பள்ளிப் பாடங்களில் தமிழ்

பன்னிரண்டு வருஷப் பள்ளிப் படிப்பில் தமிழை விரும்பிப் படித்த நினைவில்லை. அதுவும் செய்யுள் பகுதியாவது பரவாயில்லை. உரைநடை படிக்கும்போது பாதி நேரம் இதை விட நானே உருப்படியாக எழுதுவேனே என்று தோன்றும். பதினோராம் வகுப்பில் என்று நினைக்கிறேன், ‘அறிஞர்’ அண்ணா ‘பெரியார்’ ஈ.வே.ரா.வைப் பற்றி எழுதியது ஒரு பத்து பக்கம் வரும். அந்த வயதில் தமிழகத்தில் அண்ணாவுக்கும் ஈ.வே.ரா.வுக்கும் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருந்தது, ஆனால் என்ன செய்தார்கள் என்று தெரியாது. நானும் சிஷ்யப் பிள்ளையே குருநாதரைப் பற்றி எழுதுகிறாரே என்று ஆர்வத்துடன் படித்துப் பார்த்தேன். ‘பெரியார்’ தமிழர்களுக்கு உணர்வூட்டினார், வழி காட்டினார், மூட நம்பிக்கைகளை ஓட்டினார் என்று அலங்காரமாக எழுதி இருப்பார். நானும் அந்தப் பத்து பக்கத்தை நாலைந்து முறை படித்துப் பார்த்தேன், கடைசி வரை அவர் என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அடச்சே என்று தூக்கிப் போட்டுவிட்டேன். கடற்கரையிலே பாரதியார் ரா.பி. சேதுப்பிள்ளை ஸ்டைலில் உரையாற்றுவார். பாரதியாரின் சில பல கட்டுரைகளைப் படித்திருந்த நான் இது பாரதியார் ஸ்டைலாகவே இல்லையே, ரா.பி. சேதுப்பிள்ளைக்கு இது கூடவா தெரியாது என்று வியந்தேன். அலங்காரத் தமிழுக்கு அப்போதெல்லாம் பயங்கர மவுசு! (திரு.வி.க. ஒருவரது தமிழ்தான் படிக்க நன்றாக இருந்தது.)

இன்று பன்னிரண்டு வருஷப் படிப்பில் நினைவிருப்பது என்ன? பத்து இருபது திருக்குறள். கொங்குதேர் வாழ்க்கை மாதிரி நாலைந்து சங்கப் பாடல்கள். அங்கொன்றும் இங்கொன்றும் சில கம்ப ராமாயணப் பாடல்கள். கலிங்கத்துப் பரணியில் இரண்டு பாட்டு. (வருவார் கொழுனர்… வாரார் கொழுனர்…, முருகிற் சிறந்த கழுநீரும் முற்றா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர்!…) இலக்கியம் என்றால் அவ்வளவுதான்.

ஆனால் நன்றாக நினைவிருப்பது சந்தத்துக்காகவே ரசித்துப் படித்த கவிதைகள்தான். இவற்றை வாய்விட்டுப் படிப்பதே ஒரு சுகானுபவமாக இருந்தது. நினைவிலிருந்து:

ஏழாம் வகுப்புப் பாடத்திலிருந்து அரிச்சந்திர புராணப் பாடல்:

பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
பசியால் அலைந்தும் உலவா
அநியாய வெங்கண் அரவால் இறந்த
அதிபாவம் என்கொல் அறியேன்
தனியே கிடந்து விடநோய் செறிந்து
தரை மீதுருண்ட மகனே
இனி யாரை நம்பி உயிர் வாழ்வம்
எந்தன் இறையோனும் யானும் அவமே!

எட்டாம் வகுப்பு(?) – குற்றாலக் குறவஞ்சி

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேனருவி திரையெழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் செண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்
(கடைசி இரண்டு வரி மறந்து போச்சே!)

