நிழல்

தமிழ் ஹிந்துவில் என்னுடைய இன்னொரு மஹாபாரதச் சிறுகதை வெளியாகி இருக்கிறது. தளத்தின் பொறுப்பாளர்களுக்கு என் நன்றி!

எத்தனை திருத்தினாலும் திருப்தி இருப்பதே இல்லை. சின்னச் சின்ன மாற்றங்களோடு அதே சிறுகதை கீழே.

நிழல்

இன்னும் ஒரு அடி. இன்னும் ஒன்று. இன்னும் ஒன்று. இன்னும் ஒன்று…

என்னதான் களைத்திருந்தாலும் கிருதவர்மன் நடப்பதை நிறுத்தும் வரை தானும் ஓய்வதில்லை என்று கிருபர் தீர்மானித்திருந்தார். ‘நீ உட்கார்ந்தால் நானும் கொஞ்சம் ஓய்வெடுப்பேனே, நில்லேண்டா’ என்று அவனை மனதில் சபித்தார். கிருதவர்மனும் சோர்வுற்றிருந்தான் என்பது அவனும் குனிந்த தலை நிமிராமல் சின்னச் சின்ன அடிகளாக எடுத்து நடப்பதில் தெரிந்தது. இன்னும் அரை நாழிகைக்குள் நின்றுவிடுவான் என்று எண்ணிக் கொண்டார். பிறகு தலையை நிமிர்த்தி முன்னால் நோக்கினார்.

அடர்ந்த கருமையான கூந்தல். பரந்த தோள்கள். வலுவான முதுகுத் தசைகள். முழங்கால் வரை நீண்டிருந்த கைகள் முன்னும் பின்னும் சீராகச் சென்று வந்தன. நீண்ட கால்களின் ஆடுசதை இறுகித் தெரிந்தது. தந்தை சரத்வானின் தோள்கள். தந்தையின் கைகள். தந்தையின் கால்கள். தந்தையின் கூந்தல். தன் தோள்கள். தன் முதுகு. தன் கைகள். தன் கால்கள். தன் கூந்தல். மாலை வெயிலில் பொலிந்த பொன்னிற உடல். கிருபியின் பொன்னிறம். அது மட்டும்தான் தன் நிறம் இல்லை. கிருபரின் முகம் தானாக மலர ஆரம்பித்தது

அஸ்வத்தாமன் திரும்பினான். அதே குறுகிய நெற்றி. அதே இடுங்கிய சிறு பச்சைக் கண்கள். முனையில் கொஞ்சம் வளைந்திருந்த அதே மூக்கு. அதே உப்பிய கன்னங்கள். அதே தெற்றுப்பல். அதே இரட்டைத் தாடை. துரோணனின் முகம். கிருபரின் முகத்தில் தோன்ற ஆரம்பித்திருந்த மலர்ச்சி தானாக மறைந்தது. அவரது கண்கள் சுருங்கின.

அஸ்வத்தாமன் அவர் கண்கள் சுருங்கியதைக் கவனித்தான். அவரிடம் விரைந்து வந்தான். ‘களைத்திருக்கிறீர்களா மாமா? இந்த வேப்ப மரத்தடியில் அமருங்களேன். அருகில் நீரின் சத்தம் கேட்கிறது, நான் சென்று கொஞ்சம் குளிர்ந்த நீர் கொண்டு வருகிறேன். நீங்களும் களைத்துவிட்டீர்கள் கிருதவர்மரே! மாமாவுடன் அமருங்கள்’ என்றான்.

