லவேளை. நீதிமன்றம் அந்த அளவுக்கு கூமுட்டை அல்ல.

  அயோத்தி இயக்கத்தின் போக்கில் நிகழ்ந்த ஒரே தவறு 1992ல் கூடிய கூட்டத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கும்மட்டம் இடிக்கப் பட்டது மட்டும் தான். நீதி மன்ற செயல்பாடு தாமதங்கள், அரசியல் என்று அதற்குப் பல காரணங்கள் உள்ளது. அது ஒரு மாபெரும் வரலாற்றுத் தருணம். சாதாரண சட்ட பிரசினை மட்டுமல்ல.

  Like

 4. // தொன்மங்களில் ஜாதி முறை இல்லை என்ற பேச்சு போலியானது. //

  அநீ போன்ற ஒரு ஆய்வாளர் இப்படி மொத்தகையாக, பொத்தாம் பொதுவாக சொல்வார் என்று நீங்கள் உணமையிலேயே நினக்கிறீர்களா?

  நாங்கள் வர்ணம், சாதி,ஸ்மிருதிகள், சமுதாய அமைப்பு, அதன் ஆரம்பகட்ட நெகிழ்வுத் தன்மை, பிற்காலத்திய இறுக்கம், அதன் இயங்கு தளம், முக்லாய ஆட்சி சாதி முறை மீது செல்லித்திய தாக்கம், பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம், இந்து மரபுக்கு உள்ளாகவே சாதியத்திற்கு எதிரான குரல்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கி ஒரு அகன்ற வரலாற்றுப் பார்வையை முன்னெடுக்க முயல்கிறோம். இது ஒன்றும் இந்துத்துவர்கள் திடீரென்று கண்டுபிடித்தததல்ல. நவீன தேசிய மறுமலர்ச்சியின் ஊடாக ஆரிய சமாஜம், விவேகானந்தர், பாரதி, காந்தி, சாவர்க்கர் ஆகியோர் தந்த பார்வையின் நீட்சி தான் இது.

  இந்த விஷயத்தை மேற்சொன்னது போல உங்களுக்கு சௌகரியமாக தட்டையாக்கிக் கொண்டு பிறகு அதைக் குச்சியால் அடிக்கும் வேலையை நீங்கள் செய்தால், அதற்கு எப்படி எதிர்வினையாற்ற முடியும்?

  // இவை எல்லாம் உதாரணங்களே. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வதென்றால் நானே புத்தகம் எழுத வேண்டி இருக்கும். //

  என் நிலைமை அதை விட மோசம்.. ஏனென்றால் இந்தப் பதிவில் உள்ள எல்லா குறுக்கல்வாதங்களுக்கும் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லியும் கூட, திரும்பத் திரும்ப வந்து சொல்ல வேண்டியதிருக்கிறதே :))

  Like

 5. // அந்நிய மத நிறுவனங்கள் மனமாற்றத்தின் மூலம் மதமாற்றம் என்று செயல்படுவது அபூர்வமே. ரம்ஜான் உண்ணாவிரதம் நல்லது, அமாவாசைக்கு இருந்தால் மூட நம்பிக்கை என்று கருணாநிதி/நாஞ்சில் மனோகரன் பேட்டி கொடுத்து நானே படித்திருக்கிறேன். இதை எல்லாம் கண்டிக்க வேறு ஆளே இல்லை //

  உண்மைகளை ஒத்துக் கொன்டதற்கு மிக்க நன்றி ஆர்.வி.

  Like

 6. ஆர். வி – கமெண்ட் போடலான்னு நேத்து நினைத்து பின் முடியவில்லை. இன்று வந்து பார்த்தால் ஜடாயு ஒரு குறு நாவல் எழுதி இருக்கிறார். நீங்க அதுக்கும் பதில் போடுங்க முதல்ல:) ஆனா சும்மா சொல்லக் கூடாது. இந்துத்துவவாதிகளுக்குன்னு சுறுசுறுப்பு லேகியம் ஏதாவது விசேஷமா கிடைக்குதான்னு தெரியலை. எல்லாருமே எப்பவுமே இவ்வளவு உத்வேகத்துடனேயே இருக்காங்க.

  Like

 7. சித்திரவீதிக்காரன், அ.நீ. அந்த இடத்தில் ஹிந்து என்ற வார்த்தையை uber-ஹிந்து என்ற பொருளில் பயன்படுத்துகிறார். அதாவது ஹிந்து/பவுத்த/சமண கலாசாரப் பின்புலம் உள்ளவர் எல்லாருமே ஹிந்து/ஆரியர் என்கிறார். அவருடைய வரையறைகளை நாம் மறுக்கலாம், ஆனால் அந்த வரையறைப்படி அவர் சொல்வது சரியே.

  ஜடாயு,
  // இதுதான் கோல்வால்கரின், அ.நீ.யின், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலை என்றால் “அந்நிய இனங்கள்” இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலையை ஏற்க வேண்டும் என்று என்ன தலைவிதியா?…
  இது ஆர் எஸ் எஸ்ஸின் நிலை என்றூ எங்காவது அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறாரா? 1930ல் ஸ்ரீகுருஜி எழுதி, பிறகு அவரே தூக்கியெறிந்து விட்ட ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு பாராவை வைத்து இன்று வரை ஆர் எஸ் எஸ் நாசியிஸம் பேசுகிறது என்று இந்துத்துவ விரதிகள் ஜல்லி அடிப்பதற்குத் தான் அவர் மறுப்பு கூறியிருக்கிறார் //
  கோல்வால்கர் தூக்கி எறிந்துவிட்ட, ஆர்.எஸ்.எஸ். நிராகரிக்கும் கருத்தா? அப்படி இந்தப் புத்தகத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அ.நீ.யின் தளத்தில் கூட நான் கோல்வால்கரின் இந்தக் கருத்தைப் பற்றி ஒரு காலத்தில் பதில் எழுதினேன், அ.நீ. அப்படி அவரது தளத்திலும் சரி, இந்தப் புத்தகத்திலும் சரி சொல்லவில்லை. (http://koottanchoru.wordpress.com/2009/09/28/கோல்வால்கர்/) இது நாசியிசம் இல்லை, இது மாஜினியின் கருத்துகளிலிருந்து evolve ஆனது என்றுதான் நீளமாக வியாக்கியானம் எழுதி இருக்கிறார். இதுதான் உண்மை நிலை என்றால் வியாக்கியானத்துக்கு அவசியமே இல்லையே? இரண்டு வரி போதுமே – ஆமாம் இப்படி கோல்வால்கர் சொன்னார், பின்னால் இது தவறு என்று அவர் உணர்ந்துகொண்டார், அவரது கருத்து மாறியது என்றால் முடிந்துவிட்டது. அடுத்த பதிப்பு வரும்போதாவது இதை மறக்காமல் குறிப்பிடச் சொல்லுங்கள். இது ஆர்.எஸ்.எஸ். நிராகரிக்கும் கருத்து, கோல்வால்கர் தூக்கி எறிந்துவிட்ட கருத்து என்றால் எனக்கு மகிழ்ச்சியே. என் கண்ணில் இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத கருத்து. 1930-களில் கூட.

  // எங்காவது பிறமதத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்று ஆர். எஸ் எஸ்ஸோ அல்லது மற்ற இந்து இயக்கங்களோ கோரிக்கைகளோ போராட்டங்கள் நடத்தியதாக நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? // இல்லை, ஆனால் கோல்வால்கரின் ஒரு கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிராகரிக்கிறது என்று நான் கேள்விப்படுவதும் இதுதான் முதல் முறை.

