2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! முதலில் இளமை இதோ இதோ Happy New Year! என்று ஏதாவது தமிழ் பாட்டு வீடியோவை இணைக்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் படிக்கும் நாலு பேர் மேல் பரிதாபப்பட்டு விட்டுவிட்டேன்.

இந்த வருஷத்தில் என்ன படிப்பது என்று பார்த்தால் இரண்டு வருஷம் முன்னால் போட்ட பட்டியலையே இன்னும் முடிக்கவில்லை. பேசாமல் பட்டியலை சின்னதாக்கிக் கொண்டேன். இந்த வருஷமாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

போன வருஷம் நான் கண்டெடுத்த எழுத்தாளர்கள் F.X. Toole (Rope Burns), Patrick Modiano (Suspended Sentences), Ted Chiang மற்றும் Bernard Cornwell. தமிழில் குறிப்பிடும்படி புதிய எழுத்தாளர் எவரையும் நான் படிக்கவில்லை. எனக்குத்தான் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நண்பர்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள், தமிழ் புத்தகங்கள் யாராவது, ஏதாவது உண்டா?

நான் போன வருஷம் படித்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே:

சிறுகதைகள்/குறுநாவல்கள்:

 1. டெட் சியாங்கின் Exhalation சிறுகதை
 2. டெட் சியாங்கின் Truth of Fact, Truth of Feeling சிறுகதை
 3. டெட் சியாங்கின் Merchant and the Alchemist’s Gate சிறுகதை
 4. லா.ச.ரா.வின் பாற்கடல் சிறுகதை
 5. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதை
 6. ஜெயமோகனின் பழைய பாதைகள் சிறுகதை
 7. ஷோபா சக்தியின் கண்டிவீரன் சிறுகதை
 8. திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பு – ‘ரமாவும் உமாவும்
 9. அசோகமித்ரன் சிறுகதைபுலிக்கலைஞன்
 10. சுந்தர ராமசாமி சிறுகதை – பிரசாதம்
 11. ஐசக் அசிமோவின் SF சிறுகதைத் தொகுப்பு – ‘I, Robot
 12. பாட்ரிக் மோடியானோவின் குறுநாவல் தொகுப்பு – ‘Suspended Sentences
 13. தங்கர் பச்சானின் 2 சிறுகதைகள் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
 14. F.X. Toole எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – Rope Burns (Film: Million Dollar Baby)
 15. பூமணியின் சிறுகதை – ‘ரீதி
 16. கு.ப.ரா.வின் சிறுகதை – வீரம்மாளின் காளை
 17. லா.ச.ரா.வின் சிறுகதை – மண்
 18. சுந்தர ராமசாமியின் சிறுகதை – ‘விகாசம்
 19. அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – ‘கடவுச்சொல்

சரித்திர நாவல்கள்:

 1. பெர்னார்ட் கார்ன்வெல்லின் உத்ரெட் நாவல்கள் – Last Kingdom, Pale Horseman, Lords of the North, Sword Song, Burning Land, Death of Kings, Pagan Lord, Empty Throne, Warriors of the Storm, Flame Bearer
 2. பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள் – Winter King, Enemy of God, Excalibur
 3. பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள் – Archer’s Tale, Vagabond, Heretic & 1356
 4. ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy – Imperium, Lustrum & Dictator

மர்ம நாவல்கள்:

 1. அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express

கவிதைகள்

 1. ‘கவிதை’ – Jabberwocky
 2. குறுந்தொகை கவிதை – காமம் காமம் என்ப

அபுனைவுகள்:

 1. ஃபிலிப் பெடி எழுதிய A Walk in the Clouds (நியூ யார்க் நகரின் இரட்டை கோபுரத்தின் நடுவில் கயிற்றைக் கட்டி நடந்தவர் – Walk என்று திரைப்படமாகவும் வந்தது.
 2. ஏப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை
 3. ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதிய ‘Nadars of Tamil Nadu
 4. பாரி எஸ்டப்ரூக்கின் அபுனைவு – Tomatoland
 5. ராபர்டோ சாவியானோவின் கட்டுரை – Angelina Jolie
 6. எம்.வி.வி.யின் Memoirs – “எனது இலக்கிய நண்பர்கள்
 7. லாரி பேக்கர் எழுதிய Manual of Cost Cuts for Strong Acceptable Housing

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

அகதா கிறிஸ்டியின் டாமி-டுப்பென்ஸ் கதைகள்

agatha_christieபதின்ம வயதில் நான் அகதா கிறிஸ்டியை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். இன்று வெகு சில கதைகள் தவிர மற்றவற்றை மீண்டும் படிக்கும்போது குறைகள் பெரிதாகத் தெரிகின்றன, படிக்க சிரமமாக இருக்கிறது. ஆனால் டாமி-டுப்பென்ஸ் கதைகளைப் படிக்க முடிந்தது. மர்ம முடிச்சுகளுக்காக அல்ல, விறுவிறுப்புக்காக அல்ல. இளைஞர்களுக்கு வயதாகும் சித்திரத்துக்காக.