‘இல்லை மருகா, முதலில் துரியோதனனைக் கண்டுபிடிப்போம், பிறகு மற்றதெல்லாம்’ என்றார் கிருபர். ‘இருக்கட்டும் மாமா, எங்கே போய்விடப் போகிறான்? நம்மாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாண்டவர்களும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது. அவனுக்கு எந்த அபாயமும் இருக்காது’ என்று அஸ்வத்தாமன் சொல்லிவிட்டு அவருக்கு மிக அருகில் வந்தான். ‘நீங்கள் நிறுத்தினால்தான் கிருதவர்மரும் நிற்பார். அவரை விட வயதில் மூத்த நீங்கள் நடக்கும்போது அவர் ஓய்வெடுக்க சம்மதிக்கமாட்டார்’ என்று ரகசியமாகச் சொன்னான். சரி என்று தலையை மெதுவாக ஆட்டியபடியே கிருபர் கிருதவர்மனை நோக்கினார். கிருதவர்மன் முகத்தில் ஒரு சின்னப் புன்னகை இருந்தது. கிருதவர்மனுக்கு பாம்புச் செவி என்பது கிருபருக்கு நினைவு வந்தது.

பதிலுக்குக் காத்திராமல் அஸ்வத்தாமன் தண்ணீரின் சத்தம் கேட்கும் திசையை நோக்கி விரைந்தான். கிருபர் அடிமரத்தின் மீது சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். கிருதவர்மன் அவர் எதிரில் அமர்ந்தான். கிருபரின் கண்கள் லேசாக மூடத் தொடங்கினாலும் கிருதவர்மனின் இன்னும் மறையாத புன்னகையை கவனித்தார். ‘சொந்த மகன் இல்லையே என்ற குறையே உங்களுக்கு வேண்டாம் கிருபரே! அஸ்வத்தாமன் ஆசார்யருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மகன்தான்!’ என்று கிருதவர்மன் களைத்த குரலில் சொன்னான். கிருபர் நன்றாகவே கண்களை மூடிக் கொண்டார்.

பிரச்சினையே அதுதானடா மூடா! அவன் எனக்கு மட்டுமல்ல, துரோணனுக்கும் மகன் என்பதுதான் பிரச்சினை. அது சரி, அது என்ன ஆசார்யன்? துரோணன் என்று சொல்லமாட்டாயோ? அவன் ஆசார்யன் என்றால் நான் என்ன சமையல்காரனா? என்னை மட்டும் கிருபன் என்று பெயர் சொல்லி அழைக்கிறாயே!

வில்லின் நுட்பங்களை மற்றும் சிலருக்கு – வெகு சிலருக்கு – கற்றுத் தருபவன் அந்த துரோணன். வில் மட்டும் பயின்றால் போதாதடா, மற்ற படைக்கலங்களை எப்படி பயன்படுத்துவது என்று பயிற்சி தர வேண்டாமா? படைக்கலம் பயின்றால் போதுமா, சேனைகளை வழி நடத்திச் செல்லத் தெரிய வேண்டாமா, வியூகங்களை வகுக்கத் தெரிய வேண்டாமா? அத்தனையும் கற்றுத் தருவது நானடா! ஹஸ்தினபுரத்தின் அற்புதமான குருகுலத்தை உருவாக்கியவன் நானடா! ஆசார்யன் என்றால் அது நான்தானடா, அவன் அல்லன்!

குருகுலத்தின் பாடத் திட்டத்தை வகுத்தது நான். இன்று குருகுலம் இத்தனை பிரபலமாக இருக்கிறது என்றால் யார் காரணம்? பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு அரசும் ஹஸ்தினபுரத்துக்கு தங்கள் இளவரசர்களை அனுப்ப யாரடா மூல காரணம்? எந்த மூலையில் எந்த இளவரசன் பிறந்தாலும் அவனுக்கு வாழ்த்து அனுப்புவது நான். எட்டு வயதில் இங்கே பயில அனுப்பலாம் என்று நினைவூட்டுவது நான். வரும் இளவரசர்களின் உணவு, உடை, பராமரிப்பு, ஆசிரியர்களை அமர்த்துவது, வில் தவிர்த்த மற்ற படைக்கலங்களின் நுணுக்கங்கள கற்றுத் தருவது, படை நடத்துவதின் அடிப்படைகள், நுட்பங்கள் எல்லாம் என் பொறுப்பு. அது என் குருகுலம்! ஆனால் யாரைக் கேள், துரோணனின் குருகுலம், மஹா ஆசார்யர் துரோணர்! நான்? வெறும் குலகுரு! இந்தக் கௌரவாதிகளின் பல நூறு மக்குப் பிள்ளைகள்தான் என் சிஷ்யர்கள். அர்ஜுனனும் துரியோதனனும் பீமனும் பகதத்தனும் பூரிசிரவசும் துரோணனின் சிஷ்யர்கள்! அவர்கள் என்னிடமிருந்து ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லையா? என் அத்தனை உழைப்பும் அவனுக்குப் பெருமை சேர்க்கத்தானா? நான் அவனுடைய நிழல் மட்டும்தானா?