  // பாபரி கும்மட்டம் நின்ற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா, அது எவ்வளவு பழையது, முதலில் பாபராலும் பின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களாலும் அது இடிக்கப் பட்டதா, அதற்கு உரிமை கொண்டாடி இந்துக்கள் போராடியதற்கு, வழக்குத் தொடுத்ததற்கு ஆதாரம் உள்ளதா? – இவையெல்லாம் தான் அடிப்படை கேள்விகள். // இவைதான் அடிப்படை கேள்விகள் என்றால் 1991-இன் ரத யாத்திரைக்கு அவசியமே இல்லை. வக்கீல்கள், ஆராய்ச்சியாளர்கள்தான் முக்கியம். இந்தப் “போராட்டத்தில்” யார் முக்கியம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அன்று கிளம்பிய, கிளப்பிய வெறியை நான் நேராகவே கண்டவன். சாத்வி ரீதாம்பரா, உமா பாரதி போன்றவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள். அத்வானி போன்றவர்கள் அமுக்கி வாசித்தார்கள். அத்வானி அந்த ரத யாத்திரை ஒரு அரசியல் நடவடிக்கை, பா.ஜ.க.வின் ஆதரவைப் பெருக்க நடத்தியது என்று தனிப்பட்ட பேச்சுகளில் ஒத்துக் கொண்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

  // அயோத்தி இயக்கத்தின் போக்கில் நிகழ்ந்த ஒரே தவறு 1992ல் கூடிய கூட்டத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கும்மட்டம் இடிக்கப் பட்டது மட்டும் தான். நீதி மன்ற செயல்பாடு தாமதங்கள், அரசியல் என்று அதற்குப் பல காரணங்கள் உள்ளது. அது ஒரு மாபெரும் வரலாற்றுத் தருணம். சாதாரண சட்ட பிரசினை மட்டுமல்ல. // பாருங்கள், இரண்டு பாரா முன்னால் வழக்குக்கு ஆதாரம் உள்ளதா என்பதுதான் முக்கியப் பிரச்சினை என்றீர்கள். இப்போது இடிக்கப்பட்டது வரலாற்றுத் தருணம் ஆகிவிட்டது. 🙂 நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், “கும்மட்டம்” இடிக்கப்பட்டது தவறு என்று எத்தனை சதவிகிதம் ஹிந்துத்துவர்கள் ஒத்துக் கொள்வார்கள்? உங்களுக்கு உண்மையிலேயே சந்தேகமாக இருந்தால் தமிழ்ஹிந்து தளத்தில் ஒரு poll வைத்துப் பாருங்கள்!

  // நாங்கள் வர்ணம், சாதி,ஸ்மிருதிகள், சமுதாய அமைப்பு, அதன் ஆரம்பகட்ட நெகிழ்வுத் தன்மை, பிற்காலத்திய இறுக்கம், அதன் இயங்கு தளம், முக்லாய ஆட்சி சாதி முறை மீது செல்லித்திய தாக்கம், பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம், இந்து மரபுக்கு உள்ளாகவே சாதியத்திற்கு எதிரான குரல்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கி ஒரு அகன்ற வரலாற்றுப் பார்வையை முன்னெடுக்க முயல்கிறோம். இது ஒன்றும் இந்துத்துவர்கள் திடீரென்று கண்டுபிடித்தததல்ல. நவீன தேசிய மறுமலர்ச்சியின் ஊடாக ஆரிய சமாஜம், விவேகானந்தர், பாரதி, காந்தி, சாவர்க்கர் ஆகியோர் தந்த பார்வையின் நீட்சி தான் இது. // ஜடாயு, ஹிந்த்த்துவர்கள் வைப்பது வரலாற்றுப் பார்வை இல்லை. அதில் தெரிவது “அவ்வளவு ஒண்ணும் மோசம் இல்லே” என்று காட்டும் முயற்சிதான். கண்ணன் என்ன சொன்னான் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் எந்த ஹிந்துத்த்வரும் கண்ணன் என்ன செய்தான் என்று ஒரு முறை எழுதி நான் பார்த்ததில்லை. (ஆனால் கருணாநிதி என்ன சொன்னார், என்ன செய்கிறார் என்று பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள்.) அதுவும் குறிப்பாக நீங்கள் வைப்பது வரலாற்றுப் பார்வை இல்லவே இல்லை. மீண்டும் மீண்டும் விதிவிலக்குகளை விதியாகப் பார்க்க, காட்ட முயல்கிறீர்கள்.ஜாபாலி, நந்தனார், ஆதி சங்கரர்-சண்டாளன், பாணாழ்வார், ஹரிஜன ஐயங்கார் போன்ற பல விஷயங்களைப் பேசும்போது இதை நான் பார்க்கிறேன்.

