எம்மா டோனக்யூ (Emma Donoghue) எழுதிய ரூம்

emma_donoghueRoom-ஐ நான் திரைப்படமாகத்தான் முதலில் பார்த்தேன். நல்ல திரைப்படம். திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த முக்கியமான விஷயம் நாயகியின் ‘சிறை’ அனுபவங்களை விட விடுதலை அடைந்த பிறகு அவள் அனுபவிக்கும் மனச்சிக்கல்கள்தான். கஷ்டமான சூழ்நிலை முடிவுக்கு வரும்போது உடனே வாழ்வு மீண்டும் மலர்ந்துவிடுவதில்லை. காயங்கள் தழும்புகளாக மாற நீண்ட காலம் பிடிப்பது இயல்பான ஒன்றுதான். அப்படி தழும்புகளாக மாறிய பிறகும் கூட சில சமயம் வலிக்கத்தான் செய்யும்.

ஒரு வருஷம் முன்னால் பார்த்த திரைப்படம். அப்போதிலிருந்தே புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், சமீபத்தில்தான் படிக்க முடிந்தது. புத்தகமும் என்னைக் கவர்ந்தது. ஆனால் புத்தகம் கவர்ந்தது கதை சொல்லப்படும் கோணத்துக்காக. கதை முழுவது ஐந்து வயதுப் பையனின் கோணத்தில்தான் சொல்லப்படுகிறது. அப்படி சொல்லப்படுவது ஆசிரியரின் திறமையைக் காட்டுகிறதுதான். ஆனால் அந்தப் பையன் நானும் நீங்களும் பார்க்கக் கூடிய ஐந்து வயதுப் பையன் அல்லன். சில விஷயங்களில் அதீதமானவனாகவும் சில விஷயங்களில் ஏறக்குறைய சிறு குழந்தையாகவும் இருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு அசாதாரண சிறுவனை சிருஷ்டித்து அந்தச் சிறுவனின் கோணத்தில் கதையைச் சொல்லி இருப்பதுதான் இந்தப் புத்தகத்தை எனக்கு உயர்த்துகிறது.

roomஅனேகமாக எல்லாரும் பார்த்த திரைப்படம்தான். அதனால் வெகு சுருக்கமாக கதைச் சுருக்கம். ஒரு sexual predator-ஆல் இளம்பெண் கடத்தப்பட்டு போகப்பொருளாக பயன்படுத்தப்படுகிறாள். அவளுக்கு ஒரு பையன் பிறக்கிறான். பையனுக்கு ஐந்து வயதாகும்போது தப்பிவிடுகிறார்கள். ஆனால் மீண்டும் சமூகத்தில் ஒன்றுவது சுலபமாக இல்லை, அவ்வளவுதான் கதை.

பையனுக்கு தான் சிறைப்படுத்தப்பட்டிருப்பதே தெரியாது. அவனுக்குத் தெரிந்த உலகமே அந்த அறைதான். அந்த அறையில் இருக்கும் ஓட்டை டிவியும் உடைந்த நாற்காலியும்தான் அவன் நண்பர்கள். இருக்கும் வெகு சில பொருட்களை வைத்து அம்மாக்காரி வெகு திறமையாக அவனுக்கு கல்வி கற்பித்திருக்கிறாள். இவை அத்தனையும் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கின்றன.

தப்பிக்க பையன் இறந்துவிட்டான் என்று சொல்லி வில்லனை அவனை அறைக்கு வெளியே எடுத்துப் போக வைக்கிறாள். அதற்காக பையனை தயார்படுத்தும் காட்சிகளும் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன.

தப்பித்த பிறகு அம்மாவுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அவனுக்கு குன்சாகத்தான் புரிகிறது. அப்படி குன்சாகப் புரிகிறது என்பதை நமக்கு புரிய வைப்பதில் எம்மாவின் திறமை வெளிப்படுகிறது.

இது எனக்கு இலக்கியம். ஆனால் த்ரில்லராகவும் படிக்கலாம்.

சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரே மூலம்தான். ஐந்து வயது அசாதாரணப் பையன் கண்கள் வழியாக கதை சொல்லப்படுவது. வளர்த்துவானேன்? நான் எம்மா எழுதிய பிற புத்தகங்களையும் படித்துப் பார்ப்பது என்று நினைத்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: எம்மா டோனக்யூ பற்றிய விக்கி குறிப்பு