ஒரு வேளை எனக்கும் வயது ஏறிக் கொண்டே போவதாலோ என்னவோ தெரியவில்லை. இன்று இந்தப் புத்தகங்கள் charming ஆகத் தெரிந்தன. பிள்ளைகள் என் வழுக்கைத்தலையைப் பார்த்து சிரிக்கும்போது புன்முறுவல் வருவது போல அவ்வப்போது புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். அதிலும் கடைசி நாவலான Postern of Fate-இல் இருவரும் நிறைய வளவளவென்று பேசுவார்கள். எனக்குத் தெரிந்த பெரிசுகள் மாதிரியே இருக்கிறதே, இது கிறிஸ்டியின் புத்திசாலித்தனமான சித்தரிப்பா, இல்லை கிறிஸ்டிக்கு வயதாகிவிட்டதால் வளவள்வென்று எழுதி இருக்கிறாரா என்று தோன்றியது.

டாமி அன்றைய ஆங்கிலேயனின் கோட்டுச் சித்திரம் (caricature). தைரியம், வீரம் உண்டு, ஆனால் பெரிய புத்திசாலி இல்லை (not clever.) டுப்பென்ஸ் இன்னொரு கோட்டுச் சித்திரம் – கொஞ்சம் புத்திசாலி, ஆனால் ஆழம் தெரியாமல் காலை உள்ளே விடும் ரகம். கதைகL எப்படிப் போகும் என்று சுலபமாக யூகித்துவிடலாம்.

டாமி-டுப்பென்ஸ் முதல் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் – Secret Adversary (1922) புத்தகத்தில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் கையில் பணமில்லை, வேலையில்லை, போர்க்காலம் முடிந்த பிறகு வாழ்க்கை போரடிக்கிறது, ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாட வேண்டி இருக்கிறது. அப்போது ஒரு மர்மம், கொஞ்சம் அதிர்ஷ்டவசத்தால், சில தற்செயல் நிகழ்ச்சிகளால் ஒரு கிரிமினல் மாஸ்டர்மைண்டை வெல்கிறார்கள்.

N or M? (1941) புத்தகத்தில் இருவருக்கும் வயதாகிவிட்டது. இரண்டாம் உலகப் போரின் காலம். தங்கள காலம் கடந்துவிட்டது, ஒன்றுக்கும் பயனில்லை என்ற விரக்தியில் இருக்கும்போது ஜெர்மானிய உளவாளிகளை கண்டுபிடிக்கும் பணி கிடைக்கிறது. தட்டுத் தடுமாறி கண்டுபிடிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் அவர்களுக்கு வயதாகிவிட்டதைச் சொல்வதுதான் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

By the Pricking of My Thumbs (1968): புத்தகத்தில் இருவருக்கும் இன்னும் வயதாகிவிட்டது. எப்படியோ ஒரு மர்மத்தை வலிந்து கண்டுபிடித்து வலிந்து துப்பறிகிறார்கள். ஆனால் புத்தகத்தின் ஆரம்பத்தில் வரும் டாமியின் வயதான அத்தையின் சித்திரம் நன்றாக இருந்தது.

Postern of Fate (1968): நாவலில் இருவருக்கும் எழுபது எழுபத்தைந்து வயதாகிவிட்டது. ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பழைய சிறுவர் புத்தகத்தில் மேரி ஜோர்டன் கொலை செய்யப்பட்டாள் என்று ஒரு சிறுவன் ‘எழுதி’ இருக்கிறான். டுப்பென்ஸ் வழக்கம் போல கிளம்பிவிடுகிறாள்!

இவற்றைத் தவிர Partners in Crime (1929): என்ற புத்தகத்திலும் இவர்கள் வருகிறார்கள். இந்த முறை கிறிஸ்டி அன்று பிரபலமாக இருந்த எல்லா துப்பறியும் எழுத்தாளர்கள் ஸ்டைலில் டாம்மி-டுப்பென்ஸ் துப்பறியும் சிறுகதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார். அவரையே நகல் எடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்!

நல்ல மர்மக் கதைகள் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் என்னை இவை தொட்டது உண்மை…

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

கௌரி கிருபானந்தன், குளச்சல் யூசுஃபுக்கு ஸ்பாரோ விருதுகள்

gowri_kulacchal_yusuf_ambai_sparrow_awards2016க்கான ஸ்பாரோ விருதுகள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தோழி கௌரி (தெலுங்குதமிழ்), குளச்சல் யூசுஃப் (மலையாளத்திலிருந்து தமிழ்), ஸ்ரீதரன் மதுசூதனன் (சீன மொழியிலிருந்து தமிழ்) ஆகியோர்கள் விருதுகளை வென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஸ்ரீதரன் மதுசூதனன் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் மற்ற இருவரும் சிறப்பான பணி ஆற்றுபவர்கள் என்று சொந்த வாசிப்பிலிருந்து உறுதியாகச் சொல்ல முடியும். தேர்வுக்குழுவினருக்கு (அம்பை, சுகுமாரன், காலச்சுவடு கண்ணன்) ஒரு ஜே!