  உண்மை நிலை “மகா மோசம்”. அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் இருந்தன; ஆனால் அவை விதிவிலக்குகள் மட்டுமே. இதை ஏற்றுக் கொண்டு மேலே போவதுதான் சரியான வழி. இதை நீங்கள் உணராமல் இல்லை, ஆனால் நம் முன்னோர்கள், நம் மதம், நம் பண்பாடு மீது குறை சொல்லப்படும்போது அதற்கு சமாதானம் சொல்ல முயல்கிறீர்கள்.

  // // அந்நிய மத நிறுவனங்கள் மனமாற்றத்தின் மூலம் மதமாற்றம் என்று செயல்படுவது அபூர்வமே… உண்மைகளை ஒத்துக் கொன்டதற்கு மிக்க நன்றி ஆர்.வி. //
  ஜடாயு, போலி மதச்சார்பின்மைக்கு எதிரான நிலை இல்லாவிட்டால் ஹிந்துத்துவர்களுக்கு எந்த relevance-உம் இருக்காது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். உண்மையைச் சொல்லப் போனால் அந்த நிலை ஒன்றே நம்மை உரையாடச் செய்கிறது. அப்படி இல்லாவிட்டால் பேசுவதில் பயனில்லை என்று நானும் நீங்களும் எப்போதோ விலகிப் போயிருப்போம். 🙂

  அருணா, என் “குறுநாவலுக்குத்தானே” ஜடாயு “மறு நாவல்” எழுதி இருக்கிறார்? அவருடைய உத்வேகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

  Like

 8. // ஆனால் கோல்வால்கரின் ஒரு கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிராகரிக்கிறது என்று நான் கேள்விப்படுவதும் இதுதான் முதல் முறை. //

  ஐயா, ஆர்.எஸ்.எஸ் அல்ல, கோல்வால்கரே தள்ளுபடி செய்துவிட்டார் என்றுதானே சொல்கிறேன்.. அந்தப் புத்தகம் மறு பிரசுரம் செய்யப் பட வேண்டாம் என்று அவரே கூறியது பதிவு செய்யப் பட்டுள்ளது.

  அயோத்தி இயக்கம் குறித்து நீங்கள் “வெறும் நம்பிக்கை அடிப்படையிலானது” என்றதற்காக அதன் சட்டபூர்வ ஆதாரங்களைப் பற்றிச் சொன்னேன்.. ஆனால் அது சும்மா ஒரு கோர்ட் வழக்கு மட்டும் அல்ல – இது தான் எல்லாருக்குமே தெரியுமே? அதற்கு ஒரு சட்ட பரிமாணம் மட்டுமல்ல, ஒரு அரசியல், சமூக, கலாசார, வரலாற்று பரிமாணமும் உள்ளது – அதனால் தானே அயோத்தி *இயக்கம்* என்று கூறுகிறோம்? இப்படி ஒரு திரண்ட மக்கள் இயக்கம் உருவாகி விட்ட பிறகு அது தன்னளவில் ஒரு மாபெரும் குறியீடாக ஆகி விடுகிறது. ராமஜன்மபூமி இயக்ககும் அப்படிப் பட்டதே – ராமர் கோயில் மீட்பு என்பது ஒரு அதில் ஒரு சக்திவாய்ந்த குறியீடு. மற்றபடி போலி மதச்சார்பின்மை, இந்து உரிமை இழப்புகள், இந்து கலாசாரம் இந்திய அரசியல்வாதிகளால் இருட்டடிக்கப் படுதல், முஸ்லிம் தாஜாவாதம், இந்திய வரலாறு இடதுசாரிகளால் திரிக்கப் படுதல், மதமாற்றங்கள், பொது சிவில் சட்டம் என்று பல பிரசனைகள் ராமஜன்ம பூமி இயக்கத்தை முன்வைத்தே இந்திய அரசியல்,தளத்தில் பேசப்பட்டன. அந்த இயக்கம் வராதிருந்தால் இன்றளவும் அது பேசப் பட்டிருக்காது.

