நியூ யார்க் நகரத்தின் இரட்டை கோபுரம் 2011-இல் அல் கேடா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அது எப்போது கட்டப்பட்டது என்று தெரியுமா? 1975-இல்தான். கட்டிடம் எழுந்த காலத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ஃபிலிப் பெடி தன் சாகசங்களை விவரிக்கிறார். (மோர்டிகாய் கெர்ஸ்டைன் ஒரு சிறுவர் புத்தகமாகவும் (Man Who Walked Between the Towers) இந்தச் சம்பவத்தை எழுதி இருக்கிறார்)
ஃபிலிப் பெடி ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே சர்க்கஸ் சாகசங்களில் ஈடுபாடு. குறிப்பாக கயிற்றின் மேல் நடப்பதில் ஈடுபாடு. பொதுவாக சர்க்கஸில் நடப்பவர்களுக்கு கீழே ஒரு வலைப்பின்னல் இருக்கும். விழுந்தால் பலத்த அடிபடாது, உயிருக்கு அபாயம் இல்லை. ஆனால் இவருக்கு உயரமான இடங்களில் கயிற்றைக் கட்டி எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் அதன் மேல் நடக்க வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியமே. அப்படி நடக்கும்போது விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? அதனால் அதிகாரபூர்வமாக அப்படி செய்ய இவருக்கு அனுமதி கிடைக்காது.
பல நாள் திட்டமிட்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் இரவு நண்பர்களின் உதவியோடு பாரிஸ் நோட் ரே தாம் சர்ச்சின் இரட்டை கோபுரங்களின் நடுவே ஒரு கயிற்றைக் கட்டி இருக்கிறார். அடுத்த நாள் காலை பாரிஸ் மக்கள் ஆவென்று பார்க்க, அந்த கயிற்றின் மீது நடை. அதற்காக (சின்ன அளவில்) தண்டனையும் கிடைத்திருக்கிறது.
ஒரு நாள் பல் வலி. மருத்துவரைப் பார்க்கப் போயிருக்கிறார். அங்கே ஒரு பத்திரிகை கிடந்திருக்கிறது. வலியை மறக்க பத்திரிகையைப் புரட்டும்போது நியூ யார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் கட்டப்படுவதைப் பற்றி படித்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் அந்தக் கட்டுரையைக் கிழித்துக் கொண்டு வந்துவிட்டார். அன்றிலிருந்து இரட்டைக் கோபுரங்களின் நடுவே கயிற்றின் மேல் நடப்பது பற்றித்தான் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷமும் சிந்தித்திருக்கிறார்.
நண்பர்கள் பலரும் உதவி இருக்கிறார்கள். இந்த முயற்சியில் உதவி செய்ய புது நண்பர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். காவலர்களை ஏமாற்றி கட்டிடத்தின் உள்ளே செல்லும் வித்தை எல்லாம் கை வந்த கலையாக இருக்கிறது. பல தடங்கல்களை மீறி ஒரு நாள் இரவு உள்ளே சென்றுவிட்டார். ஆனால் கயிற்றைக் கட்டுவதற்குள் உயிர் போய்விடுகிறது. எதிரே இருக்கும் கோபுரத்திலிருந்து வில்லை வைத்து இங்கே கயிற்றை அனுப்புகிறார்கள், ஆனால் அது கொஞ்சம் தள்ளி விழுந்துவிடுகிறது. எப்படியோ கயிற்றைக் கட்டிவிட்டார்.
காலை நியூ யார்க் நகரம் விழிக்கிறது. மேலே சிறு புள்ளியாக ஒரு உருவம். நடக்க ஆரம்பிக்கிறது. கீழே கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அந்தப் பக்கம் போனவர் பேசாமல் இறங்க வேண்டியதுதானே? கிடையாது, திருப்பி இந்தப் பக்கம் நடந்து வருகிறார். போலீஸ் வந்துவிடுகிறது. இறங்கிவிடு என்று மிரட்டுகிறார்கள், கெஞ்சுகிறார்கள். இவர் அப்போதுதான் கயிற்றின் மேல் உட்கார்கிறார், படுத்துக் கொள்கிறார், இல்லாத வித்தை எல்லாம் காண்பிக்கிறார். அவரை போலீஸ் கயிற்றின் மேல் நடந்து பிடிக்கவா முடியும்? பல முறை (ஆறா, எட்டா என்று சரியாகத் தெரியவில்லை) இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமும் அங்கிருந்து இங்கும் நடக்கிறார். ஒரு வழியாக இறங்கி வந்ததும் போலீஸ் கைது செய்கிறார்கள்.
என்ன தண்டனை? நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் ஒரு ஆறேழு அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி கொஞ்ச நேரம் சிறுவர்களுக்கு வித்தை காட்ட வேண்டும். தண்டனை விதித்த நீதிபதியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இரட்டை கோபுரங்கள் இருந்தபோது அங்கே செல்ல டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால் கட்டிடக் காவல்துறை அவருக்கு எப்போது வேண்டுமானாலும் வருவதற்கான அனுமதிச் சீட்டை அவருக்குத் தருகிறது. 🙂
திரைப்படமாக (Walk) வந்தது. பல மில்லியன்களை சம்பாதித்தது. ஆனால் பெடி பெரும் பணக்காரர் அல்லர். இந்த சாகசங்கள்தான் அவரது வாழ்வின் பொருள், அதனால் இப்படி உயிரைப் பணயம் வைத்தார். பணத்துக்காக அல்ல.
திரைப்படத்தையும் புத்தகத்தையும் பாருங்கள்/படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்
Liked the movie..
LikeLike