ஆனால் உன்னை மட்டும் சொல்வானேன்! பீஷ்ம பிதாமகர் என்று பெரிய பேர், ஆனால் உன்னைக் கண்டதும் அப்படியே காலில் விழாத குறையாகப் பணிந்து பாண்டவ கௌரவர்களின் ஆசார்யராக இருக்க வேண்டும் என்று அந்தக் கிழட்டுக் கழுகும்தான் கேட்டுக் கொண்டது. பிறகு போனால் போகிறது என்று குலகுரு பட்டத்தை எனக்கு பிச்சை போடுகிறது! வெட்கம் இல்லாமல் நானும் ஏற்றுக் கொண்டேன்…

அஸ்வத்தாமன் மெதுவாக கிருபரின் தோளை உலுக்கினான். கிருபர் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். விழித்ததும் அவர் கண்டது அதே முகம். துரோணனின் முகம். தன்னிச்சையாக அவர் கண்கள் மூடிக் கொண்டன. ‘எழுந்திருங்கள் மாமா! இந்த நெல்லிக் கனிகளை சாப்பிட்டு கொஞ்சம் பசியாறுங்கள்’ என்று அவரை மீண்டும் அஸ்வத்தாமன் எழுப்பினான். கிருபரால் இந்த முறை மலர்ந்த முகத்தோடு விழிக்க முடிந்தது. ‘நீயும் கொஞ்சம் சாப்பிடு, கிருதவர்மருக்கும் கொடு’ என்றபடியே இரண்டு கனிகளை எடுத்துக் கொண்டார்.

“துரியோதனன் நாரைத் தடாகத்தின் பக்கம் பார்த்ததாக ஒரு வேடன் சொன்னான்” என்றான் அஸ்வத்தாமன்.

“மடையன்! சிறு வயதில் கௌரவர்கள் அங்கே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்ததெல்லாம் பீமனுக்கு நினைவிருக்காதா என்ன? பாண்டவர்கள் அவனைக் கண்டுபிடிப்பதை சுலபமாக்குகிறான்” என்று கிருபர் சினந்தார்.

“மெய்க்காவல் படை கூட இல்லாமல் இளவரசர் தன்னந்தனியனாகிவிட்டார்” என்று கிருதவர்மன் பெருமூச்செறிந்தான்.

யார் தவறு? துரோணன் தலைமை தாங்கி ஐந்தே நாளில் கௌரவர்கள் தோற்றாயிற்று, சேனாதிபதிக்கு அத்தனை திறமை. அந்தக் கர்ணன் பாவம், பாதிப் படையும் முக்கால்வாசி மஹாரதிகளும் ஒழிந்த பிறகு என்னத்தை கிழிக்க முடியும்? பதினோரு அக்ரோணி சேனையை ஏழு அக்ரோணி சேனை எதிர்க்கிறது. அர்ஜுனனையும் பீமனையும் சாத்யகியையும் விட்டால் அந்தப் பக்கம் வேறு மஹாரதிகளே கிடையாது. இத்தனை பலவீனங்கள் இருந்தும் நம் தரப்பில் இத்தனை முட்டாள் சேனாதிபதி இருந்தால் ஏன் தோற்க மாட்டோம்? அற்ப விஷயம், கர்ணனை சம்சப்தகனாக அனுப்பி அர்ஜுனன் கதையை முடிக்க வேண்டியதுதானே! அது கூடத் தெரியாமல் என்ன பிரதம சேனாதிபதி? சொன்னால் பீமனையும் சாத்யகியையும் கர்ணன் திசைதிருப்புவான், அப்போது யுதிஷ்டிரனைப் பிடித்துவிடுவேன் என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கிறாய். அட அந்த மூவருமே வியூகத்தின் உள்ளே இருக்கும்போது நீ யுதிஷ்டிரனைப் பிடித்துவிட்டாயா? பதினோரு அக்ரோணி சேனையில் இன்று நாலே பேர்தான் மிச்சம்!