  உப்பு சத்தியாகிரம் எப்படி “உப்பு” என்பதைத் தாண்டி பல விஷயங்களைத் தீண்டியதோ, அதே போலத் தான் அயோ்த்தி இயக்கமும். இந்த அடிப்படையான அரசியல் புரிதல் கூட உங்களுக்கு இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

  // நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், “கும்மட்டம்” இடிக்கப்பட்டது தவறு என்று எத்தனை சதவிகிதம் ஹிந்துத்துவர்கள் ஒத்துக் கொள்வார்கள்? //

  இங்கு நான் தவறு என்று சொன்னது “moral”கண்ணோட்டத்தில் அல்ல (ஆனால் நீங்கள் அப்படி எடுத்துக் கொண்டது போலத் தெரிகிறது). நான் சொன்னது அரசியல் வியூகம் என்ற கண்ணோட்டத்தில் – பல ஹிந்துத்துவ தலைவர்கள் ஏற்கனவே இத்தகைய கருத்தைத் தெரிவித்து தானே இருக்கிறார்கள். கும்மட்டம் இடிப்பு இந்த இயக்கத்தை ஒரு stone wallல் கொண்டு தள்ளி விட்டது, அதன் இயங்குசக்தியை ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்று தான் அவர்களும் கருதுகிறார்கள்.

  ஆனால் “சரியா தவறா” என்று வாக்கெடுப்பு நடத்தினால், அது moral கண்ணோட்டத்திலானது என்று புரிந்து கொண்டு கும்மட்டம் இடிப்பு சரி என்று தான் பெரும்பாலான இந்துத்துவ ஆதரவாளர்கள் பதில் தருவார்கள். அந்த நிகழ்வு ஒருவித வரலாற்று நீதியை, நியாயத்தை வழங்கிவிட்டது என்பது தான் அவர்கள் எண்ணமாக இருக்கும். அது இயல்பானதும் கூட. (கற்பழிப்பு குற்றம் செய்தவனை நடு்த்தெருவில் சுட்டுக் கொல்லலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினால் எப்படி பதில் வரும்? அதே போலத் தான்)

  1950களில் வல்லபாய் படேல் சோமநாதபுரத்தில் (பாபரி கும்மட்டம் போன்று இல்லாமல்) புழக்கத்தில் இருந்த மசூதியையே இந்திய அரசின் முழு சம்மதத்துடன், அரசு இயந்திரத்தின் துணையுடன் அகற்றி அங்கு மாபெரும் கோயில் எழுப்பினார். அத்தகைய ஒரு சாத்தியம் 1990களில் பாபரி கும்மட்டம் விஷயத்திலும் நடந்திருக்க வேண்டும் – காங்கிரஸ உள்ளிட்ட கட்சிகளில் முஸ்லிம் வாக்குவங்கி அரசியலால் தான் அது நடக்காமல் போனது. அதுவே கும்மட்டம் இடிபட்டதற்கும் காரணம். இதையெல்லாம் ஏற்கனவே நிறைய எழுதியாயிற்று.

  சாராம்சமான விஷயத்திற்கு வராமல் எனது மறூமொழியிலிருந்து ஏதோ ஒரு சில வார்த்தைகளை உருவி சும்மா கத்தி சுழற்றிக் கொண்டிருக்கிறீர்கள், ஆர்.வி.