இந்தத் தளத்திற்கு வருபவர்களுக்கு கௌரி பற்றிய அறிமுகம் தேவை இல்லை. தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்குக்கும் சளைக்காமல் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்புக்காக சாஹித்ய அகாடமி விருதும் வென்றிருக்கிறார்.

குளச்சல் யூசுஃப்பின் மொழிபெயர்ப்புகள் தரமானவை. இந்த விருதுக்கான அவரது ஏற்புரையை ஃபேஸ்புக்கில் படித்தபோது நண்பேண்டா என்று உணர்ந்தேன். மளிகை சாமான் கட்டி வந்த காகிதங்களையும் விடாமல் படிப்பவர். வசதிக்காக அவரது பதிவைக் கீழே பதித்திருக்கிறேன்.

விருதுக்கு என்னைத் தேர்வு செய்த ஸ்பாரோ அமைப்பினருக்கும் தேர்வுக் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கூடவே, இவ்விருதினைப் பெறும் திருமதி கௌரி கிருபானந்தன் அவர்களுடனும், திரு ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்களுடனும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாகவே விருதுகள் மீது நான் அதிக ஈடுபாடோ ஆர்வமோ காட்டுவதில்லை. பல்வேறு கசப்பான அனுபவங்கள் தந்த பக்குவ நிலை இது. இந்நிலையை தமிழில், ‘எட்டாத பழம்’ என்பார்கள். விருதுக்கு என்னைத் தேர்வு செய்த தகவலைச் சொன்ன காலச்சுவடு கண்ணன், தேர்வுக் குழுவினரின் பெயர்களையும் சொன்னார். ஒவ்வொன்றையும் மதிப்பிடுவதற்கு ஒரு சில அளவுகோல்களை நம்பி வாழும் நான், இலக்கியவாதிகள் தொடர்பான மதிப்பீடுகளுக்கு சுந்தர ராமசாமியுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதான ஒரு அலகை வைத்திருக்கிறேன். தேர்வுக் குழுவைச் சார்ந்தவர்களும் இந்த அளவுகோலுக்கு உட்படுவார்கள் என்பதால் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். கூடவே, மேடையில் அமர வைத்துவிடுவார்களே என்ற தயக்கமும், ஏற்புரை வழங்கச் சொல்லி ஒலி பெருக்கியின் முன் நிறுத்திவிடுவார்களே என்ற பயமும் உருவானது. சற்று மிகையாகச் சொன்னால், ஒலி பெருக்கியைப் பார்த்தாலே ஞாபக சக்தியை இழந்து விடும் எனது இயல்பு கண்ணனுக்குத் தெரியும். இப்படியான சில நிகழ்வுகளின் நேரடிப் பார்வையாளராக இருந்தவர் அவர். எனவே சற்று ஆறுதலாக இருந்தது. நீங்கள் சொல்ல நினைப்பதை வாசித்துவிடுங்கள் என்று அம்பை அவர்கள் சொன்ன பிறகுதான் மேடை ஜுரம் ஓரளவாவது அகன்றது.