“என்ன மாமா யோசனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்? நாம் விரைந்து செல்ல வேண்டும், அப்போதுதான் சூரியன் மறைவதற்குள் நாரைத் தடாகத்துக்கு போக முடியும்” என்றபடியே அஸ்வத்தாமன் மேற்காக நடக்க ஆரம்பித்தான்.

நீயா பத்ம வியூகம் வகுத்தாய்? அதை அபிமன்யு உடைத்தபோது ஜயத்ரதனை அங்கு அனுப்பி நீயா மீண்டும் அடைத்தாய்? பேருக்குத்தான் துரோணன் தலைவன், பொறுப்பு என் தலையில்தான் விழும் என்று யாருக்கும் தெரிவதில்லை. இல்லை, அந்தக் காந்தார நரிக்கு நன்றாகவே தெரியும். பாண்டவ வனவாசத்தின்போது துரோணன் இந்திரப்பிரஸ்தத்தின் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டான், வில் தவிர வேறு எதுவும் அறியாத அந்தணனுக்கு அதிகாரமா என்று வலுத்த குரல் எழுந்தபோது நாட்டை என்ன ஆசார்யரா நடத்தப் போகிறார், அவருண்டு அவர் வில் உண்டு என்று அவர் இருக்கப் போகிறார், கிருபர் அல்லவா ஆட்சி செலுத்தப் போகிறார், இந்திரப்பிரஸ்த மக்களுக்கு ஒரு குறையும் இருக்காது என்று அவையில் எல்லார் முன்னிலையிலும் அந்த நொண்டி நரி சொன்னானே! அப்போது என்னை அல்லவா நீ சர்வாதிகாரியாக நியமித்திருக்க வேண்டும்? நான் ஒரு ஈனப் பிறவி, வாயை மூடிக் கொண்டு துரோணனோடு இந்திரப்பிரஸ்தம் சென்றேன்.

அஸ்தமன சூரியன் தண்ணீரை பொன்னாக மின்னச் செய்து கொண்டிருந்தான். பஞ்சுப் பொதியிலிருந்து பஞ்சு கீழே விழுவதைப் போல நாரைகளின் பெருங்கூட்டத்திலிருந்து அங்கும் இங்கும் சில நாரைகள் தண்ணீருக்குள் இறங்கின. முன்னால் சென்று கொண்டிருந்த அஸ்வத்தாமன் திடீரென்று கூவினான். ‘இளவரசே! துரியா!’ என்று அலறியபடியே ஓடினான். கிருபர் அருகே சென்றபோது அவனது பச்சைக் கண்கள் நிறம் மாறி சிவந்து கிடந்தன. கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.

aswathama_duryodhanaமுறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்.

துரியோதனன் நகைத்தான். ‘தருமன் தர்மவான்தான், ஆனால் எதிரி பிழைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கும்போது அவனை விட்டுவிட்டுச் செல்லும் அளவுக்கு மூடன் அல்ல, கிருபரே!’ என்றான். கிருபரின் தலை தொங்கியது. துரியோதனன் செருமினான். ‘இந்த நேரத்தில் எனக்கு உதவக் கூடிய ஒரே பச்சிலை சிவமூலிகை மட்டுமே’ என்று புன்னகைத்தான். ‘வரும் வழியில் பார்த்தேன்’ என்று கிருபர் விரைந்தார்.