  Like

 9. அன்புள்ள ஜடாயு,

  // ஆர்.எஸ்.எஸ் அல்ல, கோல்வால்கரே தள்ளுபடி செய்துவிட்டார் என்றுதானே சொல்கிறேன்.. அந்தப் புத்தகம் மறு பிரசுரம் செய்யப் பட வேண்டாம் என்று அவரே கூறியது பதிவு செய்யப் பட்டுள்ளது. // புத்தகம் மறு பிரசுரம் செய்யப்பட வேண்டாம் என்று சொன்னாரா, இல்லை என் கருத்து தவறு, “அந்நிய இனங்கள்” இரண்டாம் நிலை குடிமகன்களாக இருக்க வேண்டும் என்று கருத்து நியாயமற்றது என்றா? ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக கோல்வால்கரின் இந்தக் கருத்தை நிராகரிக்கிறோம் என்றோ, இல்லை “அந்நிய இனங்கள்” எல்லா விதத்திலும் சமமான உரிமை உள்ள குடிமகன்கள்தான் என்றோ திட்டவட்டமாக சொல்லி இருக்கிறதா? தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன். புத்தகத்தை பிரசுரிக்க வேண்டாம் என்று சொல்ல பல காரணங்கள் இருக்கலாம், இந்தக் கருத்து தவறானது என்பதற்காக அப்படி சொன்னார் என்று சொல்ல முடியாது இல்லையா?

  // அயோத்தி இயக்கம் குறித்து நீங்கள் “வெறும் நம்பிக்கை அடிப்படையிலானது” என்றதற்காக அதன் சட்டபூர்வ ஆதாரங்களைப் பற்றிச் சொன்னேன்.. // நான் நம்பிக்கை என்றால் நீங்கள் சட்டம் என்கிறீர்கள், சட்டத்தைப் பற்றி பேசினால் அது வழக்கு மட்டும் இல்லை என்கிறீர்கள். தவறு என்றீர்கள், ஆனால் இப்போது moral கண்ணோட்டத்தில் தவறில்லை என்கிறீர்கள். சரி moral கண்ணோட்டத்தில் தவறில்லை என்றால் என் முழ மனதான நம்பிக்கையை – முப்பாட்டன் ஜன்ம பூமி இத்யாதி – அடிப்படையாக வைத்து நான் எதை வேண்டுமானாலும் இடிக்கலாம், அதுவும் moral ரீதியாக தவறில்லை என்று சொல்லிக் கொள்ளலாமா? அப்புறம் ராமஜன்மபூமி ரத யாத்திரை இல்லாவிட்டால் பா.ஜ.க.வுக்கு இன்றிருக்கும் பலத்தில் பாதி கூட இருந்திருக்காது என்று புரிந்து கொள்ள என்ன பிரமாத மூளை வேண்டும்? நீங்கள் அரசிய வியூக ரீதியாக தவறு என்கிறீர்கள்! அத்வானி ஒத்துக் கொள்ளமாட்டார்!

  Like

 10. இந்தப்பதிவை இன்றுதான் படித்தேன்.

  // நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்வம் என்பது கெட்ட வார்த்தை என்பது எனக்கு கிறுக்குத்தனமாக இருக்கிறது. //

  இதை எழுதியபின் ஹிந்துத்வம் என்பது எப்படி கெட்டச் சொல் என்றும் எப்படி கிறுக்குத்தனமாக இருக்கிறது என்றும் உங்கள் பதிவே விளக்குகிறது.

  அது போக,

  ஒரு சொல்லின் பொருள் உருவாக்கப்படுவதல்ல சொல் அகராதி தொகுப்போரால். மக்கள் எப்பொருளில் புழங்குகிறார்களோ அப்பொருளைத்தான் அகராதி எடுத்தியம்பும். இன்றைய பொருள் இன்னொரு காலத்தில் அதே மக்களே திரித்து வேறொரு பொருளாக்குவார்கள். அகராதி தன்னை மாற்றிக்கொள்ளும்.

