அமெரிக்கா பணக்கார நாடு என்றுதான் உலகம் முழுவதும் இருந்து இங்கே குடியேறிவிட ஆசைப்படுகிறோம். ஆனால் அமெரிக்காவில் ஏழ்மை என்பது அதிசயம் அல்ல.
காதரின் ஈடின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக்ப் பேராசிரியர். அவரது கணக்குப்படி பதினைந்து லட்சம் குடும்பங்கள் அமெரிக்காவில் படு பயங்கர ஏழ்மையில் வாடுகின்றன. (அமெரிக்காவில் குத்துமதிப்பாக பத்து கோடி குடும்பங்கள் இருக்கின்றன, முப்பத்து கோடி மக்கள் தொகை). ஒரு நாளைக்கு இரண்டு டாலர் வருமானம் இருந்தால் அதிகம். பலருக்கு ஆனால் இருக்க வீடு உண்டு. நகரங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றுவது சிரமம். Rent Control உங்களுக்கு ஓரளவு பாதுகாப்பு தரும். ஆனால் தங்க இடம் இல்லாவிட்டால் பெரும் கஷ்டம். சாப்பாட்டுக்கு Food Stamps-ஐ அரசு தருகிறது. (இதை வைத்து உணவுப் பொருட்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.) ஆனால் காசு இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? வீட்டுக்கு மின்சாரத்துக்கு, அலைபேசிக்கு, பஸ்ஸுக்கு பணம் இல்லாமல் வேலை தேட முடியுமா? அதிலும் இந்தக் குடும்பங்களில் அனேகருக்கு குழந்தைகள் உண்டு. அவர்களுக்கு ஷூ வாங்க வேண்டாமா?
ஈடின் இவர்களைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். இவர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்கிறார். அதுவும் டெக்னாலஜி வளர வளர ஆரம்ப நிலை வேலைகள் கிடைப்பது கஷ்டமாகிக் கொண்டே போகிறது. ஒரு காலத்தில் கிடைத்த தொழிற்சாலை வேலைகள் இப்போது கிடைப்பதில்லை. இவர்கள் எப்படித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்?
Food Stamps-ஐ விற்பது சட்ட விரோதம், ஆனால் விற்கிறார்கள். ரத்தத்தை விற்கிறார்கள். உடலை விற்கிறார்கள். தெருவில் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். ஒரு பெண் தினமும் காலை உணவுக்காக மக்டோனல்ட்ஸில் காஃபி சாப்பிடுகிறாள், அதில் ஆறு ஸ்பூன் சர்க்கரை போட்டுக் கொள்வாள். பண்டமாற்று செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்.
அரசு ஒரு காலத்தில் கொஞ்சம் பணம் கொடுத்தது. இப்போது பணம் கொடுப்பதில் பல கட்டுப்பாடுகள், அனேகருக்கு பணம் கிடைப்பதில்லை. அதுவும் ரிபப்ளிகன் அரசு அமைந்தால் இது மேலும் சிரமம். வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தருகிறது. ஆனால் கொஞ்சமாவது காசு இல்லாமல் – பஸ்ஸுக்கும் அலைபேசிக்கும் காசு இல்லாமல் – இந்த நாட்களில் வேலை கிடைப்பது மகா கஷ்டம்.
ஈடின் இந்தப் புத்தகத்தை anecdotes-களால் நிரப்பி இருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் நம்மை உச்சுக் கொட்ட வைக்கிறது. ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை என்று தெரியவில்லை. சான் ஃப்ரான்சிஸ்கோவில் நான் அலுவலகத்துக்கு நடக்கும் ஒரு மைல் தூரத்தில் பத்து வீடற்ற, நடைபாதைவாசிகளைப் பார்க்கலாம். மழை கொட்டும் நாட்களில் மனம் வருந்தத்தான் செய்யும், ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை, சான் ஃப்ரான்சிஸ்கோவில் இப்படி எத்தனை நடைபாதைவாசிகள் இருக்கிறார்கள், நூறு பேரா, ஆயிரம் பேரா, பத்தாயிரம் பேரா என்று தெரிவதில்லை. அவர் கொடுக்கும் data பதினைந்து லட்சம் குடும்பம் என்பதுதான். அது அமெரிக்க ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம், ஒன்றரை சதவிகிதம் இருக்கலாம். அது உண்மையாக இருந்தால் அமெரிக்க சூழலில் இது பெரிய பிரச்சினைதான்.
நான் வாழும் கலிஃபோர்னியா பகுதியில் ட்ரம்ப் வெல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் எல்லாரும் நினைத்தோம். ஆனால் எங்களுக்கு இப்படிப்பட்ட அமெரிக்கா பழக்கமே இல்லை. இந்த ஏழைகள்தான் ஹில்லரி க்ளிண்டன் வேண்டவே வேண்டாம், நல்ல மாற்றமோ இல்லையோ ட்ரம்ப் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நினைத்து அவருக்கு ஓட்டுப் போட்டிருக்க வேண்டும்…
படிக்கலாம். அமெரிக்காவின் இருண்ட பக்கங்களைப் பற்றி கொஞ்சம் புரிகிறது. ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்