தமிழறிஞர் வரிசை: 15. மு. ராகவையங்கார்

ராகவையங்காரின் புத்தகங்கள் சிலவற்றை படிக்க முயற்சித்தேன், ஆனால் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். அவர் பண்டிதர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் எழுதியதும் பண்டிதர்களுக்காகவே, என் போன்ற சாதாரணர்களுக்காக இல்லை.

வேளிர் வரலாறு என்ற புத்தகத்தில் தமிழகத்தின் குறுநில மன்னர்களான வேளிர்கள் துவாரகையிலிருந்து குடிபெயர்ந்த யாதவர்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார். நச்சினார்க்கினியரின் ஒரு வாக்கியத்திலிருந்து இந்தக் கருத்தைப் பெற்றுக் கொண்டு அதை பெரிதாக விவரிக்கிறார். தொன்மத்துக்கும் சரித்திரத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றியது.

சேரன் செங்குட்டுவன் என்ற புத்தகம் அவரது வீச்சைக் காட்டுகிறது செங்குட்டுவனைப் பற்றி சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரத்தில் எல்லாம் வருவதை வைத்து அவனது வரலாற்றை எழுதி இருக்கிறார். ஆனால் கண்ணகி சொர்க்கத்துக்கு போன கதை எல்லாம் வருகிறது. தொன்மத்துக்கும் வரலாற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வலுப்பட்டது.

தமிழரும் ஆந்திரரும் என்ற புத்தகம் தமிழர்-ஆந்திரர் உறவை விவரிக்கிறது. தொல்காப்பியமே வடுக மொழியைக் குறிப்பிடுகிறதாம்.

மு. ராகவையங்காரின் எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அப்போது மறைந்த சேதுராமன் எழுதிய குறிப்பையும் ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த – அஜயன் பாலா எழுதிய – அறிமுகக் குறிப்பையும், ராகவையங்கார் பற்றி அவரது கொள்ளுப்பேரனான முரளிதரன் எழுதிய விக்கி குறிப்பையும் இணைத்து எழுதப்பட்ட பதிவு இது.

மு. ராகவையங்கார் பிறப்பு: 26-07-1878, மறைவு: 02-02-1960

mu_raghavaiyangarமு. ராகவையங்கார் 1878 ஜூலை மாதம் 26 தேதி ராமநாதபுரத்தில் பிறந்தவர். தந்தையார் சதாவதானம் முத்துஸ்வாமி அய்யங்கார் என்ற தமிழ்ப் புலவர். பிறந்த சில நாட்களில் தந்தையை இழந்தார். வி. கனகசபை பிள்ளையிடம் தமிழை சிறுவயதில் கற்ற ராகவையங்காருக்கு உதவியாக இருந்தவர் அவரது மாமனும் தமிழ்த்தொண்டில் தன்னிகரற்று விளங்கியவருமான ரா. ராகவையங்கார்.

இளமையில் ராகவையங்கார் மதுரையின் மீண்டும் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரின் அவையின் சேர்ந்து அவரிடமும் மற்ற அவைப் புலவர்களிடமும் தமிழ்க் கல்வி பயின்றார். பதினெட்டு வயதில் அவைப்புலவர் பட்டமும் பெற்றார். ராகவையங்கார் பாண்டித்துரை தேவரிடம் தமிழ் பயின்றிருக்கிறார். பாண்டித்துரை தேவரோ ராகவையங்காரின் அப்பா முத்துஸ்வாமி ஐயங்காரிடம் தமிழ் பயின்றிருக்கிறார்! பின்னாளில் தேவரையும் அவரது அப்பாவையும் பற்றி செந்தமிழ் வளர்த்த தேவர்கள் என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்.