  இதன்படி-

  ஹிந்துத்வம் என்பது எப்பொருள் – கெட்ட சொல்லா, நற்சொல்லா – எனபதை சமூஹத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். சமூஹம் என்பது ஜடாயும் நீலகண்டனும் தமிழ் ஹிந்து பின்னூட்டக்காரர்களும் மட்டுமல்லாமல், எல்லோரும் சேர்ந்ததுவே. அம்மொத்த சமூஹம் – அல்லது மெஜாரிட்டி – நற்சொல்லாக எடுத்துக்கொண்டிருந்தால் அது நற்சொல்லே. கெட்ட சொல்லாக எடுத்திருந்தால் கெட்ட சொல்லே. தனிநபர் பங்கு இங்கு இல்லவே இல்லை.
  மக்களை நான் கிறுக்கர்கள் என்று சொல்ல முடியுமா? எவருமே திணிக்கவில்லை: அது அதுவாக நடக்கிறது.

  பார்ப்பனீயம் வேறு; பார்ப்பனர் வேறு என்று நான் சொன்னால் ஏற்க மாட்டீர்கள் என்றெனக்குத் தெரியும். சிலவிடயங்களில் நீங்கள் குரங்குப்பிடி. போகட்டும். சொல்கிறேன் எனக்குப்பட்டவரையில்.

  எனக்கு பார்ப்பன நண்பர்கள் நிறைய. அவர்கள் வீடுகளில் பார்ப்பனீய வாழ்க்கை. அந்த நண்பர்களோ தங்கள்தங்கள் தனிப்பட்ட முறையில் தாமரையிலைத் தண்ணீர் போல வாழ்வார்கள். அண்ணாத்துரைக்கு ஏகப்பட்ட பார்ப்பன நண்பர்கள் உண்டு. நண்பர்கள்லாதவர்கள் கூட அவரை மதித்ததாக சேஷ‌னின் சுயசரிதையில் படிக்கலாம். அவர் காலத்தில் நான் பிறக்கவில்லை. எனவே பிறர் சொல்வதைத்தான் சொல்ல முடியும். எப்படி சாத்தியமானது? பார்ப்பன நண்பர்களைக்கொண்டதால், அண்ணாத்துரை பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொண்டதாகவா பொருள்? அல்லது அப்பார்ப்பனர்களும் லவ் மி ல்வ மை டாக் என்றா சொன்னார்கள்? கிடையவே கிடையாது.

  கிருத்துவம் இசுலாம் இந்து அதுபோல பிற சமூஹத்தில் நிலவு வேறுபாடுளுடன் மக்கள் சேர்ந்து பொது சமூஹத்தில் வாவியலும். இப்படி பிரித்துப்பார்க்கும் தகைமையும் அப்படி லவ் மி லவ் மை டாக் என்ற திணிப்பும் இல்லாவிட்டால் நீங்கள் மறுக்கும் வேறு வேறு தியரி ப்ராக்டிக்கலாக நடக்கும் அண்ணாத்துரையில் வாழ்க்கையில் தெரிகிறது. எனவேதான் அவர் சொன்னார்: பார்ப்பனீயத்தைதான் எதிர்க்கிறேன். பார்ப்ப்னர்களை அல்ல.

  அனுபவித்துப்பார்த்துச் சொல்வதுதான் உண்மை.

  –திருவாழ் மார்பன்
  thiruvaazhmaarban@yahoo.in

  Like

  1. திருவாழ்மார்பன், (நல்ல அழகான பேர்)

   பார்ப்பனீயம் வேறு, பார்ப்பனர்கள் வேறு என்று நான் உறுதியாகச் சொல்பவன். இந்த வேறுபாடு இருப்பதால் இன்று பார்ப்பனீயம் என்று அழைக்கப்படும் கருத்தாக்கம் பார்ப்பனர்களை இழிவுபடுத்துகிறது, அதை ஜாதீயம் என்றே அழைக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்பவன். உங்கள் புரிதல் தவறு.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.