தமிழ்நாட்டின் குமரி மண்ணிலிருந்து மும்பைக்கு வந்து விருது பெற்றிருக்கும் நான், ஏற்புரையில் இலக்கியமும் எனது வாழ்க்கையும் தொடர்பான மிகச் சில அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இளம் வயதில் சிறு அளவிலான ஒரு மளிகைக்கடை வைத்திருந்தேன். அங்கே விற்பனைக்கு வரும் பழைய காகிதங்களை ஒன்றுவிடாமல் வாசித்து விடுவேன். அபூர்வமாக வரும் மலையாள நூல்களையும் பத்திரிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வேன். மொழியைக் கற்ற பின் வாசிப்பதற்காக. இதில், வைக்கம் முகம்மது பஷீரின் பாத்துமாவின் ஆடு, பால்யகால சகி, எங்க உப்பப்பாக்கொரு ஆனையிருந்தது என்னும் மூன்று குறுநாவல்களும் உட்படும். இல்லஸ்ட்ரேட் வீக்லியை வாரம் தவறாமல் வாங்கி அதையும் பத்திரப்படுத்தி வைப்பேன். ஆங்கிலம் கற்ற பின் வாசிப்பதற்காக. பரீட்சை பேப்பர்கள் எடைக்கு வந்தால் பொக்கிஷம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். நாட்கணக்கில் சிரிப்பதற்கான விஷயங்கள் அதில் கிடைக்கும். இத்துடன் சோவியத் நாடு, ஸ்புட்னிக், யுனெஸ்கோ கூரியர் உட்பட தமிழில் வெளிவருகிற அனைத்துப் பத்திரிகைகளையும் அவ்வப்போதே வாசித்து விடுவேன். சிறிது காலம், சமூக புரட்சியாளர்கள் குறித்த நூல்கள், தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் அனைத்து நூல்களும், பிறகு மொழிபெயர்ப்பு நூல்கள், வரலாறு, கவிதை, உளவியல், ஆன்மிகம் என்று எந்தப் பேதமும் இல்லாமல் குறிப்பிட்ட காலகட்டங்களில் குறிப்பிட்ட வகை நூல் களைத் தொடர்ந்து வாசிப்பது வழக்கமாக இருந்தது. எனது வாசிப்புக் களத்திற்குக் கை கொடுத்தது, எனது மளிகைக் கடையும் குமரி மாவட்ட மைய நூலகமும்தான். மலையாள மொழியின் எனக்கான பாலபாடமென்று திரைப்பட சுவரொட்டிகளையும், பத்திரிகைத் தலைப்புகளையும் குறிப்பிடலாம். மலையாளம் ஓரளவு வசப்பட்டதும் வாசிப்புக் களம், மலையாளத்தை நோக்கிப் பரந்துபட்டது. இக்காலகட்டத்தில்தான் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ மூலம் இன்னொரு இலக்கியத் தளம் அறிமுகமாகிறது.
அப்போது நாங்கள், நாகர்கோயிலில் கோச்சப்பிடாரம் என்னும் கிராமத்தில் எல்லா சமூகத்தினரும் கலந்து வாழும் அக்ரஹாரத்தில், தேரேகால்புதூர் பஞ்சாயத்துத் தலைவர் மணி ஐயரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தோம். இன்று கற்பனை செய்து பார்க்க இயலாத, அல்லது பார்க்க விரும்பாத அபூர்வமான உலகம் அது. பொதுவான புழக்கடையில் அமர்ந்து, பரஸ்பரம் உரையாடிக் கொண்டே ஐயரம்மா, கீரையும் என் உம்மா, நெத்திலி மீனும் ஆய்ந்து கொண்டிருப்பார்கள். தனது காதல் மனைவியுடனான ஓயாத பிணக்கங்களின்போது எதிர்வீட்டு ஜனார்த்தனன் ஐயர் தனது ஆற்றாமையை ஆங்கிலத்தில் புலம்பித் தீர்ப்பார். இடையிடையே அற்புதமானக் கவிதைகளும் வந்து விழும். ‘தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்; வேங்கைபோல் வீரம் குன்றும், விருந்தினரைக் காண நாணும், இல்லையா சாயிபே’ என்பார் வாப்பாவிடம். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நிற்பவர்களுக்கும் ஜாடை மாடையான வசை உறுதி என்பதால் வாப்பா புன்சிரிப்புடன் நகர்ந்து விடுவார். எனது இரவுத் தூக்கம் பெரும்பாலும் இங்குள்ள பெருமாள் கோயில் மண்டபத்திலும் நாகர்கோயில் ஆசாரிமார் தெருவிலுள்ள பஜனை மடத்திலும்தான். இப்படியாக, எனது இளமையின் பெரும்பகுதியும் நாகரம்மன் கோயில், பெருமாள் கோயில், முத்தாரம்மன் கோயில் சுற்றுப்புறங்களில் கழிந்தது.
எல்லோரையும் போல் கவிதை எழுதுவதில்தான் எனது எழுத்தார்வம் துளிர் விட்டது. இளம் வயதில் வானொலி நிகழ்வுக்காக சில கவிதைகள் எழுதினேன். பிறகு, நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மன்றல் வாழ்த்து எனப்படும் திருமண வாழ்த்துக்கள் எழுதினேன். மன்றல் வாழ்த்து எழுதுவதற்கு சாமி பெயர்களும் மணமக்களின் பெயர்களும் மட்டும் தெரிந்தால் போதும். பெரும்பாலான மணமக்களையும் ராமனும் சீதையும் போல் என்று வாழ்த்தியிருக்கிறேன். கூடவே, மணமகளுக்கான சில அறிவுரைகளும் அதில் இடம் பெற்றிருக்கும். மணமகனுக்கு அறிவுரை சொல்வது சமூக நியதிகளுக்குப் புறம்பானது. ‘ஆணாப் பெறந்தவன் தொழியைக் கண்டா சமுட்டுவான்; தண்ணியைக் கண்டா கழுவுவான்.’ (சேற்றைக் கண்டால் மிதிப்பான்; தண்ணீரைக் கண்டால் கழுவுவான்.) எனது நட்பு வட்டத்துக்குள் முஸ்லிம்கள் யாருமில்லை என்பதால் நபிகளாரின் மகள் ஃபாத்திமா போல், தீன்குலப் பெண்மணியாக வாழச் சொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதைத் தவிர, என்னுடைய இலக்கியச் செயல்பாடாக முதன்முதலில் இதயம் பேசுகிறது பத்திரிகைக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பியதைச் சொல்லலாம். வெளியிட இயலாதெனில் அவர்கள் பேசாமல் இருந்திருக்கலாம். பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக அனுப்பிய பதில் எப்படியோ கசிந்து என்னைப் பரிகாசத்துக்கு உள்ளாக்கியது. பிறகு, பத்திரிகைகளுக்கு அனுப்புகிற எதிலும் அனுப்புனர் முகவரியைக் குறிப்பிடுவதில்லை. இதில் ஒரு கட்டுரையும் ஒரே ஒரு சிறுகதையும் பிரசுரமாயின. இவை அனைத்துமே இருபத்தைந்து வயதுக்குள் நடந்து முடிந்து போன சம்பவங்கள். இதன் பிறகு, இரு பத்தாண்டுகளாக எந்தப் பத்திரிகைக்கும் எந்த விஷயதானமும் செய்ய வில்லை. நான் விஷய தானம் செய்யாமல் எப்படிப் பத்திரிகை நடத்தினார்களோ தெரியவில்லை.

