என் மூத்த மகள் ஸ்ரேயா போன வருஷம் அவள் பள்ளியில் King Stag (1762) என்ற நாடகத்தில் பாண்டலோன் (Pantalone) என்ற பாத்திரத்தில் நடித்திருந்தாள். என்னால் நாடகத்துக்குப் போக முடியவில்லை. படிக்கவாவது வேண்டும் என்று தேடிப் பிடித்துப் படித்தேன். சிலிகன் ஷெல்ஃபில் புத்தகத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் குழப்பமாக இருந்தது. என் எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ள ஏழெட்டு மாதம் ஆகிவிட்டது.
King Stag எல்லாம் படிப்பதற்கான நாடகம் இல்லை, பார்க்க வேண்டிய நாடகம். மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்கலாம். படித்தால் புன்னகை கூட வருமா என்று சந்தேகம்தான். அந்த மாதிரிதான்.
King Stag போன்ற நாடகங்களை கிரேசி மோகன் நாடகங்களின் கொஞ்சம் polished ஆன version (கொஞ்சூண்டுதான்) என்றுதான் சொல்ல வேண்டும். நாடக ஆசிரியர் கார்லோ கோஸ்ஸி (Carlo Gozzi) நாடகத்தின் சாத்தியங்களை உணர்ந்திருக்கிறார், நடிக்க வாய்ப்புள்ள பாத்திரங்களை (மை.ம. காமராஜனின் காமேஸ்வரன், பாட்டி, ஊர்வசி நடிக்கும் பாத்திரம் மாதிரி) உருவாக்கி இருக்கிறார், நாடக உத்திகளை (முகமூடிகள் இத்யாதி) நன்றாக பயன்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதுதான் வித்தியாசம். கிரேசி மோகன் இவற்றைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதில்லை, அதனால் அவர் எழுதுவது நாடகமே இல்லை என்பது என் கட்சி.
ஆனால் ஒரு காலத்தில் எனக்கு நல்ல நாடகம் என்றால் கிரேசி மோகன் எழுதியதுதான். அந்தக் காலத்தில் அவர் எழுதிய ‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’, ‘டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ்’ மாதிரி பல நாடகங்களைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். சோ ராமசாமி, எஸ்.வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தியின் நாடகங்கள் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த காலம் அது. இன்று சோ நல்ல நாடக ஆசிரியர், அவர் தனக்காக எழுதிக் கொள்ளும் கோமாளி பாத்திரங்கள்தான் நாடகத்தின் தரத்தைக் குறைத்துவிட்டன என்று கருதுகிறேன், ஆனால் அன்று அந்தக் கோமாளி பாத்திரங்களைத்தான் நானும் பெரிதாக ரசித்தேன்.
கிரேசி மோகனின் நாடகங்களைப் பார்க்காதவர்களும் அவரது கைவண்ணத்தை மை.ம. காமராஜனிலும் காதலா காதலா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற திரைப்படங்களில் கட்டாயம் பார்த்திருப்போம். இந்த மாதிரி ஜோக்குகள், ஆள் மாறாட்டம் போன்ற ஃபார்முலாக்கள் ஆகியவற்றை வைத்து நம்மை சிரிக்க வைக்கும் முயற்சிகளுக்கு இலக்கியத்தில் இடம் உண்டா? இப்படி வைத்துக் கொள்வோமே, மை. ம. காமராஜன், தில்லுமுல்லு, காதலா காதலா, பாமா விஜயம் போன்ற திரைப்படங்கள் நாடகமாக எழுதப்பட்டிருந்தால் அவற்றை இலக்கியமாகக் கருத முடியுமா? அட இவற்றை விடுங்கள் சபாபதி பம்மல் சம்பந்த முதலியாரால் நாடகமாகத்தான் எழுதப்பட்டது, அது இலக்கியமா? அவை இலக்கியம் இல்லை என்றால் கார்லோ கோஸ்ஸி மட்டும் என்ன பெரிய நாடக ஆசிரியரா? 250 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட அவரது நாடகத்துக்கு எப்படி இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது? சரி கோஸ்ஸியை விடுங்கள், ஷேக்ஸ்பியரின் A Comedy of Errors (ஹிந்தியில் சஞ்சீவ் குமார் நடித்து குல்சாரின் இயக்கத்தில் அங்கூர் என்று திரைப்படமாக வந்தது, பிரமாதமான திரைப்படம், பார்த்ததில்லை என்றால் கட்டாயம் பாருங்கள்) இலக்கியமா?
இன்னும் சிம்பிளாக கேட்கிறேன். சார்லி சாப்ளின் திரைப்படங்கள் நல்ல கலை அனுபவத்தைத் தருகின்றனவா இல்லையா? லாரல் ஹார்டியின் திரைப்படங்கள்? என்னைப் பொறுத்த வரை சாப்ளினின் க்ரேட் டிக்டேடர், மாடர்ன் டைம்ஸ், கோல்ட் ரஷ் மற்றும் திரைப்படக் கலையின் உச்சங்கள். ஏன் கிட் மற்றும் சிடி லைட்ஸ் கூட வலிந்து புகுத்தப்பட்ட மிகை உணர்வுக் காட்சிகள் நிறைந்திருந்தாலும் எனக்கு கலைப்படங்கள்தான். ஆனால் அவரது குறும்படங்கள் எதுவும் எனக்கு கலைப்படங்கள் அல்ல. லாரல்-ஹார்டியின் எந்தத் திரைப்படமும் எனக்கு கலை அல்ல.
சில சமயம் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக சில படைப்புகள் வலிந்து உயிரோடு வைக்கப்பட்டிருக்கின்றன. என்னைப் பொறுத்த வரையில் கிரேக்க நாடக ஆசிரியர் ஈஸ்கைலசின் படைப்புகள் அப்படித்தான். அவை வரலாற்று வகுப்புகளில் படிக்கப்பட வேண்டும், இலக்கிய வகுப்புகளில் அல்ல. கார்லோ கோஸ்ஸி, மற்றும் King Stag-இன் முக்கியத்துவமும் அவை 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்பது மட்டும்தானா? இன்னும் 250 ஆண்டுகளுக்குப் பின் கிரேசி மோகனின் நாடகங்களும் தமிழ் இலக்கிய வகுப்புகளில் படிக்கப்படுமா?
எங்கோ ஒரு புள்ளியில் கேளிக்கை எழுத்து இலக்கியமாகிவிடுகிறது, கலையாகிவிடுகிறது. அந்தப் புள்ளி எல்லாருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. ஷெர்லக் ஹோம்ஸ் எனக்கும் இலக்கியம், ஜெயமோகனுக்கும் இலக்கியம். பொன்னியின் செல்வன் எனக்கு இலக்கியம், ஜெயமோகனுக்கு அது வணிக எழுத்துதான். எனக்கு சோவின் முகமது பின் துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை, உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை போன்ற சில நாடகங்கள் இலக்கியம், அனேகத் தமிழர்களுக்கு அவை கோமாளிக் கூத்துகள்தான். ஆனால் எல்லாருக்குமே – எத்தனை கறாரான இலக்கிய வாசகராக இருந்தாலும் சரி – ஏதோ சில கேளிக்கை எழுத்துக்களாவது இலக்கியமாகிவிடுகின்றன.
எனக்கு King Stag இலக்கியம்தான். ((கோஸ்ஸியின் இன்னொரு நாடகத்தையும் – Green Bird (1765) – படித்தேன், அது கொஞ்சம் சுமார்தான், அதை நான் கணக்கில் சேர்த்துக் கொள்ளமாட்டேன்.) என்னைப் பொறுத்த வரை கிரேசி மோகனின் இலக்கிய மதிப்பு பூஜ்ஜியம்தான். ஆனால் தொலைக்காட்சியில் மை. ம. காமராஜன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., காதலா காதலா திரைப்படங்கள் ஓடினால் ஒரு நிமிஷமாவது பார்த்துவிட்டுத்தான் நகர்கிறேன்.
முடிந்தால் King Stag-ஐப் பாருங்கள். முடியாவிட்டால் இணைத்திருக்கிறேன், படிக்கலாம்.
உங்களுக்கு எப்படி? கேளிக்கை எழுத்துதான், ஆனால் எனக்கு இலக்கியம் என்று எந்தப் படைப்பையாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அதைப் பற்றி கட்டாயம் சொல்லுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்
Wodehouse
LikeLike
கிரேஸி மோகனின் நாடகங்கள் அனைத்தும் பார்ப்பதற்கே லாயக்கானவை. அவர் எழுதிய விகடனில் எழுதிய தொடர்கள் எல்லாம் படு குப்பைகள். யாராவது அருகில் அமர்ந்து கொண்டு இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினால் கூட சிரிப்பு வராது, தொடரை படித்த கடுப்பில் கோபம்தான் வரும். நாடக வசனங்கள் அனைத்து பேசுபவர்களின் டெலிவரியிலேயே ஜெயிக்கின்றது.
கேளிக்கை எழுத்து, ஆனாலும் அதுவும் ஒரு வகை இலக்கியம் என்று தேவனின் ஒரு சிலவற்றை கூறலாம். ஸ்ரீமான் சுதர்சனம். கேளிக்கை எழுத்து, மெலோட்ராமா வகை, பழைய பாணி. இருந்து அதை முக்கிய நாவல் என்று சொல்வேன். காரணம் அது தரும் ஒரு அனுபவம். பொ.செ அதே வகைதான். (நேற்று கூட கனவில் பொன்னியின் செல்வனை இருபதாவது தடவையோ என்னவோ படித்துக் கொண்டிருந்தேன்) துப்பறியும் சாம்பு. அதையும் பல முறை படித்துவிட்டேன். என் பெண்ணிற்கு அதை கதையாக சொல்லும் போது கேட்டு ரசிக்கின்றாள். காலம் கடந்து நின்று விட்டது. சாம்புவின் பின் வரும் ஐந்தாவது அ ஆறாவது தலைமுறைக்கும் பிடித்துவிட்டது.
LikeLike
ரெங்கா, எனக்கு ஸ்ரீமான் சுதர்சனம் இலக்கியம்தான்.
LikeLike
ஜீப், உட்ஹவுசையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்தான்..
LikeLike
இலக்கியம் என்பதன் விளக்கம்தான் என்ன? காவிய நடையில் சொல்லப்படுபவையா? கருத்தாக்கத்தில் தனித்து நிற்பவையா? அல்லது எழுத்தாளனின் அதீத, காலத்துக்கு முன்பான சிந்தனைகளை கதாபாத்திரங்களோடு இணைத்து ஒரு மயக்க பிம்பத்தை (பிம்பங்களை) உருவாக்கும் நீண்ட நெடுங்கதையா? கதையா அல்லது தத்துவ நூலா என்று தெரியாமல் குழப்படியாக எழுதுகிற எழுத்தா? என்ன அது என்று தீவிர இலக்கிய இரசிகர்கள் இங்கே விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. என்னைப் பொறுத்தவரை வி.ஸ.காண்டேகரின் கதைகள் ஒவ்வொன்றும் இலக்கியமே! அதேபோல எஸ்.எல். பைரப்பாவினுடையவும்.. காண்டேகரை மொழி பெயர்த்த கா.ஶ்ரீ.ஶ்ரீ இன்னுங்கூட சிறந்த இலக்கியவாதி என்று சொல்லலாம்!
LikeLike