ஞானக்கூத்தன் கவிதைகள்

Gnanakkootthanஞானக்கூத்தன் மறைந்தபோது அவருக்கு அஞ்சலியாக இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தேன். கவிதை கொஞ்ச தூரம் என்பதால் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்த வருஷமாவது தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும் சில பல புத்தகங்கள், கவிதை போன்ற வடிவங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஞானக்கூத்தன் விஷ்ணுபுரம் விருது வேறு வென்றவர். இந்தப் பதிவையும் முழுமை செய்தால் போல இருக்கும் என்றுதான் ஞானக்கூத்தன் கவிதைகளப் படித்துப் பார்த்தேன்.

எனக்கு கவிதைகளை ரசிக்கும் அறிவு மிகக் குறைவு. ஆனானப்பட்ட ஜெயமோகனே இரண்டு மூன்று முறை முயற்சி செய்து கைவிட்ட கேஸ். மேலும் ஒரு கவிதையில் நான் நிறைய எதிர்பார்க்கிறேன். கவிதைக்கு மொழி சிறையாக இருக்கக் கூடாது; சொல்வது பொதுவாக சுருக்கமாக இருக்க வேண்டும், நாலு வரி அதி உத்தமம், நூறு வரி வரை படிக்கலாம். அந்த நாலு வரிகளில் சொல்லும் விஷயம் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகளை நான் அபூர்வமாகவே பார்க்கிறேன். இந்தக் காலத்து கவிதைகள் – அதுவும் புதுக் கவிதைகள் மிக அபூர்வமாகத்தான் என் மனதைத் தொடுகின்றன.

வெறும் வார்த்தை விளையாட்டு எனக்குக் கவிதை அல்ல. பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க என்று கம்பனே பாடினாலும் அது வெறும் சந்தத்தில் வித்தை காண்பிப்பதுதான். கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா என்பதெல்லாம் வெறும் சொல் நயம்தான். To put it uncharitably, அலங்கார வார்த்தைகள் மட்டுமே. சங்கக் கவிதைகள்தான் என் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்கின்றன, ஆனால் அவற்றின் மொழி சிரமமாக இருக்கிறது, பல சமயங்களில் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. சுளுவாகக் கிடைப்பவை கோனார் நோட்ஸ்கள்தான், மொழிபெயர்ப்புகள் அல்ல. கோனார் நோட்ஸ்கள் கவித்துவம் ஏதாவது இருந்தால் அவற்றை தவறாமல் கொன்றுவிடுகின்றன.

ஞானக்கூத்தன் எனக்கு அறிமுகமானது அவரது புகழ் பெற்ற ‘தலைவரார்களேங்! (காலவழுவமைதி)‘ (1969) கவிதை மூலம்தான். கவிதையைப் பொறுத்த வரையில் ஞானசூன்யமான எனக்கே அது பிரமாதமான கவிதைதான். இத்தனைக்கும் அது என் வரையறைகளுக்குப் பொருந்தவில்லை. அதை மொழிபெயர்ப்பது சிரமம். 1990-க்கு பிறகு பிறந்த தமிழர்களே அதைப் பெரிதாக ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு சிரிப்புக்கு மேல் பெரிதாக சிந்தனைகளை இந்தக் கவிதை உருவாக்கவில்லைதான். காற்றில் அலையும் சிறகு போல படிமம் கிடிமம் இல்லை. ஆனால் ஒரு காலகட்டத்தை இத்தனை ரத்தினச் சுருக்கமாக – பத்து வரி இருக்குமா? – புகைப்படம் பிடிப்பது போல காட்டுவது கவிதையில்தான் முடியும். நான் என்றாவது எனக்குப் பிடித்த கவிதைகள் என்று தொகுத்தால் நிச்சயம் இடம் பெறும் கவிதை.

ஞானக்கூத்தன் என்னைத் தொட்டது வாழ்வின் மோசமான ஒரு தருணத்தில். அவரது ‘நீண்ட நாட்களாகப் பழகிய பேனா‘ ஒரே நேரத்தில் ஆறுதலையும் உற்சாகத்தையும் தந்த ஒரு கவிதை.

அவரது கவிதைகள் எல்லாம் இந்தத் தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. முயன்று பார்ப்போம் என்று படித்துப் பார்த்தேன்.

முதலில் ஒரு அற்ப விஷயம். வார்த்தைகளை கன்னாபின்னாவென்று உடைக்கிறார். போன வாக்கியத்தை ‘வார் த்தைக ளை கன் னாபின்னாவென்று உடைக் கிறார்’ என்று எழுதிவிடுவார். இதில் என்ன கிடைக்கிறது, கவித்துவம் எப்படி அதிகரிக்கிறது என்பதெல்லாம் எனக்கு எட்டவில்லை. சும்மா பந்தா மாதிரித்தான் தெரிகிறது. அற்ப விஷயம்தான், ஆனால் எனக்கு அவ்வப்போது எரிச்சலாக இருந்தது.