சினிமா, நாடகம், கதை, கவிதை என கலையார்வம் கொண்ட, எனக்குத் தெரிந்த அனைவரும் அப்போது கேலிக்குள்ளாகி வாழ்ந்து கொண்டிருந்தனர். கக்கத்திலோ கையிலோ ஏதாவது புத்தகமோ பத்திரிகையோ இருப்பதைப் பார்த்தால், நீ மீரான் பிள்ளை ஆயிடுவ போலிருக்கு என்றும் கிறுக்குக் கோபால் ஆயிடுவ போலிருக்கு என்றும் கேலி செய்கிற சூழல் அது. மீரான் பிள்ளை, ‘சினிமாவுக்கும் நாடகத்துக்கும் கதை, வசனம் தேவையா? அணுகுவீர்’ என்ற விளம்பரப் பலகையுடன் சைக்கிளில் வலம் வருபவர்; வடசேரி சந்தையில் வாழைப்பழ வியாபாரம் செய்து வந்தார். இவர் கோபக்காரர் என்பதால் யாரும் எதிரில் நின்று சீண்ட மாட்டார்கள். கோபால், கலைவாணர் என்.எஸ்.கே/யின் ஊரான ஒழுகினசேரி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர். எப்போதும் கக்கத்தில் ஒரு கட்டுக் காகிதங்களுடன் அலைபவர். இன்று சாக்கடையாக மாறியிருக்கும் பழையாற்றங்கரையில் சாயங்கால வேளைகளில், வெள்ளை மணல் பரப்பில் உட்கார்ந்து எதையாவது எழுதிக் கொண்டிருப்பார். இது போன்ற கேலிகளும் கிண்டல்களும் என்னையும் குறிப்பிடுவதாக உணர்ந்த நான், வாசிப்பதும் எழுதுவதும் வெளியே தெரியாமல் கவனித்துக் கொண்டேன். மனதில் தோன்றுவதை அழகிய முறையில் வெளிப்படுத்துவதற்கான வடிவம், கவிதையும் சிறுகதையும்தான் என்று தெரிந்திருந்தும், மற்றவர்களின் கேலிக்குப் பயந்து, கட்டுரையாளராக அறியப்படுவதில் கவனம் செலுத்தினேன். எனக்குத் தெரிந்து, கட்டுரையாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் யாரும் கேலி செய்து பார்த்ததில்லை. இப்படியான ஒரு வர்க்கம் இருக்கிறது என்ற விஷயமே அவர்களுக்குத் தெரியாது போலிருக்கிறது.

பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் அளித்த தேவையற்ற முக்கியத்துவம்தான் என்னை மொழி பெயர்ப்பு இலக்கியத்தை நோக்கியும் கொண்டு சென்றது. பின்னர் அதுவே, மனதுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.