என் ஆலோசனைப்படி ஜயத்ரதனின் அருகில் நீ நின்றிருந்தால் உன்னை வென்று அர்ஜுனனால் அவனை அணுக முடிந்திருக்காது. அன்றிரவு அர்ஜுனன் சிதை ஏறி இருப்பான், துரியோதனன் இப்படி அநியாயமாக விழுந்து கிடக்காமல் இத்தனை நேரம் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி ஆகி இருப்பான். நான் சொல்லி நீ கேட்டுவிட்டால் உன் கௌரவத்துக்கு இழுக்கு வந்துவிடும் இல்லையா? மைத்துனக் காய்ச்சல்! ஆனால் வெளியே சொன்னால் எனக்குத்தான் பொறாமை என்பார்கள்.

ஆம் ஒத்துக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் நீ என்னை விடப் பெரிய வீரன்தான். ஆனானப்பட்ட பார்த்தன் கூட உன்னை வெல்ல முடியாது. ஆனால் உன்னால் மட்டும் பார்த்தனை வென்றுவிட முடியுமா? பார்த்தனை விடு, வயதான பிதாமகரை வெல்ல முடியுமா? சரி அப்படியே நீ அவர்களையும் வெல்லும் திறமை படைத்தவனாகவே இருந்தால் மட்டும்? படைக்கலத் திறமை மட்டும் போர்களை வெல்லப் போதுமா? பீஷ்மரும், கர்ணனும், நானும், பகதத்தனும், சல்லியனும் தளபதிகள். நீயும், அஸ்வத்தாமனும், பூரிஸ்ரவசும், ஜயத்ரதனும் வீரர்கள் மட்டுமே! இந்த மூடன் இதை உணர்ந்திருந்தால் இன்று இப்படி குற்றுயிராகக் கிடப்பானா?

கிருபர் தடாகத்துக்குத் திரும்பியபோது சூரியனின் எச்சம் மட்டும்தான் இருந்தது. அஸ்வத்தாமன் பொங்கிக் கொண்டிருந்தது நாரைகளின் கூச்சலையும் தாண்டி கேட்டது. ‘கதாயுதப் போரின் விதிகளை மீறி இடுப்புக்கு கீழே அடித்திருக்கிறான் கோழை! இவன் சொன்ன பொய்யால்தான் என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். தர்மன் ஒரு போலி, பீமன் ஒரு கோழை, அர்ஜுனன் ஒரு கயவன், கிருஷ்ணன் ஒரு வஞ்சகன்! என்ன நேர்ந்தாலும் சரி, இவர்களை பழி வாங்கியே தீருவேன். துரியோதனா, இது சத்தியம்!’ என்று துரியோதனனின் வலக்கையை எடுத்து தன் வலக்கையால் ஏறக்குறைய அறைந்தான்.

துரியோதனனின் விழிகள் விரிந்தன. ‘கிருபரே, கொஞ்சம் நீர் கொண்டு வாருங்கள்’ என்றான். கிருபர் தடாகத்திலிருந்து நீரை விரைந்து எடுத்துக் கொண்டு வந்து துரியோதனனுக்கு புகட்டப் போனார். ‘இல்லை கிருபரே, குடிக்க அல்ல’ என்ற துரியோதனன் ‘அஸ்வத்தாமா, என் வலப்பக்கம் முழந்தாளிடு’ என்றான். ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான்.

கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்களில் ரத்தம் பாய்ந்து சிவந்தன. துரியோதனன் ‘அஸ்வத்தாமா, உன்னை என் படைகளின் பிரதம சேனாதிபதியாக நியமிக்கிறேன், பாண்டவர்களைக் கொல்! கிருபரே, கிருதவர்மரே, நீங்கள் இருவரும் இவனுக்கு பக்கபலமாக கடைசி வரை நிற்க வேண்டும். போ அஸ்வத்தாமா, என் இறுதி நிமிஷங்களை மகிழ்ச்சியானதாக ஆக்கு, நீ மீண்டும் என்னைப் பார்க்கும் வரை நான் உயிர் துறக்க மாட்டேன்!’ என்று வஞ்சினம் உரைத்தான்.