படிப்பிற்குப் பிறகு சில காலம் தொல்பொருளாராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டி. ஏ. கோபிநாதராவுடன் தமிழ் நாட்டின் கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகம் ரெவரெண்ட் ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் “தமிழ்ப் பேரகராதி” தயாரிப்பில் 1913 முதல் தமிழ் உதவி ஆசிரியராக இருந்தார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதி தொகுப்புக் குழுவில் பணியாற்றியுள்ளார். சாண்ட்லர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் முயற்சி, பின்னர் தலைமையேற்ற எஸ். வையாபுரிப் பிள்ளை காலத்தில் 1936-இல்தான் முடிந்தது. இவரது ஆராய்ச்சித்திறனைப் போற்றும் வகையில் இவருக்கு 1939ல் “ராவ் சாஹேப்” என்ற பட்டத்தையும் முன்னாள் அரசு அளித்துக் கௌரவித்தது.

திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில், தலைமைத் தமிழ் ஆராய்ச்சியாளராக 1944 முதல் 1951 வரை பணி புரிந்திருக்கிறார். இதற்கிடையே லயோலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார். கலைமகள், தமிழ் நேசன் பத்திரிகைகளில் மதிப்பியல் ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

12 ஆய்வு நூல்களை – குறிப்பாக வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி, சாசனத் தமிழ் கவி சரிதம், சேர வேந்தர் செய்யுள் கோவை – எழுதினார். சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெயர், வினைகள் எவ்வாறாக அமைந்துள்ளன என்பதை இவர் எழுதியுள்ள வினைத்திரிபு விளக்கம் நமக்கு விவரிக்கிறது. தவிரவும், நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்), திருக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, நிகண்டகராதி முதலான பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கியபோது அவருக்காக பல இடங்களிலிருந்து ஓலைச்சுவடிகளைச் சேகரித்து தந்தார். தேவர் துவக்கிய செந்தமிழ் என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியராக சில காலமும், பின்னர் ஆசிரியராக சில காலமும் பணியாற்றியுள்ளார். அதில் முதலில் ஆசிரியராக இருந்தவர் அவரது மாமாவான ரா. ராகவையங்கார். இந்த இரண்டு ராகவையங்கார்களும் அக்காலத்தில் தமிழ்த் தொண்டுக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட பலரையும் அதில் எழுத வைத்தனர். சி. இலக்குவனார், ரா. இளங்குமரனார், ப.வே. மாணிக்க நாயக்கர், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், கா.சு.பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், தி. இலக்குமணப் பிள்ளை, வ.சுப. மாணிக்கம் போன்றோரை தொடர்பு கொண்டு அவர்களிடம் தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வாங்கி பிரசுரித்து வந்தனர். அக்காலத்தில் அழிந்து கொண்டிருந்த தமிழ் மொழிக்கு இச்செயல் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது.

இவர் செந்தமிழ் இதழில் எழுதிய வீரத்தாய்மார் எனும் கட்டுரையை படித்த பாரதியார் உடனடியாக உணர்ச்சி ததும்ப பாராட்டுக் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். ”உங்களை பாராட்ட வரவில்லை” எனத் துவங்கி இறுதியில் ”வணக்கம் செய்கிறேன் வளர்க”! என முடியும் அவரது கடிதம் ராகவையங்காருக்கு கிடைத்த பாராட்டுகளில் மிகச் சிறந்தது.

1954ல் தன் மனைவியையும், இளைய மகனையும் இழந்தவர், தன் மூத்த மகனுடன் மானாமதுரையில் வாழ ஆரம்பித்தார். 1960 பிப்ரவரி இரண்டாம் தேதி மானாமதுரையிலேயே காலமானார்.

சேதுராமனின் குறிப்புக்கு பயன்பட்ட கட்டுரைகள்:

  1. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள்” என்ற புத்தகத்தில் எம்.எஸ். அறிவுடைநம்பி எழுதிய கட்டுரை – புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்தது – காவ்யா வெளியீடு
  2. வி. சுந்தரம் ஐ.ஏ.எஸ்.எழுதிய ஒரு வலைத்தளக் கட்டுரை (சுட்டி கிடைத்தால் கொடுங்கள்!)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய பதிவுகள்:
கூட்டாஞ்சோறு தளத்தில் சேதுராமனின் ஒரிஜினல் பதிவு
ராகவையங்கார் பற்றிய விக்கி குறிப்பு