முதன்முதலாக, ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதையை இலக்கிய கூட்டம் ஒன்றில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கதைக்கான பின்னணியும் மொழிபெயர்ப்பும் சிறந்த முறையில் விமர்சிக்கப்பட்டாலும் அதில் ஒரு விமர்சனம், இலக்கிய சூழலும் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை போலிருக்கிறது என்ற முடிவுக்கு வரத் தூண்டியது. அந்த விமர்சனம் இதுதான். “மொழி பெயர்த்தவரால் கதையின் சிக்கலுக்குரிய அரசியல் பின்னணியைப் புரிந்து கொண்டிருக்க இயலாது. ஆனால், மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.” அந்தக் கதை, அவசர நிலை காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. கதையை மொழிபெயர்த்த நானோ, சொட்டு நீலம் போட்ட வேட்டியும், முழங்கை வரைக்கும் சுருட்டி வைக்கப்பட்ட சட்டையும், லூனார் செருப்பும் அணிந்திருக்கிறேன். இப்படியான ஒருவனுக்கு, அவசர நிலை காலகட்டத்தைக் குறித்து என்ன புரிதல் இருக்க முடியும் என்பதுதான் நண்பரின் சந்தேகம். அவசர நிலையின் அரசியல் சூழலையும் மக்கள் மீதான அதன் விளைவுகளையும் பத்திரிகைகள் மூலம் மட்டுமல்ல, நேரடியாகவும் நான் பார்த்திருக்கிறேன் என்றெல்லாம் விளக்கம் சொல்வதற்கு அப்போது தோன்றவில்லை. இலக்கிய சூழலும் சரியில்லை என்பதற்காக, எழுதாமலோ வாசிக்காமலோ இருந்துவிட முடியாது. எழுதிவிட்டுக் கிழித்துப் போட்டால் போகிறது. அப்படி கிழித்துப் போடும் நோக்கத்துடன் எழுதப்பட்டது தான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பு நாவலான ‘மீஸான் கற்கள்.’

மளிகைக் கடைக்காரன், நுகர்பொருட்களின் முகவர், விற்பனைப் பிரதிநிதி, நடைபாதைக் கடை வியாபாரி, புகைப்படக் கலைஞன் என, பல்வேறு வேடங்கள் தரித்து வாழ்ந்து வந்த நான், அப்போது ஆங்கிலப் பள்ளிகளுக்கான சில ஆர்டர்களைப் பெற்று அதைத் தயார் செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தேன். இது தொடர்பாக, காலச்சுவடின் புத்தக நிறுவனத்துக்குச் சென்ற அந்த நிகழ்வு இன்று உங்கள் முன் என்னை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

விருதுக்கு என்னைத் தேர்வு செய்த ஸ்பாரோ அமைப்பினருக்கும் தேர்வுக் குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து உரையை முடித்துக்கொள்கிறேன், நன்றி வணக்கம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், கௌரி பக்கம்

அசோகமித்ரனின் ஆதர்சங்கள்

asokamithranஎனக்கு அசோகமித்ரன் ஆதர்ச புருஷன். அவருக்கு? அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் வந்தது எப்படி, யார் அவரை வழி நடத்தினார்கள், யாரைப் பார்த்து அவர் வியப்புறுகிறார் (அவருடைய பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவரது அப்பா அவரை ஆரம்பத்தில் வழி நடத்தி இருக்கிறார்கள்; க.நா.சு.வை மேதை என்கிறார்) என்றெல்லாம் இந்தக் கட்டுரையில் பேசுகிறார். கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம

வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாடமி விருது

Vannadasanவண்ணதாசன் தனது ‘ஒரு சிறு இசை‘ சிறுகதைத் தொகுப்புக்காக 2016க்கான சாஹித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தேர்வுக்குழு உறுப்பினர்கள் டி. செல்வராஜ், கே.எஸ். சுப்ரமணியம், எம். ராமலிங்கம் ஆகிய மூவருக்கும் தகுதி உள்ள எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்ததற்காக ஒரு ஜே!(டி. செல்வராஜ்தான் ‘தோல்‘ நாவலுக்காக சாஹித்ய அகாடமி விருதை வென்றவரா? ‘தேனீர்‘, ‘மலரும் சருகும்‘ நாவல்களை எழுதியவரா?)

Sahitya Academy Awardதென்னவோ தெரியவில்லை, விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டால் சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்துவிடும் போலிருக்கிறது! அடுத்த விருது தேவதேவன், தேவதச்சன் இருவரில் யாருக்கோ? (ஞானக்கூத்தன் மறைந்துவிட்டார், தெளிவத்தை ஜோசஃப் இலங்கைக்காரர், அவருக்கு கொடுப்பார்களா என்று தெரியவில்லை)

மற்ற மொழிகளிலிருந்து விருது வென்றவர்கள் ஒருவர் பேரைக் கூட எனக்குத் தெரியவில்லை. தெலுங்கு மொழிக் கவிஞரான பப்பிநேனி பாபிநேனி சிவசங்கரைப் (திருத்திய ராமச்சந்திர ஷர்மாவுக்கு நன்றி!) பற்றி கௌரி கிருபானந்தன் ஏதாவது சொன்னால் உண்டு.