அடச்சே! மூன்றே பேர் கொண்ட படைக்குக் கூட நான் தலைவன் இல்லையா? என் தலைமைப் பண்புகள் யார் கண்ணிலும் படாதா? நான் மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்தவன் எனக்கே ஆணையிடுவானா? காலமெல்லாம் துரோணனின் நிழலாக இருந்தேன், இனி மேல் இவன் நிழலாக என் வாழ்வைக் கழிக்க வேண்டியதுதானா? அதே இடுங்கிய முகத்திற்கு சேவை செய்தே என் வாழ்நாள் முடியுமா? எங்கள் குலத்துக்கு வந்த சாபமடா!

மூவரும் மீண்டும் கூடாரங்களின் பக்கம் நடந்தனர். கௌரவர் கூடாரங்களில் அங்குமிங்கும் ஓநாய்களின் விழிகள் ஒளிவிட்டன. பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி மேகக் கூட்டத்தின் வழியே மங்கலாகத்தான் தெரிந்தது.

குயத்திக்குப் பிறந்தவன் குடத்திலே பிறந்தேன், அதனால் துரோணன் என்ற பேர் பெற்றேன் என்று கதை கட்டி என் தந்தையின் மனம் கவர்ந்து என் தங்கையை மணந்தாய். குருகுலத்தில் வில் கற்றுத் தா என்று அழைத்தபோது என்னதான் மாமா மைத்துனன் என்றாலும் உறவினருக்கு கடன்பட விரும்பவில்லை என்று பெருமை பேசி மகனுக்கு பால் கூட வாங்கித் தர முடியாத வறுமையில் என் தங்கையை சித்திரவதை செய்தாய். கடைசியில் கரையான் புற்றில் குடியேறிய பாம்பைப் போல என் குருகுலத்தை உன் குருகுலமாக்கிக் கொண்டாய். நீ இறந்த பிறகும் எனக்கு விடுதலை இல்லையா? கிருபி அப்பனுக்கு அடிமை, கிருபன் அப்பனுக்கும் அடிமை, மகனுக்கும் அடிமையா?

‘நாம் மூவர்தான் இருக்கிறோம், அவர்கள் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள், இவர்களை எப்படித்தான் எதிர்கொள்வது மாமா?’ என்று அஸ்வத்தாமன் கேட்டான்.

நீதானேடா தளபதி? என்னை ஏன் கேட்கிறாய்? ஆணையிடு, நிறைவேற்றுகிறேன். போதும், எனக்கு வர வேண்டிய பேரையும் புகழையும் உன் அப்பன் அபகரித்துக் கொண்டது போதும். இனி மேலும் இல்லை. நான் மாபெரும் குருகுலத்தை கட்டி எழுப்பினாலும் வியூகங்களை வகுத்தாலும் அது துரோணன் செய்ததாகத்தானே கருதப்படுகிறது? எத்தனை உன்னதமான சாதனைகளைப் புரிந்தாலும் எத்தனை கீழ்மையான செயல் புரிந்தாலும் அதற்கான பெருமையும் சிறுமையும் உன் அப்பனையும் உன்னையும்தானே சேர்கிறது? எத்தனை… கீழ்மையான… செயல்… புரிந்தாலும்…

‘என்ன மாமா நினைக்கிறீர்கள்?’ என்று அஸ்வத்தாமன் மீண்டும் கேட்டான். ‘அவரை கொஞ்சம் யோசிக்கவிடுவோம், அவர் ஒருவர்தான் ஏதாவது திட்டம் வகுக்கக் கூடியவர், நானோ நீங்களோ அல்ல’ என்று கிருதவர்மன் சொன்னான்.

