வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

Vannadasanவிருது அறிவிக்கப்பட்டு பத்து நாள் இருக்கும் என்று நினைக்கிறேன். அன்றே எழுதிய பதிவை வோர்ட்பிரஸ் தின்றுவிட்டது, மீண்டும் எழுத இத்தனை நாள்.

விஷ்ணுபுரம் விருது சாஹித்ய அகாடமி விருது, அல்லது ஞானபீடம் போன்று இன்னும் பிரபலம் அடையாமல் இருக்கலாம். ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் – நல்ல இலக்கியம் படைப்பவர்களுக்கு மட்டும்தான் விருதை அளிக்கிறது. இந்த முறையும் அப்படித்தான் வண்ணதாசனுக்கு விருதளித்து தன்னையும் வண்ணதாசனையும் ஒருசேர கௌரவித்துக் கொண்டிருக்கிறது.

மற்றவர்கள் எப்படியோ எனக்கு எப்போதும் வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் நடுவே ஒரு குழப்பம் உண்டு. யார் எஸ்தர் எழுதியது, யார் கிருஷ்ணன் வைத்த வீடு எழுதியது என்றால் இந்த இரண்டு பேரில் ஒருவர் என்றுதான் சொல்ல முடியும்.

ஜெயமோகனின் சிறுகதைத் தேர்வுகளில் ஆறு வண்ணதாசன் சிறுகதைகள் – தனுமை, நிலை, சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள், போய்க் கொண்டிருப்பவள், வடிகால். தனுமை, நிலை இரண்டும் எஸ்.ரா.வால் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை தனுமைதான்.

வண்ணதாசனின் புகழ் பெற்ற கவிஞர் அவதாரம் கல்யாண்ஜி. கவிதைகளை நான் பொதுவாகத் தவிர்த்துவிடுவதால் அந்த அவதாரத்தைப் பற்றி எனக்கு சொல்ல எதுவுமில்லை.

தமிழ் விக்கிபீடியாவில் வண்ணதாசனைப் பற்றித் தேடினேன். கால ஓட்டத்தில் தமிழறிஞர்கள் என்ற பக்கத்தில் வண்ணதாசனைக் கொன்றேவிட்டார்கள். 1976-இலேயே போய்விட்டாராம்! பாவம், அவருக்கே தெரியுமோ தெரியாதோ. உடனடியாக விக்கிபீடியாவில் உறுப்பினன் ஆகி அதைத் திருத்தினேன். 🙂

வண்ணதாசனுக்கும் விஷ்ணுபுரம் பரிசுக் குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், வண்ணதாசன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு
வண்ணதாசனின் தளம்