யுவ புரஸ்கார் விருது லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பால் சாஹித்ய புரஸ்கார் விருது குழ. கதிரேசன் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. யாரென்று தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், வண்ணதாசன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
வண்ணதாசன் தளம்
‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்பு பற்றி பாவண்ணன்

தமிழுக்கு ஞானபீடம் கொடுத்துராதீங்க!

தமிழுக்கு ஞானபீடம்? என்று ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்தில் இன்று ஒரு தலைப்பைப் பார்த்தேன். க்ளிக் செய்தால் அசோகமித்ரன் படம் வேறு போட்டிருந்தார்கள். ரொம்ப சந்தோஷமாக படிக்க ஆரம்பித்தேன். கடைசி வரியைப் படிக்கும் வரை சந்தோஷமாகத்தான் இருந்தேன்.

கடைசி வரி –

தமிழகத்தில் இது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்ட பட்டியலில் அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன், வைரமுத்து, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், சிற்பி, வி.ஜி. சந்தோஷம் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வைரமுத்து? மு. மேத்தா? ஈரோடு தமிழன்பன்? சிற்பி? ஏம்பா ஒரு முறை அகிலனுக்கு கொடுத்த கேவலமே இன்னும் போகவில்லை, அடுத்ததா?

இவர்கள் பேரையாவது ‘எழுத்தாளர்களாக’ கேள்விப்பட்டிருக்கிறேன், யார் இந்த வி.ஜி. சந்தோஷம்? விஜிபி சகோதரர்களில் இளையவரா? நானும் நிறையப் படிக்கிறேன் என்று கொஞ்சம் பெருமையாக இருந்தேன், அவர் எழுதியதாக நான் ஒரு புத்தகம் கூட கேள்விப்பட்டதில்லையே!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

வை.மு. கோதைநாயகி அம்மாள்

vai_mu_kothainayakiசுருக்கமாக: ஒரு நாள் கூட பள்ளிக்குப் போகாமால் 115 நாவல்களை எழுதிய அசாத்திய பெண்மணி. தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் இவர்தானாம். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் தனி ஆளாய் ஜகன்மோகினி எனும் இதழை நடத்தியவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சுதந்திர போராட்ட வீரர், சமூக சேவகி, இசைக் கலைஞர் என பல பரிணாமங்களில் தன்னை நிறுவிக் கொண்டவர்.


வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்

பிறப்பு: டிசம்பர் 1, 1901 இறப்பு: ஃபெப்ரவரி 20, 1960

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். தந்தை நீர்வளூர் என்.எஸ். வெங்கடாச்சாரியார். தாயார் பட்டம்மாள். 1907ம் ஆண்டு கோதைக்கு ஐந்தரை வயது ஆனபோது அதே திருவல்லிக்கேணியில் ஏழு வயதான வை.மு. பார்த்தசாரதியுடன் திருமணம் நடைபெற்றது. வை.மு. என்பது பார்த்தசாரதி அவர்களது குடும்பப் பெயர். இதில் ”வை ”என்பது வைத்தமாநிதி எனும் அவர்களது குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயர். மு என்பது முடும்பை. அவர்கள் பூர்வீக கிராமத்தின் பெயர். பரம்பரையாக இந்தப் பட்டப் பெயர் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைத்துக் கொண்ட காரணத்தால் திருமணமான நாள்தொட்டு வை.மு. கோதைநாயகியானார். மாமனார் வீட்டிலிருந்தவர்கள் அனைவருமே தமிழையும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று கரை கண்டவர்கள். ஆழ்வார்கள் பாசுரங்களை மனப்பாடமாக ஒப்பிப்பவர்கள். மூத்த மாமனார் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கும், நன்னூலுக்கும் உரை எழுதியவர். அதனாலயே பள்ளிக்குக் கூட சென்றிராத வை.மு.வுக்கு வீட்டில் ஓரளவு கல்வியறிவு பெறும் வாய்ப்பு கிட்டியது.

சிறு வயது முதலே கதை சொல்வதில் ஆர்வம் கொண்ட கோதை வீட்டு வேலை போக இதர நேரங்களில் வீட்டிலுள்ள இதர சிறுவர் சிறுமியர்களுக்கு கதை சொல்வதில் ஈடுபட்டார். கோதை சொன்ன கதைகள் மெல்ல பெரியவர்களின் காதிலும் விழ அவர்களும் குறிப்பாக கணவரும் அவரை மிகவும் உற்சாகப்படுத்தினர்.இதன் காரணமாக கோதைக்கு கணவருடன் சேர்ந்து நாடகத்துக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. வை.மு.வுக்குள் நாடகங்கள் புதிய உலகை திறந்துவிட்டன. தானும் ஒரு நாடகம் எழுதிப் பார்க்க ஆவலுற்றார். கல்வியறிவில்லாத வை.மு.வுக்கு எழுதத் தெரியவில்லை. இச்சமயத்தில் அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதித் தருவதாக வந்தார் பட்டம்மாள் எனும் தோழி.