இருளில் கூகைகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த குருட்டுக் காகங்களின் கூக்குரல் பலமாகக் கேட்டது. கிருபர் யோசிப்பது போல கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.பிறகு மெல்லிய குரலில் சொன்னார் – ‘நள்ளிரவில் பாண்டவர் படைகள் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களைத் தாக்குவோம். தியானத்தில் இருந்த உன் தந்தையின் தலையைச் சீவிய திருஷ்டத்யும்னனையும் குருத்துரோகம் செய்த பாண்டவர்களையும் அவர்கள் தூங்கும்போதே நீயே உன் கைப்பட கொன்றுவிடு. மற்ற வீரர்கள் படைக்கலங்களை எடுத்துக் கொள்ளும் முன்பே கூடாரங்களுக்கு தீ வைத்து அவர்களை எரித்தே கொன்றுவிடுவோம்’.

இருளில் அவர் புன்னகைத்தது மற்ற இருவருக்கும் தெரியவே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

3 thoughts on “நிழல்

 1. நன்றாக இருக்கின்றது. சின்ன விஷயங்கள் சுவாரஸ்யப் படுத்துகின்றன். ஒரிஜினலை நிகழ்வுகளை மாற்றாமல், அதற்கு காரணம் இப்படியும் இருக்கலாம் என்பது சேஃப் விளையாட்டு.

  ஏதாவது குறை சொல்லாமல் போகக்கூடாதே ….

  //நீதானேடா தளபதி? என்னை ஏன் கேட்கிறாய்? ஆணையிடு, நிறைவேற்றுகிறேன். போதும், எனக்கு வர வேண்டிய பேரையும் புகழையும் உன் அப்பன் அபகரித்துக் கொண்டது போதும். இனி மேலும் இல்லை. நான் மாபெரும் குருகுலத்தை கட்டி எழுப்பினாலும் வியூகங்களை வகுத்தாலும் அது துரோணன் செய்ததாகத்தானே கருதப்படுகிறது? எத்தனை உன்னதமான சாதனைகளைப் புரிந்தாலும் எத்தனை கீழ்மையான செயல் புரிந்தாலும் அதற்கான பெருமையும் சிறுமையும் உன் அப்பனையும் உன்னையும்தானே சேர்கிறது? எத்தனை… கீழ்மையான… செயல்… புரிந்தாலும்…//

  இதை வெட்டி விட்டால் இன்னும் சூப்பராக இருக்கும் என்று எனக்கு தோன்றுகின்றது. கதை முடிவிற்கான க்ளூவை தந்துவிட்டீர்கள்.

  Like

 2. RV, what a pleasure it is to see your craftsmanship evolve and the writing blossom into this delightful story (as seen in comparison to ‘அம்மாவுக்குப் புரியாது’).

  It is as though you used Jeyamohan’s critique of that early work as a guide while writing every one of your subsequent short stories, worked to shaping your writing and move farther and farther away from ‘mainstream Sujatha style’ and O’Henry twists.

  (To use a cliche, writing is indeed a process and journey)

  Like

 3. ஜீப், பிள்ளைகள் உயரமாவது பெற்றோர் கண்ணுக்குத் தெரியாது, மற்றவர்தான் சொல்ல வேண்டி இருக்கும். அந்த மாதிரி என் மாறுதல் என் கண்ணுக்குத் தெரியவில்லை, நீங்கள் சொன்ன பிறகுதான் ஏதோ முன்னேற்றம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. நன்றி!

  ரெங்கா, அந்தப் பாராவை முதலில் எழுதுவதாக இல்லை. ஆனால் எழுதிவிட்டு திரும்பிப் படித்துப் பார்த்த பிறகு கதை ஜம்ப் ஆவது போல இருந்தது, அதனால் சேர்த்தேன். Subtlety, சொல்லாமல் சொல்வது எல்லாம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.