பவழமல்லி நல்ல சங்கக் கவிதைகளின் தரத்தில் அமைந்தது. பார்த்தல் ஓரிரு மாற்று குறைவுதான், இருந்தாலும் எனக்குப் பிடித்திருந்தது. என்ன மாதிரி முதல் பார்வையில் வெறும் கிண்டல் மாதிரி தெரியலாம். ஆனால் எனக்கு அது நல்ல கவிதை. சரிவு சிறந்த ஹைக்கூ இல்லாவிட்டால் வெட்டி பந்தா. உங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

என் சிவனே கவிதையில் வரும் இந்த வரிகள்

நீரை நோக்கிக் குனிந்தால் என்
பிரதிபலிப்பின் சுமை பொறாமல்
அலைகள் விரையும் மறுகரைக்கு.

எனக்கு லா.ச.ரா.வின் ஒரு வரியை – ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனி‘ நினைவுபடுத்தியது.

சினிமாச் சோழர், தோழர் மோசிகீரனார், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், யெதிரெதிர் உலகங்கள், தமிழ், அதனால் என்ன? போன்ற கவிதைகளில் தெரிவது நக்கல் மட்டுமே. என்னைப் பொறுத்த வரையில் அந்த நக்கல் இலக்கியமாக மாறி இருப்பது தலைவரார்களேங்! கவிதையில் மட்டும்தான்.

ஓரளவு நல்ல கவிதைகள் என்று எனக்குப் பட்டவை ‘பரிசில் வாழ்க்கை‘, ‘போராட்டம்‘, ‘விட்டுப் போன நரி‘, ‘நாய்‘, ‘தணல்‘, அம்மாவின் பொய்கள், அன்று வேறு கிழமை, விடுமுறை தரும் பூதம். குறிப்பாக விடுமுறை தரும் பூதம் வேலைக்குப் போகும் அனைவரும் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய universal appeal உள்ள ஒரு கவிதை. ஆனால் ‘பரிசில் வாழ்க்கை’ ‘காலவழுவமைதி’ கவிதையின் கொஞ்சம் பலவீனமான மறுபதிப்பு என்று தோன்றியது.

நான் பரிந்துரைக்கும் கவிதைகள்:

என் கவிதை ரசனையில் யாருக்காவது நம்பிக்கை இருந்தால்தான் ஆச்சரியம். அதனால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் ஞானக்கூத்தன் கவிதைகளின் பட்டியல் கீழே:

இவற்றில் திண்ணை இருளில் எனக்குப் புரியாத கவிதை. மேசை நடராசர், எலும்புக்கூடு, குப்பைத் துணை ஆகியவை மோசமில்லை, ஆனால் என் மனதைத் தொடவில்லை.

ஞானக்கூத்தன் நல்ல கவிஞர், சராசரிக்கு மிக மேலே இருக்கும் கவிஞர் என்று எனக்கே தெரிகிறது. ஆனால் இத்தனை கவிதை படித்த பிறகு எனக்கு நாலுதான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கவிதையாக இருக்கிறது. இப்படி நாலு கவிதைக்கா விஷ்ணுபுரம் விருது எல்லாம் என்று ஒரு நிமிஷம் தோன்றத்தான் செய்தது. இதுதான் கவிதையின் இயல்பு, ஆயிரம் கவிதை படித்தால் ஒன்றிரண்டுதான் தேறும் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். அத்தனை பொறுமை எனக்கில்லை. இது என் குறைதான், என்னால் குப்பை உரைநடையைப் படித்துவிட்டு கடாசிவிட முடிகிறது, ஆனால் கவிதை என்றால் பொறுமை இருப்பதில்லை.

கவிதையிலிருந்து விலகி இருப்பதுதான் என் குணத்துக்கு சரி வரும். ஆனாலும் பிடிவாதமாக தம் கட்டி சங்கப் பாடல்களைப் படித்து பார்க்கப் போகிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஞானக்கூத்தனின் தளம்
ஞானக்கூத்தனின் விஷ்ணுபுரம் ஏற்புரை
பாவண்ணனின் சிறந்த அலசல்
ஞானக்கூத்தன் பேட்டி
எனக்குப் பிடித்த ஒரு ஞானக்கூத்தன் கட்டுரை – ‘பெண்கள்பால் வைத்த நேயம்’