jaganmohiniஅடுத்த சில நாட்களில் இந்திரமோகனா எனும் அவரது முதல் நாடகம் எழுத்தில் உருவானது. அப்போது அவருக்கு வயது 24. அவரது கணவர் அந்த நாடக நூற்பிரதிகளை அப்போது புகழ் பெற்ற நாடகாசிரியரான பம்மல் சம்பந்த முதலியார் மற்றும் துப்புறியும் கதைகளை எழுதி வந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோரிடம் காண்பிக்க அவர்களும் வை.மு.வுக்கு பாராட்டும் உற்சாகமும் தெரிவித்தனர். அடுத்தாக அவர் எழுதியது வைதேகி எனும் நாவல். அதனை வெளியிட எந்த அச்சகமும் முன் வராத காரணத்தால் கணவர் மூலம் அப்போது பாதியில் நின்ற ஜகன்மோகினி எனும் இதழை வாங்கி அதனை மாத இதழாக அச்சிட்டு அதிலேயே தன் முதல் நாவலை தொடர்கதையாக வெளியிட்டார். ஜகன்மோகினி இதழ் அன்று துவங்கி தொடர்ந்து 35 ஆண்டுகள் வெளியாகி சாதனை படைத்தது. வைதேகி தொடர்கதை பெரும் வரவேற்பினை பெற கோதைநாயகி தொடர்ந்து நாவல் எழுதத் துவங்கினார்.உடன் கல்வியறிவிலும் தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

தமிழ் பண்டிதரான தன் சிறிய தகப்பனார் திருத்தேரி ராகவாச்சாரியிடம் திருக்குறள், நாலடியார், தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி மற்றும் கம்ப ராமாயணம் ஆகியவற்றைக் கற்றார். பிற்பாடு அவர் எழுதிய நாவல்களுக்கு இது பெரிதும் உதவியது.

தொடர்ந்து அவர் எழுதிய நாவல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற கோதைநாயகியின் பெயர் அப்போதைய பிரபலங்களில் ஒன்றாக மாறியது. பல முக்கிய பிரமுகர்களோடு நட்பு கிடைத்தது. ராஜாஜி தான் பேசும் கூட்டங்கள் எல்லாவற்றிலும் இவரைப் பேசச் சொல்வாராம். இதனால் ஒரு முறை காந்தியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்ட அது முதல் தன்னை விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபடுத்திக் கொண்டார். அரசுக்கெதிரான போராட்டம் காரணமாக ஆறு மாதம் வேலூரில் சிறைத் தண்டனையும் அனுபவித்தார். சிறையில் சோதனையின் கொடுமை என்ற நாவலை எழுதினார்.

சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த பிராமண வைதீக சூழலில் வாழ நேர்ந்தாலும் வை.மு. தன் கதைகளில் அவை அனைத்தையும் உடைத்தெறிந்தார். அவர் எழுதிய 115 நாவல்களில் பெரும்பாலானவை துப்பறியும் வகையை சார்ந்தவை என்றாலும் அவற்றிலும் பெண்ணடிமை, பெண் கல்வி, வரதட்சிணை ஒழிப்பு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு போன்ற நல்ல பல கருத்துக்களை சொல்லி உள்ளார்.

இவர் எழுதிய சில கீர்த்தனைகள் இசை மார்க்கம்‘ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. ராஜ்மோகன், தியாகக் கொடிஅனாதைப் பெண், தயாநிதி ஆகிய இவரது நாவல்கள் திரைப்படங்களாக  வெளிவந்தன. பத்மினி நடித்த ‘சித்தி‘ படத்தின் கதையும் இவருடையதுதான்.

1948-ல்  பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துகாக மகாத்மாஜி சேவா சங்கம் என்ற அமைப்பை நிறுவி சமூக சேவையும் புரிந்திருக்கிறார்.

அவருடைய தபால் வினோதம் என்ற குறுநாவலை இங்கே படிக்கலாம். (பகுதி 1, 2, 3)

அவரது எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன.

அவரது படைப்புகள் இலக்கியத் தகுதி அற்றவை. ஆனாலும் விடுதலைக்கு முன்பான இந்தியாவின் அறிவு நிலை உயர்ந்திராத அக்காலத்தோடு அதுவும் ஒரு பெண்ணாக பொருத்தி வைத்து பார்க்கும்போது அவரது வாழ்க்கை தமிழ்ச் சூழலில் சாதனை மிக்க ஒன்றாகவே கருதத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழில் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
குமுதத்தில் வை.மு.கோ. பற்றி
விகடனில் வை.மு.கோ. பற்றி
அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது சேதுராமன் எழுதிய குறிப்பு
தபால் வினோதம் குறுநாவல் (பகுதி 123)