இந்தத் தேவாரப் பாடலும் பிரபந்தப் பாடலும் பள்ளியில் படித்ததா இல்லை கோவிலில் கற்றுக் கொண்டதா என்று நினைவில்லை. எழுபதுகளில் பள்ளி சென்றவர்களுக்கு நினைவிருந்தால் உண்டு…

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார்க்கு நல்ல மிகவே

பச்சை மாமலை போல் மேனி
பவழ வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர்தம் கொழுந்தே நின்றன்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!

சந்தம் என்று ஆரம்பித்துவிட்டு இந்தக் கம்ப ராமாயணப் பாடலைக் குறிப்பிடாவிட்டால் ஜன்மம் ஈடேறாது.
(ராமனை மயக்க சூர்ப்பனகை வரும் காட்சி)

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்

என்னைக் கேட்டால் இப்படிப்பட்ட பாடல்கள்தான் ஏழு எட்டாம் வகுப்பு வரை இருக்க வேண்டும்!

உங்களுக்கு தமிழ் பாடத்திலிருந்து நினைவிருப்பது என்ன? சந்தத்துக்கு கவிதை என்றால் என்ன நினைவு வருகிறது? சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

10 thoughts on “பள்ளிப் பாடங்களில் தமிழ்

 1. இன்னொரு கம்பராமாயணப் பாடலைப் பள்ளியில் படித்திருக்கிறேன்:

  கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
  வெட்டிய மொழியினன் விழிக்கண் தீயினன்
  கொட்டிய துடியினன் குறிக்குங் கொம்பினன்
  கிட்டியதமரெனக் கிளர்ந்த தோளினன்

  Like

 2. ஜீப், இந்தக் கம்பன் பாடலும் நினைவு வருகிறது. ஆனால் பாடப் புத்தகத்தில் இருந்ததா என்று நினைவில்லை.
  பாலா, சுட்டிக்கு நன்றி!
  மின்னல்சொல், பன்னிரண்டு வருஷப் படிப்பில் நினைவிருப்பது ஓரிரு குறள்தான் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறீர்கள். எனக்கு நினைவிருப்பதும் ஓரிரு பக்கத்துக்கு மேல் தேறாது!
  பாலா, வேங்கடரமணி, உங்களுக்கு நினைவிருப்பதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

  Like

  1. முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்
   முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
   கிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்
   கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை இடிப்போம்
   செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
   தேனலர் செண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்

   வழங்குகொடை மகராசர் குறும்பலவிலேசர்
   வளம்பெருகுந்திரிகூட மலையெங்கள் மலையே!

   Like

 3. முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்
  முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
  கிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்
  கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை இடிப்போம்
  செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
  தேனலர் செண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்

  வழங்குகொடை மகராசர் குறும்பலவிலேசர்
  வளம்பெருகுந்திரிகூட மலையெங்கள் மலையே!

  Like

 4. படிக்கும்போதே மனதை உருக்கும் காட்சி இது!
  உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணத்தில், மானுக்குப் பிணைநின்ற படலத்தில் வருகிறது.
  வேடன்வலையில் சிக்கிய தாய்மான், தனது கன்றை நினைத்து உருகி, அதற்குப் பாலூட்டுவதற்காகத் தன்னை விடுவிக்குமாறு, வேடனிடம் கெஞ்சும்.

  பிடிபடும் இதற்குமுன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்
  கொடிநுனி மேய்ந்துநீரும் குடித்தறியாத பாவி
  மடிமிசை இரங்கிப்பாலும் வழிந்தது குழவிசோர்ந்து
  படிமிசைக் கிடந்தென்பாடு படுவதோ அறிகிலேனே!

  Like

 5. முழங்குதிரை புனலருவி கழங்கென முத்தாடும்…
  இதன் ஈற்றடிகள் மறந்துபோய்விட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
  இதோ அவை:
  வழங்குகொடை மகராசர் குறும்பலவிலேசர்
  வளம்பெருகுந்திரிகூட மலையெங்கள் மலையே!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.