சொல்வனத்தில் அ. முத்துலிங்கத்தின் ஒரு அருமையான பேட்டியைக் கண்டேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
முத்துலிங்கம் சொல்கிறார் –
ஒரு நேர்காணலில் ஒருவர் கேட்டார். ’நான் சொந்தமாக்கிய முதல் புத்தகம் என்ன?’ அதிர்ச்சியான கேள்வி. வீட்டிலே பாடப் புத்தகங்கள் இருந்தன. அதைத் தவிர பஞ்சாங்கம் இருந்தது. எனக்குச் சொந்தமாக ஒரு புத்தகமும் கிடையாது.
அவருக்கு அடுத்த தலைமுறையினனான என் வீட்டிலும், படிக்கும் பழக்கம் இருந்த, பிள்ளைகள் புத்தகம் படிப்பதை ஊக்குவித்த பெற்றோர்கள் இருந்த போதிலும் புத்தகம் வாங்கும் பழக்கம் இருந்ததில்லை. அப்படி புத்தகங்கள் வாங்க முடியும் என்றே யாருக்கும் தோன்றியதில்லை. நான் வேலைக்குப் போன பின்னர்தான் புத்தகங்கள் வாங்கத் தொடங்கினோம். (இப்போது நானும் நிறுத்திவிட்டேன், புத்தகங்களை வைக்க இடமில்லை.) இன்றும் தமிழகத்தில் யாரும் புத்தகங்கள் வாங்குவதில்லை என்கிறார்கள். ஏன் இப்படி? தமிழன் மரபணுவிலேயே ஏதாவது கோளாறா?
தன் எழுத்தின் கோட்பாடு பற்றி –
கோட்பாடு அப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு நான் எழுதுவதில்லை. ஒரு படைப்பு வாசகரைச் சென்று அடையவேண்டும். அதுதான் முக்கியமானது. அது தேவையில்லை என்றால் எழுத்தாளர் கதையை எழுதி பெட்டியிலே பூட்டி வைப்பதற்கு சமம். ஒரு கதைக்கு ஆரம்பம், நடு, முடிவு என்று இருக்க வேண்டும். ஆரம்பம் வாசகரை உள்ளே இழுக்கவேண்டும். முடிவு வாசகரை வெளியே போகாமல் தடுக்கவேண்டும். அதாவது கதை முடிந்த பின்னரும் அவர் சிந்தனை கதையின் பாதையில் தொடர்ந்து ஓடவேண்டும். கதை முடியும் சமயம் நீங்கள் புதுப்பிக்கப்பட்டதாக உணர வேண்டும்.
….
இன்னொரு முக்கியமான விடயம் எட்டாம் வகுப்பு மாணவனின் சொற்களில் எழுத வேண்டும் ஆனால் எட்டாம் வகுப்பு மாணவனின் வசன அமைப்பில் அல்ல. மாணவன் ’மாமரத்தின் உச்சிக்கு ஏறினான்’ என்று எழுதுவான். ஆனால் எழுத்தாளர் வித்தியாசமாக எழுதவேண்டும். ’அவன் ஏறினான், ஏறினான். மரம் முடியுமட்டும் ஏறினான்.’ இதுதான் வித்தியாசம்.
…
கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது? ஒருமையிலா, பன்மையிலா? தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது.
…
சுந்தர ராமசாமி சொல்வார் நல்ல எழுத்து எழுதுவது சுலபம் என்று. தேய்வழக்கை நீக்கிவிட்டாலே நல்ல எழுத்து வந்துவிடும். ஆரம்பத்தில் இருந்து எளிமையாக எழுதுவதற்கே முயன்று கொண்டிருக்கிறேன். கடினமான ஒரு பொருளை இலகுவாக எப்படி கடத்துவது என்றே ஒரு நல்ல எழுத்தாளர் ஓயாமல் சிந்திக்கிறார்.
….
’புதியதைச் சொல். புதிதாகச் சொல்’ என்பார்கள். ‘என்னுடைய அம்மா ஓடிப்போன நாலாவது நாள் அவன் வந்தான்.’ இது ஒரு சிறுகதையின் ஆரம்ப வரிகள். வாசகரை உள்ளே இழுப்பதற்கான தந்திரம்.
….
புறநானூறு 305 இப்படிச் சொல்கிறது.களைத்து, மெலிந்து
இரவில் வந்த
இளம் பார்ப்பனன்
அரண்மனைக்குள் புகுந்து
சில சொற்கள் சொன்னான்.
போர் நின்றது.இதைவிட சிறந்த சிறுகதை உண்டா? பார்ப்பனன் எதற்கு வந்தான்? எங்கிருந்து வந்தான்? யார் அனுப்பிய செய்தி? என்ன சொன்னான்? யார் அரசன்? ஏன் போர் நின்றது?
புறநானூற்றுப் பாடல் அபாரம்! முத்துலிங்கம் சொன்னதால் என் கவிதை அலர்ஜியையும் தாண்டி நெடுநல்வாடை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது!
தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்
நன்றி RV.
புறநானூறு 305. சொல்லோ சிலவே!
பாடியவர்: மதுரை வேளாசான்
திணை: வாகை துறை : பார்ப்பன வாகை
வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.
LikeLike
மின்னல்சொல், ஆஹா! புறநானூற்று வரிகளைக் கொடுத்தற்கு நன்றி! பாருங்கள், இதை நேராகப் படித்திருந்தால் மொழி சரியாகப் புரிந்திருக்காது, முத்துலிங்கத்தின் மொழிபெயர்ப்பின் மூலம் படிக்கும்போது பிரமாதமாக இருக்கிறது!
LikeLike