Between the World and Me 2015-இல் எழுதப்பட்டது. நியூ யார்க் டைம்ஸ் அந்தப் புத்தகத்தை 2015-இன் பத்து சிறந்த புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருந்தது. ஆனால் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கக் காரணம் நியூ யார்க் டைம்சின் பரிந்துரை அல்ல, என் மகள் ஸ்ரேயாதான் காரணம்.
ஸ்ரேயா இளைஞி. அவளுக்கு சமூக அநீதிகளைக் காணும்போது கடுங்கோபம் வருகிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று பேச்சுவாக்கில் ஒரு நாள் சொன்னாள், அவளுக்கு முன்பாக நான் படித்துவிட்டேன்!
American Dream என்பதைத்தான் அமெரிக்கப் பண்பாட்டின் அடிப்படை என்றே சொல்லலாம். உன் உழைப்பால் நீ முன்னேறலாம், நீ அடையும் வெற்றிக்கும் தோல்விக்கும் நீயே முழுக் காரணம், அனைவருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரே தார்மீகத் தேவை என்று சுருக்கமாகச் சொல்லலாம். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’, அவ்வளவுதான். ஆனால் அமெரிக்காவின் வெற்றி செவ்விந்தியர்களை ஏமாற்றி, கறுப்பர்களை ஒடுக்கி அடையப்பட்டது. நியாயமாகவே எல்லாம் நடந்திருந்தால் அமெரிக்காவின் வளர்ச்சி இவ்வளவு பெரிதாகக் இருந்திருக்காது.
கோட்ஸ் முன்வைப்பது அமெரிக்கக் கனவின் அடிப்படை முரணை. அமெரிக்கக் கனவு என்பது அனேகக் கறுப்பர்களுக்கு எட்டாக் கனவுதான். ஒவ்வொரு தாயும் தகப்பனும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, அடிப்படை வசதிகள் வேண்டுமென்றுதான் முயற்சிக்கிறார்கள். ஆனால் கறுப்பர்களுக்கு – குறிப்பாக நகர்ப்புறங்களில், குற்றச் சூழலில் வாழும் ஏழைக் கறுப்பர்களுக்கு – அந்தக் கனவை அடைவதில் இன்னும் பல நடைமுறைச் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களின் நிறம் அவர்களுக்கு (ஏன் பல மாநிலங்களில் பழுப்பு நிற இந்தியர்களுக்குக் கூடத்தான்) பலவீனமாகத்தான் இருக்கிறது. வன்முறை கறுப்பர்களின் வாழ்வில் சகஜமாக இருக்கிறது. இந்த அடிப்படை முரணைத்தான் கோட்ஸ் மேலும் மேலும் வலியுறுத்திச் சொல்கிறார்.
இந்தப் புத்தகம் கோட்ஸ் தன் பதின்ம வயது மகனுக்கு எழுதும் கடிதங்கள் வடிவில் அமைந்திருக்கிறது. அந்தக் கடிதங்களை வடிவமைத்திருப்பதில் கோட்சின் எழுத்துத் திறமை வெளிப்படுகிறது. பல இடங்களில் இவர் சொல்வது நியாயம்தானே என்று தோன்றத்தான் செய்கிறது.
உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், நான் இந்தப் புத்தகத்தை பெரிதாக ரசிக்கவில்லை. கோட்சின் அடிப்படைக் கருத்து – அமெரிக்காவில் வெள்ளையர்களின் மேலாதிக்கம் ஒரு நாளும் மாறாது, அதனால் கறுப்பர்கள் எல்லாருக்கும் எதுவும் எப்போதும் நடக்கலாம் – எனக்கு ஏற்புடையதல்ல. என் வாழ்நாளிலேயே அபிராமணர்கள் என் உறவினர் வீடுகளில் நடத்தப்படும் விதத்தில் மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். அபிராமணர்கள் தண்ணீரை சீப்பிக் குடிக்காமல் தூக்கியே குடித்தாலும் அந்த டம்ளர் தனியாக கழுவி வைக்கப்படுவது ஒரு காலத்தில் என் உறவினர்கள் வீட்டில் சகஜமாக நடந்தது. வீட்டுக்கு வருபவன் என்ன ஜாதி என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். இன்றோ பெரிதாக யாருக்கும் இதிலெல்லாம் அக்கறையில்லை. (அதற்காக வேற்று ஜாதிப் பெண்ணோடு திருமணம் என்றால் சுலபமாக ஒத்துக் கொண்டுவிடுவார்கள் என்பதில்லை.) எதுவுமே மாறாது என்றால் வாழ்வதிலேயே பொருளில்லை. மாற்றங்கள் வர நிறைய காலம் எடுக்கிறது என்பது மனதைத் தளர வைக்கக் கூடிய விஷயம்தான், ஆனால் அதற்காக எதுவும் நடக்காது என்று சோர்வடைவதில் அர்த்தமில்லை. ஒரு வேளை நான் கறுப்பனாக இருந்திருந்தால் எனக்கு வேறு விதமாகத் தோன்றி இருக்குமோ என்னவோ.
தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்