ஃபிலிப் கே. டிக் எழுதிய மைனாரிடி ரிபோர்ட்

philip_k_dickமைனாரிடி ரிபோர்ட்டை நான் முதலில் திரைப்படமாகத்தான் பார்த்தேன். நல்ல திரைப்படம். விஷுவலாக மிக நன்றாக இருக்கும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி டாம் க்ருய்ஸ், காலில் ஃபாரல் நடித்தது.

minority_reportபல வருஷங்களுக்குப் பிறகுதான் இந்த திரைப்படத்தின் மூலக்கதை ஃபிலிப் கே. டிக் எழுதிய ஒரு குறுநாவல் என்று தெரிந்தது. டிக் நான் விரும்பிப் படிக்கும் SF எழுத்தாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படித்தேன்.

திரைப்படம் வந்து பல வருஷங்களாகிவிட்டதால் கதை சுருக்கமாக: எதிர்காலத்தில் மூன்று idiot savants-களுக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் என்ன என்று தெரிகிறது. அதை வைத்து குற்றம் நடப்பதற்கு முன்பே – உதாரணமாக கணவன் தன் மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் – அடுத்த வெள்ளி இந்தக் கொலை நடக்கப் போகிறது என்பதை கணித்து, அந்தக் கணவனை முன்கூட்டியே கைது செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு அமைப்பை கதாநாயகன் ஆண்டர்டன் நிறுவி இருக்கிறான். பல வருஷங்களாக இந்த அமைப்பு வெற்றிகரமாக நடந்து வருகிறது. குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. கொலை என்பது இல்லவே இல்லை. இப்போது அந்த அமைப்பு ஆண்டர்டனே ஒரு கொலை – அதுவும் முன்னே பின்னே தெரியாத ஒருவனை கொலை செய்யப் போவதாக தகவல் வருகிறது. ஆண்டர்டன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

கதையின் கரு நன்றாகத்தான் இருக்கிறது. கதையும் மோசமில்லை. ஆனால் திரைப்படம் கதையை விட பல மடங்கு பெட்டர். சில கதைகளை விஷுவலாகப் பார்க்கும் அனுபவமே வேறு, இந்தக் கதையும் அவற்றில் ஒன்று. திரைக்கதையும் கதையை விட சிறப்பாகவே இருக்கிறது என்றுதான் தோன்றியது. Adjustment Bureau திரைப்படத்திலும் இப்படித்தான் திரைக்கதை கதையை விட பெட்டர் என்று தோன்றியது.

கதையைப் படிக்கலாம். ஆனால் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF