பெர்னார்ட் கார்ன்வெல் எழுதிய ‘Agincourt’

battle_of_agincourtஅசின்குர் (Agincourt) போர் ஐரோப்பிய வரலாற்றில் முக்கியமான ஒன்று. 1415-இல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்சுக்கும் நடந்தது. நம்மூரில் பல்லவர்கள்-சாளுக்கியர்கள், பல்லவர்கள்-பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள்-பாமினி அரசர்கள் இடைவிடாது போரிட்டுக் கொண்டே இருந்த மாதிரி இங்கிலாந்தும் ஃப்ரான்சும் நூறு வருஷங்களுக்கு மேலாக போரிட்டன. அந்த நீண்ட வரலாற்றில் இங்கிலாந்தின் அதிசயத் தக்க வெற்றிகளில் இது ஒன்று.

என்ன அதிசயம்? இங்கிலாந்துப் படை ஃப்ரான்சில் இருக்கிறது. ஐயாயிரம், ஆறாயிரம் வீரர்கள் இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஃப்ரெஞ்சு வீரர்கள் முப்பதாயிரம் பேராம். போரின் முடிவில் ஆங்கிலேயர்கள் பக்கம் நூற்று சொச்சம் பேர்தான் இழப்பாம். ஃப்ரான்சுக்கு குறைந்தது ஏழாயிரம் பேர் இறந்து போனார்களாம்! தன்னைப் போல ஐந்தாறு மடங்கு பெரிய படையை வென்றது பெரிய ஆச்சரியம் இல்லையா? அதனால்தான் இந்தப் போர் இன்னமும் நினைவு கூரப்படுகிறது.

bernard_cornwellஎன்னுடைய ஃபேவரிட் சரித்திர மசாலா எழுத்தாளரான பெர்னார்ட் கார்ன்வெல் இந்தப் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் நாவல் இது.

வழக்கம் போல ஒரு போர் வீரன். நிக்கோலஸ் ஹூக். வில்லாளி. இவனுக்கு அதிகாரியாக இருக்கும் ஒரு பாதிரி ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கும்போது ஹூக்கின் மண்டைக்குள் ‘தடு’ என்று ஒரு குரல் கேட்கிறது. கடவுளே பேசுவது போல இருக்கிறது. பாதிரியை அடிக்கிறான். ஹூக்கைக் கட்டி வைத்துவிட்டு கற்பழிப்பு நடந்தேறுகிறது. பிறகு ஹூக்குக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இன்னொரு உயர் அதிகாரியின் உதவியால் இங்கிலாந்திலிருந்து தப்பி ஃப்ரான்ஸுக்கு ஓடுகிறான். அங்கே ஸ்வாசோ (Soissons) நகரில் ஒரு ஆங்கிலேய வில் வீரர்களின் கூலிப்படையில் வில்லாளியாக சேர்கிறான்.

ஃப்ரான்சின் உள்நாட்டுப் போரில் ஸ்வாசோ நகரம் தாக்கப்படுகிறது. மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆங்கிலேய வில்லாளிகளின் விரல்கள் வெட்டப்படுகின்றன. ஏறக்குறைய எல்லாருமே கொல்லப்படுகிறார்கள். ஹூக் நாயகன், அதனால் தப்பித்துவிடுகிறான். மெலிசாண்டே என்ற ஒரு பெண்ணையும் – நாயகி – காப்பாற்றுகிறான்.

ஸ்வாசோ நகரப் படுகொலையை நேரில் பார்த்தவன் என்பதால் ஹுக்கின் சாட்சியம் ஆங்கிலேய அரசுக்கு முக்கியமாக இருக்கிறது. பல அதிகாரிகள் அவனது சாட்சியத்தை எழுதிக் கொள்கிறார்கள். அரசன் ஐந்தாம் ஹென்றியே அவனிடம் வந்து பேசுகிறான். அவன் பாதிரியை அடித்த குற்றம் மன்னிக்கப்படுகிறது. ஹூக் ஒரு பிரபுவின் படையில் சேர்கிறான். பெரும்படை ஃபிரான்சுக்கு கிளம்புகிறது.

ஆனால் முதல் போரே படு சிரமம். ஹார்ஃப்ளர் என்ற கோட்டையைக் நீண்ட முற்றுகைக்குப் பிறகுதான் கைப்பற்ற முடிகிறது. அதற்குள் பாதிப் படைக்கு பயங்கர பேதி. இந்தப் போரில் கோட்டையைப் பிடிக்க ஒரு சுரங்கம் தோண்டுகிறார்கள். அதற்குள் நடக்கும் சண்டை சிறப்பான சித்தரிப்பு.

மழைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது, ஆனால் இந்தக் கோட்டைக்கான போரே இழுத்துவிட்டதால் நாடு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஹென்றி ஃப்ரெஞ்சு அரசை வெறுப்பேற்றுவதற்காக கடலோரமாகவே சும்மா வேறு ஒரு நகரத்துக்கு – Calais – தன் படையை நடத்திச் செல்கிறான். உன் நாட்டில் நான் படை நடத்துவேன், உன்னால் என்னை என்ன செய்ய முடியும் எனறு பந்தா காட்டுவதற்காக.

நடுவில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். பாலங்கள் கிடையாது. இறங்கித்தான் கடக்க வேண்டும். ஃப்ரெஞ்சுப் படை அவர்களைத் தடுத்து நிற்கிறது. வேறு வழியில்லாமல் கொஞ்சம் உள்ளே போய் கடக்க வேண்டி இருக்கிறது. கொண்டு வந்த உணவு தீர்ந்துவிடுகிறது.

இப்போது பெரும்படை அவர்களை எதிர்த்து நிற்கிறது. ஆனால் மழை பெய்திருக்கிறது. சேறு சகதியில் ஃப்ரெஞ்சு குதிரைகளும் வீரர்களும் சுலபமாக நடந்து வந்து ஆங்கிலேயர்களை தாக்க முடியவில்லை. ஆங்கில வில்லாளிகளின் அம்பு மழையில் வீரர்கள் செத்து விழுகிறார்கள்.

கார்ன்வெல்லின் அத்தனை பலங்களும் இந்தக் கதையில் இருக்கின்றன. அவரது போர்களில் ரத்தம் தெறிக்கிறது. மலமும் சிறுநீரும் பங்கு வகிக்கின்றன. (போரின் நடுவில் பேதியால் அவதிப்படும் வீரர்கள் என்ன செய்வார்கள்?) உணவுக்காக அல்லல்படுகிறார்கள். நாயகி தவிர்த்த மற்ற பெண்கள் போகப் பொருட்கள்தான். பாதிரிகள் பொன், பெண் என்று அலைகிறார்கள். இவை அனைத்தும் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன.

இலக்கிய தரிசனம் என்று தேடுபவர்கள் இதையெல்லாம் தவிர்த்துவிடலாம். ஆனால் எனக்கு இது இலக்கியத்துக்கு மிக அருகிலாவது இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கார்ன்வெல் பக்கம்